Thursday, December 05, 2013

பக்கத்து வீட்டு விவகாரம்

மூன்று கதவு தள்ளி ஒரு ஏர்ஹோஸ்டஸ் அம்மணி வசிக்கிறார். ரொம்ப வர்ணித்து எழுத முடியாது. ஒரு மாதிரி நீங்களே கற்பனை செய்து கொள்ளலாம். அந்தம்மாவுக்கும் அவர் புருஷனுக்கும் ம்ஹும்.. அப்படி ஒரு அம்மாஞ்சி முகம் அவனுக்கு.  

நான் செய்த காரியத்தை நினைத்து அவன் இன்றைக்கு ஏகத்துக்கு டென்ஷன் ஆகியிருப்பான். அதைச் செய்தது நான் என்று தெரிந்தால் இனிமேல் முகங்கொடுத்து பேசக் கூட மாட்டான். யார் கண்டது? இவ்வளவு மோசமான ஆளோடு ஒரு ஃபுளோரில் வசிக்கிறோம் என்ற வேதனையில் வீட்டையே காலி செய்து விட்டுப் போனாலும் கூட ஆச்சரியப்படுவதற்கில்லை.

வழமையாகப் பயன்படுத்தும் சில தமிழ் வார்த்தைகளின் ஆங்கிலச் சொற்களைப் பரவலாகப் பயன்படுத்துகிறோம். ஆனால் அவற்றுக்கு நிகரான தமிழ்ச் சொல் சட்டென வந்து நிற்க மாட்டேன் என்கிறது. அம்மாஞ்சிக்கு ஆங்கிலத்தில் யோசித்து வையுங்கள். திரும்பவும் அதற்கு ரிட்டர்ன் ஆகிறேன்.

’அலர்ஜின்ன தமிழ்ல என்னப்பா?’ என என் மகள் கேட்ட போது ஒவ்வாமை என்று பதில் சொன்னதுக்கு அவள் என்னை லூஸாக நினைத்திருக்கக் கூடும். பல நேரங்களில் அப்படித்தான் கேட்டுக்கொண்டே இருக்கிறாள். தாம் கடந்து வரும் ஆங்கிலச் சொல்லுக்கு நிகரான தமிழ்ப் பதத்தை அறிந்து கொள்ள குழந்தைகள் நம்மை நோக்கிக் கேட்கும் கேள்விகள் தவிர்க்கும் படியாகவே உள்ளன. மறுபடியும் கேட்டால், ‘இன்னைக்கு ஸூகூல்ல என்ன ஆக்டிவிட்டி செஞ்சீங்க? அதை மறுபடி எடுத்து கலரிங் பண்ணு” என அதட்டுவதன் மூலம் சமாளிக்கிறோம்.

Addiction க்கு நிகரான தமிழ்ச் சொல் என்னவாக இருக்கும்? போதைப் பழக்கத்துக்கு அடிமையாவது என்று வைத்துக்கொள்ளலாமா? அடிமைத்தனம் என்றால் slavery அல்லவா? நம்ம வசதிக்காக பலவீனம் என வெச்சுக்குவமா? அப்படி ஒரு பலவீனமே இன்றைக்கு ஏர்ஹோஸ்டஸ் வீட்டில் பூகம்பத்தைக் கிளப்பியிருக்கிறது. அ.முத்துலிங்கம் கூட இந்த addiction பற்றி ஒரு கதையே எழுதியிருப்பார். எனக்கு எந்தக் கெட்ட பழக்கமும் கிடையாதென நிறையப் பேர் சொல்கிறோம். பழக்கத்தில் கெட்ட பழக்கம், நல்ல பழக்கம் என்றெல்லாம் கிடையாது. விட முடிகிற பழக்கம், விட முடியாத பழக்கம் என்ற இரண்டு தான்.

தண்ணி அடிப்பவனுக்கு வெள்ளிக்கிழமை சாயங்காலம் ஆனதும் சரக்கு பாட்டிலைத் தொடாவிட்டால் கை நடுங்கும். மூடி சுற்றிக்கொண்டால் டென்ஷன். ஒவ்வொருத்தருக்கும் இப்படி ஏதாவது இருக்கிறது. ஃபேஸ்புக் வெப்சைட் ஒரு 24 மணி நேரம் டவுன் ஆனால் நாட்டில் பல பேர் மெண்டல் ஆகி விட கூடும். வாணி ராணியும், ஆபீஸும் பார்க்காமல் தூங்க முடியாமல் எத்தனை ஆண்கள் இருக்கிறோம்? அதனால் அடுத்த நாள் காலையில் எழுந்து எக்சைஸ் செய்யாமல் போனாலும் பரவாயில்லை. மெகா சீரியல் வடிவில், ஃபில்டர் காஃபி வடிவில், லேப்டாப் வடிவில், ஃபேஸ்புக் வடிவில், பொம்மை வடிவில், பொஸ்தகம் வடிவில்… இப்படி எதாவது ஒன்று இருக்கும்.

சிலருக்கும் எந்தப் படம் வந்தாலும் உடனே பார்த்து விட வேண்டும். எங்கள் ஊரில் ஒரு கிழவி இருந்தது. பழனாத்தாள் என்று பெயர். மொபைல் போன், லேண்ட்லைன் எல்லாம் இல்லாத காலத்திலேயே கலக்கும். எங்கு எழவு விழுந்தாலும் முதலில் போய் விடும். பத்து மைல், பதினைந்து மைல் தூரமெல்லாம் நடந்தே போகும். எழவு கண்டு வடும் நபர்களைப் பற்றி பழனாத்தாளின் மகன்களுக்கும், மருமகள்களுக்கும் அவ்வளவாகத் தெரியாது. கேள்விப்படாத பெயர்களாக இருக்கும். ”ஆரு செத்துப் போனா?” என்று கேட்டால் அதற்கு “நம்ம குலுக்குப்பளத்து கோயிந்தாத்தா இருக்கால்ல.. அவன் பெரிய மச்சாண்டார் சம்மந்தியோட..” என தொடர் வண்டி நீளத்துக்குச் சோல்லி முடிப்பதற்குள் சன்ஃபீஸ்ட் நூடுல்ஸ் சமைத்து விடலாம்.

பழனாத்தா கிழவி மாதிரி எனக்கும் ஒரு addiction. காலையில் ஃபில்டர் காஃபி குடிக்க வேண்டும். ஃபில்டர் காஃபி போடுதல் ஒரு கலை. அது எல்லோருக்கும் வாய்க்காது என்பதால் டீயே போதுமென சமாதானம் செய்து வைத்திருக்கிறேன். அதுவும் இல்லையென்றால் கஷ்டம். எழுந்ததிலிருந்து புலம்பிக்கொண்டே இருப்பேன். கவனியுங்கள், திட்டவெல்லாம் முடியாது. தேநீருக்குக் குறைவில்லாமல் வாழ்க்கை என்னை வைத்திருக்கிறது சாமி. அப்படிக் குடிக்கும் போது பேப்பர் வாசிக்க வேண்டும். இன்னும் குறிப்பாகச் சொல்ல வேண்டுமானால், டீ இல்லாவிட்டால் கூட பரவாயில்லை. ஆனால் டீ குடிக்குப் போது பேப்பர் இல்லாவிட்டால் கை நடுங்க ஆரம்பித்து விடும். சிலருக்கு பேப்பர் இன்றி டாய்லெட் வராதாம். எனக்கு டீ மட்டும் இறங்க மறுக்கிறது.

ஆரம்பத்தில் ஆறு மணிக்கே பேப்பர் வந்து விடும். டீ போடுவதற்குத்தான் நேரமாகும். பிறகு ஆறரைக்கு வரத் துவங்கியது. ஆறரை முதல் ஏழு வரையான நேரம் பேப்பரும் தேநீருமாக இனிமையாகக் கழியும். நமக்கே உரித்தான நிமிடங்கள் அவை. ஏழுக்கு மேல் வார நாட்களுக்கேயான பரபப்பு தொற்றிக்கொள்ளும். பேப்பர் வரும் நேரம், ஆறரை ஏழாகி, ஏழு ஏழரையாகி.. பிற்பாடு ஆபீஸுக்குக் கிளம்பி கதவைத் திறக்கும் போது வெளியே கிடக்கும். ”நாளைக்குப் பாத்தா சொல்லனும்” என நாலு நாள் யொசிப்பதற்குள் பேப்பர் வருவதே நின்று விட்டது.

பத்து நாள் ஆகியும் வரவில்லை. வீட்டில் அமைதி பறிபோனது. நான் மனைவியைத் திட்டத் துவங்கினேன் என்றால் பார்த்துக்கொள்ளுங்கள், இது எத்தனை பெரிய துயரமாக இருக்க வேண்டுமென்று. ”நாளைக்கு ஆறு மணிக்கே எந்திரிச்சு கீழே வாக்கிங் போறே.. சரியா? அவன் வரும் போது கையோட புடிச்சி நம்ம வீட்டுக்கு போடச் சொல்றே” என உத்தரவு போட்டேன். நான் சொல்வதை நானே கேட்க மாட்டேன். அவள் கேட்பாளா?

நேற்று காலை திருப்பிக் கத்தி விட்டாள். ”என்னைக் கேட்டா அவனுக்கு சப்ஸ்கிரிப்ஷன் செக் குடுத்தே? பணம் குடுத்தியே அவன் நம்பர் வாங்கினியா?”

எனக்கு டீ குடிக்கும் போது பேப்பர் படிக்காவிட்டாலும் கை நடுங்கும். பொண்டாட்டி திட்டினாலும் நடுங்கும். கெட்ட நேரம் இரண்டும் சேர்ந்து கொண்டது. இதைச் சரி செய்தே ஆக வேண்டும்.

“நாளைக்கு அஞ்சு மணிக்கே எந்திரிக்கறேன். கீழ போய் உக்காந்து அவனைப் பிடிக்கறேன். அவனோட நம்பர், வீட்டு அட்ரஸ் எல்லாம் வாங்கறேன். அப்பறம் பாரு அய்யாவ”

“மொதல்ல செய். அப்பறமா பாக்கலாம்.”

அடுத்த நாள் அவள் 06:30க்கு எழுந்து வரும் போது கையில் பேப்பரோடு குட் மார்னிங் சொன்னேன். “இந்தப் போடு போடலைன்னா நீ இப்படி பர்ஃபெக்ட் ஆகியிருப்பியா?” என திருப்பிச் சிரித்தவள் டீ போட குண்டாவை எடுத்தாள்.

மூன்று கதவு தள்ளியிருக்கும் ஏர்ஹோஸ்டஸ் அம்மாவின் புருஷன் எப்படியும் எட்டு மணிக்குத்தான் எழுந்திருப்பான். அவன் கதவைத் திறந்து பார்க்கும் போது…………………. நீங்கள் மறுபடியும் இரண்டாவது பத்திக்குப் போக வேண்டும்.

No comments: