Monday, December 02, 2013

ஒரு வித்தியாசமான கூட்டம்

சில பேருடைய எழுத்து நம்மை எழுதச் சொல்லி inspire செய்யும், சிலருடையது provoke செய்யும். வா.மணிகண்டனின் எழுத்து முதலாம் வகை.

தினமும் நாலாயிரம், ஐயாயிரம் பேர் வாசிக்கிற வலைத்தளத்தைக் கட்டமைத்து அவர்களது இடைவிடாத வாசிப்பு ஆர்வத்தைப் பூர்த்தி செய்வது சவாலான காரியம். அதை சிரத்தையோடும், சுவாரசியத்தோடும் செய்துகொண்டிருக்கும் மணிகண்டனின் நிசப்தம் பற்றி யாவரும்.காம் நண்பர்கள் நேற்று மாலை டிஸ்கவரி புக் பேலஸில் ஏற்பாடு செய்த ஒரு கூட்டம். நெல்சன் சேவியர், ’நீயா-நானா’ ஆண்டனி, தமிழச்சி தங்கபாண்டியன் ஆகியோர் விருந்தினர்களாக வந்திருந்தார்கள்.

அவர்களை விட முக்கியமாகச் சொல்ல வேண்டியது பொன்.விமாலா குறித்து. சின்னப் பெண். விகடனில் பணியாற்றுகிறார். பள்ளிப் பருவத்திலேயே பேச்சுப் போட்டியில் கலக்குவாராம். நேற்றுக் கூட கம்பராமாயணத்தின் ஒரு செய்யுளை தாளத்தோடு பாடினார். பல தடைகளைக் கடந்து மீடியாவில் கால் பதித்திருக்கிறார் இந்தப் பெண். தடைகளை என்ன தடைகளை, நெருப்பாற்றில் நீந்திக் கரையேறியிருக்கிறார். சந்தோஷமாக இருந்தது. தனது வெற்றிக்கு மணியின் வலைப்பூ காரணம் என்றார்.

ஒரு மனிதன் தினந்தோறும் எதையாவது எழுத முடியுமென்றால் தன்னால் ஏன் எழுத இயலாது என்ற இன்ஸ்பிரேஷன் காரணமாக தான் கடந்து வந்த நெருக்கடியான காலங்களில் வடித்து வைத்த வரிகளே அவருக்கு விகடனில் வேலையைப் பெற்றுத் தந்திருக்கின்றன. ஒரு ஆன்லைன் எழுத்தாளனுக்கு இதை விடப் பெரிய சந்தோஷம் இருக்க முடியாது. ‘எழுதிக்கிட்டே இரு. உனக்கெல்லாம் எதுக்கு பொண்டாட்டி?’ என வீட்டில் வாங்கிய அத்தனை திட்டுக்கும் அர்த்தம் கிடைத்திருக்கும். தினமும் எழுதுவதைக் காட்டிலும் எழுத்துக்கு சிறப்பான பயிற்சி இருக்க வாய்பில்லை. மணிகண்டனைப் போல ஒருவன் தினமும் தொடர்ச்சியாக எழுதும் போது அந்த எழுத்தே தன்னை மெருகேற்றிக் கொண்டு விடும்.

அதிஷா, விநாயக முருகன் ஆகியோரையும் காண நேர்ந்தது. ஃபேஸ்புக்கில் பரபரப்பைக் கிளப்பும் விநாயக முருகன் நேரில் படு சாந்தமாக இருந்தார். அதிஷாவைக் கண்டு அனைவரும் நடுங்குகிறார்கள். நெல்சன் சேவியர் முதலில் பேசும் போதே கோடி காட்டி விட்டார் - அதிஷாவின் விமர்சனங்கள் சாதகமான, பாதகமான விளைவுகளை உடனடியாக ஏற்படுத்தும் என்று. பாரதிராஜாவின் அன்னக்கொடியை அர்ணாக்கொடி என பகடி பண்ணியதைப் பார்த்து இயக்குனர் இமயம் நான்கு நாள் கதவைச் சாத்திக்கொண்டு குமுறியிருப்பார்.

நெல்சனைப் போல இத்தனை இயல்பாய், இலகுவாய்ப் பேசும் ஆற்றலுள்ள இளைஞன் வெறும் செய்தியாளராக இயங்குவது வருத்தமளிக்கிறது. இளைய தலைமுறை மேடைப் பேச்சாளர்கள் குறைந்து வருவதாக நான் நினைக்கிறேன். மணியின் வலைத்தளம் கொண்டிருக்கும் நல்ல செய்திகளைக் குறிப்பிட்ட பிறகு, அவரது மோடி ஆதரவுப் பதிவு குறித்து நேரடியான விமர்சனத்தை முன் வைத்தார் நெல்சன். இது ஆரோக்கியமான போக்கு மட்டுமல்லாது முக்கியமானதும் கூட. நம்மை அழைத்த ஒரே காரணத்துக்காக பாசிட்டிவான விஷயங்களை மட்டுமே பேசுதல், ஆங்கிலத்தில் சொல்வார்களே, not doing justice to the role என்றாகிவிடும்.

நெல்சனுக்கு முன்பே ஆண்டனி பேசினார். கொங்கு மண்டல மக்களின் வாழ்க்கையைப் பற்றி, பெங்களூர் பற்றி, சாஃப்ட்வேர் துறை பற்றி மாறுபட்ட கோணத்தில் உள்ளிருந்து தரும் தகவல்களுக்காக நிசப்தம் தளம் முக்கியமானது என்றார். தனக்கு மணிகண்டன் நிகழ்காலத் தமிழனின் பிரதிபலிப்பாகத் தெரிவதாகச் சொன்னார். எந்தவொரு சமூக, அரசியல் சட்டகத்துக்குள்ளும் சிக்காமல் இயங்க வேண்டியது அவசியம். தமிழக எல்லைக்கு வெளியே என்ன நடக்கிறது என்பதைக் குறித்தான பதிவும், வாசிப்பும் தமிழ் மக்களுக்கு அவசியம் என்றார்.

தமிழச்சி அக்கா மணிகண்டனின் கவிதைத் தொகுப்பு மீதான உரையை நிகழ்த்தினார். நிறையக் கவிதைகளையும், கவிஞர்களையும் மேற்கோள் காட்டினார். ஏதோ சில வரிகளை மாற்றி வாசித்து விட்டார். அதனால், மன்னிச்சுக்குங்க திரும்ப வாசிக்கிறேன் என்று திரும்ப வாசித்தார். நமக்கு எல்லாமே ஒரு மாதிரித்தான் இருந்தது. எனது கவிதைகள் இன்னும் ’நிலா நிலா ஓடி வா’வைத் தாண்டவில்லை. பனை மரத்துல பாதி… தென்னை மரத்துல தேதி… இப்படித்தான் கவிதை வருகிறது. பல தேசத்துக்கு கவிஞர்களை மேற்கோள் காட்டுவதை அதிஷா செம்மையாக கிண்டல் அடிப்பார் போல. பேச்சைத் துவக்கும் போதே ’ஓட்டீராதப்பா’ என்கிற ரீதியில் சொல்லி விட்டுத்தான் துவக்கினார் தமிழச்சி.

கடைசியில் மணிகண்டன் ஏற்புரை வழங்கினார். தேர்ந்த பேச்சாளனின் பேச்சல்ல. எழுத்தாளன் பேச்சை ஆள வேண்டும் என்ற அவசியம் இல்லை. இயல்பான நடையில் எனக்கென்னவோ பாக்கியராஜ் பேசுகிற மாதிரி இருந்தது. மனுஷ்யபுத்திரன் தன்னுடைய குரு என்றார்.

சின்னஞ்சிறு கவிதைப் புத்தகம் ஒன்றை மட்டுமே வெளியிட்டிருக்கும் ஒரு இளைஞனைக் காண நிறையப் பேர் வந்திருந்தனர். மாலனின் சகோதரர் வந்திருந்தார். ஐம்பது வயதைக் கடந்த பலர் வந்திருந்தனர். வெறும் இணையத்தில் மட்டுமே தன்னை நிரூபித்திக்கொண்டிருக்கும் ஒருவனுக்கு இவ்வளவு பெரிய அங்கீகாரத்தைக் காண்பது மகிழ்ச்சியாகவே இருந்தது.

பெங்களூரிலிருந்து இந்த நிகழ்வுக்காக சென்னை வந்திருக்கும் மணிகண்டன் தங்குவதற்கு யாரோ ஒரு டாக்டர் ஐந்து நட்சத்திர ஓட்டலில் ரூம் போட்டுத் தந்தாராம். சுமார் ஐயாயிரம் வாடகை இருக்கும். அந்த டாக்டர் ஏதோ அன்பில் செய்திருக்கிறார். நல்ல விஷயம். ஆனால் இதைப் பார்த்து இதே மாதிரி இன்னும் சிலர் செய்வதற்கான ஆபத்து இருக்கிறது. என்ன ஆபத்து என்கிறீர்களா? சிந்தனையும், கற்பனையும் ஊற வேண்டிய மண்டையின் கனத்தை ஏற்றி விடும் ஆப்பு-பத்து.

இந்த இடத்தின் பொன்.விமலா போல நானும் ஒன்றைக் குறிப்பிட்டாக வேண்டும். எனக்கு 2006 இல் வலைப்பதிவுகளை அறிமுகப்படுத்தியதும், அதில் எழுதுமாறு தூண்டியதும் மணிகண்டன். தமிழ் இலக்கிய உலகில் எனக்குப் பரிட்சயமாக இருக்கும் ஒரே மனிதரான மனுஷ்யபுத்திரனை எனக்கு அறிமுகப்படுத்தியதும் அவரே. இதை முன்பே ஒரு இடத்தில் குறிப்பிட்டிருக்கிறேன். முருகேஷ் பாபு, பத்ரி, நாகப்பன், மனுஷ்யபுத்திரன் ஆகியோடு சேர்த்து மணிகண்டனையும் இந்தக் கணத்தில் நினைத்துப் பார்க்கிறேன்.

11 comments:

Anonymous said...

நல்ல விவரிப்பு. தங்களை நேற்று சந்தித்ததில் மகிழ்ச்சி.
தங்களுடைய 'பிரபாகரன்' புத்தகம் நான் படித்திருக்கிறேன்.
அன்புடன்
புகழ்

சிங். செயகுமார். said...

மணி என் நண்பர் என்றெண்ணும் போது மனதில் ஆயிரம் சந்தோஷங்கள்.

manjoorraja said...

நீங்களும் நன்றாக எழுதுபவர் தான் என்பதை இங்கு குறிப்பிட விரும்புகிறேன்.

Chellappa Yagyaswamy said...

தங்கள் விமர்சனம் மிகவும் நேர்மையானது. Keep it up!

vel kannan said...

நன்றி நண்பரே உங்களை சந்தித்ததில் மகிழ்வே.

இராஜராஜேஸ்வரி said...

சிறப்பான பகிர்வுகள்..

Anonymous said...

Nice review...
Bt
First e andha aaluku yegapatta manda ganam....

Ipo aha oho nu vera solliteengala

Innum kailaye pidika mudiyadhu...

Ayyo ayyo.....

Anonymous said...

வாழ்க வளமுடன்.. வா. மணிகண்டனின் நிசப்தம் அனைவரையும் ஈர்த்தது, தங்களின் வர்ணணனையும் மிகஅருமை.


சிவபார்க்கவி
http://sivaparkavi.wordpress.com/

Sathish shantha kumar said...

Thanks...want to see much more and continuing from u all.
For me its a great pleasure to see all thro nisaptham...


All is well
Sathish shantha kumar

Sathish shantha kumar said...

Thanks...for all of u.
Felt happy to see u all...
Also for me to know about u all,once again thanks and very good review.

Reagrds
Sathish shantha kumar

Anonymous said...

Thanks for your marvelous posting! I quite enjoyed reading it, you can be a great
author. I will always bookmark your blog and will come back
in the foreseeable future. I want to encourage you continue your great writing, have a nice
day!