Monday, December 16, 2013

புத்தகங்களுக்கு விளம்பரம் தேவையா?

கார்த்திகை நாய்களுக்கான மாதம். மார்கழி? மனிதர்களுக்கான மாதமா? குளிரும், பனியும் கூடலுக்கு உகந்தவை அல்லவா!

இல்லை, புத்தகம் போடும் ஆட்களுக்கான மாதம் என்கிறான் ஃபேஸ்புக்கை உன்னிப்பாக அவதானிக்கும் என் நண்பன் ஒருவன். ஜனவரி புத்தகக் கண்காட்சியை ஒட்டி இளம், முதிய எழுத்தாளர்கள் (வாலிப வயோதிக என மைண்ட் வாய்ஸ் ஓடுகிறது) செய்யும் மார்க்கெட்டிங் நகைப்புக்குரியதாக இருக்கிறதாம். அவனுக்கு பதில் சொல்வதற்கு ஒரு குட்டி ஃபிளாஸ் பேக் போக வேண்டியிருக்கிறது.

எனது முதல் புத்தகம் 2007 இல் வெளியானது. பங்குச் சந்தை பற்றியது. இழக்காதே என்ற பெயரில் 344 பக்கத்தின் வெளியானது. ”இனி மேல் மறுபதிப்பு செய்யப் போவதில்லை. வேண்டுமானால் Print on Demand (POD) முறையில் அதைத் தொடரலாம்” என கிழக்கு பதிப்பகத்தில் சொல்லியிருக்கிறார்கள். இப்போது விலை ரூ 230. POD க்குப் போனால் நானூறு, ஐநூறு கூட ஆகலாம். அதை விடக் கூடுதலாகவும் ஆகலாம். தெரியவில்லை.

தமிழ் பேசும், வாசிக்கும் ஒவ்வொருவரும் வாசிக்க வேண்டிய புத்தகம் என நான் உறுதியாக நம்புகிற புத்தகம் இது. ‘எழுத்தாளன்’ அடைமொழியைக் கூட உபயோகிக்க யோசிக்கும் ஆள் நான். வழக்கமாக சங்கோஜம் நிறைந்த எனக்கு பங்குச் சந்தை பற்றிய இந்தப் புத்தகத்தைப் பற்றிச் சொல்வதற்கு தயக்கமோ, கூச்சமோ கிஞ்சித்தும் கிடையாது. வாழ்க்கையில் இந்தச் சமுதாயத்திற்காக என்ன செய்தேன் என மரணப் படுக்கையில் நினைத்துப் பார்க்கும் போது கூட இழக்காதே என்ற நூலை ஆக்கியது ஆசுவாசம் தரும். ”அது போதும்” என நிம்மதி அடையலாம். அதற்கு மேல் செய்ததெல்லாம் போனஸ் மாதிரி.

அந்த இழக்காதே புத்தகம் இனி மேல் அச்சில் கிடைக்குமா என்பது கேள்வியாகவே உள்ளது. குறிப்பிட்ட எண்ணிக்கைக்கு மேல் விற்காத புத்தகங்களை இனிமேல் மறுபதிப்புக்கு அனுப்பப் போவதில்லை என்ற முடிவுக்கு அவர்கள் வந்திருக்கிறார்கள். அது அவர்கள் முடிவு. பணம் போட்டு பிசினஸ் நடத்துவது அச்சடித்த புத்தகங்களை எல்லாம் குடவுனில் போட்டு பூட்டி வைப்பதற்காகவா? அதிலும் பத்ரிக்கு இந்த மாதிரியான குழப்பங்கள் ஏதுமில்லை. எனக்கும் வருத்தமில்லை.

இழக்காதே மிக முக்கியமான ஆக்கம். அவசியமான ஆவணம். சரியாக மார்க்கெட் செய்யப்படாத ஒரு படைப்பு. இங்கே எனக்கு சோம.வள்ளியப்பன் மீது பொறாமையோ, வருத்தமோ கிடையாது. அவரது தம்பி ’கேளடி கண்மணி’ படம் எடுப்பதற்கு முன்பிருந்தே வள்ளியப்பன் எழுதி வந்திருக்கிறார். அவரது அள்ள அள்ளப் பணம் புத்தகம் பெற்ற வெற்றிக்காக என்னைக் காட்டிலும் மகிழ்வது வேறு யாரும் இருக்க முடியாது. முன்னர் ஒரு பதிவில், “ஒரு கடைக்குள் நுழைகிறோம். ஐஸ்வர்யா ராய் படம் போட்ட ஒரு சோப்பும், வீடு படத்தில் நடித்த தாத்தா படம் போட்ட ஒரு சோப்பும் இருந்தால் இரண்டில் எதை வாங்குவோம்?” எனக் குறிப்பிட்டிருந்தேன். ஒரு புத்தகக் கடைக்குள் நுழையும் ஆளுக்கு அள்ள அள்ளப் பணம், இழக்காதே என இரு புத்தகங்கள் இருந்தால் எதைக் கையில் எடுக்கத் தோன்றும்? நன்கு விற்கப்பட்ட தலைப்பு ஒரு கட்டத்திற்குப் பிறகு தன்னைத் தானே விற்றுக் கொள்ளும்.

ஆனாலும் கிழக்கு பதிப்பகத்தில் இந்தப் புத்தகம் விற்கக் கூடாது என்பதற்காக இழக்காதே மாதிரியான டபுள் நெகட்டிவ் தலைப்பை வைத்திருக்க மாட்டார்கள். It happened. 500 பிரதிகள் விற்கிற பத்து டைட்டிலை விட ஐயாயிரம் பிரதி விற்கிற ஒரு டைட்டிலே பதிப்பகத்திற்குப் போதும். அதுதான் எதார்த்தம். இதில் எமோஷனுக்கு இடமில்லை. எழுத்தாளன் மீதான அபிமானத்தினாலும், படைப்பின் இலக்கியத் தன்மைக்காகவும் பிரசுரித்து விட்டு கையைக் கடித்துக் கொண்டிருக்கும் பதிப்பாளர்களை நான் அறிவேன். ”புக் போடலாம். இருபதாயிரம் ஆகும்” எனக் கேட்கும் பதிப்பாளர்களும் இருக்கிறார்கள்.

இனிமேல் தன்னை விற்கும் எழுத்தாளன் மட்டுமே இங்கே நிற்க முடியும். எழுத்து முக்கியமில்லையா என நீங்கள் கேட்கலாம். ஒரு கட்டத்திற்கு மேல் எழுத்தே தன்னை எழுதிக் கொள்ளும். இன்னும் கூட சுஜாதாவின் புத்தகம் அளவிற்கு மற்றவர்களின் படைப்புகள் விற்பதில்லை. சுஜாதாவை விட நன்றாக எழுதுகிறவர்களும் இருந்தார்கள். ஐஸ்வர்யா ராயை விட அழகானவர்களும் இருந்தார்கள். சுஜாதாவும், ஐஸும் பிரபலம் ஆன அளவிற்கு மற்றவர்களால் ஏன் ஆக முடியவில்லை என்பது அவிழ்க்க முடியாத முடிச்சொன்றும் இல்லை.

தற்புகழ்ச்சி போலத் தெரியும். ஆனாலும் இதை இங்கே சொல்லியாக வேண்டும். எனக்கு இழக்காதே புத்தகம் வேதம் என்று சொன்னவர்கள் இருக்கிறார்கள். இப்போதும் கூட மாதம் ஓரிருவர், புத்தகம் கிடைப்பதில்லை என கேட்கிறார்கள். எல்லாத் தமிழர்களும் படிக்க வேண்டும் என நான் ஆசைப்பட்ட ஒரு புத்தகம் விரல்விட்டு எண்ணக் கூடிய இந்த நபர்கள் வேண்டும் போது கிடைத்தால் போதும் என்று தான் இப்போதைக்கும் இருக்கிறது. என்னதான் Kindle வடிவில் அதே புத்தகம் ஆங்கிலத்தில் The Science of Stock Market Investment வெளிவந்திருந்தாலும் தமிழில் வாசிக்க ஒன்றிரண்டு பேருக்காவது கிடைக்க வேண்டுமென்கிற சின்ன அவா.

முடிந்த அளவுக்கு இழக்காதேயிடமிருந்து எமோஷனலாக detach ஆக முயற்சித்து வருகிறேன்.

கூடவே என் நண்பனிடம் சொன்னேன்: ”கார்த்திகை நாய்களுக்கும், மார்கழி புத்தகங்களை மார்க்கெட் செய்வோருக்குமாக இருந்தால் உனக்கென்ன?”

2 comments:

eelan said...

Tamil a kindle kidaikkatha?

Chellamuthu Kuppusamy said...

இல்லை நண்பரே.. தமிழில் கிடைப்பதில்லை