Sunday, October 20, 2013

மோடி வந்திருந்தார்

மோடியை ஆதரிப்பவர்களைப் போல மோடி ஒன்றும் முட்டாளில்லை என மனுஷ்யபுத்திரன் தனது ஃபேஸ்புக் பக்கத்தில் குறிப்பிட்டுள்ளார். இன்றைய டைம்ஸ் ஆஃப் இந்தியாவில் சேத்தன் பகத்தின் பத்தியை வாசித்த போது அப்படித் தோன்றவில்லை. தமிழுக்கு சுஜாதா என்ன செய்தாரா அதை இந்திய ஆங்கில வாசகர்களுக்குச் செய்துகொண்டிருப்பவர் அவர். சுஜாதாவுக்கும் அரசியல் நிலைப்பாடுகள் இருந்தன. சேத்தன் பகத் மாதிரி வெளிப்படையாக அவர் அரசியல் பேசியதில்லை. சரி விஷயத்துக்கு வருவோம்.

நரேந்திர மோடியின் பிரச்சார ராணுவம் பலமானது. அந்த ராணுவத்தின் முக்கியமான சிப்பாய்களில் முன்னு நிற்பவராக சேத்தன் தெரிகிறார். மனுஷ் சொல்வது போல அவரை முட்டாள் என்றெல்லாம் என்னால் ஒதுக்க முடியவில்லை. அவரவருக்கான அஜெண்டாவின் படி அவரவர் செயல்படுகிறார்கள். சிலர் விசுவாசத்திற்காக ஆதரிக்கிறார்கள். சிலர் கொள்கைக்காக. சிலர் something is better than nothing என்பதன் அடிப்படையில் ஆதரிக்கிறார்கள். சிலர் சுயநல ஆதாயத்துக்காக ஆதரிக்கிறார்கள். சிலர் எல்லோரும் ஆதரிப்பதால் நாமும் ஆதரித்து வைப்போமே என ஆதரிக்கிறார்கள். சிலர் ஏனென்றே தெரியாமல் ஆதரிக்கிறார்கள். சிலர் விரக்தியின் காரணத்தால் ஆதரிக்கிறார்கள். ஆனால் மோடியை வெறுமனே ஆதரிப்பவர்களுக்கும், அவரது பிரச்சார இராணுவத்தில் இருப்பவர்களுக்குமான வித்தியாசம் நிச்சயமாக மனுஷ்யபுத்திரனுக்குத் தெரிந்திருக்குமென நம்புகிறேன்.

மிகச் சரியாகத் திட்டமிட்டு துல்லியமாக காய்களை நகர்த்திக்கொண்டிருக்கிறார் மோடி. பால் தினகரன் முதல் காவியுடை சாமியார்கள் உள்ளிட்ட அத்தனை குருமார்களும் அவரை நெருங்குகிறார்கள். Of course பெரு முதலாளிகள் எப்போதும் போல ஓடுகிற குதிரை மீது பந்தயம் கட்டுவார்கள். ஏற்கனவே மோடியை மகா புருஷர் என முடிவு கட்டிவிட்டார்கள். கார்ப்பரேட் மகாராஜாக்கள், சாமியார்கள், ஊடகங்கள், பெஸ்ட் செல்லிங் ஆங்கில நாவலாசிரியர்கள் என அனைவரும் அணி திரண்டிருக்கிறார்கள். கடந்த சட்டமன்றத் தேர்தலில் திமுகவை ஆதரித்து விஜயகாந்தைத் தாக்கிப் பிரச்சாரம் செய்த வடிவேலுவின் நிலை இவர்கள் யாருக்கும் வராமலிருக்கக் கடவது.

கடந்த வெள்ளிக்கிழமை மோடி சென்னைக்கு வந்திருந்தார். அதனால் எனக்குத் தெரிந்த போலீஸ் ஆபீஸர் ஒருவர் ஈரோட்டிலிருந்து வந்து கிண்டி தீரன் சின்னமலை சிலைக்கு எதிர்ப்புறம் காலையிலிருந்து தேவுடு காத்தார். எள் ஏசி காரில் போனாலும் எலிப் புலுக்கை மொட்டை வெலியில் காய்ந்து தான் தீர வேண்டும். சீமான் மாதிரியான ஆட்கள் கூட்டம் போட்டுப் பேசினால் அதை டேப் செய்யும் வேலையில் இருப்பவர் அவர். வழக்கமாக சீருடை அணியாதவர். வெள்ளிக்கிழமை இரவு எட்டு மணிக்கு வரச்சொல்லியிருந்தார். ”அம்மா சீக்ரெட்டா முடிவு பண்ணிருச்சு. கடைசி வரைக்கும் கமுக்கமா வெச்சிருப்பாங்க” என்றார். சர்வ நிச்சயமாக இது அனைவருக்கும் தெரிந்திருக்கும் போல. இல்லையென்றால் முன்பு பாஜகவின் ஆட்சியில் அமைச்சரவைப் பொறுப்புகளையெல்லாம் திமுக வகித்திருந்த வரலாற்றையெல்லா சகித்துக்கொண்டு, என்னவோ இப்போதுதான் இந்துத்துவ முகமூடி தெரிந்த மாதிரி உடன்புறப்புகள் ஃபேஸ்புக்கில் பொங்கிக்கொண்டிருக்க மாட்டார்கள். ஒரு வேளை காட்சிகள் மாறி, சூரியன் உதித்து தாமரை மலர்வதற்கான சாத்தியத்தையும் ஜனநாயகத்தில் மறுப்பதற்கில்லை.

மோடியை ஆதரிப்பதற்கு ஆளுக்கொரு காரணம் இருப்பதைப் போல அவரைத் தீவிரமாக எதிர்ப்பதற்கும் வெகு நியாயமான காரணங்கள் இங்கே உண்டு. அவை குஜராத் படுகொலைகள் தொடங்கி, பாரதிய ஜனதாவின் சமரசமற்ற இந்துத்துவா கொள்கை வரை நீள்கின்றன. உண்மையில் இது தட்டையான காரணம். வெகு தட்டையான காரணம்.

பாரதிய ஜனதாவும், அதன் கொள்கைகளும் பிடிக்காத போது அதன் பிரதம வேட்பாளர் மோடியாக இருந்தால் என்ன அத்வானியாக இருந்தால் என்ன? ஒட்டு மொத்தமாக புறக்கணிக்க வேண்டியதுதானே...சொல்லப் போனால் வாஜ்பாய் தலைமையில் சென்ற கும்பல் தான் டெல்லியில் காமராஜர் தங்கியிருந்த வீட்டைக் கொளுத்தியது. இன்று அவரை மிதவாதி என்கிறீர்கள். வாஜ்பாய், அத்வானி போல மோடி இல்லை என்கிறீர்கள். என்றாவது ஒரு நாள் மோடியும் மிதவாதி ஆவார். அதுதானே பரிணாம வளர்ச்சி !!

என்னைப் பொறுத்த வரைக்கும் காங்கிரஸுக்கும், பாரதிய ஜனதா கட்சிக்கும் அடிப்படையில் பெரிய வித்தியாசம் ஒன்றுமில்லை. எப்படி கருணாநிதிக்குத் தப்பி ஜெயலலிதாவிடம் சரணடைவது ஒப்பாத விஷயமாக இருந்தாலும் நடந்தேறுகிறதோ அப்படித்தான் காங்கிரஸுக்குத் தப்பி மோடியை மீட்பராகச் சித்தரிப்பதும். 

4 comments:

Saran said...

What boss? Modi is Gilly. Better than the MMS.

AJAX said...

Just like tamil nadu moves between Jaya & Karuna every five years, India should also swing between these two parties. If any party rules for continous 10 years , country kali!

devadass snr said...

தங்களது பல கருத்துக்களுடன் என்னால் ஒத்துப் போக முடிகிறது.
வாழ்க வளமுடன்
கொச்சின் தேவதாஸ்

Anonymous said...

//சொல்லப் போனால் வாஜ்பாய் தலைமையில் சென்ற கும்பல் தான் டெல்லியில் காமராஜர் தங்கியிருந்த வீட்டைக் கொளுத்தியது//

இது என்ன புதுக்கதை? any ஆதாரம்?