Sunday, December 01, 2013

உலகம் சுற்றிய தமிழன் ஏ.கே.செட்டியார்

பொதுவாக வேலை ஏதும் இல்லாமல் வெட்டியாகச் சுற்றிக் கொண்டிருப்பவனை ஊர் சுற்றி என்போம். ஒருவர் உலகத்தையே சுற்றியிருக்கிறார்.  சரி, சுற்றி வளைக்காமல் நேராக மேட்டருக்கு வந்து விடுகிறேன். இது ஏ.கே.செட்டியாரைப் பற்றியது. அவரைப் பற்றி ஒரு வேளை நீங்கள் கேள்விப்பட்டிருக்கலாம்.

பொருள் தேடி உலகெல்லாம் பயணித்து வாணிகம் செய்யும் செட்டியார் சமூகத்தில் புகைப்படக் கலையைப் படிப்பதற்காக அமெரிக்கா போனவர். காந்தியைப் பற்றி ஆவணப் படம் எடுத்த முதல் மனிதர். காந்தி சென்ற இடங்களுக்கெல்லாம் சென்று அங்கு தரவுகளைத் திரட்டியவர். தென்னாப்பிரிக்காவில் மூன்லைட் குப்புசாமியைப் பற்றியெல்லாம் குறிப்பு எழுதியிருக்கிறார். அவன் பயணம் செய்த தேசங்களையும், காலத்தையும் கணக்கில் எடுத்துப் பார்த்தால் மலைப்பாகவே இருக்கிறது. மகாத்மா காந்தி குறித்த முழு நீளத் திரைப்படம் வந்த போது அதன் இயக்குனர் செட்டியாருக்கு திரையிட்டுக் காட்ட அழைப்பு விடுத்ததைக் கூட மறுத்து விட்டாராம்.

பயண இலக்கியம் அல்லது பயணக் குறிப்பு/கட்டுரை தமிழில் அத்தனை பிரபலம் இல்லை. ஆனால் அவை எழுதப்படாமலும் இல்லை. அவை தொகுக்கப்படாமலும், பேணப்படாமலும் அழிந்து போயிருக்கின்றன. ரோஜா முத்தையாவுக்கு இணையாக அரிய புத்தகங்களையெல்லாம் சேகரித்து நூலகம் ஏற்படுத்தக் காரணமாக இருந்த செட்டியாரின் பயண இலக்கியப் பயன்பாடு மறக்கக் கூடியதல்ல. மெய்யாலுமே உலகம் சுற்றிய தமிழர் அவர்.

முப்பது ஆண்டுக்கு மேலாக குமரி மலர் என்ற பத்திரிக்கையை செட்டியார் நடத்தினாராம். பிறகு இன்னொரு உதிரித் தகவல். இப்போது நாரத கான சபா இருக்கும் இடத்தில் தான் செட்டியாரின் குமரி மலர் அலுவலகம்/அச்சகம் இருந்ததாம். ஒரு முறை ராஜாஜி ஒரு கதை எழுதியிருக்கிறார். அதை நேராக எடுத்துக்கொண்டு செட்டியார் வீட்டுக்கு காலையிலேயே போனார். அதை அறிந்த கல்கி அவர்கள், “என்னிடம் கொடுத்திருந்தால் நான் கல்கியில் வெளியிட்டிருப்பேனே” என்றிருக்கிறார். நல்ல கதை. குமரி மலர்ல வந்தா நல்லா இருக்கும் என்றிருக்கிறார் ராஜாஜி. 

இதில் வேடிக்கை என்னவென்றால், சந்தா கட்டி மெம்பராக இருப்போருக்கு மட்டுந்தான் அனுப்புவாராம் செட்டியார். மற்றவர்கள் கடைகளில் அதை வாங்க இயலாதாம். புதிதாக சந்தா செலுத்தினாலும் ஏற்க மாட்டாராம். வழமையான சந்தாதாரர் யாராவது கேன்சல் செய்தால் மட்டுமே புதிய ஆட்களைச் சேர்ப்பாராம். இவரது இதழுக்காக, இவரது தூண்டுதலின் பேரில் பாரதிதாசன் எழுதிக்கொடுத்து வெளியிட்ட கவிதைகளே அழகின் சிரிப்பாக பிற்பாடு வடிவம் பெற்றது.

எனவே சிற்றிதழ்களை யாரும் ஏளனம் செய்யாமல், அவற்றை நிராகரிக்காமல், அவன் காசே கொடுப்பதில்லை என்று புலம்பாமல் எழுதிக் கொடுப்பது அவசியம். பாவேந்தரே சிற்றிதழில் கொஞ்சம் கொஞ்சமாக எழுதித்தான் காலத்தால் அழையாத படைப்பைக் கொடுத்தார். கலைஞரே கையெழுத்துப் பத்திரிக்கை நடத்தியிருக்கிறார். பல பெரிய எழுத்தாளர்கள் சிற்றிதழ்களின் தொடர்ச்சியாகப் பங்களித்ததன் மூலமாகவே வாசகர்களின் நினைவில் நிலைத்தார்கள். இன்றைக்கும் வலைப்பதிவுகளும், இணைய இதழ்களும் வந்து விட்டாலும் கூட சொற்ப விநியோகம் செய்யும் சிறு பத்திரிக்கைகளை தவிர்த்து விட இயலாது.

சி.சு.செல்லப்பா செட்டியாரைப் பற்றிப் பேசும் போது அவர் இலக்கியவாதியும் இல்லை என்றாராம். ஏனென்றால் பயணக் குறிப்புகள் எல்லாம் அந்த வகையில் சேராதாம். ஆனால் யுவாங் சுவாங் குறித்து இன்னும் பேசிக்கொண்டு தானிருக்கிறோம்.

ஆன்சைட் போகும் சாஃப்ட்வேர் எழுத்தாளர்கள் அந்தந்த ஊரைப் பற்றி ஒரு புத்தகமோ, கட்டுரையோ எழுதினால் கூடப் போதும். ரா.முருகனின் லண்டன் டைரி நல்லதொரு உதாரணம்.

No comments: