Saturday, December 21, 2013

ஆண்டு விழா அவஸ்தைகள்

நேரடியாக மேட்டருக்கு வந்து விடுகிறேன்.

நேற்று என் மகள் படிக்கும் பள்ளியில் ஆண்டு விழா. கண்டிப்பாக லீவ் போட்டாக வேண்டும் என்று சொல்லியிருந்தாள். லீவ் போட முடியாத அளவுக்கு ஆபீஸில் ஒரு வேலை. அப்படி என்ன வேலை என்கிறீர்களா? டீம் அவுட்டிக் போயிருந்தோம். அலுவலக வேலை என்றால் கூட வேறு யாரையாவது செய்யச் சொல்லி விடலாம். அல்லது வீட்டிலிருந்தே கூட ஒப்பேற்றி விடலாம். ஆனால் அவுட்டிங்கைத் தவிர்க்க முடியாது. இத்தனை காசு செலவழித்து கம்பெனி நடத்துகிறது, நீங்களே வராட்டி எப்படி என்பார்கள். Fun at work கோட்பாடு வேலையின் அழுத்தத்தைக் குறைப்பதை விட கூடுதலான அழுத்தங்களை உருவாக்குவதை சமீப காலங்களில் வெகுவாகக் காண முடிகிறது. இதைப் பற்றி தனியாகப் பேசலாம்.

மதிய உணவை முடித்துக்கொண்டு மகாபலிபுரத்திலிருந்து கிளம்பி விட்டேன். மற்றவர்கள் ஏழு மணிக்குத்தான் வந்தார்களாம். ஸ்கூலுக்கு இரண்டரைக்கு குழந்தையை மேக்கப் போட்டு அனுப்ப வேண்டும். நிகழ்ச்சிகள் நாலு மணிக்கு என முன் கூட்டியே தெரிவித்திருந்தார்கள். இரண்டரைக்கே கணக்கில்லாமல் கார்கள் நின்றன. வெளியில் இருந்து வந்தவர்களாக இருக்க வேண்டும். எங்களுக்கு வீடும் ஸ்கூலும் ஒரே வளாகத்தினுள் அமைந்துள்ளன. அதனால் நடந்தே டிராப் செய்து விடலாம். நடந்தே பிக்கப் செய்து கொள்ளலாம். 02:30 க்கு டிராப் செய்து விட்டு, மறுபடியும் 03:30 க்கே போனேன். அரை மணி நேரம் முன்னதாகவே போனால் இடம் பிடிக்க இயலுமென அப்பாவித்தனமாக நினைத்திருக்கிறேன்.

வெட்ட வெளியில் மேடை அமைத்து அதற்கு முன் இருக்கைகளைப் போட்டிருந்தார்கள். கிட்டத்தட்ட 40 முப்பது வரிசைகள் தள்ளியே இடம் கிடைத்தது. நான் மட்டும் அப்படியே அமர்ந்திருக்க எனக்குப் பின்னர் வந்தவர்கள் நடுவில் காலியாக விடப்பட்டிருந்த நடைபாதையில் நாற்காலிகளை இட்டு நிரப்பி தம்மை ஸ்மார்ட்டாக நிரூபித்துக் கொண்டிருந்தனர். அரை மணி நேரம் கழித்தும் நானே கடைசி வரிசையில் உட்கார்ந்திருந்தேன். நிகழ்ச்சிகள் ஆரம்பிப்பதற்குள் கூட்டம் மேலும் கூடி விட்டது.

முதல் நிகழ்வாக மேடையில் சுமார் 30 குழந்தைகளை அமர வைத்து பாடச் செய்தனர். இது என்ன லாஜிக்கோ தெரியவில்லை. பள்ளியில் படிக்கும் அத்தனை பேரும் ஏதோ ஒரு விஷயத்தில் பங்கேற்றுச் சிறப்பிக்க வேண்டுமென எப்படி முடிவு செய்கிறார்களோ! வருடம் அரை இலட்சம் வாங்குகிறவர்கள் இதையாவது செய்கிறார்களே என பெற்றோர் ஆசுவாசப்படுத்திக்கொள்வதற்காக இருக்கும். ஒவ்வொரு குழந்தைக்கும் நான்கைந்து பெரியவர்கள் வந்திருந்தார்கள். சிலர் மார்கழி மாத இசைக் கச்சேரியில் பாடுகிற மாதிரி பட்டுப் புடவையில் ஜொலித்தனர். கப்பலில் வேலை செய்கிற ஒரு நண்பர் மட்டும் பெர்முடாஸ் போட்டிருந்ததைக் கண்டேன்.

மேடையில் முப்பது சிறுவர்கள் கச்சேரியை ஆரம்பிக்க, கீழே நூறு பேர் எழுந்து நின்று படம் பிடிக்க ஆரம்பித்தனர். சீப்பான காமிரா, காஸ்ட்லியானது, வகைவகையான ஸ்மார்ட் ஃபோன்ஸ் என யாவும் செயலில் இறங்கின. என்னிடம் சுமாரான ஒரு கேமிரா இருந்தது. உட்கார்ந்த இடத்திலிருந்து மேடை நோக்கி ஜூம் பண்ணிப் பார்த்தேன். நிறைய பேன் பார்க்காத பொம்பள மண்டைகளே தெரிந்தன. குழந்தை மேடை ஏறும் போது துல்லியமாகப் படம் பிடித்தாக வேண்டுமென எனக்கு கட்டளை விதிக்கப்பட்டிருந்ததை நினைத்து ஒரு நிமிடம் கலங்கினேன். நடைபாதையில் நாற்காலிகள் நிரம்பியதைக் கண்டு ஒரு குறுந்தாடித் தகப்பன், ’எஜுகேட்டேட் இடியட்ஸ்’ எனத் திட்டியபடி அவர்களை முண்டியடித்து கொண்டு முன்னேறினார்.

படித்தவன் பாலிட்டிக்ஸுக்கு வந்தால் பாரதம் முன்னேறி விடும் என பிரச்சாரம் செய்யும் ஆட்கள் எல்லாம் இந்த மாதிரி ஆண்டு விழாக்களுக்கு ஒரு முறையாவது வந்து பார்க்க வேண்டும். அங்கிருந்த அத்தனை பேரும் தன்னைத் தவிர மற்றவர்கள் அத்தனை பேரும் நாகரீகம் பேண வேண்டுமெனவும், தனது சக படித்தவனைத் திட்டிய வண்ணமும் கேமிராவைத் தலைக்கு மேல் தூக்கி காட்சிகளைக் கிரகிக்க பிரயத்தனப்பட்டனர். இன்னும் இரண்டு புரோகிராம் கழித்த பிறகே என் மகளுடையது வரும். அதற்குள் போட்டோ பிடிக்க இடம் பிடிக்க வேண்டும். இல்லையென்றால் நாளை முதல் சாப்பாட்டுக்கு நல்ல ஓட்டல் பிடிக்க வேண்டும். அவள் புரோகிராம் ஆரம்பிக்கும் போது எழுந்து நின்றால் ஒரு ஆணியும் புடுங்க முடியாது. அதனால் இப்போதே பொசிஷனுக்கு வருதல் அவசியமாகையால் எழுந்தேன்.

நான் செல்வதற்குத் தோதாக இருந்த ஒரே திசை பின் புறம் மட்டுமே. எப்படியும் மேடை ஐநூறு அடியாவது இருக்கும். என்னிடம் இருக்கும் கேமிராவில் எதையும் எடுக்க முடியாது. அடுத்த வருட ஆண்டு விழாவிற்கும் ஒன்றரை இலட்ச ரூபாய் கேமிரா ஒன்று வாங்கி, பக்கத்து பிளாக் மொட்டை மாடியில் இருந்து ஜூம் பண்ணி ஷூட் செய்து விட வேண்டும். ஆனால் இப்போது என்ன செய்வதென்று தெரியவில்லை. நான் குழப்பத்தில் அலை மோதிக்கொண்டிருக்கையில் வானவில் டான்ஸ் அறிவித்தார்கள். வானவில்லின் ஏழு வண்ணத்திலும் எட்டுப் பேர் என 56 பேர் மேடையில் வந்து சேர்ந்தனர். அதில் என் மகள் யாரென்று அடையாளம் காணும் முயற்சியில் வீடியோ எடுக்கும் வேலை பாதிக்குப் பிறகே நினைவு வந்தது. அப்படியும் விடாமல் எடுத்தேன். சத்தியமாக நான் எடுத்த வீடியோவில் என் மகளை யூகிக்கலாமே தவிர அடையாளம் காண முடியாது.

வீட்டுக்கு வந்ததும் வீடியோவைக் காட்டச் சொன்னார்கள். வேண்டாமென்றேன். ஏனென்றார்கள். ”அம்மா உணவகத்தில போய் டிஃபன் வாங்கிட்டு வரச்சொல்லு. வாங்கியாறேன். இந்த மாதிரி ஃபங்கஷன்ல வீடியோ எடுக்கற வேலை மட்டும் இனிமே சொல்லாதே” கோபம் வந்த மாதிரி நடித்துத்தானே எதிர்வரும் கோபத்தை சமாளிக்க வேண்டும்! அதற்குப் பிறகு என்ன நடந்திருக்குமென நீங்களே யூகிக்கலாம்.

இதற்கு என்ன தீர்வு இருக்க முடியும்? அந்தத் தீர்வை ஆம்ஸ்டர்டாம் நகரின் ரெட் லைட் ஏரியாவில் இருந்து இறக்குமதி செய்து விடலாம். பிரின்சிபாலுக்கு ஒரு கடிதம் எழுத நினைத்திருக்கிறேன். எப்படியும் அவர்களே ஆள் வைத்து வீடியோ எடுக்கிறார்கள். அதையே வேண்டுவோருக்கு விற்கலாம். மற்றவர்களுக்கு ”நோ போட்டோ, நோ வீடியோ” என கண்டிப்பாகச் சொல்லி விட வேண்டும். ஆம்ஸ்டர்டாமில் லைவ் ஷோ நடக்கும் போது அறிவிப்பார்கள் பார்த்திருக்கிறேன்: “இண்டியன்ஸ், சைனீஸ்.. பிளீஸ்..நோ வீடியோஸ்… பிளீஸ் கீப் யுவர் கேமிராஸ் இன்சைட்”

10 comments:

raja said...

ennalae vara mudiyalai... aana, neenga ezhuthi irukkarthu padikkum pothu naaan neraa iruntha mathiri irukkuthu.. thanks

Anonymous said...

Chellamthu,

Idu maadhri nalla tamizil ezudhiyathai padipatharkaga vavathu, Idu pool vizakkal kasappana anubavangalum niraya nadakattum ena aasai padugiraen..... Nanri... NANDAGOPAL.

ஜீவன் சுப்பு said...

//மேடையில் முப்பது சிறுவர்கள் கச்சேரியை ஆரம்பிக்க, கீழே நூறு பேர் எழுந்து நின்று படம் பிடிக்க ஆரம்பித்தனர்.//

:)

velmuruganm said...

The suggested commercial tactics is happening in many schools. They would sell a cd for 500+ INR.

Raj S said...

Sabash anbarae ! Nalla sonna po !

Raj S said...

Sabash anbarae ! Nalla sonna po !

semmal G said...

Ippove kannai kattude!

அரவிந்தன் said...

In my daughter's school in Bangalore photos by parents are strictly not allowed.

One photo they will give free and CV they will charge Rs 150/

Chellamuthu Kuppusamy said...

நண்பர்கள் அனைவருக்கும் நன்றிகள்..

Anonymous said...

Looks like it was your turn with the camera in this year's (2016) annual day program at BVM. I saw you standing with the camera for a full 30 mins blocking view for others.

~Mukundhan