Wednesday, December 04, 2013

பார்ட் டைம் வேலை

சுரேஷ் எங்கள் அலுவலகத்தில் வேலை பார்க்கிறார். திடீரென்று ஒரு நாள் சொல்லாமல் கொள்ளாமல் லீவ் போட்டு விட்டார். போன் செய்தால் அவர் மனைவி தான் எடுத்தார்.

“சுரேஷ் இல்லீங்களா?”

“அவர் இன்னிக்கி லீவுங்க. புராஜெக்ட் ஒர்க்குக்காக வெளிய போயிருக்கார்.”

அலுவலகத்தில் அல்லவா புராஜெக்ட் செய்ய வேண்டும்? பெரிய மருத்துவமனைகளில் பகல் நேர வேலை பார்க்கும் டாக்டர்கள் மாலை வேளையில் தனியாக வைத்தியம் பார்க்கிற மாதிரி சுரேஷ் எதாவது பார்ட் டைம் வேலை செய்கிறாரா? அதிலும் புராஜெக்ட் என்று வேறு சொல்கிறார்கள். சில சாஃப்ட்வேர் freelancing வேலைகள் ஒப்பந்த அடிப்படையில் கிடைப்பதாகக் கேள்விப்பட்டிருக்கிறேன். இவரும் அப்படி எதாவது செய்து கொண்டிருக்கிறாரா தெரியவில்லை.

அப்படிச் செய்தால் அது conflict of interest. வேலையில் சேரும் போதே கையெழுத்துப் போட்டுத் தான் எடுப்பார்கள். இனி மேல் நான் உன் அடிமையென எழுதிக்கொடுக்கும் சாசனம் அது. அதையும் தாண்டி இவர் வெளியே புராஜெக்ட் செய்துகொண்டிருக்கிறார். என்ன துணிச்சல்! HR இல் போட்டுக் கொடுக்க வேண்டும். இத்தனைக்கும் அவர் வேறு டீம், நான் வேறு டீம். எங்கள் வேலைகள் குறுக்கிடுவதில்லை. ஒன்றாக கன்னியப்பனிடம் டீ குடிப்போம். அவ்வளவே. ஆயினும் நிறுவனத்தின் கொள்கைக்கு ஒரு குந்தகம் என்றால் அதைக் கண்டு பொங்கி எழ வேண்டாமா?

போட்டுக் கொடுக்கலாமா, இல்லை எங்கே புராஜெக்ட் செய்கிறார் என விசாரித்து நமக்கு ஏதாவது தேறுமா எனப் பார்க்கலாமா என புத்தி கணக்குப் போட்டது. உள்ளூர நினைத்து ஓரமாக உட்கார்ந்து யோசித்தால் என்னுள் மேலோங்கியது பொறாமை மட்டுமே என்பது புலப்பட்டது. நம்மால் ஆஃபீஸ் வேலையைச் செய்யவே நாக்குத் தள்ளுகிறது. இந்த ஆள் எப்படி இங்கேயும் வேலை செய்து விட்டு வெளியே freelancing புராஜெக்ட்டும் செய்கிறார்? மலைப்பாக இருந்தது. நம்மால் ஆபீஸ் வேலையில் குடும்பத்தைக் கூட கவனிக்க முடியவில்லை.

”ஏங்க ஸ்கூல்ல வரச் சொன்னாங்க. நீங்களே நாளைக்கு மிஸ் கிட்ட கேட்டுட்டு வந்துருங்க” என நாலு நாளாக நச்சரித்துக் கொண்டிருக்கிறாள் மனைவி. நான் எப்போதும் அவள் நச்சரிப்புகளைப் பெரிதாக எடுத்துக்கொள்வதில்லை. அடுத்த நாள் சோறு கிடைக்காது அல்லது கண்டிப்பாக அடி விழும் என்ற பிரேக் பாயிண்ட் வரைக்கும் தள்ளி விடலாம். அதற்கு மேல் சிரமம். அந்தப் புள்ளியை இன்று தொடுவோம் என உள்ளுணர்வு சொல்லியது.

“நாளைக்கு நானே ஸ்கூல்ல இருந்து பிக்கப் பண்ணிட்டு வந்து விடுறேன். அப்ப மிஸ் கிட்ட டீட்டெய்லா கேட்டுக்கலாம். புள்ளையை வீட்ல விட்டுட்டு ஆஃபீஸ் போறேன்.” வீட்டில் நுழைந்தும் நுழையாமலும் இதைச் சொன்னேன். சாயங்காலம் டீ நேரத்துக்கு வீட்டுக்கு வராமல் டின்னர் நேரத்துக்கு வந்து இதைக் கூட சொல்லாவிட்டால் எப்படி? இல்லையென்றால் ஹாட்பாக்ஸை எடுத்து நாமே சாப்பிடக் கூட அனுமதி கிடைத்திருக்காது.

ஸ்கூல் 08:10 க்கு ஆரம்பித்து11:10 க்கு முடியும். இன்னும் இரண்டு மணி நேரம் கூடுதலாக வைத்திருந்தால் புண்ணியமாகப் போகும். போய் கொஞ்ச நேரம் அரட்டை அடித்து விட்டு, கொண்டு போன தீனியைத் தின்று விட்டு, ஆடையை ஓரளவு அழுக்காக்கி விட்டு வருகிறார்கள். வழக்கமாக பள்ளியில் டிராப் செய்த பின் நேராக ஆஃபீஸ் போவது என் வழக்கம். இன்று 11:10 க்குச் சென்று மிஸ்ஸிடம் கலந்துரையாடி விட்டு, மகளை திரும்ப வீட்டில் இறக்கிய பிறகு போக வேண்டும். வகுப்பறை வாசலில் நானே வந்திருப்பதால் மகள் குதூகலித்தாள்.

மிஸ் அழகாக இருந்தார்கள். முகத்தில் மட்டும் கொஞ்சம் கிழட்டுத்தன்மை தென்பட்டாலும் யாக்கையை நன்கு பேணியிருந்தார்கள். நான் வழக்கமாக வருவதில்லை. அதனால் யாருடைய தகப்பனென அடையாளம் காண்பதில் கொஞ்சம் குழம்பினார்கள். கொஞ்சம் தான். அதற்குள் ’அப்பா’ என அம்மணி ஓடி வந்தாள். என் காலைக் கட்டிய படி பேசுவதைக் கேட்டுக்கொண்டிருந்தாள். நம்ம அப்பாவுக்கு இவ்வளவு இங்கிலீஷ் தெரியுமாவென அவள் யோசித்திருக்க வேண்டும்.

பள்ளி ஆண்டு விழாவுக்கு என்ன செய்ய வேண்டுமென மிஸ்ஸைக் கேட்டேன். நிறைய தீம் வைத்திருக்கிறோம் என்றார். சில பேருக்கு பட்டாம்பூச்சி கெட்டப். சிலருக்கு சூரியகாந்தி வேஷம். சிலர் பறவை போல வர வேண்டும். சில முயலாக, சிங்கமாக, மயிலாக….. இப்படி நிறைய.

“அய்யோ மயில் மாதிரி எப்படி மேக்கப் போடறது மேடம்?”

“அதுக்கெல்லாம் ஷாப் இருக்கு ஸார். அவங்களே வாடகைக்குக் கொடுப்பாங்க. நீங்க கவலைப்படாதீங்க. மோர் ஓவர் உங்க பொண்ணுக்கு அந்த மாதிரி வேஷமெல்லாம் கிடையாது. அவளுக்கு இண்டிகோ தீம். இண்டிகோ ஃபிராக், இண்டிகோ ஷூ, இனிடோ ஹாட், இண்டிகோ சாக்ஸ்.. டாப் டு பாட்டம் இண்டிகோ..”

ஒரு நிமிடம் நிம்மதியானது. அப்பாடா வாடகைக்கு எடுத்து செலவு செய்ய வேண்டியதில்லை. ஒரு தடவை வாங்கினால் நாமே வைத்து மறுபடியும் போட்டுக்கலாம். என் எண்ண ஓட்டத்தைக் கலைத்து மிஸ் பேசினார்.

“எட்டுப் பேர் டீம். அதுல எல்லாருமே இண்டிகோ கலர்ல வரணும். ஒரு குரூப் சாங் பாடணும்.”

”அப்ப எட்டுப் பேரும் ஒரே மாதிரி யூனிஃபார்மா வாங்கணுமா?”

“தட்ஸ் பெட்டர்”

எதற்கும் கன்ஃபர்ம் செய்வதற்காக, ”இண்டிகோ கலர் எப்படி இருக்கும் மேடம்? ஆளுக்கு ஒன்னு வாங்கிட்டு வந்துட்டா நல்லா இருக்காதுல்ல. அதான் கேட்டேன்”

சற்றும் யோசிக்காமல், “பிங்க் கலர் மாதிரியே இருக்கும். ஆனா பிங்க் இல்லை. எதுக்கும் நீங்க கூகிள் பண்ணிக்குங்க” என்றார்.

திரும்ப வீட்டுக்கு வரும் போது மகளிடம், “இண்டிகோ கலர் பாத்திருக்கியாடா?” எனக் கேட்டேன்.

“இண்டிகோ கார் கலர் தான் இண்டிகோ கலர்`” சிரித்தாள்.

அதையடுத்து ஒரு வாரமாக ஆண்டு விழாவின் பெயரைச் சொல்லி அலைந்து கொண்டிருக்கிறேன். கடை கடையாகப் போய் துணிகளை போட்டோ எடுத்து வந்து மிஸ்ஸிடம் காட்டுவதும், அவர் ஒவ்வொரு நாளும் மாற்றி மாற்றிப் பேசுவதுமாக ஓடுகின்றன தினங்கள்.

ஸ்கூல் ஃபீஸ் ஐயாயிரமோ, பத்தாயிரமோ அதிகமாக வாங்கிக்கொண்டு இவர்களே இதையெல்லாம் கொடுத்தால் என்னவெனத் தோன்றியது. கூடவே சுரேஷ் லீவ் போட்டுச் செய்த புராஜெக்ட் அவர் பையனின் ஸ்கூல் புராஜெக்ட்டாகத்தான் இருக்குமெனவும் தோன்றியது.

4 comments:

வெங்கட் நாகராஜ் said...

இந்தப் பள்ளிகள் படுத்தும் பாடு......

என் மகள் ப்ரீ-கே.ஜி படிக்கும் போது சுதந்திர தினம் அப்போது மூவர்ண உணவு கொண்டு வரச் சொன்னார்கள்.... அது போல பல நினைவுகள்.....

நல்ல பகிர்வு.

பொன்ஸ்~~Poorna said...

inga ellam schoolla ethachum velai kuthuanganna athuvum project thaan.. not of this nature, more of " take a chart, and create your family tree or get all colored fall leaves and paste it" kind of..

Vijayakumar Ramdoss said...

நல்ல வந்து இருக்கு. #எல்லாம் வா.மா வின் எபக்ட் போல :)

Anonymous said...

Nice link with the first point of "project work" with your child's school annual day project. Nice presentation.