Friday, December 27, 2013

கொடுமணல் தொல்லியல் களம்

தனுஷ்கோடியையும், பூம்புகாரையும் கடல் தின்று விட்டது. உலகலாவிய பண்டைய நாகரீகங்களில் பூம்புகாருக்கு தனிப்பெரும் இடமுண்டு. காவிரி கடலில் புகும் இந்தப் பூம்புகாரைப் பற்றி நிறையவே கேள்விப்பட்டிருக்கிறோம். மைசூர் மகாராஜா வம்சத்தின் மீதான் சாபத்தினால் மண்மேடாகிப் போன தலக்காட்டின் பண்டைய வரலாறு பற்றிக் கூட இப்போது பலர் பேசுகிறார்கள். ஆதிச்சநல்லூரையும், கொடுமணலையும் குறித்து சமீபத்தில் செய்திகள் வந்து கொண்டிருக்கின்றன. இதில் ஆதிச்சநல்லூர் பரவலாக அறியப்பட்ட ஒன்று. என் நண்பர் ஒருவர் கூட ஆதிச்சநல்லூர் ஆதாரங்களை வைத்து உலகின் முதல் மொழி தமிழ் மொழியே என நிறுவ முயன்று வருகிறார். (இந்த வரியை வாசிக்கும் போது உங்களுக்கு சிரிப்பு வந்தால் அதற்கு நான் பொறுப்பல்ல)

ஆனால் கொடுமணல் அவ்வளவாக அறியப்படாத ஒரு ஊர். இன்றைய ஆனந்த விகடன் இதழில் கூட பாண்டிச்சேரி பல்கலைக்கழகத்தின் வரலாற்றுத் துறைப் பேராசிரியர் ராஜனை 2013 இன் டாப்-10 மனிதர்களில் ஒருவராக அடையாளம் காட்டி விட்டு, ” 2013-ல் சென்னிமலை அருகே கொடுமணல் கிராமத்தில் பேராசிரியர் ராஜனும், அவரது ஆய்வுக் குழுவினரும் நடத்திய மற்றோர் அகழாய்வில், 2,300 ஆண்டுகளுக்கு முன்னரே வணிக நகரமாக இருந்த கொடுமணலில், இரும்பு, எஃகு உருக்கு ஆலை மற்றும் கல்மணிகள் செய்யும் ஆலைகள் இயங்கியிருப்பது தெரிய வந்தது” என்ற செய்தியைக் கொடுத்திருக்கிறார்கள்.

காங்கேயத்திற்கும், சென்னிமலைக்கும் நடுவே கிழக்கு நோக்கி நொய்யல் நதி ஓடிய காலமொன்றிருந்தது. இப்போது திருப்பூர் சாயப்பட்டறையின் புண்ணியத்தில் அது நாகமாகப் போய் விட்டது. இப்போது என்றால் கடந்த முப்பது ஆண்டுகளாகவே. ஆனால் தொழிலை வைத்து பணக்காரர் ஆன பிசினஸ்மேன்கள் தீரன் சின்னமலையின் பெயரைச் சொல்லி அரசியல் நடத்திக்கொண்டு மண்ணை நம்பியிருக்கும் குடியானவக் கவுண்டன்களை முட்டாளாக்கிக் கொண்டிருக்கிறார்கள். 

காங்கேயத்திற்கும், சென்னிமலைக்கும் மேற்கே ஒரத்துப்பாளையும் நீர்த்தேக்கத்திற்குப் பக்கத்தில் ஆற்றின் வடக்குப் பகுதியில் அமைந்திருக்கும் கிராமமே கொடுமணல். நீர்த்தேக்கம் என்ற பெயர் கொண்டிருந்தாலும் அங்கே செல்வதானால் வாட்டர் பாட்டில் வாங்கிச் சென்றாக வேண்டும்.

அமராவதிக் கரையில் சேர நாட்டுத் தலைநகராக கரூர் (வஞ்சி மாநகர்) விளங்கினாலும், நொய்யலாற்றங்கரையில் கொடுமணல் சேர நாட்டின் முக்கியமான தொழில் நகரமாக இருந்திருக்கிறது. பண்டையை சங்க நூல்களில் அதைப் பற்றிய குறிப்புகள் இருப்பதாகவும் சொல்கிறார்கள். கொடுமணலைக் கண்டறிந்ததில் புலவர்.ராசு அவர்களுக்கு பெரும் பங்குண்டு.

கொடுமணல் குறித்து கலைஞர் கூட ஒரு அறிக்கையை வெளியிட்டிருந்தார். இதிலும் ஏகப்பட்ட அரசியல் இருக்கும் போல.
மே 24 மாலை மலர்:

// ஈரோடு மாவட்டத்தில், சென்னிமலைக்கு மேற்கே 15 கிலோ மீட்டர் தொலைவில் நொய்யல் ஆற்றின் வடகரையில் உள்ளதுதான் கொடுமணல் என்ற சிறப்புமிக்க ஊர். அங்கே 50 ஏக்கர் பரப்பில் 9 அகழாய்வு குழிகளும், 100 ஏக்கர் பரப்பிலான ஈமக்காட்டில் ஒரு ஈமச் சின்னமும் அகழாய்வு செய்யப்பட்டன. இதுவரை மேற்கொள்ளப்பட்ட அகழாய்வுகள் மூலம், அங்கே விலை உயர்ந்த கற்களைக் கொண்டு உருவாக்கப்பட்ட கல்மணிகள் செய்யும் தொழிற்கூடமும், செம்பு, இரும்பு மற்றும் உருக்கு உருக்கப்பட்டதற்கான தொழிற்கூடங்களும் கண்டு அறியப்பட்டுள்ளன.

கொடுமணலில் உருவாக்கப்பட்ட அணிகலன்களைப் பெறுவதற்காக இந்தியாவின் பல்வேறு பகுதிகளில் இருந்து வணிகர்கள் எல்லாம் வந்துள்ளார்கள். கொடு மணலில் கிடைத்த மட்பாண்டம் கி.மு. 3ஆம் நூற்றாண்டின் முற்பகுதியைச் சார்ந்ததாகும். அங்கே கிடைத்துள்ள மட்பாண்டங்கள் தமிழர்கள் 2,500 ஆண்டுகளுக்கு முன், எழுத்தறிவு பெற்று, மிகச் சிறந்த சமூகமாக விளங்கியிருக்க வேண்டும் என்பதை உறுதிபடுத்துகின்றதாம்.

இந்தக் கொடுமணல் அகழாய்வு களத்தைப் பாதுகாக்கப்பட்ட சின்னமாக அறிவிக்க வேண்டுமென்று கோரிக்கைகள் எழுந்துள்ள சூழ்நிலையில், அந்த நிலத்தைக் கையகப்படுத்துவதற்கு தொல்லியல் துறை தயாராக இல்லை என்று செய்தி வந்துள்ளது. 

தனது பெயரை வெளியிட விரும்பாத தொல்லியல் துறை அதிகாரி ஒருவர், “தனிப்பட்ட குழுக்களோ, அரசு சார்ந்த நிறுவனங்களோ அகழாய்வு செய்யும்போது, அதில் கிடைக்கும் அரிய பொருள்கள் மட்டுமே கையகப்படுத்தப்படும். அப்பொருள் எங்கு கண்டுபிடிக்கப்பட்டதோ, அந்த இடத்திற்கு அருகில் உள்ள, அருங்காட்சியகத்தில் வைக்கப்படும். மற்றபடி நிலத்தை கையகப்படுத்த முடியாது. அதற்கு பல்வேறு நடைமுறைச் சிக்கல்கள் உள்ளன” என்று கூறியிருக்கிறார்.

தொல்லியல் அறிஞர் ஐராவதம் மகாதேவன், “கொடுமணலில் கண்டறியப்பட்ட தாமிர தொழிற்கூடம், தமிழக வரலாற்றில் மிகவும் முக்கியமானது. அங்கு காணப்படும், பல்வேறு விதமான அணிகலன்கள், அதை உறுதி செய்கின்றன. தமிழகத்தில் நடந்த அகழாய்வுகளில், கொடுமணல் அகழாய்வு, வரலாற்றுச் சிறப்பு மிக்க பெருமை வாய்ந்தது. எனவே தமிழக அரசு, கொடுமணல் தொல்லியல் களத்தை பாரம்பரியச் சின்னமாக அறிவிக்க வேண்டும். அந்த நிலத்தைக் கையகப்படுத்தி, பாதுகாக்கப்படும் இடமாக அறிவிக்க வேண்டும்” என்றெல்லாம் கேட்டுக் கொண்டிருக்கிறார்.

சங்க இலக்கியமான பதிற்றுப் பத்தில், “கொடுமணம்பட்ட....நன்கலம்” எனக் கபிலரும், “கொடுமணம்பட்ட வினைமான்” என அரிசில் கிழாரும் பாடியுள்ளனர். தொன்மைமிக்க தமிழர்களின் வாழ்க்கை முறையிலும், நாகரிகம் மற்றும் பண்பாட்டிலும் மிகுந்த ஈடுபாடும் ஆராய்ச்சி அறிவும் கொண்ட அவரது வேண்டுகோளையேற்று கொடுமணல் அகழாய்வுக் களத்தை தொல்லியல் துறை சார்பில் ஏற்று, அதனைப் பாதுகாப்பதற்கான முயற்சியில் ஈடுபட மத்திய, மாநில அரசுகள் முன்வர வேண்டும். 

கோவையில் 27-6-2010 அன்று உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாட்டில் நான் ஆற்றிய நிறைவுரையில், “கி.பி. இரண்டு, மூன்றாம் நூற்றாண்டுகளில் ரோமர்கள் தமிழர்களோடு நெருங்கிய வாணிகத் தொடர்பு கொண்டிருந்தனர். பழைய ரோம் நாணயங்கள் தமிழ் நாட்டுக் கடற்கரைகளில் ஏராளமாகக் கண்டு எடுக்கப்பட்டுள்ளன. தமிழ்நாட்டின் மற்ற இடங்களில் கிடைத்தவற்றைவிட, ரோமானிய நாணயங்கள் இந்தக் கொங்கு நாட்டில்தான் மிகுதியாகக் கிடைத்துள்ளன” என்று குறிப்பிட்டதை மேலும் மெய்ப்பிக்கும் வகையில், பழம்பெருமைமிக்க கொங்குநாட்டின் கொடுமணல் அகழாய்வின் போது இந்த நாணயங்கள் கண்டெடுக்கப்பட்டிருப்பதைக் காணலாம்.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.//

No comments: