Monday, December 09, 2013

ரோல்மாடல்

உங்கள் எல்லோரையும் போல எனக்கும் ஒரு ரோல் மாடல் இருந்தார். இருந்தார் என்றால் என்றால் இப்போது இல்லையா என்ற கேள்வி எழலாம். இப்போதும் இருக்கிறார். ஆனால் ரோல் மாடலாக இல்லை. ஒற்றை ரோல் மாடலை விட பல திசைகளிலும் கிடைக்கும் இன்ஸ்பிரேஷன்களே கூடுதலாக இருக்கிறது. யாரைப் பார்த்தாலும், யாரோடு பேசினாலும் அதிலிருந்து எதையாவது கற்றுக்கொள்ள முடியும் என மனது நம்புகிறது. ஒரு கேள்விக்கு ஒரு விடைதான் சரியாக இருக்குமென்பது எத்தகைய குறுகிய எண்ணமாக இருக்குமோ அது போலத்தான் ஒரேயொரு ரோல் மாடல் இருக்க வேண்டுமென நினைப்பதுவுமென ஆறுதல் அடைகிறது.
                                                  
ஆனால் சின்ன வயசுக்கு இதெல்லாம் தெரியாதில்லையா? இப்பவும் யாவும் தெரிந்து தெளிந்து விடவில்லை என்பது ஒரு பக்கம் இருந்தாலும் நேற்றை விட இன்றைக்கு நாம் அறிவாளியாக மாறியிருப்பதாக நினைத்துக் கொள்கிறோம். இருக்கட்டும், சின்ன வயதில் உங்கள் எல்லோரையும் போல எனக்கும் ஒரு ரோல் மாடல் இருந்தார். என்னை விட 15 வயது மூத்தவராக இருப்பார். சுற்றியுள்ள நாலைந்து கிராமங்களில் பொறியியல் பட்டதாரி ஆன முதல் மனிதர் அவர். நான் படித்த அதே ஆரம்பப் பள்ளியில் படித்தார். அவருக்குச் சொல்லிக்கொடுத்த அதே மேகலிங்க வாத்தியார் எனக்கும் பாடம் நடத்தினார். அவர் அடிக்கடி சொல்லிக்கொண்டே இருப்பார். சண்முகம் மாதிரி வரனும்டா என்பார்.

கோவை CIT இல் படித்தார். ’மாசம் ஆறாயிரம் சம்பளமாமா’ என்று நிறையப் பேர் பேசிக்கொள்ளும் அளவுக்கு மும்பையில் ஒரு பெட்ரோகெமிக்கல் கம்பெனியில் வேலை செய்தார். பின்னர் துபாய்க்குப் போய் விட்டார். அவர் மும்பையில் பணிபுரிந்த போது அவரது பெற்றோரை அவர்களது சிறிய கிராமத்து வீட்டில் பல தடவை சந்தித்திருக்கிறேன். எல்லா வகுப்புகளிலும் முதல் மதிப்பெண் பெற்று, அதற்குப் பரிசு பெறும் கறுப்பு-வெள்ளை நிழற்படங்கள் சுவரில் ஃபிரேம் செய்யப்பட்டு தொங்கிக் கொண்டிருக்கும். அதைப் பார்க்கும் போதெல்லாம் டானிக் குடித்த மாதிரி இருக்கும்.

நான் படித்த உயர்நிலைப் பள்ளியில் ஃபர்ஸ்ட் மார்க் எடுத்தேன். எங்கள் கிராமத்தில் இப்போதெல்லாம் பெண் குழந்தைகள் பத்தாவதில் 480 மதிப்பெண்களை சர்வசாதாரணமாக வாங்குகிறார்கள். நான் எத்தனை மார்க் என்று கேட்டால் வெளியே சொல்ல வெட்கமாக இருக்கிறது. அநேகமாக கொளத்துப்பாளையம் பள்ளியில் முதல் மதிப்பெண் பெற்ற மாணவர்களிலேயே கடைசி மதிப்பெண் என்னுடையதாகத்தான் இருக்கும். நான் மூனாவது படிக்கும் போதே அவர் பொறியாளர் ஆகியிருந்தார். அவரது தாக்கம் வேறு எதைக் காட்டிலும் அதிகமாக இருந்தது. நாமும் எஞ்சினியர் ஆகிட வேண்டுமென என்னையுமறியா அவா குடிகொண்டிருக்க வேண்டும்.

பத்தாவது படிக்கும் போது தவளையின் குறுக்கு வெட்டுத் தோற்றம், கரப்பான் பூச்சியின் குறுக்கு வெட்டுத் தோற்றம் முதலிய கேள்விகளைத் தவிர்த்தேன். கேள்விகளை மட்டுமல்ல. உயிரியல் பாடத்தையே வெறுத்தேன். அதற்கு இரண்டு காரணங்கள். ஒன்று, படம் வரைவது பிடிக்காது. இரண்டாவது எஞ்சினியர் சண்முகம் மாமா. எனக்கு இதெல்லாம் தேவையில்லை என நினைத்துக்கொண்டிருந்தேன். மேல்நிலைப் பள்ளியில் கூட பயாலஜி எட்டிக்காயாகக் கசந்தது. பிளஸ்-2 பயாலஜி பரீட்சைக்கு முந்தைய நாள் தூர்தர்ஷனில் தூறல் நின்னு போச்சு படம் பார்க்கும் அளவுக்கு வெறுப்பு. ஒரே ஆறுதல், கோவையில் மையப்பகுதியில் உள்ள அந்த பாய்ஸ் ஸ்கூலில் ஒரேயொரு பெண்வாசமாக, அம்மாசைக் குட்டி ஆசான் லீவில் சென்ற சமயத்தில் வகுப்பெடுக்க வந்த அழகான டீச்சர் மட்டுமே.

என்ன படிக்கிறோம் அல்லது படிக்காமல் போகிறோம் என்பதை நம்மையும் அறியாமல் இந்த ரோல்மாடல்கள் தீர்மானிக்கிறார்கள். அப்படி எடுக்கும் முடிவும், முடிவின் விளையாக இறுதியில் நாம் எட்டும் நிலையும் மறுபரிசீலினைக்கு உள்ளாகும் தருணத்திற்கான சாத்தியத்தையும் மறுப்பதற்கில்லை. எனினும் ரோல் மாடல்களின் தாக்கத்தை மறுக்கவொ தவிர்க்கவோ இயலாது. அந்தப் பருவங்களில் அவர்கள் இன்றியமையாதவர்களாகிறார்கள். குறிப்பாக முதல் தலைமுறைப் பட்டதாரிகளைக் காணும் குடும்பங்களிலும், கிராமங்களிலும் அதி அவசியமாகிறார்கள்.

காலப் போக்கில் நாம் வாழ்க்கையைப் பற்றிக் கொண்டிருக்கும் கற்பிதங்கள் உருமாற்றம் அடைகின்றன. சரியென நம்பியது சரியாகவே நீடிப்பதும், மோசமெனக் கருதியது அத்தனை மோசமில்லை என ஆவதுமாக நம் எண்ணங்கள் மாறுகின்றன. நாம் அடையும், அல்லது அடைந்திருக்கும் வெற்றி (அல்லது வெற்றி என நம்பிக்கொண்டிருப்பது) நமது உழைப்பின் விளைவாய்க் கிடைத்த சங்கதியாக மட்டுமே கருத இயலாதென்கிற உண்மை மெதுவாகவே உறைக்கிறது. பல சமயங்களில் நாம் அதிர்ஷ்டத்தையும், திறமையையும் குழப்பிக் கொள்கிறோம். ஒரே ஒரு ரோல் மாடல் உருவாக்கிய தீர்க்கமான தாக்கத்தினை பல்வேறு படிப்பினைகள் & இன்ஸ்பிரேஷன்கள் மறு கட்டமைக்கிறன.

எனினும் ரோல் மாடல்கள் சமுதாயத்தில் மிக முக்கியமான உந்து சக்தியாக விளங்குகிறார்கள். எங்கும் அவநம்பிக்கையினால் மனம் தளர்ந்துள்ள சமூகத்தில், ஒரு படியாவது உயர்த்தி விட விரும்பும் நமக்கு இந்த மாதிரியான நபர்கள் தேவைப்படுகிறார்கள். இல்லையேல் நாமே அவர்களை உருவாக்கி விடுவோம். ஆன்மீக ஆசானாக, வாழ்வில் ஜெயித்துக் காட்டியவரின் வெற்றிக் கதையாக அவர்கள் நம் முன்னே விரிவார்கள். தோல்விகளையே கண்டு துவண்டிருக்கும் நாம் வெற்றிக்கான குறுக்கு வழியை, அல்லது நேர்வழியாகவே இருந்தாலும் சரி, அவர்கள் காட்டி விட மாட்டார்களா என ஏங்குகிறோம்.

தெரியாத கதைகளும், சுயசரிதைகளும் நம்மை ஏமாற்ற அனுமதிப்பதை விட நம்மைச் சுற்றி வளர்ந்து நிற்கும் ஆட்களே நாயகர்களாக ஆவதில் தவறொன்றுமில்லை. நன்றாகப் படித்து, நல்ல ஒழுக்கத்துடன் விதிகளுக்குக் கீழ்ப்படிந்து வாழ்ந்தால் வாழ்வில் சாதிக்கலாமென கட்டுக்கோப்பாக சமுதாயத்தை வைத்திருக்கவும் அவர்கள் உதவுகிறார்கள். ஒழுக்கத்தைப் பற்றிப் பேசும் போது சண்முகம் மாமா ஏழாம் வகுப்பு படிக்கும் போது நடந்த சம்பவத்தை அவரது கிளாஸ்மேட் கருப்புச்சாமி சொன்னார். அதை மட்டும் சொல்லி விட்டு முடித்து விடுகிறேன்.

ஒரு நாள் டேவிட் வாத்தியார் மனப்பாடச் செய்யுளை ஒப்பிக்கச் சொல்லியிருந்தாராம். யாருமே படிக்காமல் வந்து விட்டார்கள். கடுப்பான வாத்தியார் வகுப்புக்கு வெளியே ஒட்டுமொத்த வகுப்பையும் சுடும் மணலில் முட்டி போடுமாறு தண்டித்திருக்கிறார். மனப்பாடம் செய்து ஒப்பித்து விட்டு உள்ளே போகலாம். நம்ம ஆள் ஐந்து நிமிடத்தில் படித்து ஒப்பித்து விட்டு வகுப்பறைக்குள் சென்று அமர்ந்து கொண்டார். மற்றவர்கள் சிலருக்கு வெகு நேரம் ஆகியிருக்கிறது. அப்படி ஒப்பிக்க முடியாத சிலரையும் மதியச் சாப்பாட்டுக்கு சில நிமிடம் முன்னதாக உள்ளே வருமாறு வாத்தியார் சொல்லி விட்டார்.

பிறகு நம்ம ஹீரோவையும், கருப்புச்சாமியையும் கூப்பிட்டு வாளியில் தண்ணீர் கொண்டு வரச்சொன்னாராம். ஆசிரியரின் மதியச் சாப்பாட்டின் போது குடிக்கவும், கை கழுவவும். சுமார் 50 மீட்டர் நடந்தால் அமராவதி ஆறு. இவர்கள் இரண்டு பேரும் மறுபேச்சே சொல்லாமல் வாளியை நிரப்பி வந்து கொடுத்தார்களாம். வாத்தியார், ”வெரி குட். இப்படித்தான் சீக்கிரமா படிச்சு ஒப்பிக்கணும். எதாவது வேலை சொன்னாலும் கீழ்ப்படிஞ்சு செய்யனும்” எனப் பாராட்டினாராம்.

”அதான் இன்னிக்கு நல்ல நிலையில இருக்கிறாரா அவரு?” என கருப்புச்சாமியைக் கேட்டேன்.

”நான் வேண்டாம்னு தான் சொன்னேன். சம்முகந்தான் முக்கா வாளி தண்ணியோட முள்ளுச் செடிக்குள்ள கொண்டு போய் வெச்சு அதுக்குள்ளையே ஒன்னுக்கு இருந்தான்.” என்றார்.

2 comments:

ravi said...

I know several computer engineers who take 'roja' arvindsamy as their role model for becoming a software engineer during 1990s.

ravi said...

I know many software engineers who take 'roja' arvindsamy as their role model for becoming a computer engineer during 1990s.