Monday, December 30, 2013

ஊருக்குப் போயிருந்தேன்

ஊருக்குப் போய் நாலு மாதமாகிறது. இப்போதெல்லாம் முன் போல நினைத்த மாத்திரத்தில் கிளம்பிப் போக முடிவதில்லை. வயதாகிறது. முதுகு வலிக்கிறது. கையைக் காட்டி நிற்கிற பஸ்ஸில் முண்டியடித்து ஏறிப் போகுமளவுக்கு உடம்பில் வலுவுமில்லை. இரண்டு மாதம் முன்பே திட்டமிட்டெல்லாம் போக முடிவதுமில்லை.

இந்த வாரம் எப்படியாவது விசிட் அடித்தாக வேண்டுமென உறுதியாக இருந்தேன். அப்பா, அம்மா கூட ஓரிரு நாட்கள் சென்னையில் வந்து தங்கி விட்டுப் போகலாம். ஆனால் அவர்களால் பால் பீச்சும் மாட்டையும், பஞ்சாரத்துக் கோழியையும் விட்டு வர முடிவதில்லை போல. அவர்களுக்கும் பார்க்க வேண்டும் போலிருக்கும். நமக்கும் அந்த ஆத்தங்கரையைப் பார்த்து விட்டு வந்தால் பேட்டரி ரீசார்ஜ் ஆகி விடும்.

ஊருக்குப் போனால் அங்கு காதில் விழும் உரையாடல்களில் மனது இலகுவாகிவிடுகிறது. ”இந்தக் கெட்டசாதி நாய் தெனம் குடிச்சுப் போட்டு வந்து பேசறானுங்க மாமா” என ஒரு பெண் தன் கணவனை வைத்துக்கொண்டே இன்னொருவரிடம் முறை சொல்ல, “நீ குடிக்காமையே பேசறே. அவன் குடிச்சாத்தான பேசறான். பேசீட்டுப் போறாம்போ” என்று அவர் கவுண்டர் கொடுப்பதை ஓரப் புன்னகையோடு கடக்க முடிகிறது.

ஒரு பண்ணாடிக்கும், ஆள்காரனுக்குமான உரையாடல்.

“ஏனுங்க.. இன்னைக்கு நீங்கதே என்னையைக் கொணாந்து ஊட்ல உடோணுமுங்க”

“ஏப்பா? நீதே டிவிஸ் வெச்சிருக்கீல்ல”

”அத ஏங்கேக்கறீங்க.. நாயித்துக் கெழமையானா எம்பையன் பொண்டாட்டியக் கூட்டிக்கிட்டு அதுல போயர்ரானுங்க..”

“ஒரு வாரம் நீதாங்கூட்டிக்கிட்டு போறது?”

“ஏனுங்க கொணந்து உடறீங்களா இல்லீன்ன இனி நாயித்துக் கெழமீன்னா நீங்களே தண்ணி கட்டிக்கறீங்களா?”

“அட உடறனப்பா.. டீ வெச்சுக் கொண்டாரட்டா?”

இன்னொரு ஆரம்பப் பள்ளித் தோழன் எப்போது பார்த்தாலும், “ஏப்பா.. மெட்ராஸ்ல என்னமோ அம்மணக் குண்டி ஆட்டம் இருக்குதாம்மா? என்னைய ஒருக்கா கூட்டிக்கிட்டுப் போப்ப்பா” என்கிறான்.

“கன்னிமாக் காட்டுல பதனாறு லச்சத்துக்கு கார் வாங்கீருக்காங்களாமா?”

“அவியலுக்கு என்ன மாமனாரு சொத்து மனம்போல கெடக்குது. எனக்கு மட்டும் அப்படி மாமனார் சொத்து வந்தா ஏரோபிளானே ஓட்டுவம் பாத்துக்க”

இப்படி இரண்டு பேர் பேசுகிறார்கள்.

சென்னையில் இட்லி அரிசி விலையேறிப் போச்சுனு வேதனையில் இருக்கும் என்னை ஆத்துப்பாலத்தில் நாலு பேர் மடக்கி, “ஏப்பா அந்த இல்லியம்பட்டிக் காட்டை நீ வாங்கீட்டீனு பேசிக்கறாங்க?” எனக் கேட்கிறார்கள்.

ஒவ்வொரு முறையும் கிராமம் ஒரு அனுபவத்தைத் தருகிறது. அங்கேயும் ஓடுகிறார்கள். பரபரப்பாக வேலை செய்கிறார்கள். ஒன்பதுக்கே படுத்து விடுகிறார்கள். நிறுத்தி நாயம் பேசி, கிண்டல் அடித்து ஆசுவாசப்படுத்திக்கொள்கிறார்கள். கொழுந்தியாக்களை இன்னும் டீஸ் செய்து குறும்புகிறார்கள்.

நெல் நட்ட வயலெய்யாம் இப்போது வெங்காயமாக நட்டு வைத்திருக்கிறார்கள். வெங்காயம் மட்டும் விலை குறைந்தால் எங்க ஊரில் அடுத்த ஐந்து வருடத்திற்கு எல்லோர் வீட்டிலும் வெங்காயச் சட்னிவும், ஆனியம் தோசையும் தான். மார்க் மை வேர்ட்ஸ்.

இந்த முறை ஒரு நாளுக்கு மேல் இருக்க முடியவில்லை. வருடக் கடைசி. அலுவலகத்திலும் அப்படியொன்றும் ரொம்ப வேலையில்லை. ஆனாலும் வந்தாக வேண்டிய கட்டாயம். எங்கள் கம்யூனிட்டியில் ஒருவருக்கு இன்றைக்கு அறுபதாம் கல்யாணம். “நான் சொல்லக் கூடாது. மை சன் வில் இன்வைட் யூ. அன்னிக்கி எங்கிட்ட பிளசிங்ஸ் வாங்கினா பரமேஸ்ரன் பார்வதி கிட்ட வாங்கின மாதிரி” என பத்துத் தடவையாவது சொல்லியிருப்பார். போகாமல் விட்டால் சாபம் கொடுத்தாலும் கொடுத்து விடுவாரோ என்ற அச்சத்தில் திரும்பி விட்டேன்.

ஆனால் இந்த ஒரு நாள் அடுத்த நான்கு மாதத்திற்குத் தாக்குப் பிடிக்கும் என்பது மட்டும் நிச்சயம். 

No comments: