Friday, December 06, 2013

போராட்டமல்ல.. சமரசமே வாழ்க்கை

உங்களுக்கு ஆன்டி ஃபிளவரை ஞாபகம் இருக்குமா தெரியவில்லை. உலகில் என்றும் நினைவில் கொள்ளப்பட வேண்டிய பத்து விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேன்களைப் பட்டியல் போட்டால் அதில் ஆன்டியின் பெயரைத் தவிர்க்க முடியாது. அவரும், அவரது சகோதரர் கிராண்ட் ஃபிளவரும் ஜிம்பாப்வே அணிக்காக கிரிக்கெட் ஆடினார்கள். தோற்றுப்போன ஒரு டெஸ்ட் மேட்சில் கூட முன்னூறு ரன் அடித்த ஆன்டி ஃபிளவர் இப்போது இங்கிலாந்தில் வசிக்கிறார். வசிக்கிறார் என்பது understatement. அவர் இங்கிலாந்து அணிக்கு பயிற்சியாளராகச் செயல்படுகிறார்.

அதற்குக் காரணம் ராபர்ட் மொகாபே. மொகாபே யாரென்று தெரியாவர்களுக்கு அவர் ஜிம்பாவேயின் நெல்சன் மண்டேலா. இருவரின் புரட்சி வரலாறும் ஒரே மாதிரித்தான் துவங்கியிருக்க வேண்டும். ஆங்கிலேய ஆதிக்கத்திலிருந்து விடுவித்துக்கொண்டு மொகாபே கொடுங்கோலன் ஆகி விட்டார். நெல்சன் மண்டேலாவுக்கு இன்று உலகம் கண்ணீர் வடிக்கிறது.

2003 உலகக் கோப்பை சமயத்தில் கீழுள்ள அறிக்கையை வெளியிட்டு, கறுப்பு பேட்ச் அணிந்து விளையாடியதால் அந்த இடதுகை ஆட்டக்காரரின் ஜிம்பாவே வாழ்க்கை முடிவுக்கு வந்தது எனலாம்.
In all the circumstances, we have decided that we will each wear a black armband for the duration of the World Cup. In doing so we are mourning the death of democracy in our beloved Zimbabwe. In doing so we are making a silent plea to those responsible to stop the abuse of human rights in Zimbabwe. In doing so, we pray that our small action may restore sanity and dignity to our Nation.

ஷீகன் கருணதிலகாவின் நாவலில் ஆண்டன் ரோஸ் என்று குறிக்கப்படுவது வேறு யாருமல்ல. (மிகச் சிறப்பாக எழுதப்பட்ட ஒரு படைப்பு அது. சிங்கள எழுத்தாளரைப் பரிந்துரைப்பது பற்றி பிறகு பேசலாம்) தனது ஹராரே வீடு தாக்கப்பட்டவுடனே ஆண்டன் ரோஸ் நாட்டை விட்டுத் தப்பி ஓடினார் என அந்த நாவலில் வரும். அதற்குப் பிறகு ஆண்டன் ரோஸும், கதையின் நாயகனான இலங்கையின் தமிழ் ஸ்பின்னரும் ஏதோ கிழக்கு ஐரோப்பிய தேசத்தில் தம் தாய் நாட்டிலிருந்து தப்பி வந்த illegal immigrants உடன் கிரிக்கெட் விளையாடிக்கொண்டிருப்பார்கள் என கற்பனை செய்திருப்பார் ஷீகன்.

ஆன்டி ஃபிளவரை ரிவர்ஸ் சஸ்வீப் ஷாட்டுக்காக கொண்டாடலாம். அதைக் கண்டு மலைக்காத, மாரியாத்தாவைக் கும்பிடாத ஸ்பின் பெளலர்கள் இருக்கவே முடியாது. ஆன்டி ஜிம்பாவேயின் வசித்திருக்க வேண்டிய ஆளே கிடையாது. தென்னாப்பிரிக்காவில் இருந்திருக்க வேண்டும். அப்படித்தான் இன்றைக்குத் தோன்றுகிறது.

போராளியாக, தீவிரவாதியாகத் திகழ்ந்த மண்டேலா 27 ஆண்டுகள் சிறையில் கழித்தார். மீண்டு வந்த போது ஜனநாயகப் பாதையின் ஆட்சிக்கும் வந்தார். அவர் நினைத்திருந்தால் தென்னாப்ப்பிரிக்காவில் உள்ள வெள்ளையர்களை எல்லாம் விரட்டி அடித்திருக்கலாம். ஆனால் அதைச் செய்யவில்லை. தென்னாப்பிரிக்காவில் வசிக்கும் ஓரிரு ஆங்கிலேயர்களைத் தெரியும் என்ற முறையில் என்னால் உறுதியாகச் சொல்லமுடியும் – இதுதான் மண்டேலாவை மற்ற போராளிகளிடமிருந்து அவரை வேறுபடுத்தி ஸ்டேட்ஸ்மேன் ஆக்கிக் காட்டுகிறது.


வரலாறு யாருடைய கையில் இருக்கிறது என்பதைப் பொறுத்தும், முடிவில் எத்தனை வல்லமையோடு விளங்குகிறார்கள் என்பதைப் பொறுத்துமே ஒருவன் தீவிரவாதியாகவோ போராளியாகவோ சித்தரிக்கப்படுகிறான். அது ஒரு பக்காம் இருக்க, சமரசம் தவிர்க்க முடியாதென்பதையும், ஒத்திசைந்து வாழ்வதே நிராகரிக்க முடியாத உலக ஒழுங்கு என்பதையுமே நெல்சன் மண்டேலா நமக்காக விட்டுச் சென்ற பாடமாக இருக்கும். தென்னாப்பிரிக்காவின் போராளியாக, அடக்குமுறைக்கு எதிராக நின்றமைக்காக உலகம் அவரை நினைவு கூர்வதைக் காட்டிலும் இதற்காகவே அவர் வரலாற்றில் இடம் பெற்று நிலைப்பார்.

போராட்டமே தன் வாழ்க்கை என வரித்துக்கொண்டவர் நிம்மதியாக உறங்கட்டும்.

No comments: