Wednesday, December 11, 2013

அண்ணே ஒரு விளம்பரம்

ராஜீவ் காந்தி சாலை என அழைக்கப்படும் பழைய மகாபலிபுரம் சாலை கட்டணச் சாலையென்பதால், சென்னை மேடவாக்கத்திலிருந்து நாவலூருக்கோ, கேளம்பாக்கத்துக்கோ காரில் பயணிப்பவர்கள் சோழிங்கநல்லூர் சுங்கச் சாவடியில் இருபது ரூபாய் செலுத்த வேண்டும். போக இருபது, வர இருபது மொத்தம் நாற்பது ருபாய். ரிட்டர்ன் டிக்கெட்டாக வாங்கினால் 38 ரூபாய். இதற்கு மாறாக சித்தாலப்பாக்கம், காரணை, தாழம்பூர் வழியாகச் செல்லும் ஒரு பாதையத் தேர்ந்தெடுத்தால் அந்த சுங்கச் சாவடியைத் தவிர்த்து விடலாம்.


அப்படிச் செல்வோர் சுங்கச் சாவடியைத்தான் தவிர்க்க முடியும். தேவசித்தத்தை தவிர்க்கவே முடியாது. அது என்ன தேவனின் சித்தம் என குழப்பமாக இருந்தால் ஒரு முறை இந்த வழியாகப் பயணித்துப் பாருங்கள். அப்படி முடியாதவர்களுக்காக சுருக்கமாகச் சொல்லி விடுகிறேன். சசிக்குமார் நடித்த நாடோடிகள் படத்தில் ஒரு ஆள் உதவி செய்வார். செய்து முடிப்பதற்குள் அதைப் பற்றிய போஸ்டரும், ஃபிளக்ஸும் முளைத்திருக்கும். அந்த வாசகங்களை எழுத ஐந்து பேர் கொண்ட குழு வேறு வைத்திருப்பார். படத்தில் அந்த கேரக்டருக்கு தேவசித்தம் தான் இன்ஸ்பிரேஷனாக இருந்திருப்பார். காரணை-தாழம்பூர் ஒரு கிலோ மீட்டர் தொலைவுக்குள் சுமார் இருபது ஃபிளக்ஸ் போர்டுகள் தென்படும். “வாரித் தந்த வள்ளலே”, “கொட்டித் தந்த கோமானே”, இப்படியெல்லாம் கண்ணில் படும்.

இந்த வாசகங்களை விடக் கொடுமை அந்த ஆள் கொடுக்கும் ’போஸ்’. ஒவ்வொரு போஸ்டரிலும் ஒவ்வொரு கெட்டப்பில் இருப்பார். செக காமெடியாக இருக்கும். இந்த கெட்டப், வாசகம் எல்லாம் ஒரு வாரத்துக்குத் தான். அடுத்த வாரம் வேறு போஸில், வேறு வசனங்களுடன் புதிய ஃபிளக்ஸ் மாறியிருக்கும். வெள்ளிக்கிழமையானால் ஆனந்த விகடன் வருகிறதோ இல்லையோ, வாராவாரம் இவரது கெட்டப் மாறிக்கொண்டே இருக்கும். தேவசித்தம் ஒரு சாமியாராம். ஊராட்சி மன்றத் தலைவர். அவரது விளம்பரங்களையெல்லாம் கொஞ்சம் போட்டோ எடுத்து வந்து இந்தே பகிரலாம் என நினைத்தேன். அதில் ஒரு ஓரமாக வெளிப்படும் கட்சி அடையாளம் கருதி அடக்கிக் கொண்டேன்.

தேவசித்தம் பவர் ஸ்டாருக்கெல்லாம் முன்னுதாரணமாக இருப்பார் போல. இந்த மாதிரி ஆட்கள் எல்லாம் கவுண்டமணி, “அரசியல்ல இதெல்லாம் சகஜமப்பா” என்று சொன்ன காலம் தொட்டே இருந்திருக்கிறார்கள் நிகழ்கால மனிதன் இவ்வளவு பெரிய விளம்பரப் பிரியனாக மாறியிருப்பதற்கான சாட்சியமே அப்பட்டமாக வெளிப்படும் இந்த உதாரணங்கள். வெளியே தெரியாதவை ஏராளம் இருக்கும்.

”Your work should talk about yourself, not vice versa” என சில வருடங்களுக்கு முன் மின்னஞ்சல் கையெழுத்தாக வைத்திருந்தான் என் நண்பன் ஒருவன். அவனோடு உடன் பணியாற்றிய இன்னொரு நண்பர் அவனது நிறுவனத்தில் ஜெனரல் மேனேஜராகச் சேர்ந்த பிறகு புலம்பிக்கொண்டிருக்கிறான். பலனை எதிர்பாராமல் கடமையை மட்டுமே ஆற்றுவது ideal சமூகத்தில் சாத்தியம். அவன் போதைக்கு நம்மை ஊறுகாயாகப் பயன்படுத்துகிறான் என எல்லோருக்கும் தெரிந்திருக்கும் காலம் இது. இங்கே நம் வேலை மட்டுமே நம்மைப் பற்றிப் பேசி விடும் என்பது சாத்தியம் இல்லை. அப்படி நம்புவதைப் போன்ற முட்டாள்தனமும் இல்லை.

சுய விளம்பரம் தேவையா என்ற கேள்வியே அபத்தமாக, oxymoron ஆக இருக்கிறது. விளம்பரமே சுயம் தானே? அடுத்தவன் எதற்கு நமக்காக விளம்பரம் செய்யப் போகிறான்? (அவனுக்கு நம்மால் காரியம் ஆக வேண்டி இருந்தால் ஒழிய) ஆனாலும் விளம்பரம் மட்டுமே மார்க்கெட்டிங் ஆகி விடாது. மேனேஜ்மெண்ட் தியரியில் வரும் நான்கு P சமாச்சாரங்களில் promotion ஒரு பகுதி மட்டுமே. மற்ற மூன்று விஷயங்களை விடுத்து வெறும் புரமோஷனை மட்டுமே முன்னிறுத்தும் நிலையில் இருக்கிறோம். நல்ல புரமோஷன் இருந்தால் மோசமான சரக்கைக் கூட விற்றுத் தள்ளி விடலாம். நல்லதோ, கெட்டதோ சரக்கு இருப்பதையாவது ஏனையோருக்குத் தெரியப்படுத்தவும் விளம்பரம் அவசியமாகிறது.

நல்ல பேக்கேஜ் மிகவும் அவசியம். ஒரு கடைக்குள் நுழைகிறோம். ஐஸ்வர்யா ராய் படம் போட்ட ஒரு சோப்பும், வீடு படத்தில் நடித்த தாத்தா படம் போட்ட ஒரு சோப்பும் இருந்தால் இரண்டில் எதை வாங்குவோம்? அப்படித்தான் புத்தகங்களும். இழக்காதே என்று பெயர் போட்ட புத்தகம் கன காலமாக out of stock இல் இருக்கிறது. ”இந்தப் புத்தகத்தை வாங்காதீர்கள்’ என கோபிநாத் படம் போட்டால் ஓடுகிறது. ஆகவே அமைச்சரே, வரலாறு மட்டுமல்ல - பேக்கேஜும் முக்கியம்.

இங்கே இதைச் சொல்வதற்குக் காரணம் இருக்கிறது. போன வாரத்தில் ஒரு நாள் மனுஷ்யபுத்திரனைச் சந்தித்தேன். ”எஸ்.ராமகிருஷ்ணன் நூல் வெளியீட்டு விழா திருச்சியில நடக்குது. வரீங்களா?” என்றார். ”க்கும்” என நினைத்துக்கொண்டே சிரித்தேன்.

நான் அவரை ’மீட்’டியதற்கான காரணமே வேறு. அவர் சில உயிர்மை பதிப்பகத்தில் சார்பில் ஜனவரி 1-ஆம் தேதி நூல் வெளியீட்டு விழா நடத்தத் திட்டமிட்டிருக்கிறார். அதில் எனது இரவல் காதலியும் ஒன்று. ”உங்க புக் பத்திப் பேச யாரை கூப்பிடலாம் சொல்லுங்க” என்று கேட்டதற்கு சில பெயர்களைச் சொன்னேன். ஏனோ இழுத்தார். ”நீயா நானா ஆண்டனியைக் கூப்பிடலாமா?” எனக் கேட்டேன். ஆண்டனியை அழைப்பதில் ஒரு அனுகூலம் உண்டு. புத்தகம் விற்கிறதோ இல்லையோ, யார் கண்ணில் படுகிறதோ இல்லையோ,ஆண்டணிக்குத் தெரிந்து விடும். புத்தகம் பேசப்பட்டுப் புகழடைவதை விட நீயாநானாவில் சிறப்பு விருந்தினராக ஒரு தடவையாவது கூப்பிட்டு விடுவார்கள் இல்லையா? இது நான்கு மார்க்கெட்டிங் P க்களில் எந்த வகையில் சேருமென்று தெரியவில்லை. 

”அவரை இன்னொருத்தர் புக் பண்ணிட்டார்” என மனுஷ்யபுத்திரன் பதிலளித்தார்.

இதற்கு மேல் பேசினால் தேவசித்தம் வந்து மிரட்டுவது மாதிரியே இருக்கிறது. இருந்தாலும் சொல்லியாக வேண்டியிருக்கிறது.

நூல் வெளியீட்டு விழாக்கள் ஒரு வகையில் உண்ணாவிரதம் போல. ஒரு மாதிரியான கவன ஈர்ப்பு. அதைத் தாண்டி விவரிக்க என்ன இருக்கிறது? இரவல் காதலியைப் பற்றிப் ஏசுவதற்காக ..ஸாரி.. பேசுவதற்காக ஒரு பிரபலத்தை புக் செய்ய முயன்று கொண்டிருக்கிறோம். 

1 comment:

ஜீவன் சுப்பு said...

உண்ணாவிரதம் வெற்றியடைய வாழ்த்துக்கள் :)