Wednesday, October 23, 2013

அடுத்த கட்டத்துக்கு நகர வேண்டாமா

உங்களுக்கு ரமேஷைத் தெரிந்திருக்க வாய்ப்பில்லை. ரமேஷைப் போன்ற ஒருவனைக் கடந்து வந்திருப்பீர்களா என்பது கூட சந்தேகமே. அவன் பதினைந்து வருடத்துக்கு முன் என்னோடு கல்லூரியில் படித்தான். அப்போது இரண்டு பேருக்கும் அவ்வளவு நெருக்கம் கிடையாது நான் மெக்கானிக்கல். அவன் ECE. கேம்பஸ் இண்டர்வியூவில் இரண்டு பேருக்கும் ஒரே கம்பெனியில் கிடைத்தது. அப்போது நல்ல பழக்கம் ஏற்பட்டது. ஒன்றாக வீடு எடுத்துத் தங்கியதில் என் ரூம் மேட் ஆனான். ரொம்ப வித்தியாசமான பையன் என அப்போது தெரிந்தது. பொதுவாக பொறியியல் கல்லூரிகளில் மெக்கானில் படிக்கும் மாணவர்கள் பாவம். அவர்களுக்கு கடலை போட யாரும் கிடைக்க மாட்டார்கள். மற்றவர்களுக்கு அப்படியில்லை. அதிலும் எங்கள் காலேஜில் ஆண்களை விட பெண்கள் அதிகமாகப் படித்த துறை ECE. அப்படி இருந்தும் பிதாமகன் விக்ரம் மாதிரி சுற்றிக்கொண்டிருப்பான்.

வேலைக்குச் சேர்ந்த உடனே ஆபீஸில் வட்டியில்லாமல் என்னென்ன லோன் கொடுப்பார்களோ எல்லா லோனையும் நான் எடுத்து விட்டேன். முப்பத்தைந்தாயிரம் ரூபாய் சுசுகிக்கு மூன்று வருடம் due கட்டிய காலம் அது. அது போக பர்சனல் லோன் வேறு. இண்டிரஸ்ட் இல்லையல்லாவா? ரமேஷ் என் கூடத்தான் பைக்கில் ஆபீஸ் வருவான். ”நீ ஏன்டா பைக் வாங்கல?” என்று கேட்டால், “கொஞ்ச நாள் கழிச்சு உனக்கே புரியும்” என்பான். நமக்குள்ளே மன்மோகன் சிங் மாதிரி ஒரு பொருளாதார மேதை தூங்கிக்கிட்டு இருக்கிறதா நெனச்சு திரிந்த நான் அவனது செயலில் சுத்தமாக எக்கனாமிக் சென்ஸே கிடையாது என நினைத்துக் கொண்டேன்.

வேலைக்குச் சேர்ந்த எட்டு மாதத்தில் வேலையை ரிஸைன் செய்து விட்டான். ஏன்டா என்றால், ”ஓக்லஹாமா யுனிவர்ச்சியில எம்.எஸ் கெடச்சிருக்குடா” என்றான்.

“என்ன யுனிவர்சிட்டி?” சிரிப்பை அடக்க முடியவில்லை.

தெரியவில்லை என்றால் தெரியவில்லை என்று சொன்ன காலம். அது கூகிள் இல்லாத காலம். ஒரு வேளை கூகிள் அப்போதே இருந்திருக்கலாம். அத்தனை பிரபலமாகியிருக்கவில்லை. எல்லாவற்றையும் கூகிள் செய்து, விக்கிபீடியாவில் அலசி நிபுணத்துவம் பெறுவதற்கான வாய்ப்புகள் அரிதாக இருந்த காலம். Ask Jeevs என்றொரு வெப்சைட் aj.com என்ற பெயரில் செயல்பட்டது. (இப்போது ask.com) அதில்தான் எல்லாவற்றையும் தேடிக்கொள்ள வேண்டாம். அது கூட அவன் சொல்லித்தான் எனக்குத் தெரியும். எனக்கெல்லாம் வேலைக்குச் சேர்ந்த பிறகுதான் கம்ப்யூட்டரை shutdown செய்யவே தெரியும். Shutdown செய்வதற்குக் கூட Start க்குச் செல்ல வேண்டுமே என முகைநரண்..ஸாரி.. நகைமுரண் பரப்பித் திரிந்திருக்கிறேன் என்றால் பார்த்துக்கொள்ளுங்கள்.

அதற்கு முன்னர் நமது கம்ப்யூட்டர் நாலேஜ் எல்லாம் படிக்கிற காலத்தில் இருந்த C, Fortran லேங்குவேஜ்க்கு ஒரு பேப்பர் இருக்குமே அதோடு சரி. அதற்கு லேப் வேறு. அங்கே மட்டுந்தான் ஏசி போடுவார்கள். உள்ளே போகும் போது செருப்பு, ஷூ எல்லாம் கழட்டி விட்டுச் செல்ல வேண்டும். கம்யூட்டர் லேப் பீரியட் மட்டும் செம காமெடியாக இருக்கும். ஒரு நாள் பழனிச்சாமின்னு ஒரு பையன் சீரியஸாக என்னிடம் வந்து கேட்டான். “மாம்ஸு.. என்னோட கீபோர்ட்ல X இல்லடா. வந்து பாருடா” நானும் போய் தேடிப் பார்த்தேன். அவன் சொன்னது நிஜம் தான். ஒரு 2 நிமிசம் தேடியிருப்போம்.  ”உன்னை ஏமாத்தீட்டாங்க பழனி. உன் கீபோர்டுல மட்டும் X இல்ல பாரு” என பேசிக்கொண்டோம். அப்புறம் தான் அங்கிருந்த மேடத்தை அழைத்தோம். சுடிதார் அணிந்து சடையை முன் பக்கம் தூக்கிப் போட்டிருக்கும் மேடம்ஸ் அங்கே மட்டுந்தான் இருப்பார்கள். மேடம் என்றால் அதுக்கு முந்தைய வருடம் BE முடித்த பெண்மணியாகவோ அல்லது ME படித்துக்கொண்டிருக்கும் பிகராகவோ இருக்கும்.

“வாட்?” எனக் கூவியது மேடம்.

“நோ எக்ஸ் இன் மை கீபோர்டு மேடம்” என்றான் பழனி. நான் கூடவே தலையாட்டினேன்.

மேடம் ஒரு முறை முறைத்து விட்டு X ஐ தொட்டுக்காட்டி விட்டு, “எல்லா கீபோர்டுலையும் இந்த எடத்துல தான் எக்ஸ் இருக்கும்” என தமிழுக்கு மாறினார்.

இப்போது திரையை மட்டும் பார்த்துக்கொண்டு கீபோர்டில் இலாவகமாக எங்கோ ஐரோப்பிய தேசத்தில் டைப்பிக்கொண்டிருக்கிறான் பழனி. காலம் மாறி விட்டது. காலத்துக்குத் தக நாமும் மாறி விட்டோம். இந்த பிளாஷ்பேக் எல்லாம் சொல்வதற்குக் காரணம் ரமேஷ் சொன்ன அமெரிக்கப் பல்கலைக் கழகத்தின் பெயரில் ஹா மட்டும் சரியாக காதில் விழவில்லை. அவன் ஏதோ தமாஷுக்கு என்னை ஓட்டுவதாகத்தான் முதலில் நினைத்தேன். பிறகுதான் MS படிக்க அமெரிக்கா போகும் திட்டம் அவனுக்கு ஏற்கனவே இருந்தது புரிந்தது. அதனால் தான் வட்டியில்லாமல் கடன் கிடைத்தாலும் கூட அதைத் தவிர்த்திருக்கிறான். தீர்க்கதரிசி.

போய் எம்.எஸ் படித்தான். படித்து முடித்த உடனே வேலை. நினைத்துப் பார்க்க முடியாத சம்பளம். கூவிக்கூவி கடன் கொடுத்திருக்கிறார்கள். 35 ஆயிர ரூபாய் மோட்டார் பைக் கடன் வேண்டாமென்றவனுக்கு அமெரிக்காவில் கடன் வாங்கினால் தான் மரியாதை என அவனுக்கு முன்னோடியாக அங்கே சென்றிருந்தவர்கள் வழிநடத்தியிருக்கிறார்கள். முதல் மாதசம்பளம் வாங்கி ஒரு வருடம் கூட ஆகவில்லை. அதற்குள் கார், வீடு எல்லாம் வாங்கி விட்டான். எல்லாமே கடன். லிவரேஜிங் என்றான். இடையில் ஒரு முறை சிடி பிளேயர் வாங்கி எனக்கு பார்சல் அனுப்பியிருந்தான். ”நான் தான்டா MS படிச்சு வேஸ்ட் பண்ணிட்டேன். நீ ஸ்டெய்ட்டா H1 அப்ளை பண்ணிட்டு வந்துரு. நான் பாத்துக்கறேன்” என்று மெயில் அனுப்பியிருந்தான். நானும் அமெரிக்கக் கனவில் ஊசலாடிக்கொண்டிருந்தேன்.

ரமேஷுக்கு எல்லாம் நல்லபடியாகச் சென்று கொண்டிருந்தது. வாழ்க்கை இதை விட இனிமையாக இருக்க முடியாது என கவித்துவமாக நினைத்திருப்பான். 16 மாதம் சம்பளம் வந்தது. 17 ஆவது மாதம் முடிவதற்கு எட்டு நாள் பாக்கியிருந்த போது காலை பத்து மணிக்குக் கூப்பிட்டு Hand over your key. Sam will escort you out என அனுப்பி விட்டார்கள். Key எனச் சொன்னது access card. ஹையர் அண்ட் பையர் அமெரிக்க வாழ்வின் ஒரு அங்கம் என மனதைத் தேற்றிக்கொண்டான். மும்முரமாக வேலை தேடினான். வெறித்தனமாகத் தேடினான். பிறகு பைத்தியம் பிடித்த மாதிரி அலைந்தான். எட்டு மாதம் போயிருக்கும். அவனது எம்ப்ளாய்மெண்ட் ஹிஸ்டரியை விட கிரெடிட் ஹிஸ்டரி அச்சுறுத்தியது. இனி மேல் வேலை கிடைத்தாலும் கிரெடிட் ஹிஸ்டரியை ரிப்பேர் செய்ய முடியுமா தெரியவில்லை. மனமுடைந்து குடும்பத்தோடு தற்கொலை செய்துகொண்ட சில இந்தியர்களைப் பற்றிக் கேள்விப்பட்டான். நல்ல வேளை அவனக்கு கல்யாணம் ஆகவில்லை.

வழக்கமாக அவனுக்கு கார் ஓட்டுவது பிடிக்கும். வேகமாக நீண்ட தூரம் ஓட்டுவான். வேகமாகவும் ஓட்டுவான். இப்போதும் அவன் காரை எடுத்தான். அமெரிக்க வாழ்க்கை அவனைத் துரத்தியது. கிரெடிட் ஹிஸ்டரி துரத்தியது. இந்த முறை அவனது வேகம் சீராக இருந்தது. அவன் தீர்மானமாக இருந்தான். எவ்வித பதட்டமுமில்லை. காரை நேராக ஏர்போர்ட்டுக்கு எடுத்துச் சென்று பார்ச் செய்தான். சென்னைக்கு ஒன்வே விமான டிக்கெட் வாங்கப் போதுமான பணம் இருந்தது. விமானம் ஏறிய போது அவன் பெற்ற எம்.எஸ் பட்டமும், வீட்டு சாவியும், கார் சாவியும் அமெரிக்க நினைவாக அவன் கூடவே வந்தன.

அவன் விமானம் ஏறி இன்றோடு பத்து வருடம் முடிகிறது. நான் ஆபீஸில் வட்டியில்லாமல் கார் லோன் வாங்கியிருக்கிறேன்.

No comments: