Monday, December 23, 2013

சாரு நிவேதிதாவும், இலக்கியச் சண்டியர்களும்

சமிபத்தில் என ஒரு பதிவு போட்டிருந்தேன். அதற்கு ஒருவர் “உனக்கு வந்தால் ரத்தம். சாரு நிவேதிதாவுக்கு வந்தால் தக்காளிச் சட்னியா” என பெயரில்லாமல் கமெண்ட் போட்டிருந்தார். பரபரப்பைக் கிளப்பி மார்க்கெட்டிங் செய்வதில் சாருவுக்கு நிகர் சாருவே. இப்போதும் விநாயக முருகன் விஷயத்தில் தெரிந்தோ தெரியாமலோ உருவான ஒரு பரபரப்பில் முக்கியப் பாத்திரம் ஏற்றிருக்கிறார்.

கமெண்ட் போட்ட சாருவின் ரசிகருக்கும், பரபரப்புக்கும் தனியே பதில் சொல்லலாம். அதற்கு முன் நாம் ஒரு insensitive ஆன சமூகத்தில் வாழ்வதை ஒப்புக்கொண்டாக வேண்டும். முன்னெப்போதையும் விட நுகர்வுத்தன்மை பெருகியிருக்கிறது. பொறுமையும் அதே அளவுக்குச் சுருங்கியிருக்கிறது. Education has replaced ignorance with arrogance. ”சண்டைன்னு வந்துட்டா நாயென்னுங்க அப்பறம் மனுசனென்னுங்க” என அமைதிப்படையில் சத்யராஜ் சொல்வது போலிருக்கிறது நம்மைப் போன்ற படித்தவர்களின் மனப்போக்கு.

தனக்கு விளம்பரம் வேண்டும், தன்னைப் பற்றி நாலு பேர் பேச வேண்டும், தன்னை ஊரே கொண்டாட வேண்டும் என்றெல்லாம் நினைக்கும் நாம் மற்றவன் ஓரளவுக்கு பேசப்படும் போது தாங்கிக்கொள்ள முடிவதில்லை. வருடத்து பத்துப் புத்தகங்கள் எழுதி விட்டு உலகத்தில் உள்ள எட்டுக் கோடி தமிழர்களில் எட்டு இலட்சம் பேராவது அதை வாங்கி வாசித்து விட வேண்டும் என நினைக்கும் எழுத்தாளர்கள் தனது சக எழுத்தாளர்கள் எழுதியதில் எத்தனை புத்தகங்களை வாங்குகிறார்கள் என்பது கேட்கப்படாத கேள்வியாகவே இருக்கிறது.

“கவிதை நூல் ஒன்றுக்கான காத்திரமான விமர்சனம் ஒன்றை எழுதிக் காத்திருக்கிறேன். யாராவது இலவசப் பிரதி கொடுத்தால் தேவலை” என்ற ரீதியில் ஒரு நண்பர் ஃபேஸ்புக்கில் போட்டிருந்தார். ஜோ டி குரூஸ் சாகித்ய அகாடமி விருது பெற்ற போது நான் கூட வேடிக்கையாக கீழ்க்கண்டவாறு இடுகையிட்டிருந்தேன்.

//யாரோ சாகித்ய அகாடமி வாங்கியிருக்காங்களாம்.. பேரும், நம்பரும் யார் கிட்டையாவது வாங்கி இன்னிக்கே ஃபோன் பண்ணி சொல்லிரணும்:

பாஸ் .. உங்க படைப்பை படிச்சிருக்கேன்.. ரொம்ப சூப்பர்.. எனக்கு அப்பவே தெரியும்
//

இங்கே எழுத்தாளர்களை விட வாசகர்களே அதிகம் வாசிக்கிறார்கள். எழுதுகிறவர்கள் ஒரு சின்ன வட்டம். மேலே போனவன் கீழ் இருப்பவனை முடிந்த வரைக்கும் மிதித்துக்கொண்டே இருப்பதும், கீழிருப்பவன் மேலிருப்பவனைக் கீழே இழுப்பதும், ஆனால் அவர்கள் இருவருமே அதை வெளிக்காட்டாமல் சிரித்துக்கொண்டே நடிப்பதுமாக எழுத்தாளர்களின் உலகம் இருப்பதாகக் கணிக்கிறேன். ஐந்து தமிழர்கள் கூடியிருக்கும் இடத்தில் ஆறு குழுக்கள் இருக்கும் என நான் வேடிக்கையாகச் சொல்வேன். ஐந்து எழுத்தாளர்கள் இருக்கும் இடத்தில் ஐநூறு அரசியல் இருக்கும். ஐம்பது பேரும் தலா 49 குழிகளைத் தோண்டியவண்ணமேயிருப்பார்கள். தமிழ் எழுதப்படிக்கத் தெரிந்த பாதிப்பேர் சிறுகதை எழுதுகிறார்கள் என்று சுஜாதா ஒரு முறை குறிப்பிட்டார். “இருபத்தைந்து வருடமாக கனடாவில் வசிக்கிறாராம். இன்னும் ஒரு கவிதை நூல் கூட வெளியிடவில்லை” என அ.முத்துலிங்கம் எங்கோ சொன்னதாக நினைவு.

பிரபலமானவர்கள் ஒரே நாளில் அந்த இடத்தை அடைந்து விடவில்லை. அதற்கான பல ஆண்டு உழைப்பும், தியாகமும் மங்கலான பின்னணியில் ஒளிந்திருக்கும். குடும்பத்திலும், வேலையிலும் சின்னச் சின்ன இழப்புகளைக் கடந்து வந்திருப்பார்கள். ஒருவனைப் பிடிக்கிறதோ இல்லையோ அவனது உழைப்பை மதித்தாக வேண்டும். மதிப்புக்குரியவன் ஆண்டாண்டு காலமாகச் சேமித்துச் சேர்த்த ’பிரபலம்’ தொப்பியை இன்னொருத்தன் மார்க்கெட்டிங் மூலம் அபகரிப்பதை ஜீரணிக்க முடியாமல் போவது இயல்பே. ஆனாலும் புதியவர்கள் வந்து கொண்டே இருக்கிறார்கள். இதனால் இவர்களுக்குக் கிடைப்பது அதிகபட்சம் ஐந்து நிமிடப் புகழ். உள்ளார்ந்த ஆத்மார்த்தத் திருப்திக்காக எழுதிக்கொண்டிருக்கிறார்கள்.

அதை நாலு பேரிடம் கொண்டு செல்ல மார்க்கெட்டிங் செய்வது இன்றியமையாததாகிறது. யாருக்குத்தான் அந்தக் கட்டாயம் இல்லை? கல்யாணச் சந்தையில் போட்டோ பிடித்துப் போடுவது முதல், அலுவலக அப்ரைசலில் நான் என்னவெல்லாம் செய்தேன் தெரியுமா என்று தன்னிலை விளக்கம் கொடுப்பது உள்ளிட எல்லாமே மார்க்கெட்டிங்கில் அடங்கும். என்னைப் பொருத்த மட்டில் என் புத்தகங்களை யாராவது வாசித்தால் போதும் என்ற நிலைப்பாடு மட்டுமே. அச்சில் இருக்கும் புத்தகங்களின் மீது எவ்விதமான கட்டுப்பாடும் நமக்குக் கிடையாது. ஆனால் Kindle நூல்கள் மூன்று மாதத்திற்கு ஐந்து நாள் இலவசமாகக் கிடைக்கின்றன. அது போக மற்ற சமயத்தில் பணம் கொடுத்தே வாங்கினாலும், அவர்கள் அமேசானில் இரண்டு வரிகள் ரிவியூ எழுதினால் புத்தகம் வாங்கச் செலவழித்த பணத்தைத் திருப்பித் தருவதென்ற நிலைப்பாடு கொண்டிருக்கிறேன்.

மார்க்கெடிங் செய்வதால் மட்டுமே ஒரு விஷயம் ஜெயித்து விடும் என்பது மாயை. பரபரப்பு மட்டுமே ஒரு விஷயத்தின் வெற்றியைத் தீர்மானிக்கும் என்றால், இப்போது பெயர் கூட மறந்து போன அந்த அந்த நஸ்ரியா படம் கரகாட்டக்காரனை விட அதிகமாக ஓடியிருக்க வேண்டும். அதையும் தாண்டி பரபரப்பினால் மட்டுமே ஒருத்தன் பவர் ஸ்டார் ஆகும் போது அவன் பவர் ஸ்டார்தானே ஒழிய சூப்பர் ஸ்டார் இல்லை.

அதற்காக எந்திரன்களுக்கு விளம்பரம் செய்யாமலா விட்டார்கள்? ஒரு படைப்பாளி தன் படைப்பை விற்பதற்கு என்னென்ன செலவழிக்க வேண்டியிருக்கிறது? கொஞ்சம் நேரம், நிறைய மன அமைதி.. பிறகு சுயமரியாதை..அந்தத் துணிச்சல் இல்லாதவர்கள் ஆட்டத்தில் கலந்து கொள்ளாமல் இருப்பது நல்லது.

கல்யாண வீட்டில் மாப்பிள்ளையாகவும், இழவு வீட்டில் பிணமாகவும் தான் மட்டுமே இருக்க வேண்டுமென அத்தனை பேரும் நினைத்தால் இன்றிரவே உலகம் இடுகாடாகி விடும். 

2 comments:

Chellappa Yagyaswamy said...

சூடான, ஆனால் யதார்த்தமான பதிவு. வாழ்த்துக்கள்!

Chellamuthu Kuppusamy said...

நன்றிகள் செல்லப்பா..