Thursday, October 10, 2013

ஒரு இயக்குனரின் கதை

எங்கள் அப்பார்மெண்டில் கீழ் வீட்டில் ஒருவர் இருக்கிறார். மனிதர் உண்மைக்குப் பெயர் போன சாஃப்ட்வேர் நிறுவனத்தில் வேலை செய்கிறார். நிறைய நாளுக்குப் பிறகு நேற்று மாலை எங்கள் வீட்டுக்கு வந்திருந்தார். விநாயகர் சதுர்த்தியன்று கொழுக்கட்டை கொண்டு வந்தவர் மறுபடியும் வந்தார். ஆள் வழக்கமாக உட்கார்ந்தே பேச மாட்டார். ஆனால் இன்றைக்கு வந்து அமர்ந்து, அப்பறம் எல்லாம் எப்படி போகுதுங்கன்னு கேஷுவலாக உரையாடலை துவங்கினார்.

நிறைய ஸ்கிரிப்ட் ரெடி பண்ணி வைத்திருக்கிறாராம். குறும்படம் எடுக்கப் போவதாகச் சொன்னார். எழுத்தும், ஆக்கமும் அவர்தானாம். நம்ம இளவஞ்சி மாதிரி கேமிரா பைத்தியம் ஒரு பிரண்ட் அவருக்கு இருக்கிறானாம். அவனுக்கு சினிமாட்டோகிராஃபி டிபார்ட்மெண்டாம்.

’நல்ல விஷயம். செய்யுங்க. மணிவண்ணன் செத்துப் போயிட்டார். அவர் எடம் காலியாத்தான் இருக்கு. கோயம்புத்தூர்காரங்க சினிமாவுல தோத்ததில்லீங்க’

‘ஆமாங்க பாஸ். கோயம்புத்தூர்ல இருந்து வந்து சினிமா எடுத்து யாரும் தோத்ததில்ல. ஆனா கோயம்புத்தூர்ல போய் சினிமா எடுத்தா ஊத்திக்கும்’ என்றார்.

உங்க Borrowed Girlfriend தான் பாஸ் எனக்கு இன்ஸ்பிரேஷன் என்று சொல்லி விட்டு கதை சொல்ல ஆரம்பித்தார். உடனே அவரது மனைவி, ”சரிங்க. நீங்க பேசிட்டு வாங்க. நான் கிளம்பறேன்” என்று சொல்லி விட்டு செப்பல் ஸ்டேண்டை நோக்கிச் சென்று விட்டார்.

ஷார்ட் ஃபிலிம் எடுக்கறோம் பாஸ். Youtube ல ரிலீஸ் பண்றோம். நம்ம கேமிராமேன் ஒரு கேமிரா வெச்சுருக்காப்ல. பிட்ஸா படமே அந்த கேமிராவுலதான் எடுத்தாங்களாம். ஐ மீன் அந்த மாடல் டிஜிட்டல் கேமிராவுல. பட்ஜெட் ஒன்னும் பிராபிளம் இல்லை. ஐயாயிரத்து மேல ஆகாது. அதையும் நம்ம ஹீரோவே போடறேன்னு சொல்லிட்டாப்ல. எழுத்தும், ஆக்கமும் மட்டும் எம்பேரு போடுவேன்.’

‘வாவ். இண்டெரிஸ்டிங். சொல்லுங்க. என்ன நாட்?’

‘ரொம்ப காமெடியான சப்ஜெக்ட்டுங்க. எப்படியும் Youtube, ஃபேஸ்புக், டிவிட்டர் எல்லாத்துலயும் பரப்புறோம். தமிழ் தெரிஞ்ச எவனெல்லாம் நெட்ல இருக்கானோ அவனெல்லாம் இதை பாக்கணும்.’

நிஜமாலுமே பிரமித்துப் போனேன். கருணாஸ் கலரில், அனிருத் சைஸில் என் முன்னால் சிரித்துக்கொண்டு அமர்ந்திருந்தார் நண்பர். பத்து வருடத்து முன்னர் பவர் ஸ்டாரும், அஞ்சு வருசத்துக்கு முன் ஆண்டர்சனும் (சாம் ஆண்டர்சன்) இப்படித்தான் வெறியோடிருந்திருப்பார்கள் போல. ஆனால் அந்த யுத்திகள் எல்லாம் இன்று காலாவதியாகி விட்டன. பரபரப்பாக எதாவது வேண்டும். விளம்பரத்தை விளம்பரமாகக் கொடுக்காமல் செய்தியாகக் கொடுக்கும் கால நிர்ப்பந்தத்தில் வாழ்கிறோம். இந்தப் படம் இன்னைக்கு ரிலீஸ் என விளம்பரம் கொடுப்பதை விட இன்ன தேதியில் ரிலீஸ் ஆகும் இந்தப் படத்தில் நடிக்கும் நஸ்ரியாவின் தொப்புளை அவர் சம்மதம் இல்லாமல் இயக்குனர் சற்குணம் டூப் போட்டு எடுத்து வெளிட்டு ஏமாற்றி விட்டார் என செய்தியாக பரபரப்பு உண்டாக்கும் காலக் கட்டாயம் இன்றைக்கு சினிமாவுக்கு தேவையாக இருக்கிறது.

’உங்க பிளான் என்னங்க?’

‘மொதல்ல ஷார்ட் பிலிம் எடுக்கறோம். To start with comedy subject. அப்பறம் ஒரு சீரியஸ் சப்ஜெக்ட். அடுத்து ஈரானிய படம் பண்றோம். நெக்ஸ்ட் தெலுங்குல ஒரு கிளாமர் படம். தமிழ்ல ஒரு செண்டிமெண்ட் படம். அப்பறம் இந்தில ஒரு கம்ர்ஷியல் படம். கடைசியா எல்லாத்தையும் ஒன்னா போட்டு கலக்கி ஒரு மசாலா படம். விஜய்தான் ஹீரோ. அதோட சரி. இந்தியாவுக்கு பை பை.’

‘ஏங்க?’

‘நம்ம டார்கெட் ஹாலிவுட் தாங்க. இப்ப சொன்னதெல்லாம் முன்னோட்டம். ஆஸ்கர் வாங்காம ஓயறதில்லைங்க. கமல் ஆஸ்கார் வாங்கறேன் ஆஸ்கார் வாங்கறேன் ஆஸ்கார் வாங்கறேன்னு சொல்லிக்கிட்டே இருக்கான். கடைசில ஆடி கார் தான் வாங்கினான். நம்ம அப்படி இல்லை பாஸ். பீட்ஸாவை பீட்ஸாவா கொடுக்கணும். கமல் மாதிரி பொங்கச் சோறு ஆக்கிட்டு பீட்ஸா நல்லா இருக்கான்னு கேட்டுக்கிட்டே இருக்கக் கூடாது. 2020-ல ஆஸ்கார் கன்ஃபர்ம்டு’

’சூப்பர்ங்க.’

‘நம்ம ஷார்ட் பிலிம் ரொம்ப சிம்பிள். செருப்பல அடிச்ச மாதிரி தீம். சொல்லவா?’

‘சொல்லுங்க.’

‘மூனு முட்டை ஒன்னு பின்னாடி ஒன்னா கீழே விழுகுது. அப்படியே freeze பண்ணி டைட்டில் போடறோம் ‘முட்டைன்னா இன்னா?’ அப்படீன்னு. அப்பறம் ஓப்பனிங் சீன். ஒரு முட்டையை மட்டும் காட்டுறோம். ஹீரோ அதை கையில் தூக்கிக்கிட்டே போறான். அத குளோஸப்ல காட்றோம். நிறைய கூட்டம். ரொம்ப சத்தம். எல்லாத்தையும் கடந்து போறான். அப்படியே zoom out பண்ணி காட்றோம். டாஸ்மாக் பார். நம்ம ஹீரோ குடிக்கப் போறான்னு எல்லோரும் நினைக்கிறாங்க. ஆனால் அங்கதான் டிவிஸ்ட். நம்ம ஆள் கூட்டத்தை கிராஸ் பண்ணி போறான். பார்ல ஸ்னாக்ஸ் எல்லாம் செய்யற எடத்துல முட்டைய வெச்சிட்டு அப்படியே நிக்கறான். மாஸ்டர் அதை ஒடச்சு ஆஃப்பாயில் போட்டு ஒரு பிளேட்ல வெக்கிறார். ஹீரோ கடுப்பாகி மொறைக்கிறான். அப்படியே கட் பண்றோம். ஹீரோ ரண்டாவது முட்டையை எடுக்கிறான். அதை அப்படியே தூக்கிக்கிட்டே போறான். பெரும்பாக்கம் ரோட்ல ஒரு பாய் ஆம்பூர் பிரியாணி கடை வெச்சிருக்கார்ல அங்கே போறான். அங்கே முட்டையை வெச்சிட்டு பாயை பாக்கிறான். அந்த பாய் அதை தண்ணில போட்டு பாயில் பண்றார். அப்பறம் அதை உரிச்சு பிரியாணிக்குள்ள வெச்சு பார்சல் பண்றார். நம்ம ஆள் கடுப்பாகி அடுத்த முட்டையைப் போய் எடுக்கிறான். அதை நேரா ஒரு கோழிகிட்ட கொண்டு போய் வைக்கிறான். அது அண்ணாமலை ரஜினி மாதிரி ஒரே பாட்ல குஞ்சாகி, பெருசாகி, கோழியாகி வளந்து நிக்குது. ஷார்ட் பிலிம்ல பாட்டு வெக்கலாம்ங்கறது இங்க மட்டும் விதிவிலக்கு பாத்துக்குங்க. அப்பறம் ஒரு கறிக்கடையைக் காட்டுறோம். வளந்து ஆளான அந்தக் கோழியை உரிச்சு கிளாமரா தொங்க விட்டிருக்காங்க. ஒரு சண்டே காலைல பத்து மணிக்கு ஒரு அங்கிள் வந்து அரை கிலோ கேக்கறாரு. அந்த கறிக்கடை பாய் அந்தக் கோழிய அப்படியே ரண்டா வெட்டி வெயிட் போட்டு கொடுக்குறாரு. அப்ப ஒரு பேக்கிரவுண்ட் மியூசிக் கொடுக்கிறோம் பாருங்க. முதல் மரியாதைக்கு வேற மாதிரி மியூசிக் போட்டிருக்கலாம்னு இளையராஜாவே ஃபீல் பண்ணுவார். அப்படி நம்ம மியூசிக்மேன் பிழியறார். Youtube பாத்துக்கிட்டே எல்லோரும் அழுது லேப்டாட் கீபோர்ட் எல்லாம் நனைஞ்சிருது. அவ்வளவு உருக்கமான மியூசிக். அப்படியே கீழே டைட்டில் போடறோம் – ”முட்டைன்னா இன்னா” எழுத்தும், ஆக்கமும்னு எம்பேரு. எப்படி?’

செய்வதறியாமல் விழித்தேன்.

‘என்ன பாஸ் அப்படியே ஸ்டண் ஆகிட்டீங்க? பயங்கரமான பின்நவீனத்துவ சப்ஜெக்ட் இது. முட்டைனு இங்க சிம்பாலிக்கா சொல்றது சாஃப்ட்வேர் லைஃப். ஒருத்தன் ஆஃப் பாயில் ஆகறான். இன்னொருத்தன் அவிச்ச முட்டை ஆகறான். எப்படியோ எஸ்கேப் ஆனவன் சில்லி சிக்கன் ஆகறான். இதான் தீம்.’

‘கலக்கிட்டீங்க. வேற யார் கிட்டயாவது இந்த ஸ்டோரிய சொன்னீங்களா?’

‘வீட்ல சொன்னேன்.’

‘என்ன ரியாக்‌ஷன்?’

‘இனிமே இதப் பத்தி பேசினா நான் சாப்பிடவே மாட்டேன்னு சொல்லிட்டாங்க. சமைக்கவும் மாட்டாங்களாம்’

'ஏன் பாஸ்?’

‘உங்ககிட்ட சுருக்கமா சொல்லிட்டேன்.. அவங்க கிட்ட ஷாட் பை ஷாட் சொன்னதுல டென்ஷன் ஆகிட்டாங்க.’

‘ஓ. சம்யூ என்ன சொன்னா? அவ கிட்ட கதை சொன்னீங்களா?’ (சம்யூ LKG படிக்கும் அவரது மகள்)

‘அவ அப்படியே அலர்றா.. ஓடிப்போய் அவங்க அம்மாவை கட்டிப் புடிச்சுக்கிறா, என்னவோ பூச்சாண்டியைப் பாத்த மாதிரி.’

‘விடுங்க பாஸ். ஜெயிக்கற வரைக்கும் யாரும் நம்மை மதிக்க மாட்டாங்க.’

‘ஆமாம் பாஸ். சாக்ரடீஸுக்கே விஷம் கொடுத்த உலகம் தான இது!’

‘சரி என்ன நம்பி உங்க கதையை சொல்லீட்டீங்களே! நான் நெட்ல போட்டுட்டா என்ன பண்ணுவீங்க? கேஸ் போடுவீங்களா?’

‘அட நீங்க வேற! முட்டைக்குப் பதிலா தக்காளியோ வெங்காயமோ எதையாவது மாத்திக்க வேண்டியதுதான். நம்மளோட ஒன்லி எய்ம் ஆஸ்கார் தானே ஒழிய ஆம்லேட் போடற முட்டை கெடையாது!’

1 comment:

manjoorraja said...

இதை தான் ப்ளேக் காமெடின்னு சொல்லுவாங்களோ!