Friday, November 29, 2013

தேவைதானா தெலுங்கானா

நான் அப்போது ஹைதராபாத்தில் வசித்தேன். தன் மாமனாரைக் கவிழ்த்து விட்டு ஆட்சியைக் கைப்பற்றியிருந்த சந்திரபாபு நாயுடு இரண்டாவது முறை முதலமைச்சர் ஆகியிருந்தார். இரண்டாயிரமாவது ஆண்டுக்கு முத்தாய்ப்பு வைத்தது போல தன் மகளையும் அழைத்துக்கொண்டு பில் கிளின்டன் ஹைதராபாத் வந்து நாயுடுவோடு போட்டோவுக்கு போஸ் கொடுத்தார். அடுத்த வருடம், 2001 இல், நாயுடுவின் தெலுங்கு தேசம் கட்சியில் துணை சபாநாயகராக இருந்த கே.சந்திரசேகர் ராவ் (KCR)என்பவர் பிரிந்து போய் தெலுங்கானா ராஷ்டிரிய சமிதி(TRS) என்ற கட்சியை ஆரம்பித்தார். யார் இந்தக் கோமாளி என்று தான் எங்களுக்கெல்லாம் தொன்றியது. ஹைதராபாத்தை சிங்கப்பூராக மாற்ற முயன்றுகொண்டிருந்த சந்திரபாபு நாயுடுவுக்கு முன் யாராக இருந்தாலும் அப்படித்தான் நினைத்திருப்போம். ஆனால் கட்சி ஆரம்பித்த ஆறே நாட்களில் நடந்த உள்ளாட்சித் தேர்தலில் மூன்றில் ஒரு பங்கு வாக்குகளை KCR பெற்றது. TRS சிறந்த பேச்சாளர் என்றும், தனித் தெலுங்கானா அமைப்பதே நோக்கமென்று திரிகிறார் எனவும் புரிந்தது.

12 வருடத்துக்கு முன் கோமாளி என நினைத்த நீளமான மூக்குக்குச் சொந்தக்காரரான KCR இன்றைக்குத் தெலுங்கானா என்ற தனி மாநிலத்தை கிட்டத்தட்ட உருவாக்கி விட்டார். நாம் பொதுவாக ஆந்திரா என அழைக்கும் ஆந்திரப் பிரதேசம் தெலுங்கானா, கடலோர ஆந்திரா மற்றும் ராயலசீமா ஆகிய பகுதிகளை உள்ளடக்கியது. மொத்தம் 23 மாவட்டங்கள். அதில் 10 மாவட்டங்கள் தெலுங்கானாவில் உள்ளன. ராயலசீமாவில் 4 மாவட்டங்கள். கடலோர ஆந்திராவில் மீதமுள்ள 9 மாவட்டங்கள். வடக்கே தெலுங்கானாவையும், தெற்கே ராயலசீமாவையும் கிருஷ்ணா ஆறு பிரிக்கிறது. இவை இரண்டுக்கும் கிழக்கே கடலோரமாக வங்கக் கடலுக்கும், கிழக்குத் தொடர்ச்சி மலைக்கும் இடையே உள்ளது கடலோர ஆந்திரா.  தெலுங்கானா தனி மாநிலம் ஆகும் பட்சத்தில் கடலோர ஆந்திராவும், ராயலசீமாவும் சேர்ந்து சீமாந்திரா என அழைக்கப்படும். முதலில் தனித் தெலுங்கானா வேண்டுமென தெலுங்கானா மக்கள் போராடினார்கள். இப்போது தெலுங்கானாவைப் பிரிந்து போக அனுமதிக்கக் கூடாதென சீமாந்திரா ஆட்கள் கொதிக்கிறார்கள். ஆந்திரர்கள் எல்லாம் ஆத்திரர்கள் ஆகி விட்டனர். மின்நிலையங்கள், ரயில்கள் என எல்லாவற்றையும் நிறுத்தி ஒட்டுமொத்த ஆந்திராவையும் இருட்டில் ஆழ்த்தியுள்ளனர். அரசு அலுவலர்கள் வேலையை ஒட்டுமொத்தமாகப் புறக்கணிக்கிறார்கள். திருப்பதிக்குப் போக முடியவில்லை. ஆந்திரா வழியாக மும்பைக்கும், டெல்லிக்கும் ரயிலில் போக முடியவில்லை. பற்றி எரிந்த ஆந்திராவைப் புயல் வந்துதான் ஓரளவு ஆசுவாசப்படுத்தியிருக்கிறது.

இப்போது சீமாந்திராவில் நடக்கும் போராட்டங்கள் தெலுங்கானாவுக்கு எதிரானவை அல்ல. அவை ஹைதராபாத் தெலுங்கானாவோடு போவதற்கு எதிரானவை. அடிப்படையில் ஹைதராபாத்தையும், தெலுங்கானாவையும் வரலாற்று ரீதியாக விளங்கிக்கொள்ளாமல் இந்தப் பிரச்சினையை அணுக முடியாது. மொகலாய சாம்ராஜ்யத்தின் தக்காணப் பகுதிக்கு பிரதிநிதியாக விளங்கிய ஆசஃப் ஜா, 1724 இல் இனிமேல் தான் தன்னிச்சையாக இயங்கப் போவதாகவும், தானே ஹைதராபாத் நிஜாமாகத் தொடரப் போவதாகவும் அறிவித்துக்கொண்டார். ஆறாவது சக்கரவர்த்தி ஔரங்கசீப் இறந்த பிறகு 17 ஆண்டுகளில் எட்டு சக்கரவர்த்திகள் சிம்மாசனம் கண்டு குழப்பத்தில் ஆழ்ந்திருந்தது பேரரசு. இன்னொரு பக்கம் கடந்த அரை நூற்றாண்டாக ஓங்கி வளர்ந்த சத்ரபதி சிவாஜி நிறுவிய மராட்டிய அரசுகளின் தாக்குதலில் தள்ளாடிக்கொண்டிருந்தது. அதனால் ஹைதராபாத் நிஜாமைப் பெரிதாகக் கண்டுகொள்ளவில்லை. ஹைதராபாத் சமஸ்தானத்தில் தெலுங்கு, மராத்தி மற்றும் கன்னடம் பேசும் மக்கள் இருந்தனர். இடையிடையே மராட்டிய அரசுகளோடு போர் நடந்தாலும் பெரிதாக மாற்றமில்லை. அடுத்த முக்கால் நூற்றாண்டில் ஹைதராபாத் சமஸ்தானம் பிரிட்டிஷ் இந்தியாவில் Princely State ஆக மாறியது. இந்தியா விடுதலை அடைந்த போது துண்டுகளாகச் சிதறிக் கிடந்த 565 சமஸ்தானங்களில் 214,190 சதுர கிமீ பரப்பளவில், அவற்றுள் மிகப் பெரிய சமஸ்தானமாகவும் விளங்கியது. பரப்பில் மட்டு மல்லாமல் மக்கள் தொகை மற்றும் வருமானத்திலும் அதுவே ஆகப் பெரியதாக விளங்கியது. நிஜாம் ஓஸ்மான் அலிகான் தன் காலத்தில் உலகின் நம்பர் 1 செல்வந்தராக விளங்கினார் என்பதும், ஹைதராபாத்தில் ஓஸ்மானியா பல்கலைக் கழகத்தை நிறுவினார் என்பதும் முக்கியமாகக் குறிப்பிட வேண்டியன. கூடவே ஏழு மனைவிகளையும், 42 ஆசை நாயகிகளையும் பேணினார்.

சமஸ்தானங்கள் இந்தியா அல்லது பாகிஸ்தானுடன் இணையலாம் அல்லது சுதந்திர நாடாக விளங்கலாம் என ஆங்கில எஜமானர்கள் கைகழுவியபோது, பெரும்பான்மை முஸ்லிம் மக்களைக் கொண்ட காஷ்மீர் இந்து ராஜாவைப் போலவே, பெரும்பான்மை இந்து மக்களைக் கொண்ட ஹைதராபாத் நிஜாமும் சுதந்திர நாடாகவே நீடிக்க விரும்பினார். எனினும் இந்தியாவின் இதயப் பகுதியில் இன்னொரு நாடு அமைவதைக் காட்டிலும் பெரிய மண்டைக் குடைச்சல் நேருவுக்கு இருந்திருக்க முடியாது. காந்தி தேசத்தின் இரும்பு மனிதர் வல்லபாய் படேல் 1948 இல் இராணுவத்தை அனுப்பி ’ஆபரேஷன் போலோ’ என்ற பெயரில் ஹைதராபாத்தை வெற்றி கொண்டார். ஐ.நா. சபைக்கெல்லாம் தந்தி அனுப்பிப் பார்த்து விட்டு நாலு நாளில் நிஜாம் சரணடைந்தார். பிறகு சென்னை மாகாணம், பம்பாய் மாகாணம் போல ஹைதராபாத் மாகாணமும் இந்தியாவில் ஒரு அங்கமானது. நிஜாம் ஆளுகைக்கு உட்பட்டிருந்த ராஜ்யத்தில் மராத்தி பேசும் பகுதிகளில் இருந்து தெலுங்கு பேசும் பகுதிகளைப் பிரித்துக் காட்டவே தெலுங்கானா என்ற சொல் பிரதானமாகப் பயன்பட்டதாகச் சொல்கிறார்கள்.

ஆரம்ப காலங்களில் கடலோர ஆந்திராவும் ஹைதராபாத் ராஜ்ஜியத்தின் ஆளுகைக்கு உட்பட்டே இருந்தது. இந்தியாவில் நிலை பெறுவதற்கு பிரிட்டிஷாரும், பிரெஞ்சுக்காரர்களும் சண்டையிட்டுக் கொண்டிருந்த போது இரண்டாம் ஆசஃப் ஜா நிஜாம் கடலோர ஆந்திராவின் சில பகுதிகளை பிரெஞ்சுக்காரர்களுக்குப் பரிசாகக் கொடுத்தார். தனது சகோதரர்களுடனான அதிகாரச் சண்டையில் ஆட்சியைக் கைப்பற்ற உதவிய பிரெஞ்சுக்காரர்களுக்காகச் செய்த கைமாறே அது. அதை ராபர்ட் கிளைவ் போரிட்டு வென்று 1758--59 இல் பிரிட்டிஷ் ஆளுகைக்குக் கீழ் கொண்டு வந்ததும், பிற பகுதிகளைப் பரிவர்த்தனைகள் மூலம் பெற்றதும் தனிக்கதை (எனினும் கோதாவரி டெல்டாவின் கடலோர நகரமான ஏனாம் மட்டும் பிரெஞ்சுக்காரர் கட்டுப்பாட்டில் விளங்கி இப்போது பாண்டிச்சேரி மாநிலத்தின் ஒரு அங்கமாகத் திகழ்கிறது). வடக்கு சர்க்கார் என வரலாற்று ரீதியாக அழைக்கப்பட்ட கடலோர ஆந்திரா பிரிட்டிஷ் ஆட்சிக்காலத்தில் சென்னை மாகாணத்தின் அங்கமாகவே இருந்தது. முற்காலத்தில் கிருஷ்ணதேவ ராயரின் ஆளுகையின் கீழிருந்த ராயல சீமாவும் கூட ஹைதராபாத் சமஸ்தானத்தின் ஒரு பகுதியாக இருந்து பிரிட்டிஷ் இந்தியாவுடன் சேர்ந்த ஒரு பகுதியாகும். இதுவும் சென்னை மாகாணத்தின் பகுதியாகவே இருந்தது. இதன் அங்கமாக இருந்த பெல்லாரி மாவட்டம் பின்பு கர்நாடகாவுடன் போனது.

சுதந்திர இந்தியாவில் சென்னை மாகாணத்தில் இருந்து தெலுங்கு பேசும் பகுதிகளைப் பிரித்து தனி மாநிலம் அமைக்க வேண்டுமென கொந்தளிப்பான போராட்டங்கள் நடந்தன. ராமச்சந்திர குஹாவின் India After Gandhi என்ற நூலில் இந்தப் போராட்டங்கள் நேருவை எத்தனை தூரம் சஞ்சலப்படுத்தின எனக் குறிப்பிட்டுள்ளார். பொட்டி ஸ்ரீராமுலு என்பவர் 1952இல் சாகும் வரை உண்ணாவிரதம் இருந்து செத்தும் போனார். அப்படித் தனி மாநிலம் அமைந்தால் சென்னையும் ஆந்திராவுக்கு வேண்டும் எனப் போராடினார்கள். பிரதமர் நேருவும், சென்னை மாகாண முதல்வர் ராஜாஜியும் சென்னையைக் காப்பாற்றினார்கள் என்றுதான் சொல்ல வேண்டும். சென்னை மாகாணத்திலிருந்து கடலோர ஆந்திரா மற்றும் ராயலசீமா பகுதிகள் பிரிக்கப்பட்டு ராயலசீமாவில் உள்ள கர்னூலைத் தலைநகராகக் கொண்டு ஆந்திர மாநிலம் 1953 இல் உருவானது.

பின்னர் மொழிவாரி மாநிலங்கள் மறுசீரமைக்கப்பட்ட போது ஹைதராபாத் மாகாணத்தின் மராத்வாடா பகுதி பம்பாய் மாகாணத்துடனும், கன்னடம் பேசும் பகுதிகள் கர்நாடகாவுடனும் பங்கு போடப்பட்டது. ஆந்திர மாநிலம் உருவாகி சரியாக மூன்று வருடம் கழித்து 1956 இல் அதே நவம்பர் 1 ஆம் தேதி தெலுங்கானா பகுதி ஆந்திராவோடு இணைந்து ஆந்திரப் பிரதேசமாக உருவெடுத்தது. அதன் தலைநகராக ஹைதராபாத் மாறியது. தெலுங்கானா மக்களின் உரிமைகள் பாதுகாக்கப்படும், அரசு வேலைகளில் அவர்களுக்குரிய பங்கு பேணப்படும் உள்ளிட்ட உறுதிமொழிகளின் அடிப்படையில் ஜென்டில்மேன் ஒப்பந்தம் செய்த பிறகே தெலுங்கானா தலைவர்கள் இணைப்புக்கு ஒப்புக் கொண்டனர்.

ராயலசீமா, கடலோர ஆந்திரா மற்றும் தெலுங்கானாவை உள்ளடக்கிய ஆந்திரப் பிரதேசம் இந்தியாவிலேயே நீளமான கடல் எல்லையைக் கொண்டுள்ள மாநிலம். புனல் மின் உற்பத்தியில் முதலிடம். பொருளாதாரத்தில் இரண்டாவது இடம். கனிம வளத்தில் இரண்டாவது இடம். பரப்பளவின் அடிப்படையில் இந்தியாவில் நான்காவது பெரிய மாநிலம். மக்கள் தொகையில் ஐந்தாவது இடம் (ஆனாலும் சமூக மற்றும் பொருளாதார ஏற்றத்தாழ்வுகள் நிரம்பிய, இன்னமும் நிலப்பிரபுத்துவத்தைப் பேணுகிற ஒரு மாநிலம்). பொருளாதார ரீதியாக ஒட்டுமொத்த ஆந்திரப் பிரதேச மாநிலத்தையும் எடுத்துக்கொண்டால் அதில் செழிப்பானதும், கூடுதலான ஆதிக்கம் செலுத்துவதும் கடலோர ஆந்திரப் பகுதிகள் ஆகும். ஜீவநதிகளான கோதாவரியும், கிருஷ்ணாவும் அப்பகுதியை சொர்ணபூமியாக்குகின்றன. அந்த ஆற்றுப் படுகைகளில் இயற்கை எரிவாயு நிரம்பக் கிடைக்கிறது. அது தொடர்பான சர்ச்சையிலேயே பெரிய பிசினஸ் சாம்ராஜ்யங்கள் சில முன்னாள் முதல்வர் ராஜசேகர ரெட்டியின் ஹெலிகாப்டரை விபத்துக்கு உள்ளாக்கியதாக வதந்திகள் உண்டு. கிறிஸ்துவரான ராஜசேகர ரெட்டி சோனியாவோடு சேர்ந்து கொண்டு திருப்பதி தேவஸ்தானப் பணத்தில் திருப்பதியில் சர்ச் கட்ட முயற்சித்ததால் வேங்கட மலையான் ரெட்டியைப் போட்டுத் தள்ளி விட்டதாகச் சொல்வோரும் உண்டு. எப்படியோ, கடலோர ஆந்திராவில் தொழில்களும் அதிகம். மின்நிலையங்களும், தொழிற்சாலைகளும் அதிகம். இந்தியாவின் முக்கியமான துறைமுக நகரங்களில் ஒன்றான விசாகப்பட்டினம் இங்கே உண்டு. கடலோர ஆந்திராவோடு ஒப்பிடும் போது ராயலசீமா ஓரளவு பின்தங்கிய பகுதி. தெலுங்கானா மிகவும் பின்தங்கிய பகுதி.

ஒருங்கிணைந்த ஆந்திரப் பிரதேச மாநிலத்தினால் தெலுங்கானாவுக்கு எந்த நன்மையும் இல்லை, ஜென்டில்மேன் உடன்படிக்கை மதிக்கப்படவில்லை முதலிய கருத்தின் அடிப்படையில் தனித் தெலுங்கானா மாநிலம் அமையக் கோரி 1969 முதலே போராட்டங்கள் நடந்திருக்கின்றன. அந்த வருடம் நடந்த துப்பாக்கிச் சூட்டில் 369 பேர் இறந்ததாகக் குறிப்புகள் சொல்கின்றன. மேடான தக்காணப் பீடபூமியில் செழிப்பான பிரதேசமாக இல்லாமல் போனதாலும், அரசியல் மற்றும் பொருளாதார ரீதியாகப் புறக்கணிக்கப்பட்ட பகுதியாகப் போனதாலும் தமது நலன் ஒருங்கிணைந்த ஆந்திரப் பிரதேச மாநிலத்துக்குள் பாதுகாக்கப்படவில்லை அல்லது பாதுகாக்கப்படாது என்ற எண்ணமும் கருத்தும், அங்கலாய்ப்பும் தெலுங்கானா மக்களுக்கு இருந்து வந்திருக்கிறது. 2009-10 இல் பின்தங்கிய மாவட்டங் களுக்கான நிதி உதவி பெற்ற 13 மாவட்டங்களில் 9 தெலுங்கானாவைச் சேர்ந்தவை. சொல்லப்போனால் ஹைதராபாத் நீங்கலாக அனைத்து தெலுங்கானா மாவட்டங்களும் இதில் அடக்கம். அரசு வேலைகளில் அவர்களுக்குரிய பங்கு மறுக்கப்பட்டிருப்பதான குமுறல்கள் அவ்வப்போது வெளிப்படும். மாறி மாறி ஆட்சிக்கு வந்த காங்கிரஸ் மற்றும் தெலுங்கு தேச அரசுகள் அதைப் பற்றிப் பெரிதாக அலட்டிக்கொள்ள வில்லை. நான் உரையாட நேர்ந்த அத்தனை கடலோர ஆந்திரா- ராயலசீமா நண்பர்களும் தனித் தெலுங்கானா என்ற விஷயத்தை காமெடியாக நினைத்துப் பேசினார்கள்.

தனித் தெலுங்கானா தேவையற்றது. ஒருங்கிணைந்த ஆந்திரப் பிரதேசமும், ஒட்டுமொத்த வளர்ச்சியும் தெலுங்கர்களுக்கு அவசியமானது என்பதில் நாயுடு தெளிவாக இருந்தார். ஆந்திரப் பிரதேச மாநிலத்தில் எந்த ஒரு ஊரையும் விட ஹைதராபாத்தையே அவர் கவனித்தார். அதன் வளர்ச்சியிலும், முன்னேற்றத்திலும் வெகுவான அக்கறை எடுத்துக்கொண்டார். அதைக் கவனிக்கத்தக்க ஒரு நகரமாக, சாஃப்ட்வேர் நிறுவனங்கள் விரும்பும் மையமாக மாற்றியதில் முக்கியமான பாத்திரம் வகித்தார். 96 நாடுகள் பங்கு பெற்ற ஆசிய-ஆப்ரிக்கா விளையாட்டுப் போட்டியை ஹைதராபாத்தில் நடத்திக் காட்டினார். எனவே தனித் தெலுங்கானாவைப் பற்றி அவர் சிந்திக்கவே இல்லை. 1999 இல் அவர் இடம்பெற்ற பா.ஜ.க. மத்திய அரசும் அதே நிலைப்பாட்டைக் கொண்டிருந்தது. 2001 இல் தெலுங்கானா கோரிக்கையைப் பரிசீலிக்குமாறு காங்கிரஸ் கட்சி தீர்மானம் நிறைவேற்றிய போது, சிறிய மாநிலங்கள் நாட்டின் நலனுக்கு உகந்தவையல்ல என்ற காரணம் காட்டி அப்போதைய உள்துறை அமைச்சர் அத்வானி நிராகரித்தார். ஜார்க்கண்ட், சத்தீஸ்கர், உத்தரகாண்ட் முதலிய மாநிலங்களை உருவாக்கிய பா.ஜ.க. அரசுக்குத் தெலுங்கானாவைத் தள்ளிப் போட வேண்டிய ஒரே அரசியல் நெருக்கடி சந்திரபாபு நாயுடுவின் தெலுங்கு தேசம் மட்டுமே.

இன்னொரு பக்கம், தெலுங்கானா பகுதியில் தெலுங்கு தேசம் கட்சியின் செல்வாக்கை நீளமூக்கு KCRசிதைத்துக்கொண்டிருந்தார். பத்து ஆண்டுகளாக ஆட்சியில் இல்லாமலிருந்த காங்கிரஸ் எப்படியும் ஆட்சிக்கு வந்தால் போதுமென்ற நிலையில் KCR இன் தெலுங்கானா ராஷ்டிரிய சமிதியோடு கூட்டணி அமைத்து 2004 தேர்தலில் வென்றுY.S.ராஜசேகர ரெட்டியை முதலமைச்சராக்கியது. மத்தியிலும், மாநிலத்திலும் KCR ஆட்சியில் பங்கெடுத்தார். ஆட்சிக்கு வந்தால் தெலுங்கானா மாநிலம் அமைப்போம் என்று சோனியா காந்தியும், ராஜசேகர ரெட்டியும் KCR க்கு உறுதியளித்திருந்தனர். மத்திய அரசின் ‘குறைந்தபட்ச செயல் திட்டத்தில் கூட அது இடம் பெற்றது. ஆயினும் ஆட்சிக்கு வந்ததும் வாக்குறுதியை மறந்தது காங்கிரஸ். தெலுங்கானா குறித்த தீர்மானமான முடிவுக்கு வராத காரணத்தால் 2006இல் காங்கிரஸுக்கு அளித்த ஆதரவை விலக்கிக் கொண்டார். அந்தக் கட்சியின் எல்லா எம்.எல்.ஏ. எம்.பி.க்களும் பதவி விலகி இடைத் தேர்தலில் சொற்பமான இடங்களையே வென்றனர். தெலுங்கானா மக்கள் KCR இன்னுமொரு சராசரி அரசியல்வாதியெனத் தீர்மானித்த பருவம் அது.

2009 தேர்தல் வந்தது. இப்போது காங்கிரஸ் தெலுங்கானா ராஷ்டிரிய சமிதியை நம்பியிருக்கவில்லை. ராஜசேகர ரெட்டி வலுவடைந்திருந்தார். தனிப்பட்ட முறையில் அவரது செல்வாக்கு மாநிலம் முழுவதும் தெலுங்கானாவும் அடக்கம் பரவியிருந்தது. அகில இந்தியாவிலும் வலுவான காங்கிரஸ் முதல்வராக அவர் விளங்கினார். அடிப்படையில் அவர் ராயலசீமா ஆள். கலகத்துக்குப் பெயர் போன, ஆயுதங்களின் மீது ஆர்வமுள்ள, கைக்குண்டுகளை வீடுகளில் தயாரிக்கிற பிராந்தியம் அது. அந்த ராயலசீமாவில் அவரை அடிக்க ஆளில்லை. தெலுங்கானாவிலும் ஓரளவு நல்ல பெயர். ஆனால் கடலோர ஆந்திராவில் தெலுங்கு தேசம் கெட்டி. என்.டி.ராமாராவ் கட்டி வளர்த்த கோட்டை அது. இந்தப் பின்னணியில் நடிகர் சிரஞ்சீவி ‘பிரஜா ராஜ்ஜியம்’ என்ற பெயரில் கட்சி ஆரம்பித்து கடலோர ஆந்திராவில் தெலுங்கு தேசத்தின் வாக்கு வங்கியைச் சிதைக்கிறார். தனக்கு வழங்கப்பட்ட அசைன்மெண்ட் அதுதான் என்பது போல வாக்குகளைச் சிதறடித்து மீண்டும் காங்கிரஸின் வெற்றிக்கு அடிக்கோலிவிட்டு, பின்பு தனது கட்சியைக் கலைத்து விட்டு காங்கிரசோடு இணைந்து கொள்வார் மெகா ஸ்டார். இந்தத் தேர்தலில் நடிகை விஜயசாந்தி தனது ‘தல்லி (தாய்) தெலுங்கானா’ கட்சியை KCR தெலுங்கானா ராஷ்டிரிய சமிதியோடு இணைத்தார். KCR,  சந்திரபாபு நாயுடுவோடு கூட்டணி அமைத்துப் போட்டியிட்டார். அப்போதும் குறிப்பிட்ட அளவு வெற்றியில்லை. தெலுங்கானா ராஷ்டிரிய சமிதி தான் போட்டியிட்ட 45 சட்டமன்றத் தொகுதிகளில் 10 இடங்களில் மட்டுமே வென்றது.

அந்த வருடம் செப்டம்பர் ஆரம்பத்தில் ராஜசேகர ரெட்டி ஹெலிகாப்டர் விபத்தில் கொல்லப்படுகிறார். தெலுங்கானா அரசியலை இந்த விபத்துக்கு முன், அதற்குப் பின் என இரு சகாப்தங்களாகப் பிரிக்கலாம். உண்மையில் தெலுங்கானாவினால் அரசியல் பிரச்சினையென ஏதுமில்லை. பொருளாதாரம்தான் பிரச்சினை என்பதை அவர் உணர்ந்திருந்தார். பொருளாதார வளர்ச்சியின் பலன்களைத் தெலுங்கானா பகுதிகளில் ஓரளவு உணரச் செய்தவர் அவர். அதைத் தந்திரமாக விளம்பரம் செய்யவும் தெரிந்திருந்தார். அவர் ஆட்சியில் இருந்த ஆறு ஆண்டுகளில் தெலுங்கானா கோரிக்கை கணிசமாகத் தேய்ந்து போயிருந்தது. சந்திரபாபு நாயுடுவும் பொருளாதாரத்தை மேம்படுத்தினார். ஆனால் ஹைதராபாத் நகரைத் தவிர வேறெங்கும் அவர் கவனம் செலுத்தவில்லை. கடலோர ஆந்திராவும், ராயலசீமாவும் ஓரளவு முன்னேறியிருந்ததால் ஹைதராபாத்துக்கு வெளியே தெலுங்கானா உண்மையிலேயே புறக்கணிக்கப்பட்ட பகுதியாக விளங்கியது. அதுவே அவரது ஆட்சிக் காலத்தில் தெலுங்கானா கோரிக்கை வலுப் பெறவும், தனிநபர் காரணத்துக்காக அவரிடமிருந்து பிரிந்து போன KCR தெலுங்கானாவை வைத்து அரசியல் செய்யவும் உதவியது. ஆனால் ராஜசேகர ரெட்டியோ 2004 இல் KCR  உடன் கூட்டணி வைத்து, தெலுங்கானா அமைப்பதாக வாக்குக் கொடுத்து ஆட்சிக்கு வந்த பின்னர், 2009 இல் அதே KCR  ஐ ஒதுக்கி விட்டுத் தனியாக நின்று தேர்தலில் KCRயின் TRS கட்சியையும், தெலுங்கானா கோஷத்தையும் வலுவிழக்க வைத்திருந்தார்.

அவர் மறைவையடுத்து காங்கிரஸ் கட்சியிலும், மாநில அரசியலிலும் ஒரு வெற்றிடம் உருவான இந்தச் சமயத்தில், தேர்தலில் தோற்றுப் போயிருந்த KCR தெலுங்கானா போராட்டத்துக்கு உற்சாகத்துடன் மீண்டும் புத்துயிர் அளிக்கிறார். உசுப்பி விட்டு உணர்ச்சி கொப்பளிக்கப் பேசுகிறார். தெலுங்கானா மக்களை வீதிக்கு அழைக்கிறார். இளைஞர்கள், வழக்கறிஞர்கள், மாணவர்கள் தெருவுக்கு வருகிறார்கள். குறிப்பாக, ஓஸ்மானியா பல்கலைக்கழகம் போராட்டங்களை முன்னெடுக்கிறது. போராட்டக்காரர்கள் டயரைக் கொளுத்துகிறார்கள். பேருந்தைக் கொளுத்துகிறார்கள். தம்மைத் தாமே கொளுத்திக்கொள்ளவும் செய்கிறார்கள். ஆசிரியர்கள், விரிவுரையாளர்கள், சிந்தனையாளர்கள், அரசுப் பணியாளர்கள் என சகலரும் போராட்டத்தோடு தம்மை இணைக்கிறார்கள். ஹைதராபாத்தைச் செயலிழக்கச் செய்கிறார்கள். தெலுங்கானா போராட்டத்தின் மிக முக்கியமான கட்டமாக இதைக் கருத வேண்டும். உண்மையான மக்கள் புரட்சியை நாம் வாழும் காலத்தில் கண்டோம். எவ்விதப் பிரச்சினையாக இருந்தாலும் அதை ஒரு பாதையில் மட்டும் அணுகாமல் எல்லாத் தளங்களிலும் முன்னெடுப்பது அவசியமானது. அதன் சாதக, பாதக அம்சங்களைப் பற்றி சகலரையும் விவாதிக்கச் செய்ய வேண்டும். எல்லாவற்றையும் அரசியலாக்குகிறார்கள் என நம் ஊர் அரசியல்வாதிகள் சொல்வதுண்டு. உண்மையில் பரந்துபட்ட மக்களை விவாதிக்கவும், பங்கெடுக்கவும் செய்து 'அரசியலாக்கும் ஜனநாயகத்திற்கு இன்றியமையாத காரியம் நமது சமுதாயத்தில் சிறுமைப் படுத்தப்பட்டு வந்திருக்கிறது. அரசியலாக்குதல் என்பது சில தனி நபர்களின் அரசியல் ஆதாயத்தில் முடிந்ததால் நாம் அரசியலாக்குதலையே நிராகரிக்கிறோம்.

KCR இந்தப் பிரச்சினையை முன்னெடுத்தார். சூட்டோடு சூடாக KCR 2009 நவம்பர் 29 அன்று சாகும் வரை உண்ணாவிரதத்தைத் தொடங்கினார். சென்னை மாகாணத்திலிருந்து ஆந்திராவைப் பிரிப்பதற்கு பொட்டி ஸ்ரீராமுலு என்ன உத்தியைக் கையாண்டாரோ அதே உத்தி. தெலுங்கானா மக்களை ஒன்றுதிரட்டி ஹைதராபாத்தை ஸ்தம்பிக்கச் செய்தார். மக்கள் ஆதரவைக் கண்டு, காங்கிரஸ் மற்றும் தெலுங்கு தேசத்தைச் சேர்ந்த தெலுங்கானா பகுதி எம்.எல்.ஏ.க்களும் போராட்டத்தில் குதித்தனர். உண்ணாவிரதம் என்பது வெறுமனே சாப்பிடாமல் யாரும் கவனிக்காத ஒரு பந்தலில் படுத்திருப்பதல்ல. அது ஒரு கவன ஈர்ப்பு. பரவலான மக்கள் எழுச்சிக்கான விதை. போராட்டத்திற் கான உந்து சக்தி. அதுதான் அரசியலாக்குதல். KCR சரியாக அரசியலாக்கினார். மாநில அரசு தனக்குள் விவாதித்தது. ராஜசேகர ரெட்டிக்குப் பிறகு முதலமைச்சர் பதவிக்கு வந்திருந்த ரோசைய்யா டிசம்பர் 7 ஆம் தேதி அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் கலந்தாலோசித்தார். யாருக்கும் மாற்றுக் கருத்து இருக்கவில்லை. தனது முடிவை மாநில அரசு டெல்லி காங்கிரஸ் எஜமானிக்குத் தெரியப்படுத்தியது.

டிசம்பர் 9 ஆம் தேதி மத்திய உள்துறை அமைச்சர் சிதம்பரம் தெலுங்கானா பற்றிய முடிவை அறிவித்தார். மாநில சட்டமன்றத்தில் தெலுங்கானா சம்பந்தமான சிறப்புத் தீர்மானம் நிறைவேற்றப்பட்டவுடன் அதற்கான வேலைகளில் மத்திய அரசு ஈடுபடும். தெலுங்கானா மாநிலம் அமைப்பதற்கு மத்திய அரசு கொள்கை அளவில் ஒப்புக்கொண்டது. சிதம்பரத்தின் அறிவிப்பைத் தொடர்ந்து ஆந்திரா மற்றும் ராயலசீமாவில் கலவரம் வெடித்தது. தெலுங்கானா பிரிவுக்கு எதிரான போராட்டங்கள். இதைச் சற்றும் எதிர்பார்க்காத தெலுங்கானா அல்லாத சட்டமன்ற, நாடாளுமன்ற உறுப்பினர்கள் உடனடியாக மாறினார்கள். அவசரமாக ராஜினாமா கடிதத்தை பிரிண்ட்-அவுட் எடுத்து மிரட்டினார்கள். அனைத்துத் தரப்பினருக்கும் கருத்தொற்றுமை உருவாகும் வரை தெலுங்கானா முடிவைத் தள்ளி வைப்பதாக டிசம்பர் 23 அன்று மத்திய அரசு அறிவித்தது. இது ஆந்திரா மற்றும் ராயலசீமா எம்.எல்.ஏ., எம்.பி., அமைச்சர்களின் ராஜினாமாவைத் திரும்பப் பெறப் போதுமானதாக அமைந்த அதே வேளையில், தெலுங்கானாவைச் சேர்ந்த மக்கள் பிரதிநிதிகளின் ராஜினாமா கடிதத்தை சமர்ப்பிக்கவும் வைத்தது.

ராஜசேகர ரெட்டி எதற்காகச் செத்தார், நாம் எதற்காக முதலமைச்சர் ஆனோமென்று ரோசைய்யா நொந்திருப்பார். ஆந்திரப் பிரதேச சட்டமன்றத்தில் தெலுங்கானா அமைவதற்கான தீர்மானம் நிறைவேற்ற முயன்ற போது குழப்பங்கள் உருவாயின. ஹைதராபாத்தின் நிலைமை என்னவாகும் என்ற கேள்வி அனைவருக்கும் எழுந்தது. ஆந்திரா மற்றும் ராயலசீமா மக்கள் தெலுங்கானாவில் நிறைய முதலீடு செய்திருக்கிறார்கள். தெலுங்கு சினிமா கூட சென்னையிலிருந்து ஹைதராபாத்துக்கு முற்றிலுமாக இடம்பெயர்ந்து விட்டது. அதை மறுபடியும் விசாகப்பட்டினத்துக்கோ, வேறு ஏதாவது நகரத்துக்கோ எடுத்துச் செல்வது சிரமம். தமிழகத்தை இரண்டாகப் பிரித்து காவிரிக்கு அந்தப்பக்கம் ஒரு மாநிலம், இந்தப்பக்கம் ஒரு மாநிலம் என்றால் சும்மா இருப்போமா? கருணாநிதியும், ஜெயலலிதாவும் அனுமதித்தாலும் கூட வட தமிழகத்தில் ராமதாஸ் முதல மைச்சராக நாம் அனுமதிப்போமா? வீட்டுக்கு ஒரு மரம் வளர்ப்பது போல வீட்டுக்கு ஒரு பிள்ளையை சென்னையில் செட்டில் ஆகச் செய்திருக்கிறோம். அது போலத்தான் ஆந்திரப் பிரதேசத்திலும். ஹைதராபாத்தை தெலுங்கானாவுக்கு விட்டுத்தர ஆந்திரர்கள் தயாராக இல்லை. எனவே அனைத்து அரசியல் கட்சிகளுக்கும் இடையே கருத்தொற்றுமை உருவாகும் வரைக்கும் தெலுங்கானா பிரிவை மத்திய அரசு ஒத்திப் போட்டது. இது தெலுங்கானா போராளிகளை மீண்டும் வீதிக்கு இழுத்தபடியால், மத்திய அரசின் அப்போதைய உள்துறை அமைச்சர் சிதம்பரம் 2010 ஜனவரியில் நீதிபதி ஸ்ரீகிருஷ்ணா தலைமையிலான ஐந்து பேர் கமிட்டியை நியமித்தார். ஸ்ரீகிருஷ்ணா வெவ்வேறு தரப்புகளைச் சேர்ந்த ஒரு லட்சம் பேருக்கு மேல் சந்தித்து அவர்தம் கருத்துக்களைக் கேட்டாராம்.

ஸ்ரீகிருஷ்ணா கமிட்டி தனது அறிக்கைக்கு இறுதி வடிவம் அளிக்கும் முயற்சியில் ஈடுபட்டிருந்த போது சந்திரசேகர ராவ் மாபெரும் பொதுக் கூட்டங்களை யெல்லாம் கூட்டி தன் பலத்தை நிறுவிக்கொண்டிருந்தார். தெலுங்கானா மட்டும் அமைத்துக் கொடுத்தால் சோனியா காந்திக்கு பாதபூஜை செய்வதாக அறிக்கை விட்டார். தனது நோக்கம் தெலுங்கானா அமைப்பதுதான் என்றும், தனி மாநிலம் அமைந்தால் கட்சியைக் கூட கலைத்து விடுவேன் என்றும் அடித்து ஓட்டினார். இந்தப் பின்னணியில் முதலமைச்சர் ரோசைய்யா ஒதுங்கிக் கொண்டார். அதற்கு முக்கியமான காரணம் தெலுங்கானா பிரச்சினையல்ல. அவருடைய தலைவலி ராயலசீமாவிலிருந்து வந்தது. அதன் பெயர் ஜெகன்மோகன் ரெட்டி. ஜெகன் முன்னாள் முதல்வர் ராஜசேகர ரெட்டியின் புதல்வர். காங்கிரஸ் கட்சியில் பெரும்பான்மை எம்.எல்.ஏ.க்கள் ஆதரவோடு முதலமைச்சர் ஆகியிருக்க வேண்டிய இளைஞர். சோனியா காந்தியின் ஆதரவின்மையால் அவருக்கு அது வாய்க்காமல் போனது. மாநிலங்களில் வலுவான, மக்கள் செல்வாக்குள்ள தலைவர்கள் இருக்கவே கூடாது என்ற இந்திரா காந்தி காலத்து காங்கிரஸ் கொள்கையின் நீட்சியே ஜெகனைப் பழி வாங்கியது. புடவை மாற்றுவது போல மூன்று வருடத்தில் ஐந்து முதலமைச்சர்களை ஆந்திரப் பிரதேசத்தில் மாற்றிய இந்திரா காந்தியின் சர்வாதிகார நடவடிக்கையே என்.டி.ராமாராவை அரசியலுக்கு இழுத்து வந்தது. கட்சி ஆரம்பித்து ஒரு வருடம் கூட நிறைவடையும் முன் ஆட்சிக் கட்டிலிலும் அமர்த்தியது. அவ்வாறான பின்னணி கொண்ட காங்கிரஸ், சந்திரபாபு நாயுடு ஆட்சியின் போது பத்து வருட காலம் வனவாசம் அனுபவித்த காலத்தில் அதை மீண்டும் ஆட்சிக்கு வர கடுமையாக உழைத்தவர் ராஜசேகர ரெட்டி. சோர்ந்து போயிருந்த காங்கிரஸ் கட்சியை அடித்தளத்தில் இறங்கி உற்சாகமூட்டியவர். காங்கிரஸை மறுபடியும் வலுவான விருட்சமாக மாற்றினார். அதன் ஒவ்வொரு கிளையிலும் ஜெகன் இருந்தார். இன்னொரு பக்கம் பல்லாயிரம் கோடி ரூபாய் மதிப்புள்ள கம்பெனிகளையும் குறுகிய காலத்தில் (சட்டப்படி) உருவாக்கி நடத்திக்கொண் டிருந்தார். மாநில முதல்வருக்கும், காங்கிரஸுக்கும் பெருத்த சவால் விடுத்த வண்ணம் இருந்த ஜெகன் தனது தந்தையின் பெயரில் YSR காங்கிரஸ் என்ற கட்சியையும் உருவாக்கினார். ஜெகன் ஒரு பக்கம், தெலுங்கானா பிரச்சினை இன்னொரு பக்கம். ரோசைய்யாவுக்குப் பதிலாக ஹைதராபாத் கிரிக்கெட் அணியின் கேப்டனாக இருந்தவரும், அசாருதீனோடு சேர்ந்து விளையாடியவரும், ராஜகேசர ரெட்டியின் ஆள் எனக் கருதப்பட்டவருமான கிரண்குமார் ரெட்டியை முதல்வராக்கினார் சோனியா. ஜெகனைப் போலவே கிரணும் ராயலசீமாவைச் சேர்ந்தவர். ரெட்டி சமூகத்தவர். அதனால் ரோசைய்யாவுக்குப் பதிலாக கிரண்குமார் ரெட்டி முதல்வரானால் ஜெகனை இலகுவாக ஒழித்து விடலாமென சோனியா நினைத்திருக்கக் கூடும்.


ஸ்ரீகிருஷ்ணா கமிட்டி தன் அறிக்கையை 2011 டிசம்பர் 30 அன்று கையளித்தது. அதில் ஆறு தீர்வுகளைப் பரிந்துரைத்தது.
1.     ஒருங்கிணைந்த ஆந்திரப் பிரதேச மாநிலத்தை அப்படியே பேணுவது. அரசியலமைப்பு மூலமாகவே தெலுங்கானா பகுதிக்குக் கூடுதல் அதிகாரத்தையும், பொருளாதார மேம்பாட்டுக்கான முயற்சிகளையும் மேற்கொள்வது.
2.     ஆந்திரப் பிரதேசத்தை தெலுங்கானா, -சீமாந்திரா என இரண்டாகப் பிரித்து தெலுங்கானாவுக்கு ஹைதராபாத்தை தலைநகராக ஆக்குவது. சீமாந்திரா புதிய தலைநகரை உருவாக்கிக்கொள்ள வேண்டியது.
3.     உள்ளது உள்ளபடி அப்படியே விட்டு விடுவது.
4.     தெலுங்கானா, சீமாந்திரா இரண்டுமே தனி தலை நகர்களை அமைத்துக்கொள்ள வேண்டியது. ஹைதராபாத் யூனியன் பிரதேசமாக இருக்கும்.
5.     தெலுங்கானா மற்றும் ராயலசீமாவை ஒரு மாநிலமாகப் பிரித்து அதற்கு ஹைதராபாத்தை தலை நகராக்குவது. கடலோர ஆந்திரா புது தலைநகரைக் கண்டறிய வேண்டியது.
6.     இது கொஞ்சம் சிக்கலானது. சீமாந்திரா மற்றும் தெலுங்கானா தனி மாநிலங்களாக இருக்கும். ஹைதராபாத் யூனியன் பிரதேசமாக இருக்கும். ஹைத ராபாத்தோடு தெலுங்கானாவின் வேறு சில பகுதிகளையும் இணைத்து அந்த யூனியன் பிரதேசத்தின் எல்லையைக் கடலோர ஆந்திராவின் குண்டூர் மாவட்டம் வரையிலும், ராயலசீமாவின் கர்னூல் வரையிலும் நீட்டுவது.

கமிட்டியின் பரிந்துரையை மத்திய அரசு உடனே நடைமுறைப்படுத்தவில்லை. இயன்றவரை கிடப்பில் போட்டது. தெலுங்கானா போராட்டம் இன்னொரு பக்கம் நடந்துகொண்டே இருந்தது. 2011 பிப்ரவரி மாதம் அரசு ஊழியர்கள் சுமார் 3 இலட்சம் பேர் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டு நாளொன்றுக்கு ரூ. 800 கோடி இழப்பினை மாநில அரசுக்கு உண்டாக்கினார்கள். இரண்டு வாரத்துக்கு மேல் அது நீடித்தது. தெலுங்கானா உறுப்பினர்கள் கட்சி பேதமின்றி சட்டமன்றத்தைப் புறக் கணித்தனர். நாடாளுமன்றத்திலும் கூச்சல் போட்டனர். பிப்ரவரியும், மார்ச்சும் நாளொரு ஊர்வலமும் பொழுதொரு போராட்டமுமாகக் கழிந்தது. அடுத்த மூன்று மாதம் அமைதியாக இருந்து விட்டு ஜூலை மாதத்தில் தெலுங்கானா பகுதியைச் சேர்ந்த 119 சட்டமன்ற உறுப்பினர்களில் 81 பேரும், 15 அமைச்சர்களில் 12 பேரும், 17 நாடாளுமன்ற உறுப்பினர்களில் 13 பேரும் மத்திய அரசின் மெத்தனத்தைக் கண்டித்து தடாலடியான கூட்டு ராஜினாமா நடவடிக்கையில் இறங்கினர். வீட்டுக்குப் போய் தண்ணியக் குடிங்கப்பா என ராஜினாமாவை ஏற்க சபாநாயகர் மறுத்தாலும் கூட, இன்னொரு பக்கம் நிலைமை எல்லை மீறிச் சென்று கொண்டிருந்தது. டெல்லியில் இருபது வயது தெலுங் கானா இளைஞன் நாடாளுமன்றத்திற்கு அருகில் எட்டு பக்கத்துக்குக் கடிதம் எழுதி வைத்து விட்டு தற்கொலை செய்து கொண்டான்.

மறுபடியும் செப்டம்பரில் போராட்டங்கள் உக்கிரமடைந்தன. KCR  முழங்கிக்கொண்டே இருந்தார். அரசு ஊழியர்கள், போக்குவரத்துத் தொழிலாளர்கள், ரயில் - பேருந்து மறியல்கள், நீதிமன்றப் புறக்கணிப்பு என இயல்பு வாழ்க்கை சீரழிந்துகொண்டிருந்தது. அக்டோபரில் தெலுங்கானாவைச் சேர்ந்த மூன்று காங்கிரஸ் சட்டமன்ற உறுப்பினர்கள் தமது தலைமையின் மீது அதிருப்தியுற்று TRS கட்சியில் சேர்ந்தனர். தெலுங்கானா உருவாக்கம் தொடர்பான வேலைத் திட்டத்தைத் தெளிவாக அறிவிக்க்கும் வரை காலவரையற்ற உண்ணாவிரதம் இருப்பதாக நவம்பர் 1ஆம் தேதி இன்னொரு காங்கிரஸ் எம்.எல்.ஏ. உட்கார்ந்தார். நாளை தெலுங்கானா மாநிலம் அமைந்தால் அந்த மாநிலத்தில் காங்கிரஸ் கட்சிக்கு நல்ல பேர் இருக்க வேண்டுமென்ற ஆசையில் கூட காங்கிரஸ் மேலிட ஒப்புதலோடு இது நடந்திருக்கலாம். ஒன்பது நாளில் இந்த உண்ணாவிரதம் முடிந்தது. எனினும் போராட்டங்கள் தெலுங்கானா வெங்கிலும் தொடர்ந்து வந்தன. 2012 ஜனவரியில் பா.ஜ.க. மாநிலத் தலைவர் தெலுங்கானாவில் 22 நாள் யாத்திரை மேற்கொண்டார். மார்ச் மாதம் நடந்த இடைத் தேர்தலில் TRS தான் நின்ற 5 தொகுதிகளில் 4 இல் வென்றது.

இதற்கிடையில் செல்வாக்குடன் விளங்கிய ராஜசேகர ரெட்டியின் மகன் ஜெகன் மோகன் ரெட்டி தன் பங்குக்கு காங்கிரஸுக்குக் குடைச்சல் கொடுத்து வந்தார். காங்கிரஸில் டெல்லியில் மட்டும் வாரிசு அரசியல் இருக்கலாம், மாநிலத்தில் இருக்கக் கூடாது என்ற கொள்கைக்கு ஜெகன் கடும் சவாலாகவே அமைந்தார். YSR காங்கிரஸ் 2012 ஜூனில் நடந்த தேர்தலில் சீமாந்திரா பகுதிகளில் பெரும் வெற்றியடைந்தது. சோனியாவின் அருளால் அந்தத் தேர்தலுக்கு முன்னரும், பின்பும் மத்திய அரசின் வழிகாட்டுதலில் அவர் மீது CBI வழக்குகள் பாய்ந்து சட்டம் தனக்கான கடமையை ஆற்றிக்கொண்டிருந்தது என்றாலும், ஒருபுறம் தெலுங்கானாவிலும் செல்வாக்கு தேய்ந்திருக்க, இன்னொரு புறம் சீமாந்திராவில் ஜெகனின் எழுச்சி காங்கிரஸை விசனப்பட வைத்தது.

ஆகஸ்ட் மற்றும் செப்டம்பர் மாதங்களில் போராட்டம் மீண்டும் தீவிரமானது. KCR காலக் கெடு விடுத்தார். டெல்லிக்குப் பறந்தார். தண்டி யாத்திரையைப் போல தெலுங்கானா யாத்திரைக்கு அழைப்பு விடுக்கப்பட்டது. அத்தனை தடைகளையும், ரயில்கள் முடக்கப் பட்டதையும் பொருட்படுத்தாமல் ஹுசைன் சாகர் ஏரியை ஒட்டியுள்ள நெக்லஸ் ரோட்டில் இலட்சக் கணக்கான மக்கள் திரண்டனர். ஹைதராபாத் ஸ்டேஷனில் ரயிலுக்குத் தீ வைத்தனர். கலவரமும், வன்முறையும் பெருமளவில் வெடித்தது. 2013 முடிவதற்கு மூன்று நாள் முன்னர் மத்திய உள்துறை அமைச்சர் சுஷில்குமார் ஷிண்டே ஆந்திராவின் கட்சித் தலைவர்களைச் சந்தித்தார். இதுதான் கடைசிக் கூட்டம் என்றும், கூட்டம் முடிந்த ஒரு மாத காலத்திற்குள் மத்திய அரசு முடிவெடுத்து விடும் என்றும் அவர் சொன்னார். அந்தக் கூட்டத்தில் ஹைதராபாத்தில் செல்வாக்குள்ள MIM என்ற முஸ்லிம் கட்சி மட்டுமே மாநிலத்தைப் பிரிப்பதற்கு எதிர்ப்புத் தெரிவித்த கட்சி. காங்கிரஸ் பிரதிநிதிகள் முன்னுக்குப் பின் முரணான கருத்துக்களைத் தெரிவித்தனர். KCR காங்கிரஸ் நடுநிலையான முடிவைத் தெரிவித்தது. தெலுங்கு தேசம், தான் தெலுங்கானாவை எதிர்ப்பதாகச் சொல்லவில்லையே என கருணாநிதித்தனமாக எழுதிக்கொடுத்தது.

சுஷில்குமார் ஷிண்டே உடனடியாக ஒன்றும் முடிவை அறிவித்து விடவில்லை. தெலுங்கானா மக்கள் மேலும் போராடவேண்டியிருந்தது. மறியல்கள், சட்ட மன்ற முற்றுகை, நாடாளுமன்றத்தில் தர்ணா, காங்கிரஸ் மற்றும் தெலுங்கு தேசக் கட்சியின் தேர்ந்தெடுக்கப்பட்ட மக்கள் பிரதிநிதிகள் TRS இல் சேருதல் முதலியன நடந்தேறின. குறிப்பாக, கடந்த ஜூன் மாதம் போராட்டம் தீவிரமடைந்தது. தனித் தெலுங்கானா அறிவிப்பதைத் தவிர வேறு வழியில்லை என்ற நிலைக்கு காங்கிரஸைத் தள்ளியது. ஞானதேசிகன் ஈழத்தமிழர்களுக்காகக் குரல் கொடுப்பதைப் போல காங்கிரஸ் அரசியல்வாதிகள் தெலுங்கானாவுக்காகப் பேசினார்கள். ஒரு பொதுக் கூட்டத்தில் துணை முதலமைச்சர் கலந்துகொண்டு தெலுங்கானா தொடர்பாக சாதகமான முடிவை காங்கிரஸ் மேலிடம் விரைவில் அறிவிக்கும் என்றும், அப்படி நேர்ந்தால் தெலுங்கானாவிலும் அது ஆட்சிக்கு வரும் என்று நம்பிக்கை தெரிவித்தார்.

காங்கிரஸ் கட்சியின் ஆந்திரப் பிரதேச பொறுப்பாளர் திக்விஜய் சிங் ராயலசீமாவைச் சேர்ந்த முதலமைச்சர் கிரண்குமார் ரெட்டி, தெலுங்கானாவைச் சேர்ந்த துணை முதல்வர் தாமோதர் ராஜநரசிம்மா மற்றும் ஆந்திராவைச் சேர்ந்த மாநில காங்கிரஸ் தலைவர் போட்சா சத்யநாராயணா மூன்று பேரைக் கலந்தாலோ சித்தார். தெலுங்கானாவுக்கான செயல்திட்டத்தைத் தருமாறு வேண்டினார். இதற்கு மேல் தெலுங்கானா விவகாரத்தை தள்ளிப் போட முடியாதென கட்சி மேலிடம் திக்விஜய் சிங் வாயிலாக மீடியாவிலும் தெளிவு படுத்தியிருந்தது. அந்த மூன்று பேரும் டெல்லிக்குப் பறந்து சோனியா காந்தி, மன்மோகன் சிங், ராகுல் காந்தி உள்ளிட்ட கட்சியில் Core Group இடம் தங்கள் நிலைமையை விளக்கினார்கள். காங்கிரஸ் செயல் குழு இறுதி முடிவெடுக்குமென இதன் பின்னர் செய்திகள் வந்தன. கிரண்குமார் ரெட்டி செய்தியாளர்களைத் தவிர்த்தாலும், தெலுங்கானாவைச் சேர்ந்த துணை முதல்வர் I am an Optimist என்று சொன்னார்.

பிறகு ஜூலை 30 ஆம் தேதி காங்கிரஸ் காரியக் கமிட்டி ஸ்ரீகிருஷ்ணா கமிட்டியின் பரிந்துரையின் பேரி லான தன் முடிவை, இந்தியாவின் 29 ஆவது மாநிலமாக தெலுங்கானாவை உருவாக்குவதென்று அறிவித்தது. அதில் நீதிபதி ஸ்ரீகிருஷ்ணா மேலே பரிந்துரைத்த பட்டியலில் இரண்டாவது மற்றும் நாலாவது தீர்வுகளைக் கலந்து ஒரு தீர்வைச் சொன்னது. அதன்படி பத்து ஆண்டுகளுக்கு ஹைதராபாத் நகரம் தெலுங்கானாவுக்கும், ஆந்திராவுக்கும் பொதுவானதாக இருக்குமாம். மத்திய அரசின் இந்த அறிவிப்புக்குப் பிறகு KCR முழுமனதோடு வரவேற்று அறிக்கை விட்டார். தெலுங்கானா பகுதி நிம்மதியாக உறங்கப் போய் விட்டது. ஆந்திரா கருவிக்கொண்டிருக்கிறது. சென்னை மாகாணத்திலிருந்து ஆந்திரா உருவாக எவ்வளவு மூர்க்கமாகப் போராடினார்களோ அதைவிடத் தீவிரமாக தெலுங்கானா பிரியக் கூடாதென்பதற்காகப் போராடுகிறார்கள். கிட்டத்தட்ட போர்க்களமாக மாறியிருக்கிறது ஆந்திரா.

இரு மாநிலங்கள் ஒரு தலைநகரைப் பங்கிடுவது இந்தியாவில் புதிதில்லை. பஞ்சாப் மற்றும் ஹரியானாவுக்குப் பொதுவான தலைநகராக சண்டிகர் திகழ்கிறது. இவை இரண்டுக்குமான எல்லையில் அது அமைந்திருப்பது கவனிக்கத்தக்கது. அந்த அடிப்படையில் ஹைதராபாத்தை இரு மாநிலங்களுக்கும் தலைநகராக்கும் மத்திய அரசின் முடிவு முட்டாள்தனமான தாகும். சீமாந்திரா எல்லையில் இருந்து 100 கிலோ மீட்டருக்கு அப்பால் உள்ள ஒரு நகரம் எவ்வாறு அதன் தலைநகராக இருக்க முடியும்?

தலைநகர் என்ற சர்ச்சையைத் தவிர்த்து இன்னும் நிறையப் பிரச்சினைகள் உள்ளன. அதில் முக்கியமானது நதிநீர் சம்பந்தப்பட்டது. கோதாவரி கங்கைக்கு அடுத்த படியாக நீளமான ஆறு. தென்னிந்தியாவிலேயே பெரிய நதி. 12 ஜோதிர்லிங்கங்களில் ஒன்றான திரம்பகேஷ்வரர் கோவில் கோதாவரிக் கரையில் உள்ளது. ராஜமுந்திரி அருகில் 5 கிலோமீட்டர் அகலத்துக்கு பாயும் ஜீவ நதி. மகாராஷ்டிராவின் நாசிக் மாவட்டத்தில் உருவாகி தெலுங்கானாவின் தக்காணப் பிரதேசத்தின் வழியாகப் பாய்ந்து கடலோர ஆந்திராவைச் செழிப்பாக்கும் கோதாவரி, தெலுங்கர்களின் கலாச்சார வாழ்வில் முக்கிய இடம் பிடிக்கிறது. தெலுங்கானாவின் பத்து மாட்டங்களில் நான்கின் வழியாக இது பாய்கிறது. எனினும் அதிகம் பயனடைவது கடலோர ஆந்திராவின் டெல்டா பகுதிகள்தான். மகாராஷ்டிராவில் உருவாகி, கர்நாடகா வழியாகப் பாய்ந்து ஆந்திரப் பிரதேசத்தைச் செழிக்கச் செய்யும் இன்னொரு ஜீவநதியான கிருஷ்ணாவும் பெரிய ஆறுதான். தெலுங்கானாவையும், ராயல சீமாவையும் ஒரு வகையில் பூகோள ரீதியாகப் பிரிப்பதே கிருஷ்ணா ஆறு. கங்கைக்கும், கோதாவரிக்கும் அடுத்து இந்தியாவின் மூன்றாவது நீளமான ஆறு. மல்லிகார்ஜுனர் கிருஷ்ணா நதிக்கரையில் அமைந்துள்ள ஜோதிர்லிங்கமாகும். ஹைதராபாத்தில் பாய்ந்த மூசி நதியும், பூனாவில் பாயும் முத்தா-மூலா நதிகள் சேரும் பீமா ஆறும் கிருஷ்ணாவோடு கூடுகின்றன. ஏற்கனவே மகாராஷ்டிராவில் அணைகளும், கர்நாடகாவில் இரண்டு அணை களையும் கொண்டிருக்கிற கிருஷ்ணாவின் ஸ்ரீசைலம் அணை ராயலசீமாவிலும், நாகர்ஜுனா சாகர் அணை ஆந்திராவிலும் உள்ளது. இவை தெலுங்கானாவின் கட்டுப்பாட்டில் இருக்கப் போவதில்லை என்றாலும் அவர்கள் எந்த இடத்தில் வேண்டுமானாலும் புதிய அணையை எழுப்ப முடியும். கேடுகெட்ட இந்த நாட்டில் சட்டம் எதையும் செய்ய இயலாது. அதே போல கோதாவரியின் மீதுள்ள ஸ்ரீராம் சாகர் அணை தெலுங்கானாவின் நிஜாமாபாத் மாவட்டத்தில் உள்ளது. அது தெலுங்கானாவின் கட்டுப்பாட்டில் வந்தால் கீழே தண்ணீர் தருவார்களா என்ற ஐயத்தைத் தவிர்ப்பதற்கில்லை.

இந்தியாவில் புதிய மாநிலங்கள் உருவாகும்போது என்னென்ன நியாயங்களும், காரணங்களும் சொல்லப் படுகின்றதோ அவை அனைத்தும் தெலுங்கானாவுக்கும் பொருந்தும். பொருளாதார ரீதியாகப் பின்தங்கிய பிராந்தியங்களைத் தனியாக நிர்வகிப்பதற்காகப் புதிய மாநிலங்கள் ஏற்கனவே உருவானதைக் காட்டிலும் கூடுதலான காரணங்கள் இங்குண்டு. சொல்லப் போனால் தெலுங்கானா சிறிய பகுதியல்ல. ஏற்கனவே உள்ள 28 மாநிலங்களில் பாதிக்கு மேலானவை தெலுங்கானாவைக் காட்டிலும் பரப்பளவில் சிறியவை. இன்னும் குறிப்பாகச் சொன்னால் மேற்கு வங்காளம், பீகார் ஆகியவற்றை விட தெலுங்கானா பெரியது. மொழி என்கிற ஒரு விஷயத்தைத் தவிர தெலுங்கானாவுக்கும், ஏனைய ஆந்திரப் பகுதிகளுக்கும் பெரிய பிணைப்பில்லை. ஆனால் இன்றைக்கு மொழியைக் காட்டிலும், நிலத்தைக் காட்டிலும் ஹைதராபாத் நகரமும், அது சார்ந்த பொருளாதார முதலீட்டுக் காரணிகளுமே பூதாகாரமான பிரச்சினையாக உருவெடுத்திருக்கிறது.

நிச்சயமாக ஏதேனும் ஒரு தரப்பு சமரசம் செய்துதான் தீர வேண்டும். தெலுங்கானா குறித்தான ஒருமித்த கருத்து ஒருபோதும் ஏற்படப்போவதில்லை. கொடுத்த வாக்குறுதியைத் திரும்பப் பெறுவதும் நம் தேசத்துக்குப் புதிய விஷயமல்ல. அதே போலத்தான் போராட்டங்களை மழுங்கடிப்பதும், திசை திருப்புவதும். தான் நினைத்த காரியத்தை நடத்திக் காட்டுவதற்கு மத்திய அரசு என்ன வேண்டுமானாலும் செய்யும் என்பதைக் கூடங்குளம் முதலிய பிரச்சினைகளில் கவனித்தோம். 

இங்கே கவனிக்கப்பட வேண்டிய விஷயம், தெலுங்கானா மக்கள் போராட்டத்தை எவ்வாறு முன்னெடுத்தார்கள் என்பதும், அதை அனைத்துத் தரப்பு மக்கள் சார்ந்த போராட்டமாக எப்படி மாற்றினார்கள் என்பதும் தான். மலினமான சினிமா கேளிக்கையில் மூழ்கியிருப்பதாக நம்பப்படும் ஆந்திரா மற்றும் தெலுங்கானா மக்களிடம் இந்திய ஜனநாயகம் கற்றுக்கொள்ள வேண்டிய பாடம் இதுவாகத்தான் இருக்கும். ஆனாலும் தெலுங்கானா உருவானால் அங்கிருக்கும் இளைஞர்களுக்கெல்லாம் வேலை கிடைக்குமென்றோ, புதிய தொழிற்சாலைகள் பெருகுமென்றோ நம்புவதற்கில்லை. மாணவர் புரட்சியையும், இலட்சியக் கனவுகளையும் உணர்ச்சிகர அரசியல் ஆக்கிரமித்து குறுகிய வட்டத்தைச் சேர்ந்த அதிகாரக் குழுக்கள் மட்டும் பயனடைவது இயல்புதானே! தெலுங்கானா உருவானால் அங்கும் இதுதான் நடக்கப் போகிறது. மாற்றமொன்றும் பெரிதாக நிகழ்ந்து விடப்போவதில்லை. இந்தியாவிலுள்ள மாநிலங்களின் எண்ணிக்கை 29 என நம் பிள்ளைகளின் பாடப்புத்தகம் மாற்றி அச்சிடப்படுவதைத் தவிர.

(நவம்பர் 2013 உயிர்மை இதழுக்காக எழுதியது)

1 comment:

Anonymous said...

Really Good and have given a lot of insights about this Issue.