Monday, November 04, 2013

காவிரி பாய்ந்த கன்னித் தமிழ் நாடு

ஒரு காலத்தில் எங்களுக்குச் சொந்தமான வயல் இருந்தது. ஆண்டுக்கு ஒரு போகம் நெல் பயிரிட்டதுண்டு. நெல் தவிர வேறு எந்த வெள்ளாமையும் வைக்க முடியாது. வைத்தாலும் அழுகி விடும். ஊரின் நடுவே ஊற்றெடுத்து ஓடும். இப்போதும் அந்த நிலம் இருக்கிறது, தென்னந்தோப்பாக உருமாறிய வடிவத்தில்.

வருடத்தில் எப்படியும் எட்டு மாதம் அமராவதியில் தண்ணிர் ஓடியதுண்டு. ஆடிப் பெருக்கு சமயத்தில் நுரையோடு தண்ணீர் பாயும். தற்போது பெருமளவில் பாறையாக மாறியுள்ள அமராவதியில் மூன்று மாதம் தண்ணீர் வந்தாலே பெரிய விஷயமாக இருக்கிறது. அப்படியே ஓடினாலும் ஆற்றில் ஆள் இறங்க முடியாத மாதிரி ஒரு வாரத்திற்குப் போகும். பிறகு அடைத்து விடுவார்கள். மறுபடியும் ஒரு மாதம் கழித்து திறந்து விடுவார்கள். ”கருமம் புடிச்சவனுக.. எதுக்கு இப்படி எல்லாத் தண்ணியையும் புடுங்கி உடறானுகளோ” என அணையை நிர்வகிக்கும் ஊழியர்களை திட்டித் தீர்க்கும் குடியானவர்களைக் கேட்க முடிகிறது.

இடுப்பளவு தண்ணீர் ஒரு வார காலம் பாய்ந்தால் மட்டுமே கரூர் நகரை அடையும். சேரன் செங்குட்டுவன் கருரில் இருந்துதான் ஆட்சி செய்ததாக தகவல்கள் கிடைக்கின்றன. நதிக்கரை நாகரீகத்தில் சிறந்து விளங்கி வஞ்சி மாநகர் என்ற பெயர் பெற்றது கரூர். அங்கிருந்து சில கிலோ மீட்டர்கள் ஓடியவுடன் காவிரியில் கலந்து விடுகிறது அமராவதி. ஆனால் இன்று கரூருக்கு அமராவதி பாய்ந்த ஊர் என்ற பெயரே நிலைக்கிறது. அநேகமாக தமிழகத்தில் வகை-தொகையில்லாமல் ஆற்று மணலை அள்ளுவதற்கு அச்சாரம் போட்ட ஊர் கரூராகத்தான் இருக்கும். கரூரில் அள்ளப்பட்ட நயமான மணலுக்கு கேராளாவில் வெகுவான கிராக்கி என கேள்விப்பட்டிருக்கிறேன்.

கரூர் போகும் அளவுக்கு அணையிலிருந்து தண்ணீர் திறக்கப்பட்டால் மேலே உள்ளவர்கள் குமுறுகிறார்கள். நம்ம ஊர் வரைக்கும் தண்ணீர் வந்தால் போதுமென்ற மனநிலையே இங்கு பரவலாக நிலவுகிறது. இது நதிக்கரையின் மேல் பகுதியில் அமைந்துள்ள நேரடிப் பாசன நிலத்துச் சொந்தகாரர்களுக்கு மட்டுமே உரித்தான மனநிலையல்ல. ஆற்றில் அறவே நீர் போகக் கூடாது என நினைக்கும் கால்வாய்ப் பாசன விவசாயிகளும் உள்ளனர். அணையில் இருந்து கால்வாய்களுக்கு மட்டுமே தண்ணீர் திறந்து விட வேண்டும் என அவர்கள் எதிர்பார்க்கிறார்கள். ஆனால் சென்ற வருடம் இயற்கை பழைய கரூர்ப் பாசன பகுதிகள், ஆற்றின் மேல் பகுதி விவசாயிகள் மற்றும் கால்வாய்ப் பாசன நிலங்கள் என அனைத்துத் தரப்பையுமே ஏமாற்றியிருகிறது. ஒரு காலத்தில் இரண்டு போகம் நெல் விளைந்த கால்வாய்ப் பகுதி வயல்கள் காய்ந்து போய்க் கிடக்கின்றன.

தண்ணீரைப் போல செலவு செய்த காலம் போய் இன்று தண்ணீருக்காக நிறையச் செலவு செய்ய வேண்டியிருக்கிறது. அரசியலும், வளங்களும் தண்ணீரைச் சார்ந்தும் சுற்றியுமே நீள்கின்றன. தெலுங்கானா தனி மாநிலமாகப் பிரிந்து போகக் கூடாது என கடலோர ஆந்திரவாசிகள் உக்கிரமாகப் போராடுவதற்கு முக்கியமான காரணம் ஹைதராபாத் நகரம் தெலுங்கானாவுக்குப் போய்விடும் என்பதைக் கடந்து கோதாவரியிலும், கிருஷ்ணாவிலும் தண்ணீரையெல்லாம் தடுத்துக் கொள்வார்கள் என்ற அச்சமும் தான். என்னதான் நதிநீர்ப் பங்கீடுகள், நீதிமன்ற உத்தரவுகள், தீர்ப்பாயங்கள் அமைக்கப்பட்டாலும் மேலே உள்ளவன் தடுத்தால் கீழே உள்ளவனுக்கு அழுவதைத் தவிர வேறு வழியில்லை. கோதாவரியும், கிருஷ்ணாவும் காவிரியை விடப் பெரிய ஜீவநதிகள்.

அமராவதியில் கீழ்ப் பகுதியில் உள்ள கரூருக்கும், மேலே உள்ள தாராபுரத்துக்கும் பெரிய வித்தியாசம் இல்லை. இரண்டுமே காய்ந்து தான் கிடக்கின்றன. ஆனால் தஞ்சாவூரைப் போல மைசூர், மாண்டியா மாவட்டங்கள் இல்லை. அவை செழித்துக் கொழிக்கின்றன. சில மாதங்களுக்கு முன் மைசூர், கொடகு மலை ஆகிய பகுதிகளுக்குச் சென்று திரும்பிய போது ஆயாசமே மிஞ்சியது. மத்தியில் காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தாலும் சரி, பாரதிய ஜனதா ஆட்சிக்கு வந்தாலும் சரி, தமிழகத்துக்கு உரிய நியாயமான தண்ணீர் கிடைக்கப் போவதில்லை. இந்த இரண்டு கட்சிகளுக்கும் தமிழ்நாட்டில் அரசியல் பலம் இல்லை. மாறாக கர்நாடகாவில் நடப்பு ஆட்சியைச் செய்வது காங்கிரஸ். அதற்கு முந்தையது பாஜக-வினது. ஆகையால் அவை சட்டப்படியோ, அரசியலமைப்புக்கு இணங்கியோ, தார்மீகப் பொறுப்புடனோ காவிரியில் நீரைத் திறந்து விட்டு கர்நாடகத்தில் தமது அரசியல் பலத்தைக் குறைத்துக் கொள்ளாது. அது இல.கணேசனுக்கும் தெரியும். ஜி.கே.வாசனுக்கும் தெரியும்.

1928-ல் காவிரி இப்போதைய கர்நாடகத்தில் 1.1 கோடி ஏக்கர் விவசாய நிலங்களுக்கும், இப்போதைய தமிழ்நாட்டின் 14.5 கோடி ஏக்கருக்கும் பாசன வசதி அளித்தது. 1971-ல் புள்ளிவிவரப்படி, கர்நாடகத்தில் 4.4 கோடி ஏக்கரும், தமிழ்நாட்டில் 25.3 கோடி ஏக்கரும் பாசன வசதி பெற்றன. எனினும் இருபதாம் நூற்றாண்டின் இறுதியில் நதியின் மேல்பகுதி நதியில் கீழ்ப்பகுதியை ஏறத்தாழப் பிடித்து விட்டது. இப்போதைய புள்ளிவிவரப்படி கர்நாடகத்தில் 21.3 கோடி ஏக்கர், தமிழ்நாட்டில் 25.8  கோடி ஏக்கர். (இதில் எவ்வளவு காய்ந்து கிடக்கின்றன என்பது கவனிக்க வேண்டி விஷயம்) இந்த மகத்தான பாசன வசதி விஸ்தரிப்பு கர்நாடகத்தின் மாண்டியா, மைசூர் மாவட்ட விவசாயிகளுக்கு அதிகப் பொருள் வளத்தை அளித்தது. ஒரு காலத்தில் மதிப்பு குறைவான சோளம் போன்ற பயிர்களை ஒரு போகம் மட்டும் பயிர் செய்தவர்கள் இப்போது இரண்டு போகம், மூன்று போகம் நெல், கரும்பு போன்ற உயர் மதிப்புப் பயிர்களை சாகுபடி செய்ய முடிந்தது. (நன்றி: India After Gandhi – ராமச்சந்திர குஹா)

எங்களுக்கு ஒரு காலத்தில் வயல் இருந்தது. அதில் ஐ.ஆர் 20 விளைந்தது. இப்போதெல்லாம் கர்நாடகா பொன்னி அரிசியே வாங்கிச் சமைக்கிறோம்.

No comments: