Thursday, November 28, 2013

உலகின் முதல் மொழி எது

உலகின் முதல் குரங்கு தமிழ்க் குரங்கே என நிரூபிப்பதற்காக நண்பர் ஒருவர் கடுமையான ஆராய்ச்சியில் மூழ்கியிருக்கிறார். என்னோடு பணியாற்றுகிறார் அவர். வயதிலும் பெரியவர்.

“உங்க ஆராய்ச்சியோட நோக்கம் என்ன?” என்றேன்.

அதற்கு அவர் சொன்ன பதிலைச் சுருக்கமாகச் சொல்லி விடுகிறேன்.

”ஆதி காலத்தில் திராவிடர்கள், அதாவது தமிழர்கள், சுமேரியாவுக்கு, பாபிலோனாவிற்கு, எகிப்திற்கு மற்ற பிற தேசங்களுக்கும் பரவினார்கள். அதன் பிறகு ஆரியர் வருகை. என்னைப் பொருத்த வரைக்கும் ஆரியர்களும், திராவிடர்களும் ஒன்று தான். ஆகவே நாம் அனைவரும் ஒருவரே. அதாவது திராவிடர்கள் இங்கேயே ஆஃப்ஷோரிலேயே வேலை செய்து கொண்டிருக்கும் ஆட்கள் மாதிரி. ஆரியர்கள் ஆன்சைட் அசைன்மெண்ட் போயிட்டு ரிட்டர்ன் ஆகிறவங்க மாதிரி. என்ன ஆயிரக்கணக்கான வருஷம் முன்னாடியே ஆன்சைட் போனதால கொஞ்சம் ஒஸ்தியா தெரியறாங்க. மத்தபடி ஆர்யா உதடு, டிராவிட் உதடு, டிம்பிள் கபாடியா உதடு எல்லாமே ஒன்னு தான்.

ஹரப்பா, மொகஞ்சதாரோ எல்லா எடத்திலும் இருந்தது நாமதான். நாமன்னா எல்லோருந்தான். அலெக்சாண்டர் போரஸ் கிட்ட என்ன பாடுபட்டான் தெரியும்ல? இப்ப என்ன ஆச்சு? ஏன் நம்மால எதையும் சாதிக்க முடியல? கடந்த 200 வருசத்துல எந்தக் கண்டுபிடிப்பையுமே நாம செய்யல. ஏன்? எதனால? ஏன்னா நாம சாதியால பிளவுண்டிருக்கிறோம். வெளி சக்திகளோட சண்டை போடறதுக்குப் பதிலா நமக்குள்ளையே சண்டை போட்டுக்கறோம். அலெக்சாண்டரை எதுத்து நின்ன நாம ஏன் மொகல்ஸ் கிட்ட, பிரிட்டிஷ்காரன் கிட்ட எல்லார் கிட்டையும் தோத்தோம்? நம்ம வீரம் எல்லாம் எங்கே போச்சு?”

”ஸார் நான் ஏழம் அறிவு பாத்துட்டேன்.” சொல்லும் போது சிரிக்காமலிருக்க இயலவில்லை.

அவருக்கும் சிரிப்பு வந்தது. ஆனாலும் தொடர்ந்தார்.

”இந்த உண்மையை எல்லோருக்கும் விளக்கணும்.”

“விளக்கி?”

“நாம எல்லாம் ஒன்னு தான். நமக்குள்ள வேறுபாடு இல்லை அப்படீன்னு சொல்லி ஜாதியை ஒழிக்கணும். அதை மட்டும் செஞ்சுட்டா இந்தியாவை மேலே தூக்கிறலாம்.”

”ஜாதிய ஒழிக்கப் போறீங்களா? சான்ஸே இல்லை.”

“ஏன் முடியாதுன்னு சொல்லுங்க”

”நம்ம ஊர்ல ஒருத்தன் மதம் கூட மாறிடலாம். ஆனா ஜாதியை மாத்த முடியாது தெரியும்ல? மதம் சட்டை மாதிரி பாஸ். எப்ப வேணா கழட்டிக்கலாம். ஆனா ஜாதி தோல் மாதிரி. உரிச்சுத்தான் எடுக்கணும்”

மனிதர் ஒத்துக்கொள்வதாக இல்லை. கிறிஸ்துவர்களில் ஜாதி இருப்பது தெரியும். முஸ்லிம்களில் ஜாதி இல்லையென்றார்.

“அப்ப நாமெல்லாம் முஸ்லிமா மாறிடலாமா?” கேட்டேன்.

“நான் சொல்றது உங்களுக்குப் புரியல. இப்ப வேற மதத்துல இருந்து இந்து மதத்துக்கு கன்வெர்ட் ஆக முடியாது தெரியும்ல உங்களுக்கு. அப்படி கன்வெர்ட் ஆனா அவனுக்கு என்ன ஜாதி கொடுப்பீங்க? அதனால தான்.”

”புரியுது. That’s why you want to eradicate caste system?”

வேகமாக மண்டையை ஆட்டினார்.

“சரி உங்க ஆராய்ச்சியில எதை அடிப்படையா வெச்சு முடிவு செஞ்சிருக்கீங்க? Some hypothesis, inference or evidence?”

“Inference”

உலகின் முதல் மொழி தமிழ்.. முதல் மனிதன் தமிழன். முதல் குரங்கு தமிழ்க் குரங்கு என தர்க்க ரீதியில் நிறுவ முயன்று கொண்டிருக்கிறார் இவர்.

மேற்சொன்ன உரையாடலை நான் சும்மா அடிச்சு விடுவதாக நீங்கள் நினைத்தால் இந்த லிங்கை ஒரு நிமிடம் பார்த்து விடுங்கள்.

இப்போது உங்களுக்கு விஸாகனைப் பற்றியும் ஓரிரு வரிகள் சொல்ல வேண்டும். பல வருடங்களுக்கு முன் யாழ்ப்பாண பலகலைக் கழகத்தில் லெக்சரர் வேலை பார்த்து வந்தாராம். போரின் உக்கிரத்தில் பல ஆண்டுகளுக்கு முன் நாட்டை விட்டு வெளியேறி லண்டனில் வசித்து வருகிறார். அங்கே National Archives அமைப்பில் பணியாற்றி ஓய்வும் பெற்று விட்டார்.

அவருக்கும் இந்த மாதிரி வினோதமான ஒரு ஆசை. வாழ்நாள் ஆசை. என்னவோ DNA குறித்தெல்லாம் எழுதி தமிழரும், சிங்களரும் ஒன்றே என்ற முடிவைச் சொல்லி அவரே காசு செலவழித்து சுமார் 80 பக்க சைஸில் ஒரு புத்தகம் போட்டார். தான் இந்த பூமியில் வாழ்ந்து விட்டுப் போனதன் நினைவாக, நம்ம எலந்தக் காட்டு அய்யன் மயில் கெண்டையின் வரலாற்றை எழுதிட உயிரைக் கையில் பிடித்திருந்தது போல தன்னளவில் வாழ்க்கையை அர்த்தமுள்ளதாக ஆக்க முனைந்திருக்கிறார். இதை நீங்க சிங்களவர்களுக்குத் தானே பரப்பணும் என நினைத்துக்கொண்டு ”பொறவு எதுக்கு சண்டை?” என்று திருப்பிக் கேட்டால் எனக்கு சரியாக விளங்கிக் கொள்ள ஏலலை என்பார்.

Inference மூலம் உலகின் முதல் மொழி என நிறுவ முயலும் நண்பரும் விரிவாக எழுதி வருகிறாராம். புத்தகமாக வெளியிட வேண்டுமென்றார். எது சுலபமான வழியெனக் கேட்டார்.

”பதிப்பகம் ஆரம்பிச்சுருங்க.”

சத்தியமாக இதைச் சொல்லும் போது நான் சிரிக்கவில்லை.

No comments: