Tuesday, December 31, 2013

எழுச்சி மாநாடு எல்லாம் முடிஞ்சுதுங்களா?

ஞாயிற்றுக் கிழமை ஊருக்குப் போயிருந்த சமயத்தில் கொங்குச் சீமையெங்கும் ஈஸ்வரன் மயமாக இருந்தது. பேருந்தில் பயணித்த 100 கிலோ மீட்டர் தூரத்தில் ஒவ்வொரு பேருந்து நிறுத்தமும் போஸ்டரைக் கொண்டிருந்தது. 

டிசம்பர் 29 ஆம் தேதி எழுச்சி மாநாட்டுக்கு அழைப்பாம். வெள்ளகோவில் நகரின் முக்கியச் சாலைகளில் வாழைமரம் கட்டி கல்யாணம் மாதிரி அலங்கரித்திருந்தார்கள். வெள்ளகோவில் மாதிரி சின்ன ஊரிலேயே இப்படியென்றால் எழுச்சி மாநாடு நடக்க்கும் பெருமாநல்லூர் எப்படி இருக்குமோ என்ற ரோசனையிலேயே அரை நாள் கழிந்தது.

கட்சிப் பேர் வேறு மாற்றி விட்டார்கள். வருத்தப்படாத வாலிபர் சங்கத்தில் இருந்து ‘எப்போதும் வருத்தப்படாத வாலிபர் சங்கம்’ உருவான மாதிரி கொ.ம.தே.க. என இப்போது பெயர் மாற்றி வைத்திருக்கிறார்கள். அதற்கு என்ன அர்த்தமென்று யாரிடமாவது விளக்கம் கேட்க வேண்டும். கட்சிக் கொடியில் ஐந்து கலர் வைத்திருக்கிறார்கள். கட்சி வேட்டியில் துண்டு சைஸுக்கு கட்சிக் கரையே வரும் போல. ஈஸ்ரவன் கொடுக்கும் போஸ் எல்லாம் தாறுமாறாக இருந்தது. சீமான் மாதிரி கையை நீட்டிக் கொண்டும், திருமா ஸ்டைலில் உட்கார்ந்து எழுதிக் கொண்டும்.. ஒன்றும் சொல்வதற்கில்லை போங்கள். 

எப்போதும் வருத்தப்படாத வாலிபர் சங்கத்தின் ஈஸ்வரன் எழுச்சி மாநாடு நடத்தி முடிப்பதற்குள் வருத்தப்படாத வாலிபர் சங்கத்தின் பெஸ்ட் ராமசாமி வேட்பாளர் பட்டியலையே அறிவித்து விட்டார்.  என்ன நடக்கிறதென்றே தெரியவில்லை. வெளிவராத புத்தகத்திற்கு செய்யப்படும் மார்க்கேட்டிங் மாதிரியே இருக்கிறது. எழுத்தாளர்களும், பதிப்பாளர்களும் இவர்களிடம் கற்றுக்கொள்கிறார்களா அல்லது அரசியல்வாதிகளுக்கே அவர்கள்தான் கற்றுக்கொடுக்கிறார்களா தெரியவில்லை. ஆனால் பார்ப்பதற்கு ஜாலியாக இருக்கிறது. 

ஈஸ்வரனும், பெஸ்ட் ராமசாமியும் தனக்கு எவ்வளவு வெயிட் உள்ளதென்று காட்ட முயற்சிக்கிறார்கள். கனமான ஆளுக்கு கணிசமான டீலிங் கிடைக்கிறதோ அவர்கள் காட்டில் மழை. இரண்டு கழகங்களும் இந்த இரண்டில் ஒரு கட்சியை ஜீப்பில் ஏற்றிக்கொள்வார்கள் என நினைக்கிறேன். அதே நேரம் தனியரசு என்ற பெயரில் ஒரு ரெளடி இருக்கிறார். அவரையும் மறந்து விடாமல் இருக்கட்டும்.

உண்மையில் எனக்கு ஈஸ்வரன் மீதோ, பெஸ்ட் ராமசாமி மீதோ தனிப்பட்ட வகையில் எவ்விதப் பிரச்சினையும் கிடையாது. காலப் போக்கில் இந்தக் குழுக்களையும் ஆளும் கழகங்கள் உடைத்து விடுவார்கள். ஜாதிக் கட்சிகள் என்றில்லை. எந்த அமைப்பாக இருந்தாலும் அதே கதிதான். மதிமுகவில் இருந்து நாஞ்சில் சம்பத்தும், தேமுதிகவில் இருந்து பண்ருட்டியாரும் பிரியவில்லையா? அந்த வகையில் ராமதாஸ் கில்லி. கால் நூற்றாண்டுக்கும் மேலாக கழகங்களால் உடைக்க முடியாத ஜாதி அமைப்பை அல்லது கட்சியை அவர் பேணுகிறார்.

எல்லாக் கட்சியிலும் ஜாதி இருக்கிறது. இவர்கள் ஜாதியின் பெயரில் கட்சி வைத்திருக்கிறார்கள். அவ்வளவே. மற்றபடி பெரிதாக வித்தியாசம் இல்லை. சாதி அரசியலைக் கடந்து ராமதாஸின் மதுவிலக்குக் கொள்கை எனக்கு மிகவும் பிடிக்கும். போன முறை கொங்கு நாடு முன்னேற்றக் கழகத்தின் முக்கியத் தீர்மானங்களில் ஒன்றாக, ’கள் இறக்க அனுமதி வேண்டும்’ என்பதை வைத்திருந்தார்கள். அது நான் அங்கீகரிக்கிற ஒரு விஷயம். 

கருத்து கந்தசாமிகளுக்கு ஓரினச் சேர்க்கை எவ்வளவு முக்கியமோ அவ்வளவு முக்கியம் கிராமப்புற மக்களுக்கு கள் இறக்குவது. அதைச் சுற்றி ஒரு பொருளாதாரமே இயங்கிய வரலாறுகள் உண்டு. அது பற்றிய இலக்கியங்கள் உண்டு. சட்டப்படி டாஸ்மாக்கில் குடித்தால் சரி, அவனவன் பனைமரத்திலும் தென்னை மரத்திலும் இறக்கினால் சட்டப்படி குற்றம் என்பதெல்லாம் ஸ்பிரிட் கம்பெனிகளும், அரசியல்வாதிகளும் ஒன்றாகச் செய்யும் கூட்டுக்களவாணித்தனம். 

என்னவோ தெரியவில்லை. இப்போதையை எப்போதும் வருத்தப்படாத வாலிபர் சங்கத்தின் தீர்மானத்தில் ’கள்’ என்ற சொல்லையே காணோம். அதைத் தவிர்த்து, “வன்கொடுமை தடுப்பு சட்டத்தில் திருத்தம் செய்யப்பட வேண்டும்” என்கிறார்கள். மற்ற பிரதேசங்களோடு ஒப்பிடுகையில் பொருளாதார ரீதியாக மேம்பட்டிருக்கும் மேற்கு மாவட்டங்கள் புறக்கணிக்கப்படுவதாக புலம்பியிருக்கிறார்கள். அந்தப் புலம்பலை ஊர்ஜிதப்படுத்தும் புள்ளி விவரங்களை யாரேனும் வெளியிட்டுப் பேசினால் பரவாயில்லை. இன்னொரு விஷயம்: நாங்கள் சாதிக் கட்சியல்ல. சாதிக்கும் கட்சி என்றும் முழங்கியிருக்கிறார்கள்.

சாதிபேதம் கொங்குச் சீமையிலும் சாதி இருக்கிறது. கொங்கு வேளாளர் ஆதிக்க சாதியாக இருந்தாலும் கூட கொடுமைகளோ, சச்சரவுகளோ வடக்கு அல்லது தெற்கு மாவட்டங்களைப் போலில்லை. கொங்கு வேளாளக் கவுண்டர் சமூகத்தில் ஏகப்பட்ட குலங்கள் உள்ளன. அவற்றை கூட்டம் என்பார்கள். ஒரு கூட்டத்தைச் சேர்ந்தவர்கள் பங்காளிகள். மற்றவர்கள் மாமன், மைத்துவன் முறை. ஒவ்வொரு கூட்டத்திற்கும் ஒரு குல தெய்வம் இருக்கும். குல தெய்வக் கோவில்களும் இருக்கும். 

காவல் தெய்வங்களாகப் போற்றப்படும் அந்தக் குல தெய்வங்கள் வானத்தில் இருந்து குதித்த தேவர்கள் அல்லர். அந்தச் சமூகத்தில் அல்லது சமூகத்தோடு முற்காலத்தில் வாழ்ந்தவர்களே சாமியாக மாறிப் போனார்கள். ஒரு சில கொங்கு வேளாளக் கவுண்டர் கூட்டங்களில் வண்ணான் சாதியிலும், தாழ்த்தப்பட்ட சாதியிலும் பிறந்த மூன்னோரைக் குல தெய்வமாக வழிபடுகிறார்கள். 

அதையெல்லாம் பெஸ்ட் ராமசாமிகளும், ஈஸ்வரன்களும் தொலைத்து விடுவார்கள் போலிருக்கிறது. 

No comments: