Wednesday, November 27, 2013

எழுத்தாளனுக்கு சமூக அக்கறை அவசியமா?

ஃபேஸ்புக்கில் வால்பையன் ஒரு ஸ்டேட்டஸ் போட்டிருந்தார்.
தான் வாழும் சமூகத்திற்கு எதுவும் செய்யாமல் தன் எழுத்தை யாரும் மதிக்கவில்லை என பிதற்றுவது, குனிஞ்சு நின்னேன் என்னை யாரும் செய்யல என்பதற்கு சமம்.

சமூக அக்கறை படைப்பாளிகளுக்கு இல்லை என்ற குற்றச்சாட்டை எளிதாக யார் வேண்டுமேனாலும் சுமத்தி விடலாம். எனினும் சமூக அக்கறையோடு நடந்து கொள்வதும், அதனை வெளிப்படுத்தும் விதம் நடந்து கொள்வதும் தனி நபர் சார்ந்த விஷயம் என்றுதான் எனக்குப் படுகிறது.

யாருக்குத்தான் இங்கே சமூக அக்கறை இருக்கிறது? சமூக அக்கறை என்பதன் வரையறையே குழப்பமானதும் கூட. எங்கள் கம்யூனிட்டியில் பில்டரால் கிட்டத்தட்ட கோவணம் கூட உருவப்பட்ட மக்கள் சமூகச் செயல்பாடு என்ற பெயரில் ஏரியைச் சுத்தம் செய்துகொண்டிருக்கிறார்கள். இவர்கள் போன போன ஜென்மத்தில் புண்ணியம் செய்திருக்க வேண்டும். இவர்களுக்காக செளகர்யம் எல்லோருக்கும் வாய்ப்பதில்லை. ஒருத்தன் ரேப் செய்ய வரும் போது அதிலிருந்து தப்பிக்க முயற்சிக்காமல் அவனிடம் குளோபல் வார்மிங் குறித்துப் பேசி சுற்றுச்சூழலைக் காப்பாற்றும் நிலையில் இங்கே நாம் இல்லை. ஏரியைச் சுத்தப்படுத்துவதை விட மாதம் ஐயாயிரம் maintenance என பில் போடும் பில்டர் மீது நுகர்வோர் நீதிமன்றத்தில் போராடுவதே என்னளவில் முதன்மையானது.

நண்பர் இளவஞ்சி சொல்லுவார் – இன்றைய சூழலில் மற்றவர்களுக்கும், சமுதாயத்திற்கும் தொந்தரவு கொடுக்காமல் தன் சந்ததியை சமூகத்திற்கு ஒரு சுமையாக மாற்றி வைத்து விட்டுப் போகாமல் இருந்தாலே பெரிய விஷயமென்று. பல பேரது வாழ்க்கை அப்படித்தானிருக்கிறது. பொது இடத்தில் எச்சில் துப்பாமல், குப்பையை தொட்டியில் மட்டும் போட்டு, ஹெல்மெட் அணிந்து பைக் ஓட்டி, சிக்னலில் நின்று, தேர்தலன்று ஓட்டுப் போட்டு.. இப்படியான அடிப்படையான விஷயங்களைச் செய்வதே பெரிய விஷயமாகத் தெரிகிறது.

அப்படி இருக்கும் போது நீ பேரறிவாளனுக்காகப் பேசினாயா, இடிந்தகரை ஒடுக்குமுறைக்கு எதிராகக் குரல் கொடுத்தாயா, சாதி அரசியலை ஒழிக்க என்ன செய்தாய், ராமேஷ்வரம் மீனவர்களைக் கண்டு கொதிக்க வேண்டாமா என்றெல்லாம் கேள்வி எழுப்புவது சிரமமே. அல்லது மேலோட்டமாக, ஊழலுக்கு எதிராக, பொருளாதார வளர்ச்சியை முன்னிறுத்தி, ஏரியைச் சுத்தப்படுத்தி இப்படி எதையாவது செய்த மாதிரி போட்டோவாவது எடுத்துப் போட வேண்டாமா?

சதுப்பு நிலங்களில் ஆக்கிரமித்துக் கட்டடப்பட்ட சாஃப்ட்வேர் கம்பெனியில் வேலை பார்த்துக்கொண்டு corporate social responsibility குறித்துப் பேசுவது போல இருக்கிறது நம் கரிசனை. பொதுவான நம் சமூக அக்கறை குறித்தான சிந்தனையை நீயா நானா ஷோவும், ஷங்கர் படங்களும் தீர்மானிக்க அனுமதித்திருக்கும் நாம் எழுத்தாளன் சமுதாயத்திற்காக எதாவது செய்ய வேண்டும் எனக் கருதுவது கொஞ்சம் ஓவரான எதிர்பார்ப்பு தான்.

உண்மை தான். எழுத்தாளனிடம் சமூக அக்கறையை எதிர்பார்க்கும் உரிமை நமக்கில்லை. அதே போல தன் எழுத்தை மதிக்க வேண்டும் என நிர்ப்பந்திக்கும் உரிமையும் எழுத்தாளனிக்கில்லை. எழுதுவது ஒரு தொழில். அல்லது மனமுவந்து செய்யும் ஒரு ஹாஃபி. இந்த இரண்டில் ஒன்றாகத்தான் இருக்க வேண்டும். தொழில் என்றால் விற்காத எழுத்தை விற்கத் தெரியாத வியாபாரியாக அவன் புலம்புவதை உதறித் தள்ளிடலாம். இல்லை மனப்பூர்வமாகச் செய்கிறான் என்றால் எப்படியும் ஏழு பேர் பாராட்டத்தான் செய்வார்கள். அது போதும். ”அதெல்லாம் பத்தாது. என்னை ஏழு கோடி தமிழர்களும் கொண்டாடனும்” என்றெல்லாம் அடம் பிடிக்கக் கூடாது.

எழுத்தாளன் தன் எழுத்தை விற்பதை விட தன்னை விற்றாக வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறான். சாமானியர்களுக்குப் புரியாது. அதைப் புரிந்து கொள்ள நீங்கள் மனநல மருத்துவராக இருக்க வேண்டும் அல்லது சக எழுத்தாளனாக இருக்க வேண்டும். (வால் பையன் கூட ஏதோ நாவல் எழுதிக்கொண்டிருப்பதாகக் கேள்விப்பட்டேன்)

அப்படி அடம் பிடிப்பவன் குனிந்து நின்று கொண்டே இருக்கட்டும். அவனை செய்யாமல் நாம் கடந்து செல்வோம். அப்படிச் செய்யும் போது அவன் எழுதுவதை நிறுத்தி விடுவான் இல்லையா? சமுதாயத்திற்கு ஒரு எழுத்தாளன் செய்யக்கூடிய நல்லது அதை விட வேறென்ன இருந்து விட முடியும்?

No comments: