Tuesday, November 05, 2013

பாலச்சந்திரன்களும், இசைப்பிரியாக்களும்

ஆன்மாவை உலுக்கியிருக்கிறது.

இப்படித்தான் இசைப்பிரியா இலங்கை இராணுவத்தால் இழுத்துச் செல்லப்பட்டு பாலியல் கொடுமைக்கு ஆளாகி கொலை செய்யப்பட்ட வீடியோவை சேனல்-4 தொலைக்காட்சியில் கண்ட பல தமிழுணவாளர்கள் பதறுகிறார்கள். விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரனின் மகன் பாலச்சந்திரன் சர்வதேச போர் விதிகளுக்குப் புறம்பாக கொலை செய்யப்பட்ட செய்தியையும் வெளியிட்டது இதே சேனல்-4 தான். இசைப்பிரியாவும், பாலச்சந்திரனும் வெறும் மாதிரிகள் மட்டுமே. அவர்களை விட மோசமான சித்தரவதைக்கும், இன்னலுக்கு ஆளாகி இறந்தவர்களின் இரத்தச் சகதி முள்ளிவாய்க்காலில் கழுவப்படாத கரையாக காலத்திற்கும் படிந்திருக்கும்.

முதலில் இனப்படுகொலை என்றார்கள். பிறகு போர்க் குற்றம் என்றார்கள். இப்போது ஜஸ்ட் மனித உரிமை மீறல் என்று கூட பேசுவதற்கு ஆளில்லை. அப்படியாகப்பட்ட சூழலில் இசைப்பிரியா பற்றிய சேனல்-4 வீடியோ ஓரளவு சலனத்தை உருவாக்கியிருப்பது உண்மையே. அந்த வீடியோ இலங்கையில் நடக்கும் காமன்வெல்த் நாடுகளின் கூட்டத்திற்கு இந்தியா செல்லாமல் அதைப் புறக்கணிக்க வேண்டுமென இங்கே சன்னமாக ஒலித்த கண்டனக் குரல்களுக்கு வேகம் கொடுத்திருக்கிறது. அந்த நோக்கத்திற்காக தியாகு உண்ணாவிரதம் இருந்தார். மத்திய அரசிடம் எடுத்துச் சொல்லி கலைஞர் அவரது உயிரைக் காப்பாற்றியதாக சுப.வீரபாண்டியன் உரிமை கோரி விட்டார். தமிழ்த் தேசியவாதிகள் இதற்காக கருணாநிதியையும், சுப.வீ அவர்களையும் கிண்டல் செய்யலாம். ஆரம்பிக்கிற ஒவ்வொரு உண்ணாவிரதமும் ஏதாவது ஒரு பெரிய மனிதனால், ஏதேனும் ஒரு வாக்குறுதியால் நிறுத்தப்பட வேண்டும். கலைஞரைத் தவிர வேறு யாரும் அதைச் செய்திருக்க முடியாது.

இப்போது இலங்கைக்கு ஒரு துரும்பு கூட செல்லக் கூடாது என்கிறார் கலைஞர். Spicejet விமானங்கள் இரும்பில் செய்தவை, அதனால் போகலாம். காமன்வெல்த் மாநாட்டில் பிரதமர் பங்கேற்கக் கூடாதென தமிழக காங்கிரஸ்காரர்கள் சொல்கிறார்கள். நம்ம அணு விஞ்ஞானி நாராயணசாமி, ஜி.கே.வாசன், ப.சிதம்பரம், ஜெயந்தி நடராஜன் என அத்தனை பேரும் அதே குரலை பிரதிபலித்திருக்கிறார்கள். உலகில் உள்ள கோடிக் கணக்கான தமிழர்களின் கருத்துக்கு மதிப்பளித்து பிரதமர் இந்த நிகழ்வைப் புறக்கணிக்க வேண்டுமென அத்வானி கூட சொல்லியிருக்கிறாராம். இன்னும் சோனியா, மன்மோகன் & ராகுல் மட்டுந்தான் பிரதமர் காமன்வெல்த் மாநாட்டுக்கு செல்லக் கூடாதென்று கோராத ஆட்கள். அவர்கள் பெயரிலும் அத்தகைய அறிக்கைகள் விரைவில் வெளிவரும் என நம்புவோம்.

அதிகபட்சம் நாம் எதிர்பார்க்கக் கூடிய செயல் என்னவாக இருக்கும்? பிரதமர் மன்மோகன் சிங்கிற்குப் பதிலாக சல்மான் குர்ஷித் இலங்கைக்குப் போவார். போய் இந்தியாவின் சார்பில் மன்னிப்புக் கேட்டு விட்டுத் திரும்பிவார். சேனல்-4 டாக்குமெண்டரி எடுத்த கெல்லம் மெக்கரேயின் விசா அப்ளிகேஷனை இந்தியா process செய்யாமல் வைத்திருப்பதே இதற்கு சாட்சி. அவர் இலங்கையில் போர்க்குற்றம் தொடர்பான வீடியோக்களை இந்தியாவில் திரையிட்டுக் காட்டி சர்வதேச கவனத்தை ஈர்த்து விடுவார். இலங்கை கோபித்துக்கொள்ளும். போரில்  இந்தியாவும், இலங்கையும் கூட்டாளிகள் என ராஜபக்சே போட்டுக் கொடுத்து விடுவார்.

அப்படித்தான் எல்லோரும் நினைக்கிறார்கள். இலங்கைத் தமிழர் பிரச்சினை பற்றிய விவாதங்கள் தொடர்வதையும், அது புதிய வடிவங்களைப் பெற்று மீண்டும் துளிர்ப்பதிலும் இந்தியா நாட்டமின்றி இருக்கிறது. அதைத்தான் ராஜபக்சே விரும்புகிறார். ஒரு வகையில் இலங்கை வாழ் தமிழர்களுக்கும் அதுவே நன்மை பயக்கக் கூடிய விஷயமாக இருக்கும். பெரும்பான்மை மக்களின் நம்பிக்கையைப் பெற சிறுபான்மையினர் முயற்சிப்பதைத் தவிர வேறு வழியில்லை. சமீபத்தில் சென்னை வந்து விட்டுப் போன நரேந்திர மோடி, வெளிநாட்டில் வாழும் அத்தனை இந்தியர்களின் நலனுக்காகவும் பாரதிய ஜனதா குரல் கொடுக்கும் என்றும், அதில் இலங்கைத் தமிழர்களும் அடங்குவார்கள் என்றும் பேசினார். இலங்கைத் தமிழர்கள் வெளிநாடு வாழ் இந்தியர்கள் அல்லர் என்பதை அறியாத பாஜக பிரதம வேட்பாளரைப் போலத்தான் பாதி தமிழக அரசியல்வாதிகளே இருக்கிறார்கள்.

இனியும் தனி ஈழம் என்றெல்லாம் யாரும் பேச வேண்டியிருக்காது. ஒருங்கிணைந்த வடக்கு மற்றும் கிழக்குப் பிராந்தியத்துக்கான தமிழர் தாயக மாநில அந்தஸ்து என்ற கோரிக்கை காற்றில் பறந்து போய் வடக்கு மாகாணத்தில் விக்னேஸ்வரன் முதலமைச்சர் ஆனதையே ஜனநாயகத்தின் வெற்றியாக உலகம் பார்க்கிறது. இதற்குத்தானா இத்தனை உயிர்கள் பலியிடப்பட்டன? உண்மையில் இந்தியா ராஜபக்சேவுக்கு பயப்படவில்லை. விடுதலைப் புலிகளி போராட்ட வடிவமோ, அல்லது அந்தப் போராட்ட வடிவும் வெற்றி பெறுவதோ உலக ஒழுங்குக்கு ஒப்புவதாக இல்லை. சொல்லப் போனால் இந்தியாவுக்கோ, மேலை நாடுகளுக்கோ ராஜபக்சே ஒரு பிரச்சினையே கிடையாது. மேற்குலக நாடுகளின் அஜெண்டாவை ஏற்காத ஆட்சியாளராக அவர் இல்லை. ஒரு வேளை அப்படி நடந்திருந்தால் அங்கே இந்நேரம் அமெரிக்கா தனது படைகளின் உதவியோடு ’ஜனநாயகத்தை’ நிறுவியிருக்கும்.

புலிகள் அழிக்கப்பட வேண்டுமென்பது ஒட்டு மொத்த உலகமும் எடுத்த முடிவு. இந்தியாவும், சீனாவும், பாகிஸ்தானும், அமெரிக்காவும் ஒரு விஷயத்தில் ஒத்த கருத்தைக் கொண்டிருந்தன என்றால் அது போர் மூலமாக பிரச்சினையை முடிவுக்குக் கொண்டு வருவதென்ற ராஜபக்சேவின் முடிவில் துணை நின்றதாகத்தான் இருக்கும். இப்போதும் கூட சிங்கள மக்களை தமிழர்களுக்கு எதிராகச் சிந்திக்க வைக்கக் கூடிய வேலையில் அரசியல் வாக்குகளை அறுவடை செய்வதில் சுழல்கிறது இலங்கையின் அரசியல் விளையாட்டு.

இந்தியா காமன்வெல்த் மாநாட்டைப் புறக்கணித்தாலோ, பிரதமருக்குப் பதிலாக வேறு ஏதாவது அமைச்சர் கலந்து கொண்டாலோ என்ன நடந்து விடப் போகிறது? யோசித்துப் பார்க்க்கிறேன். தமிழகத்தில் கொஞ்சப் பேரும், புலம் பெயர்ந்து வாழும் ஈழத் தமிழர்களும் பெருமைப்பட்டுக் கொள்ளலாம். இலங்கைத் தீவில் தமிழ் பேசும் மக்களைப் பொருத்த வரைக்கும் அவர்களுக்கு நன்மையை விட கெடுதலே கூடுதலாக விளையும் எனத் தோன்றுகிறது.

No comments: