Tuesday, November 12, 2013

வறுமையின் வரையறை

நாம் அடிக்கடி பயன்படுத்தும் பல வார்த்தைகளின் உண்மையான பொருள் நமக்குத் தெரிந்திருக்கிறதா என்று சிந்தித்துப் பார்க்கிறேன். அவற்றில் அதி முக்கியமானது என்ற பட்டியலை எடுத்தால்வறுமைக் கோடுஎன்ற பதம் தென்படும்.

வீட்டைச் சுற்றியுள்ள புல்லை வெட்டிச் சுத்தப்படுத்த 200 ரூபாய்க்கு ஆள் அமர்த்தி விட்டு, உடற்பயிற்சி செய்வதற்காக ஐநூறு ரூபாய் கொடுத்து ஜிம்முக்குச் செல்லும் போது வறுமையின் சுவை நமக்குப் பிடிபடுவதில்லை. வறுமைக் கோடும்,அதற்குக் கீழே உள்ளவர்களின் எண்ணிக்கையும் செய்தி என்ற எல்லையைத் தாண்டி நம்மை அடைவதுமில்லை.

உலகில் உள்ள ஏழைகளின் மூன்றில் ஒரு பகுதி இந்தியாவில் வசிப்பதாக உலக வங்கியின் ஆய்வு ஒன்று கூறுகிறது. அதே நேரம், நமது நாட்டின் பொருளாதாரம் மிக வேகமாக வளர்வதாகவும், அதனால் வறுமை ஒழிப்பு நடந்தேறி வருவதாகவும், வறுமைக் கோட்டிற்குக் கீழே உள்ளோர் எண்ணிக்கை குறைந்து வருவதாகவும் இந்தியாவில் நாம் நம்புகிறோம்.

ஆனால் உண்மையில் வறுமை என்றால் என்ன? இந்தக் கேள்வியை, கற்றுணர்ந்த நண்பர் ஒருவரிடம் கேட்டேன். வாழ்க்கையின் அடிப்படைத் தேவைகள் கிடைக்கப் பெறாத போது வறுமையில் இருப்பதாகப் பொருள் காணலாம் என்றார் அவர். அடிப்படைத் தேவைகள் எவையெவை என அவரது எழு வயது மகளைக் கேட்ட போது, ‘உணவு, உடை, உறைவிடம்என்றாள்.

இங்கே உறைவிடம் பற்றிப் பேசுவது முறையாக இருக்காது. சொந்த வீடு வைத்திருப்பதுதான் உறைவிடம் என்ற காரணியைப் பூர்த்தி செய்வதாகப் பொருள் கொள்வது முறையல்ல. குறைந்தபட்சம் வாடகை கொடுக்குமளவு வசதியும், வருமானமும் இருந்தால் போதுமானது.

ஆனால் வாடகைக்குக் கூட உறைவிடம் தேட முடியாமல் வீதியில் படுத்துறங்கும் நிலை என்பது நிச்சய வறுமை. அப்படித்தான் நாம் நினைத்துக் கொண்டிருக்கிறோம். நமது அரசாங்கத்தின் வறுமைக் கோட்டுக் கணக்கீடு அப்படி நினைக்கவும் இல்லை; கணக்கிடவும் இல்லை.

2005-06 ஆம் நிதியாண்டில் நகர்ப் புறத்தில் மாத வருமானம் ரூ 560 க்குக் குறைவாகவும், கிராமப் பகுதிகளில் ரூ368 க்குக் குறைவாகவும் சம்பாதிக்கும் மக்களை வறுமைக் கோட்டுக்குக் கீழே உள்ளோர் என்று வரையறுக்கிறார்கள்.

நகர்ப் புறத்தில் 561 ரூபாய் சம்பாதிக்கிறவன் வறுமைக் கோட்டுக்கு மேலே உள்ளவனாம். இந்த வரையறை நடைமுறை நிலவரத்தை ஏளனம் செய்வது போலுள்ளது. எனினும் எதன் அடிப்படையில் வறுமைக் கோடு வரையப்படுகிறது என்பதை அறிந்து கொள்வது நல்லது.

வறுமைக் கோடு நிர்ணயம் 1978 வரை பின்னோக்கி நம்மை இழுக்கிறது. அந்த வருடம் நகரங்களில் ரூ71.30 ம், கிராமங்களில் ரூ 61.80 ம் வருவாயோ அல்லது அதற்கு அதிகமாகவோ ஈட்ட முடிந்தால் வறுமைக் கோட்டுக்கு மேலே இருப்பதாகப் பொருள். அந்தக் காலத்தில் நிலவிய விலைவாசியின் அடிப்படையில் கிராமங்களில் தினசரி 2400 கலோரி உணவும், நகரங்களில் 2100 கலோரி உணவும் உட்கொள்ள அது போதுமானதாக இருந்ததாக ஐதீகம்.

அதை அடிப்படையாக வைத்து வருடந்தோறும் பணவீக்கம் அல்லது விலைவாசி ஏற்றம் என்று வாய்பாடு போட்டுப் பெருக்கி 2005-06 ஆம் வருடத்திற்கான கணக்கைச் சொல்லுகிறார்கள். உண்மையில் 560 ரூபாய் பணம் சுகாதாரமான, ஆரோக்கியமான 2100 கலோரி உணவை உட்கொள்ளப் போதுமானதாக இருக்குமா என்றெல்லாம் ஆராய்ந்தால் சுவாரசியமான விஷயங்கள் வெளிப்படலாம்.

அதைக் கடந்து, உயிர் வாழத் தேவையான அடிப்படை ஆகாரத்தை 560 ரூபாய் அளிப்பதாகவே வைத்துக் கொண்டாலும், அது மட்டுமே ஒரு மனிதனை வறுமையில் இருந்து மீட்டு விடுவதாகப் பொருளல்ல. உதாரணமாக, சுகாதாரமான குடிநீர் வேண்டுமென்றால்கூட காசு கொடுத்து வாங்க வேண்டியிருக்கிறது. 1978 இல் அப்படியெல்லாம் இருந்திருக்காது.

அடிப்படை சுகாதார வசதிகள், மருத்துவ வசதிகள், கல்வி என எல்லாவற்றுக்கும் ஒரு விலை இருக்கிறது. அரசு மருத்துவமனைக்குச் சென்றாலும், குழந்தைகளை அரசுப் பள்ளிக்கு அனுப்பினாலும் அதற்கும் ஒரு செலவு இருக்கிறது.

ஆணும், பெண்ணும் ஆடை உடுத்தாமல் வாழ முடியாது. சென்னை மாநகரில் 2100 கலோரி உணவைத் தின்று விட்டு அம்மணமாகத் திரிந்தால் அவன் வறுமைக் கோட்டைத் தாண்டியவனா, புரியவில்லை. சாப்பாடு மட்டும் இந்தால் போதும், அவன் வீதியில் படுத்துத் தூங்கினாலும் பரவாயில்லை; சாலையில் கக்கூஸ் போனாலும் பரவாயில்லை. அதைத்தானா நமது வறுமைக் கோடு வலியுறுத்துகிறது.

பஞ்சக் கோடு அல்லது பரதேசிக் கோடு என்று வாசிக்க வேண்டியதை நாம் வறுமைக் கோடு என்று வாசித்து வந்திருக்கிறோம். இருக்கட்டும். 2004-05 ஆம் ஆண்டில் 27.5 % மக்கள் வறுமைக் கோட்டிற்குக் கீழே உழன்றதாக திட்டக் கமிஷன் அறிக்கை தெரிவித்தது. 27.5% அதிகாரப்பூர்வ எண்ணிக்கை. நிஜமான எண்ணிக்கை இன்னும் அதிகமாக இருக்கும் என்றாலும் கூட, 110 கோடி மக்கள் தொகை கொண்ட தேசத்தில் 27.5 சதவீதம் என்பது முப்பது கோடிக்கும் மேல்.

இதில் நல்ல செய்தி என்னவென்றால், 1978 ஆம் வருடம் 51.3 விழுக்காட்டினர் இந்தியாவில் வறுமைக் கோட்டுக்குக் கீழே இருந்தனர் என்பதே. அதுவே 1954-55 இல் 64 சதவீதம். வறுமை ஒழிப்பு மெதுவாக என்றாலும் நிச்சயமாக நடந்தேறி வருவதாக அரசின் அறிக்கைகள் தெரிவிக்கின்றன.

அதே சமயத்தில் வறுமை என்ற சொல்லுக்கான இலக்கணமும், நிர்ணயமும் மட்டும் மாறவில்லை என்பதே வருந்தத் தக்க செய்தி. ஆடம்பரம் என்று சில ஆண்டுகள் முன்பு கருதப்பட்ட சங்கதிகள் இன்று அத்தியாவசியம் ஆகிவிட்ட நிலையில், அத்தியாவசியம் அல்லது இன்றியமையாதது என்று கருதக் கூடிய அம்சங்களே வறுமையை அளக்கப் பயன்படவில்லை என்பதே வேதனைக்குரிய விசயம்.

ஏழைக்கும், பணக்காரனுக்கும் இடையேயான இடைவெளி அகலமாகிக்கொண்டே வருகிறது. சமுதாய ஏற்றத்தாழ்வுகள் நிரம்பிய இந்தியச் சமூகத்தில், அதை விடக் கொடியதாக பொருளாதார ஏற்றத் தாழ்வுகள் உருவெடுத்திருக்கின்றன.

கடந்த பத்தாண்டுகளில் (அதிகாரப் பூர்வமாக) 1,80,000 க்கும் மேலான விவசாயிகள் தற்கொலை செய்த செய்தியை சமீபத்தில் கண்டோம். (நாஞ்சில் நாடன் கூட ஆனந்த விகடன்நன்றும் தீதும்பத்தியில் அது பற்றிக் குறிப்பிட்டிருந்தார்) உயிரை மாய்த்துக் கொண்டவர்களின் எண்ணிக்கையை இத்தனை பெரியது என்றால், உயிரோடு செத்துக் கொண்டிருக்கும் குடியானவர்கள் எத்தனை கோடிப் பேர் இந்தப் பாரத தேசத்தில் இருக்கக் கூடும்?

விவசாயக் கடன்களை அப்படியே ரத்து செய்வதில் உள்ள அபத்தங்களைப் பற்றி தனியே ஆராய வேண்டும்; கூடவே, முன்னேறிய மேலை நாடுகளில் விவசாயத்திற்கு அளிக்கப்படும் உதவிகளோடு ஒப்பிடுகையில் நமது தேசத்தில் கொடுப்பதெல்லாம் ஒன்றுமே இல்லை என்பதையும். இருக்கட்டும்.

நாம் எல்லாவற்றிலும் சீனாவோடு ஒப்பிட்டுப் பேசிக்கொண்டும், போட்டி போடுவதாக நினைத்துக்கொண்டும் உள்ளோம். யுனிசெஃப் புள்ளி விவரத்தின் படி 2006 ஆம் வருடம் ஐந்து வயதுக்கு உட்பட்ட 25 இலட்சம் குழந்தைகள் சீனாவிலும், இந்தியாவிலும் இறந்து போயுள்ளனர். இதில் இந்தியாவின் பங்கு 21 இலட்சம். ஊட்டச் சத்து குறைவாகப் பிறக்கும், வளரும் குழந்தைகளின் எண்ணிக்கை கவலையளிப்பதாக உள்ளது.

மக்கள் தொகையில் உலகிலேயே இரண்டாவது பெரிய நாடு. பொருளாதாரத்தில் 12 ஆவது பெரிய நாடு. 2007 இறுதியில் உலகின் நம்பர் 1 பணக்காரராக விளங்கிய முகேஷ் அம்பானியை உற்பத்தி செய்த நாடு. பொருளாதார வளர்ச்சியில் எடுத்துக் கொண்டால் உலக அரங்கில் இரண்டாவது இடம். எல்லாம் நன்றாகத்தான் தெரிகிறது.

இன்னொரு பக்கம். உலக வாழ்க்கைத் தரப் பட்டியலில் 128 ஆவது இடம். (நார்வே 2 வது, கனடா 3 ஆவது) உலகில் உள்ள ஏழைகளில் மூன்றில் ஒரு பாகத்தைக் கொண்டிருக்கும் நாடு. அதிகாரப் பூர்வமாக 30 கோடி ஏழை மக்களைஉண்மையில் அதற்கும் மேல்கொண்டிருக்கும் தேசம்.

முரண்பாடுகளும், அவலங்களும், சீரற்ற தன்மையும் கொண்டதாக நிலவுகிறது நமது பொருளாதாரமும் அதன் வளர்ச்சியும். நமது தேவை வெறும் பொருளாதார வளர்ச்சியா, அல்லது அனைவரையும் அரவணைத்துச் செல்லும் தேசத்தின் ஒட்டு மொத்த வளர்ச்சியா?

வறட்டு கம்யூனிஸ சித்தாந்தம் என்றுதான் இந்தக் கட்டுரையை நீங்கள் கருத வேண்டும். ஏனென்றால், ஏதாவது ஒரு ரூபத்தில் வளர்ச்சி என்ற ஒன்று இல்லாதவரை ஒட்டு மொத்த அல்லது ஒருங்கிணைந்த வளர்ச்சி என்பது சாத்தியமில்லை.

மேலும், முதலாளித்துவம் என்பது நமக்குப் பிடிக்கிறதோ இல்லையோ
அதுதான் இயல்பானதும் நிலையானதுமாக இருக்கப் போகிறது.

(சில வருடங்களுக்கு முன்னர் உயிரோசைக்கு எழுதியது)

No comments: