Monday, October 14, 2013

நவராத்திரி கொலுவும் கோமளா மாமியும்

சென்னை வந்து கிட்டத்தட்ட பத்து வருடமாகிறது. நவராத்திரி கொலு பற்றியெல்லாம் நிறையைக் கேள்விப்பட்டிருந்தாலும் அது குறித்த அறிமுகம் வெகுவாகக் கிடைத்தது இந்த வருடந்தான். பேச்சுலர் வாழ்க்கையில் பரவாயில்லை. கல்யாணமாகி தனி வீட்டில் வசித்த போதும் அவ்வளவு பரிட்சயம் இல்லை. இப்போது வாழும் கம்யூனிட்டியில் பலதரப்பட்ட மக்கள் வசிக்கிறார்கள். வினாயகர் சதுர்த்துக்கு கொழுக்கட்டை கிடைக்கிறது. ரம்ஜானுக்கு பிரியாணியும், கிறிஸ்துமஸுக்கு கேக்கும் கதவைத் தட்டி தருகிறார்கள். எனினும் இந்த கொலு கலாச்சாரம் நமக்குப் புதிது. கடந்த ஒரு வாரத்தில் பல பேர் அழைத்தார்கள். மனைவி போய் விட்டு வந்து சுண்டல், சர்க்கரைப் பொங்கல், தேங்காய் பழம், குங்குமச் சிமிழ், பொம்மை என ஒரே வசூல்.

நான் வளர்ந்த சூழலில் சரஸ்வதி பூஜை என்பதற்கு புத்தகங்களை அடுக்கி வைத்து கோபுரம் மாதிரி ஆக்கி சாமி கும்பிடுவது என்று பொருள். சுவரோடு ஒட்டி ஒரு பெரிய பெட்டி. அதற்கு மேலே சின்னதாக ஒரு பெட்டி. அதற்கு மேலே புத்தகங்கள். எல்லாவற்றையும் வெள்ளை வேட்டியால் மூடி விட வேண்டும். அதறன் மீது சரஸ்வதி படம் வைத்தால் போதும். பதினெட்டாம் படி மேல் உட்கார்ந்திருக்கும் ஐயப்பன் போலவே இருக்கும். வருசம் முழுவதும் மனப்பாடம் செய்து வைத்த விருத்தங்களை அன்றைக்கு பாட வேண்டும். நிறைய விருத்தம் பாடினால் அதிகப் பண்டிதத்துவம் அடைந்ததாக அர்த்தம். ’வெள்ளைக் கமலத்தில்’ என ஆரம்பித்து ‘அரியாசனத்தோடு சரியாசனத்தில் வைத்த தாயே’ என முடியும் ஒரு பாட்டு மட்டுமே இப்போது நினைவிருக்கிறது. அடுத்த நாள் காலையில் மறுபூசை போட்டு பிரிப்போம்.

விருத்தம் சொல்வது ஒரு கலை. எங்கள் ஊரில் வருசத்துக்கு ஒரு முறை சித்திரை மாதம் நடக்கும் திருவிழாவில் கும்பம் தாளிப்பது என்றொரு முக்கியமான நிகழ்விருக்கும். கொதிக்கும் எண்ணெயில் கடுகைப் போட்டு வெங்காயம் தாளிப்பது தெரியும். அதென்ன ’கும்பம் தாளிப்பது’ என இது வரைக்கும் ஆராய்ந்ததில்லை. தாளிப்பது என்ற சொல்லில் ’திருமாறு’ என்ற விஷயம் பண்டிதர்களுக்கு இருப்பதாக கும்பகோணத்துக்காரர் ஒருத்தர் சொன்னர். எனக்குத் தெரிந்த கும்பம் தாளிக்கும் மேட்டரைச் சொல்கிறேன். கோவிலில் இருந்து ஆற்றங்கரை 200 மீட்டர் இருக்கும். கும்பலாக அத்தனை ஆண்களும் ஆற்றுக்குச் சென்று பெரியதொரு கலசத்தில் தீர்த்தம் முத்திரிப்பார்கள். நான் அறிந்தவரை முத்திரிப்பது என்றால் தீர்த்தத்தை நிரப்புவது. அப்படி தீர்த்தம் முத்திரித்த கலசத்தை ஒருவர் தலையில் வைப்பார்கள். அவருக்கு பத்தடிக்கு ஒரு தடவை அருள் வந்து நின்று விடுவார். நிற்க மாட்டார். ஆடுவார். யாராவது விருத்தம் பாடி impress செய்து அவரை நகரத்த வேண்டும். அப்படி விருத்தம் சொல்வதற்கு தங்கவேல் மாமா என்றொருத்தர் இருந்தார். அவர் விருத்தம் பாடும் அழகே தனி. அவர் இல்லையென்றாலும் திருவிழா நடக்கும். ராத்திரி திரை கட்டி சினிமா போடுவார்கள். ஆனால் தீர்த்தம் கொண்டு வரும் சம்பிரதாயம் மட்டும் சுவாரசியமில்லாமல் போய் விடும்.

விருத்தம் பாடிய தங்கவேல் மாமா ஓரிரு வருடம் முன் ஆற்றங்கரையில் மாரடைப்பு வந்து இறந்து போனார். இப்போது ஊர்த் திருவிழாக்களில் விருத்தம் எப்படிப் பாடுகிறார்கள் என்று பார்க்க ஆர்வமாக இருக்கிறது. ‘சீக்கிரம் விடுங்கப்பா. நான் போயி தண்ணியை சாமிக்கு விடுறேன்’ என கும்பம் தாங்கிய ஆள் வேகமாகப் போனாலும் போவார். சித்திரை வெயிலில் கால் பொடிச் சூட்டில் வெந்து போகும். அவரை நிறுத்துவதற்காக மட்டுமே விருத்தம் பாட வேண்டியிருக்கும் என நினைக்கிறேன்.

விருத்தம் பாடி சரஸ்வதி பூஜை செய்யும் போது, மூன்று படிக்கட்டின் அடியில் கொழு வைத்துக் கும்பிடுவதுண்டு. கொழு என்ற சொல் பலருக்கும் அறிமுகமாகியிக்க வாய்ப்பில்லை. உண்டு கொழுப்பது என்ற பொருள் தெரியும், கொழுப்பைக் குறைக்க முயற்சிப்பது தெரியும். கொழுப்பதற்கு காரணாமான உணவை உற்பத்தி செய்யும் உழவுத் தொழிலின் pilot கொழு தான். கலப்பை மரத்தினால் ஆனது. அதை அப்படியே உழவுக்கு உபயோகப்படுத்த முடியதாது. அதனால் அதன் முனையில் உழுவதற்காகப் பயன்படுத்தும் கூர்மையான இரும்புத் துண்டு கொழு எனப்பட்டது. அந்தக் கொழுவை வைத்து பூஜை செய்வார்கள். சரஸ்வதி பூஜைக்கு எதற்கு கொழு வைக்கிறார்கள் என வியந்ததுண்டு. சரஸ்வதி பூஜையும், ஆயுத பூஜையும் ஒன்றென உணர்ந்த பின்னர் அவரவர் தொழிலுக்குப் பயன்படுத்தும் கருவிகளை வைத்து பூஜை செய்வார்கள் என புரிந்து கொண்டேன். உழவுக்கு பிரதானமாக விளங்கும் கொழு வைப்பதன் காரணம் விளங்கியது.  

கொழு என்ற சொல்லை கூளிகில் போட்டுத் தேடினால் முதலில் ‘கொழு கொழு கோமளா மாமி’ என வந்து நிற்கிறது. கூகிள் இமேஜில் தேடினாலும் ஹன்சிகாவும், நமீதவும் வந்து சிரிக்கிறார்கள்.

2 comments:

மங்களூர் சிவா said...

"கொலு"ன்னு தேடுங்க !
:)

manjoorraja said...

கொலுவைப் பற்றி என்னமோ சொல்ல போறீங்கன்னு நெனெச்சேன். ஆனா கடைசியில் கொழுவைப் பற்றி விளக்கமாக சொல்லிவிட்டீர்கள்.