Monday, November 18, 2013

சர்க்கரை வியாதி உங்களுக்கும் வரலாம்

மாப்ள அவனுக்கு சுகராமே! இவனுக்கு பிரஷர் வந்துருச்சாமே! முதுகு வலியில மூனு மாசம் பெட் ரெஸ்ட் எடுக்கச் சொல்லிட்டாங்களாமே!

இப்படியெல்லாம் நீங்கள் லஞ்ச் டேபிளில் அடுத்தவனைப் பற்றிப் பேசியிருக்கிறீர்களா? குறைந்தபட்சம் பேசுவதையாவது கேட்டிருப்பீர்கள். அப்படியெல்லாம் பேசாத, பேசுவதைக் கேட்கும் சந்தர்ப்பம் கூட கிடைக்காத யூத்-ஆக நீங்கள் இருந்து விட்டுப் போங்கள். நான் பேசியிருக்கிறேன். இருபத்தெட்டு வயதில் இறந்தவனைப் பற்றி, முப்பத்தைந்தில் சர்க்கரை வந்தவனைப் பற்றி, இருபத்தைந்தில் தீராத முதுகு வலியைத் தனதாக்கிக் கொண்டவனைப் பற்றி… நிறையவே கேள்விப்பட்டிருக்கிறேன். பேசியுமிருக்கிறேன். அப்படிப் பேசும் போதெல்லாம் அது குஜாலான ஒரு செய்தி. அதுவே நமக்கு வந்தால்?

விதி வலியது.

நமக்குத் தெரிந்த ஒருத்தர் வீட்டிலேயே சுகர் பரிசோதனை செய்யும் கருவி வைத்திருக்கிறார். அடிக்கடி சோதனை செய்துகொள்வார். காஷுவலாக பேசிக்கொண்டிருக்கும் போது, ”வாங்க நீங்களும் பண்ணிக்கலாம்” என்றார். ஆர்வக் கோளாறில் விடிந்து விடியாமல் போனேன். பல் கூட விளக்கவில்லை. பச்சைத் தண்ணியும் குடிக்கவில்லை. வெறும் வயிற்றில் டெஸ்ட் செய்ய வேண்டுமல்லவா?

வாங்க வாங்கன்னு சொல்லி அமர வைத்து விட்டு ஒரு பேனாவை எடுத்து வந்தார். கூடவே குட்டியா ஒரு மெஷின். கணிப்பொறி மவுஸ் சைஸுக்கு. அதில் ஓரங்குல strip ஒன்றைச் சொருகியே வைத்திருந்தார். அதில் என்னவோ 832 என நம்பர் காட்டியது. பேனாவை ஒரு முறுக்கு முறுக்கி விட்டு கையை நீட்டச் சொன்னார். பயமாக இருந்தது.

“வலிக்குமா?”

“வலிக்காது. ஆனா ரத்தம் வரும்”

விரல் நுனியில் பேனாவை வைத்து அழுத்தினார். தடவுகிற மாதிரித்தான் உணர்ந்தேன். எனினும் ரத்தம் கசிந்தது.

“இப்படித்தான் prick பண்ணனும்” என்றார் நண்பர். போலீஸ் கதைகளில் நகக்கண்ணில் ஊசி போட்டு சித்திரவதை செய்வததைத் தானே prick என்று சொல்வார்கள். திகிலோடு அவரையே சலனமில்லாமல் பார்த்துக்கொண்டிருந்தேன்.

மவுஸ் மெஷினில் இருந்த strip ஐ விரல் நுனியில் வைத்தார். மெஷின் குஷியாகி இயங்கியது. நம்பர் பூஜ்ஜியத்திலிருந்து கிடுகிடுவென ஏறியது. 30, 57, 73, 87, 98,103, 134 என ஓடி 142 இல் வந்து நின்றது. அப்பாவி மாதிரி அவரையே பார்த்த வண்ணமிருந்தேன். அவரது முகம் கலவரத்தைக் காட்டியது.

”ஐயம் ஸாரி டு சே திஸ்” என்றார்.

புரியாமல் விழித்தேன்.

“உங்களுக்கு டயபடீஸ் இருக்கு. என்னை விட அதிகமா இருக்கு. உடனே நீங்க இன்சுலில் அட்மினிஸ்டர் பண்ணனும்.” அட்டு மினிஸ்டரை நான் ஏன் பண்ண வேண்டும் என்றெல்லாம் மொக்கையான நினைக்கத் தோன்றவில்லை.

இந்த ஆள் ராகி ரொட்டியும், கோதுமை உப்புமாவும், ஓட்ஸ் கஞ்சியும் தவிர வேறு எதையும் சாப்பிட மாட்டாரே? நினைத்தாலே கலக்கியது. தினமும் இன்சுலின் ஊசி போட வேண்டுமா? ஊசியெல்லாம் போட்டா வலிக்குமே! புள்ளகுட்டி எல்லாம் படிக்க வைத்து, வளர்த்து வாலிபம் ஆக்கி.. இன்னும் எத்தனை பொறுப்புகள்? அல்ப ஆயுளில் போய்ச் சேர்ந்து விடுவோமோ? இதை வாசிக்கும் போது உங்களுக்கு சிரிப்பாகக் கூட இருக்கலாம். ஆனால் உண்மையில் உங்களுக்கு டயபட்டீஸ் பாசிட்டிவ் ஆக வந்தால் மட்டுமே என் வேதனை புரியும்.

“இப்ப நான் என்ன பண்ணனும்? உங்க சக்கரை டாக்டர் எங்க இருக்காரு?”

அந்த இனிப்பான டாக்டர் மந்தவெளியில் இருந்தார். சும்மா பார்க்க முடியாது. அப்பாயிண்ட்மெண்ட் வாங்க வேண்டுமாம். அன்றைக்கு மாலையே வாங்கினேன்.

“ஃபாஸ்டிங் சுகர் 99 க்குள்ள இருக்கணும். உங்களுக்கு 142 இருக்கு. ரொம்ப ஜாஸ்தி. ஐ மீன் ரொம்ப ரொம்ப ஜாஸ்தி. எதுக்கும் நீங்க ஒரு வாட்டி லேப்ல டெஸ்ட் பண்ணிருங்க”

“சுகர் வந்திட்டா இனிமேல் சாதமே சாப்பிடக் கூடாதா டாக்டர்? சப்பாத்தி, ராகி, ஓட்ஸ் எல்லாம் ஓகேவா? என்னால சக்கரை இல்லாம டீ குடிக்க முடியாது. ரொம்ப முடியலைன்னா சுகர்ஃபிரீ போட்டுக்கலாமா?”

“போட்டுக்கலாம். அதுக்காக சுகர்ஃபிரீல நீங்க பாயசம் எல்லாம் செஞ்சு சாப்பிடக் கூடாது.”

“ஓ.. தினம் இன்சுலின் போட்டா கை தூக்கவே முடியாதே டாக்டர்.”

கூட வந்த நண்பர் பரிதாபமாக என்னையே பார்த்துக்கொண்டிருந்தார்.

“நீங்க லேப்ல டெஸ்ட் பண்ணிட்டு வாங்க. அப்பறமா பேசலாம்” என்றார் டாக்டர்.

ஃபாஸ்டிங் சுகர், சாப்பிட்டு ஒரு மணி நேரம் கழித்து சுகர் என இரண்டு டெஸ்ட் எழுதிக் கொடுத்தார். அடுத்த நாள் காலையில் மேடவாக்கம் முச்சந்தியில் உள்ள லேப் திறப்பதற்கு முன்பே போய் விட்டேன். 12 மணிக்கு ரிப்போர்ட் கிடைக்குமென்றார்கள். அதற்காகவே ஆபீஸ் லீவ் போட்டிருந்ததால் சொன்ன நேரத்துக்குப் போனேன். ரிசல்ட் 88, 121 என வந்திருந்தது. மாலை மந்தவெளி டாக்டரிடம் ஓடினேன்.

மனிதர் சிரித்தார்.

“நீங்க உங்க ஃபிரண்ட் வீட்ல காலைல டெஸ்ட் எடுத்தீங்களே, அப்ப கையைக் கழுவிட்டு ரத்தம் எடுத்தீங்களா?”

தூங்கி எழுந்து அப்படியே போனதாக நினைவு. அதனால் மறுத்து மண்டையை ஆட்டினேன்.

”நைட் என்ன சாப்பிடீங்க.”

“தோசை..”

“சம் டைம்ஸ் இந்த மெஷின்ல பண்ற டெஸ்ட் அக்யூரெட்டா வராது.. ஆனாலும் இவ்வளவு டிஃப்பரன்ஸ் வராதே!” குழப்பமாக யோசித்தார்.

எல்லோரும் படுத்த பிறகு தூக்கம் வராமல் ஜீரா ஒழுகிய ஜிலேபி ஒன்றைத் தின்று விட்டு கையைக் கழுவாமல் அப்படியே படுத்ததை அவரிடம் சொல்லவில்லை. ஒரு விசிட்டுக்கு முன்னூறு ரூபாய். மொத்தம் அறுநூறு.

கண்டுபிடிக்கட்டுமே!

1 comment:

மங்கை said...

//கண்டுபிடிக்கட்டுமே!// athu sari...