Monday, November 11, 2013

பங்காளி சண்டை

கிட்டத்தட்ட இரண்டு வருடமாக இந்த கம்யூனிட்டியில் வசிக்கிறேன். இங்கே வந்த பிறகு பல சுவாரசியமான மனிதர்களோடு பழக வாய்ப்புக் கிடைத்திருக்கிறது. அதில் ஒருவர் தான் சிவசுப்பிரமணியம் சார். மனிதர் தபால் துறையில் வேலை செய்து ரிட்டையர்ட் ஆனவர். உற்சாகமான மனிதர். உலக ஞானம் கொண்டவர். அவருக்குத் தெரியாத விஷயமே இல்லை என்று கூடச் சொல்லலாம். எல்லாவற்றைப் பற்றியும் ஒரு கருத்தும், தர்க்கமும் வைத்திருப்பார். அவரோடு பேசும் போது அவ்வப்போது ஜயமோகனோடு பேசுவது போன்று பிரமை எனக்கு ஏற்படும். இத்தனைக்கும் நம்ம சிவா சாருக்கு ஜெமோ யாரென்று கூடத் தெரியாது.

எவரெடி பேட்டரி மாதிரி எனிடைம் கருத்துக் களஞ்சியம் அவர். அவரோடு பேசுவதே அலாதியான அனுபவம். பல பாஷை பேசுவார். நிறைய ஊரில் வேலை பார்த்திருக்கிறார். ஊர் என்பதற்கு மாநிலம் என்று பொருள். தமிழ், தெலுங்கு, கன்னடம். இந்தி என எல்லா மொழியும் பேசுவார். அடிக்கடி அச்சா போடுவார். தமிழ் நாட்டிலும் பல ஊர்களுக்குப் போயிருக்கிறார். ஒவ்வொரு ஊரிலும் என்ன மாதிரியான மக்கள் வசிக்கிறார்கள், என்ன மாதிரியான கலாச்சாரம் நிலவுகிறது, என்ன மாதிரியான உணவு விருப்பமானதாக இருக்கிறது என்றெல்லாம் விரல் நுனியில் வைத்திருப்பார்.

நான் இங்கே குடியேறியவுடன் வீட்டுக்கு வந்து ஸ்வீட் கொடுத்து முதலில் பேசினார். பழக இனிமையான மனிதர். இது போன்ற மனிதர்கள் வாழும் கம்யூனிட்டியில் வசிப்பதற்குக் கொடுத்து வைத்திருக்க வேண்டும். நாட்டு வைத்தியத்திலிருந்து நார்த் அமெரிக்கன் ஹிஸ்டரி வரைக்கும் புட்டுப் புட்டு வைப்பார். அவர் பேசும் பாயிண்ட் ஆஃப் வியூ மிகவும் ரசிப்புக்கு உரியதாக இருக்கும். நாம் நினைத்ததை அப்படியே பேசுகிறாரே எனப் பல சமயங்களில் தோன்றும். இவர் பேசும், கருதும், ஆசைப்படும் விஷயங்கள் எல்லாம் நடந்தால் இந்தியா எத்தகைய சொர்க்க புரியாக மாறும் என நான் அடிக்கடி வியப்பதுண்டு.

சிவசுப்பிரமணியம் சாரைப் பற்றிய பிரமிப்பு பல மடங்காக மாறியது எங்களது மொட்டை மாடி சந்திப்புகளில் தான். மொட்டை மாடியில் இருந்து பார்த்தால் மலை தெரியும். மலையைப் பார்த்து ரசித்தபடி வெள்ளிக்கிழமை மாலைப் பொழுதுகளை அவரோடு நான் கழிக்கும் சந்தர்ப்பங்கள் அலாதியானவை. இது வரைக்கும் எத்தனையோ பேரோடு தண்ணி அடித்திருக்கிறேன். இளைஞர்களோடு, கவிஞர்களோடு, காட்டை வித்துக் கள்ளுக் குடித்தவரின் பேரனோடு, சரக்குப் போனால் மட்டுமே ஆங்கிலம் பேசும் ஆட்களோடு, இலக்கியவாதிகளோடு, ஆண்களும் பெண்களுமாக ஒன்றாகக் குடிக்கும் கும்பலோடு, முன்னாள் காதலியின் கணவனோடு, பழைய நண்பர்களோடு என நீளமான பட்டியல் அது. சிவா சாரோடு கழித்த பொழுதுகள் அற்புதமானவை. அவர் உதிர்த்த கருத்துக்களைத் திரும்ப வந்து அசை போட்டால் அடுத்த வெள்ளிக்கிழமை வரைக்கும் தாங்கும். எழுத்தாளர் அல்லாத ஒருவர் விழுமியங்கள், படிமங்கள், குறியீடுகள் பற்றிப் பேசுவது எத்தனை பெரிய இன்பம்!

இந்த இடத்தில் ராமகிருஷ்ணனைப் பற்றிய அறிமுக சீன் அவசியமாகிறது. இவர் சிவா சாருக்கு நிகரான அறிவாளி. ஒவரும் மத்திய அரசுப் பணியிலிருந்து ஓய்வு பெற்ற பெருமகனார். பெரும்பாலும் ஆங்கிலத்தில் பேசுவார். மொட்டை மாடி ஜோதியில் இவரும் ஐக்கியமாகி பிரகாசமாக எரிவார். இந்த இரண்டு பேரையும் பெற எங்கள் கம்யூனிட்டி நிச்சயம் எதாவது புண்ணியம் செய்திருக்க வேண்டும். இருவரும் அரை போதையில் நிதானம் தவறாமல் கூட்டுப் பிரசங்கம் செய்யும் போது எஸ்.பி.பாலசுப்பிரமணியமும், ஜேசுதாஸும் ஒன்றாகச் சேர்ந்து பாடுவது போல இருக்கும்.

தவறாமல் எல்லா வெள்ளிக் கிழமையும் மொட்டை மாடியில் ஆஜராகி விடும் என்னால் இரண்டு வாரம் தொடர்ச்சியாக கம்பெனி கொடுக்க முடியவில்லை. ஒரு சிறு பிரச்சினை. எல்லாப் பெரிய பிரச்சினைகளையும் அப்படித்தான் அறிமுகம் செய்ய வேண்டியிருக்கிறது. ஒரு நாள், இரண்டு நாள் பிரச்சினையல்ல. இருபத்தைந்து வருடமாகத் தீர்க்க முடியாத சிக்கல். இருந்தாலும் முடிந்த வரைக்கும் சுருக்கமாகச் சொல்கிறேன். பிரச்சினையின் ஆரம்பம் ஒரு கிணறு. எங்களுக்கும், எங்கள் பெரியப்பாவுக்கும் பொதுவான எட்டு ஏக்கர் நிலமும், அதன் நடுவே ஒரு கிணறும் இருந்தது. நிலத்தை ஆளுக்கு நாலு ஏக்கராகப் பிரித்து உழுதுகொண்டிருந்தார்கள். அதில் ஒன்றும் பிரச்சினை இல்லை. ஆனால் பிரச்சினை கிணற்றில் வந்தது.

ஆளுக்கு ஒரு நாள் தண்ணீர் ஓட்டிக்கொள்ள வேண்டும் என்பது கணக்கு. சாயங்காலம் ஆறு மணியோடு ஒருத்தரின் தண்ணி எறவு முடியும். ஆற்றுக்கால் நிலம் என்பதால் கோடையில் கூட தண்ணீர் எப்படியும் மூன்று நாலு மணி நேரம் ஓடும். ஆறு மணிக்கு முடிய வேண்டுமென்றால் மதிய மூன்று மணிக்காவது மோட்டரைப் போட வேண்டும். பெரியப்பா 05:30 க்குத்தான் போடுவார். ‘ர்’ என்பது இங்கே சபை நாகரீகம் கருதி என்பதைக் கவனியுங்கள். முழுவதுமாக ஓடி முடிக்க ராத்திரி ஒன்பது, ஒன்பதரை ஆகி விடும். ஒரு நாள் என்றால் பரவாயில்லை. ரொம்ப நாளைக்கு இது தொடர்ந்திருக்கிறது. ஒரு நாள், “இந்த பல சாதி நாய்க பண்ற அதிக்களம் தாங்க முடியல. எல்லாம் கெழக்க இருந்து மேக்க எரிச்சுக்கிட்டு போறவன் பாத்து வெசாரிச்சாப் போதும்” என சத்தமாக அம்மா கத்தி விட்டாள்.

அது பத்தாதா? எங்க பெரியாத்தாக்காரி அப்படியே அட்டாரிக்குக் குதிக்கிறாள். ”என்னலே பல சாதி நாய்” என ஆரம்பித்தவள் வாயில் கூவம் கூவமாக வந்து கொட்டியது. பொதுவாக சாமி, கண்ணூ, தங்கம் என்றெல்லாம் கொஞ்சும் பெண்கள் இந்த மாதிரியான சமயங்களில் விஸ்வரூபம் எடுக்கிறார்கள். செக்ஸ் கல்வி இல்லாத சமுதாயத்தில் வளர்ந்த இவர்களுக்கு இத்தனை விஷயம் தெரியுமாவென வியப்பாக இருக்கும். அப்படி அவள் பேசிய பேச்சில் ஊரே நாறியது. எங்கம்மாவும் சும்மாவா? அவளும் திரும்பப் பேசினாள். சொற்களாலான யுத்தம் அங்கே அரங்கேறியது. அதில் ஆண்களால் தாக்குப் பிடிப்பது கடினம். அண்ணன், தம்பி இரண்டு பேரும் பொண்டாட்டிமார் இருவரையும் இழுத்துச் செல்ல பிரயத்தனப்பட்டு தோற்றுக்கொண்டிருந்தார்கள். அப்போது தான் என் அண்ணன் – பெரியப்பா பையன் – அந்தக் காரியத்தைச் செய்தான்.

கைக்கடப்பாறை எடுத்துக்கொண்டு கிணற்றுப் படியில் வேகமாக இறங்கினான். இறங்கியதும் மோட்டாரை மூர்க்கத்தனமாக ஓங்கி அடித்தான். மோட்டார் bed இல் இருந்து நட், போல்டை பலமாகத் தாக்கினான். விபரீதத்தை உணர்ந்த அப்பத்தா, ‘அட சாமி. உம்பட வயசுக்கு இத்தன கோவம் ஆகாது’ என பாம்பேறிச் சுவருக்கு மேலிருந்து கெஞ்சிக்கொண்டிருந்தது. அப்பாரு கிணற்றுப் படியில் ஓடிப் போய் இறங்கி அவனைத் தடுக்கப் பார்த்தார். அதற்குள்ளாக அவன் மோட்டரை வெற்றிகரமாக கிணற்றுக்குள் தள்ளி விட்டான். அப்பாரு அவன் கையைப் பிடித்து இயலாமையில், “ஏண்டா.. எவனாச்சும் குடியானவன் வயித்துல பொறந்துட்டு இப்படிப் பண்ணுவானா?” எனப் புலம்பினார். அதற்கு அவன் “உம்பட சின்னப் பேரனையும் இதே கடப்பார்ல குத்திக் கொல்லுவன். அப்ப உம்பர சின்ன மருமவ வெள்ளச் சீல கட்டிக்குவா பாரு” எனத் திருப்பிக் கத்தினான். நான் அப்பத்தா பக்கத்தில் நின்று கீழே நடப்பதை பயத்துடன் பார்த்துக்கொண்டிருந்தேன். இப்போது நினைத்துப் பார்த்தால் எல்லாம் கலங்கிய பிம்பம் போல நினைவில் ஊசலாடுகிறது.

அந்த வயதில் அவன் சொன்னது புடியவில்லை. அதன் பிறகு அந்த வார்த்தையை நினைத்தால் ஈரக்குலை நடுங்கும். உன் மகன் செத்தால் நீ வெள்ளைப் புடவை கட்டிக்கொள்வாய் என்பது எத்தனை வன்மமும், விஷமும் கலந்த வார்த்தை, அதுவும் பதினைந்து வயதுப் பையன் பேசுவது! எத்தனை ஜென்மம் எடுத்தாலும் மன்னிக்கவே கூடாது என உறுதி பூண்டிருக்கிறேன். அந்தக் கிணறும், எட்டு ஏக்கரும் இருபத்தைந்து வருசமாக சும்மா கிடக்கிறது. எத்தனை பேர் முயன்றும் பிரச்சினையைத் தீர்க்க முடியவில்லை. இரண்டு பேருக்கும் பொதுவான பங்காளிகள், அப்பன்மார்களின் தாய்மாமன், சங்கரண்டாம்பாளையம் பட்டக்காரர் என எத்தனையோ பேர் பேசியும் பயனில்லை. ஊர்ப் பசங்க கிரிக்கெட் விளையாடத்தான் முக்கால்வாசி பயனாகிறது. அது போக மிச்சமிருக்கும் பகுதி முள் மூடி புதராகக் கிடக்கிறது. கிணறு பாசி படர்ந்திருக்கிறது. ஊர் ஓரமாக இருக்கும் வற்றாத கிணறு எங்களுடையது. ஊர்ச் சிறுவர்கள் அத்தனை பேரும் நீச்சல் பழகிய கிணறு. ஆற்றுக்கு அருகில் இருப்பதால் எப்போதும் வற்றாத கிணறு. இறப்பாரின்றிக் கிடக்கிறது.

அப்பத்தாக் கிழவி செத்து ஆறு மாதம் ஆகிறது. கிழவன் கிடையில் கிடக்கிறார். “நாஞ்சாவறதுக்குள்ள அந்தக் கெணத்துல மோட்டார் வெச்சு தண்ணி ஓட்டீறோனும்ப்பா.. நீ மனசு வெச்சீன்னாத்தா முடியும்” என கெஞ்சினார். நிலத்தையும், கிணற்றையும் பங்கித் தீர்ப்பது மட்டுமல்ல பிரச்சினை. ஈகோவையும், பகையையும் தீர்க்க வேண்டும். அதற்காகத்தான் இரண்டு வாரமாக ஊருக்குப் போய்க்கொண்டிருக்கிறேன். பெரியப்பனும், அவன் பொண்டாட்டியும், அவன் பையனும் மன்னிப்புக் கேட்டால் பார்க்கலாம் என அப்பாவிடம் சொல்லிவிட்டுத் திருப்பியிருக்கிறேன்.

நான் சொன்னதெல்லாம் சிவசுப்புரமணியம் சாரும், ராமகிருஷ்ணன் சாரும் அமைதியாகக் கேட்டுக்கொண்டிருந்தார்கள். “இது ஒரு பிரச்சினையே இல்லை” என்றார்கள். அவர்கள் சொன்ன win-win பார்ஃமுலா எல்லாம் ஊரில் பெரியவர்கள் “ஏப்பா.. இப்படிக் காட்ட சும்மா போட்டு வெச்சுருக்கீங்களே.. இதான் சம்சாரி வயித்துல பொறந்தவனுக்கு லச்சணமா?” என்பதை நினைவூட்டியது. பங்காளி சண்டையின் பகைமைகள் பழி தீர்ப்பதால் முடிவுக்கு வருவதில்லை என்னும் தீர்மானத்துக்கு வர இந்த ஒரண்டு பெரியவர்களும் மொட்டை மாடியில் ஊக்குவித்தார்கள். ஒரு நிமிடம் நிதானம் தவறினால் அதைச் சரி செய்ய ஒரு தலைமுறைக் காலம் பிடிக்கும் என்றார்கள்.

“காட்டை ஆளுக்கு நாலு ஏக்கர்னு பங்கி பிரிச்சுக்கலாம் சார். கெணத்த என்ன பண்றது?” என்றேன்,

“அத காமன்ல யூஸ் பண்ணுங்க” - சிவா சார்.

“அது முடியாது சார். செத்து தெக்குவடக்குல போட்டாலும் கூட்டு ஆவாதுன்னு எங்க பெரியப்பன் சொல்றான்”

“அப்ப கெணத்த ஏலத்துல விடுங்க.. யார் அதிகமா கேக்கறாங்களோ அவங்க வெச்சிக்கட்டும். அந்தப் பணத்தை வெச்சு இன்னொருத்தர் புதுக் கெணறு வெட்டிக்குங்க” இது ராம்கி சார்.

நல்ல யோசனைதான். ஆனால் பிரச்சினை கிணற்றோடு முடிவதில்லை. கிணற்றில் உள்ள கரண்ட் சர்வீஸோடும் சேர்ந்தது. சர்வீஸ் இல்லாமல் வெறும் கிணற்றை மட்டும் வைத்துக்கொண்டு எதுவும் செய்ய முடியாது. புதுக் கிணறு வெட்டி அதற்கு சர்வீஸுக்கு எழுதிப் போட்டாலும் கிடைக்காது. ஆற்றிலிருந்து 600 அடி தூரத்திற்குள் சர்வீஸ் கொடுக்கக் கூடாதென புதிதாக விதிமுறைகள் வந்துள்ளன. இதை இவர்களுக்குச் சொன்னால் புரியாது. ஆனால் ஒன்று மட்டும் நிச்சயம். எப்படியாவது பிரச்சினையைத் தீர்த்து விட வேண்டும். அந்த நினைப்போடு அடுத்த வாரம் ஊருக்குப் போனேன்.

பெரியப்பன் தடி போட்டு நடக்கும் நிலைமையில் இருந்தான். ஆளுக்கு நாலு ஏக்கர் என பங்கி வைத்தான். பெரியவன் பங்கி வைப்பதும் சின்னவன் பங்கு எடுப்பதும் வழக்கம். எந்தப் பங்கை வேண்டுமானாலும் எடுக்கலாம். கிணறு நடுவில் இருந்தது. அதற்கு ஏலம் ஆரம்பித்து நான்கு இலட்சத்தில் போய் நின்றது. “சொத்தே அழிஞ்சாலும் சரி. கெணத்த மட்டும் அவனுக்கு உட்றக் கூடாதுடா” என அப்பா உத்தரவு போட்டிருந்தார். பெரியப்பனும், அவன் மகனும் அதே மனோநிலையில் இருப்பார்கள் என்பதில் சந்தேகம் இல்லை. அவர்கள் நாலரைக்குக் கேட்டார்கள்.

“நீ அஞ்சுக்குக் கேளுடா” என்றார் அப்பா.

“பரவால்ல உடுங்க” என்றேன்.

பத்து நாளில் ஊர்ப் பெரிய மனிதர்கள் முன்னிலையில் பணத்தை செட்டில் செய்தார்கள். பத்திரப் பதிவு இத்தியாதி எல்லாம் முடிய நான்கைந்து நாள் பிடித்தது. நாங்கள் பங்கெடுத்த நாலு ஏக்கரையும் குத்தகைக்கு வேண்டுமானால் உழுதுகொள்ளச் சொன்னதை யாரும் எதிர்பார்க்கவில்லை. கடப்பாரையில் மோட்டரை கிணற்றுக்குள் தள்ளியவன் கண்கலங்கி நின்றான். நான் நாலரை இலட்ச ரூபாயை ஹவுசிங் லோன் அடைப்பதற்கு சென்னைக்கு எடுத்து வந்து விட்டேன்.

நான் ஊரில் இல்லாத சமயத்தில் இங்கே ஒரு மேட்டர் நடந்திருந்தது. வெள்ளிக்கிழமை மொட்டை மாடிக்கு சிவா சாரும் வரவில்லை. ராம்கி சாரும் வரவில்லை. விசாரித்த போது பேசிக்கொண்டார்கள் – இருவருக்கும் சண்டையாம். பூவும் நாருமாக, மலரும் மணமுமாக, ஈயும் பீயுமாக இருந்தவர்களுக்கு என்ன ஆனதென்று மேலும் விசாரித்தேன்.

அபார்மெண்டில் காலியாகக் கிடந்த மூனுக்கு நாலடி இடத்தில் சிவசுப்பிரமணியம் சார் சுரைக்காய் விதை போட்டிருந்தாராம். அது காய்த்து முற்றியிருக்கிறது. ராம்கி சார் ராத்தியில் வந்து அதைப் பறித்துப் போய் கொழம்பு வைத்து விட்டாராம். இதை சிவா சார் என்னிடமே சொன்னார்.

“தேரா பாப் கா &^&*%*&^*(* கியா” என்றார்.

&^&*%*&^*(* என்றால் இந்தியில் புடலங்காய் போலும்.

No comments: