Wednesday, December 31, 2014

சத்தமில்லாமல் நிசப்தமாகக் கலக்கும் மணிகண்டன்

வா.மணிகண்டன் என்னை விட நாலைந்து ஆண்டுகள் இளையவராக இருக்கக் கூடும். ஆனால் பல வகையில் அவரை நான் அண்ணாந்து (சரியான ஸ்பெல்லிங் அன்னாந்துதானே?) பார்க்கிறேன். என்னை எழுதுவதற்குத் தூண்டிய முதல் ஜீவன் மணிகண்டன். தினமும் ஒரு பதிவினை எழுதக் கூடிய மணியின் அசாத்திய உழைப்பினைக் கண்டு பிரமித்துப் போவதுண்டு. இடையிடையே சோர்ந்து போனாலும் அந்தச் சோர்வைப் போக்கும் உத்வேகமும், உற்சாகமும் மணியின் வலைப்பதிவைக் காணும் போது வந்து விடுகிறது.

அச்சு ஊடகங்களின் துணையின்றி சுயமாகவே தன்னை முன்னிறுத்தி வெற்றியடைய முடியும் என்பதற்கு சாட்சியாகவே அவரைக் காண முடிகிறது. ஆயிரக் கணக்கான நண்பர்களை, நம்பிக்கைக்குரிய நபர்களை அதன் மூலமாகவே ஈட்ட முடியும் என்று காட்டியதற்கும்.

ஜெயமோகனோ, மனுஷ்யபுத்திரனோ, வா.மு.கோமுவோ இத்தகையை உழைப்பினை இடுவதிலோ, இத்தனையாயிரம் பேரையோ ஈட்டுவதிலோ ஏற்படாத ஆச்சரியம் மணிகண்டனிடத்தில் உண்டாகிறது. அவர்கள் எல்லாம் முழு நேர எழுத்தாளர்கள். அதே போல பெருமாள் முருகன், அபிலாஷ், வெண்ணிலா, இமையம் போல வாத்தியார் வேலையில் இருப்பவருமில்லை. மணிகண்டன் நம்மில் பலரையும் போல தினமும் ஒன்பது-பத்து மணி நேரம் பிழிந்து எடுக்கும் வேலையில் அகப்பட்டு அந்தி சாயும் போது எண்ணெய் உறிஞ்சப்பட்ட புண்ணாக்காக வெளிவரும் வாழ்க்கையை வாய்க்கப் பெற்ற ஒருவர்.

தனது இணைய எழுத்தின் மூலமாகவே இரண்டாவது புத்தகத்தைக் கொண்டு வருகிறார் மணி. சென்ற ஆண்டு ’லின்சே லோஹன் w/0 மாரியப்பன்’ என்ற நூலை புதிய பதிப்பாளர் மூலம் கொண்டு வந்தது போலவே இந்த ஆண்டும் ’மசால் தோசை 38 ரூபாய்’ என்ற புத்தகத்தை இன்னொரு புதிய பதிப்பாளர் மூலம் வெளிக் கொணருகிறார். வாழ்த்துக்கள் மணி.

பல வகைகளில் மணி இன்ஸ்பிரேஷன் என்று சொன்னேனல்லவா? நிசப்தம் என்ற பெயரில் அறக்கட்டளை நிறுவியிருக்கிறார். தனது முதல் புத்தகத்தின் மூலம் ஈட்டிய ராயல்டி பணத்தினை வைத்து தமிழ்த்தாய் பள்ளிக்கு உதவியிருக்கிறார். எழுத்தாளன் சமுதாயத்தில் நல்ல விஷயங்கள் நடப்பதற்கு ஒருங்கிணைப்பாளனாகச் செயல்பட முடியும் என்பதற்கான எடுத்துக்காட்டு. மகிழ்வாகவும், மனதுக்கு நிறைவாகவும் உணர வைக்கும் விஷயங்கள் இவை.

நான் குருத்தோலை அறக்கட்டளை துவங்குவதற்கான உந்துதலையும் ஊட்டியது மணிகண்டனே எனலாம். மணியைப் பின்பற்றி நானும் நாளை வெளியாகப் போகும் கொட்டு மொழக்கு நாவலின் மூலம் கிடைக்கும் ராயல்டி முழுவதையும் அறக்கட்டளைக்கு அப்படியே ஒதுக்கி விடுவது என முடிவெடுத்திருக்கிறேன். கொட்டு மொழக்கு மட்டுமல்லாது சென்ற வருடம் வெளியான ‘இரவல் காதலி’ மூலம் கிடைக்கும் ராயல்டியும் அப்படியே.

Thursday, December 25, 2014

கொட்டு மொழக்கு அட்டைப்படம் வந்து விட்டது

2015 ஜனவரி முதல் தேதி இந்த ’கொட்டு மொழக்கு’ நூல் வெளியாகிறது. சரியாக ஒரு வருடம் முன்னதாக 2014 ஜனவரி முதல் நாளன்று எனது ‘இரவல் காதலி’ வெளியானது. இரண்டுமே உயிர்மை வெளியீடுகள்.
இந்த இரு நாவல்களுக்கும் இடையேயான பயணம் முக்கியமானது. செல்லமுத்து குப்புசாமியின் முதல் புத்தகம் 2006 இல் வெளியானது என்ற வகையில், கடந்த எட்டரை ஆண்டுகளாகவே அவன் எழுதி வந்தாலும் கூட 2014 போல அதற்கு முந்தைய ஆண்டுகளில் நண்பர்களைச் சம்பாதித்ததில்லை. இத்தனையும் நாவல் எழுதுவதால் உருவான நன்மைகள்.


இரவல் காதலியை வாசித்து விட்டு நண்பர் சைதை புகழேந்தி, “சுஜாதா உயிரோடிருந்து இதைக் கண்டிருந்தால் மகிழ்ந்திருப்பார். அடுத்து நீங்கள் நேரடித் தமிழ் நாவலை எழுதுங்கள்.. அதுவும் உங்கள் ஊர்ப் பின்னணியில்” என்றார். முக்கியமான ஊக்குவிப்பு அது. பிறகு பிரபலங்கள் பலர் பாராட்டி ஊக்குவித்தாலும் கூட தொடர்ந்து நாவல் எழுதும் ஆர்வத்தை முதலில் தூண்டியது புகழேந்தியே!

புத்தக வெளியீட்டு நிகழ்வுகளில் யாரைப் பேச அழைப்பது எனத் தீர்மானிப்பதில் பெருங்குழப்பம். சிலர் முன்னட்டையையும், பின்னட்டையையும் மட்டும் படித்து விட்டு எதையாவது பேசுவார்கள். இவர்களால் நாட்டுக்கு, வீட்டுக்கு, விழாவுக்குக் கேடு. இன்னும் சில ஆழமான இலக்கியவாதிகள் எந்தப் புத்தகத்தைப் பற்றிப் பேச வேண்டுமோ அதைப் வாசிப்பதோடு மட்டுமல்லாமல், அவர்கள் வாழ்க்கையில் படித்த அத்தனை புத்தகங்களைப் பற்றியும் பேசுவார்கள். அந்த எழுத்தாளன் அடுத்த புத்தகத்தை எழுதும் முன் கோடி முறை யோசிக்கச் செய்து விடுவார்கள். நல்ல வேளையாக இந்த ‘கொட்டு மொழக்கு’ பற்றிப் பேசுவதற்கு அண்ணன் பாஸ்கர் சக்தி ஒப்புக்கொண்டிருக்கிறார்.

நாள் ஜனவரி 1 - மாலை 6 மணிக்கு
கவிக்கோ மன்றம்,
ரஹ்மத் பப்ளிகேஷன்ஸ் மாடி,
21/11 இரண்டாவது மெயின் ரோடு
சி.ஐ.டி.காலனி
(செட்டியார் ஹால் பின்புறம், டி.டி.கே.சாலை) 

Monday, December 08, 2014

ஆன்லைன் ஷாப்பிங்

எல்லாக் காட்டிலும் சிங்கத்தின் ஆட்சி நடப்பது போல எல்லா வீட்டிலும் மகள்களின் ஆட்சி! எங்கள் வீடும் அப்படித்தான். அவள் கையில் ரிமோட் இருக்கும். சுட்டி டிவியோ, போகோ சேனலோ, கார்ட்டூன் நெட்வொர்க்கோ ஓடும். என்ன சொன்னாலும், கெஞ்சினாலும் வேலைக்கு ஆகாது. சாம தான பேத தண்ட முறைகள் யாவும் தோற்றுப் போகும். ஒரு நாள் வேடிக்கையாக, “நீ ரிமோட்டைக் கொடுக்கலைன்னா OLX ல டிவிய வித்துருவேன்” என்ற போது உடனே தந்து விட்டாள். எனக்கோ ஆச்சரியம்!

ஆன்லைன் விளம்பரங்களின் தாக்கம் அத்தகையதாக உள்ளது. பல வருடமாக நமக்குத் தெரிந்த ஒரே ஆன்லைன் பரிவர்த்தனை ரயில் டிக்கெட் முன்பதிவு. இன்றைக்கு சகலமும் மாறியிருக்கிறது. ஒரு புத்தகத்தைப் பற்றிப் பேசுகையில் குறிப்பிட்ட கடையில் கிடைக்கும் என்று சொன்னால் சலித்துக் கொள்கிறார்கள். ஆன்லைன் லிங்க் இல்லையா என்கிறார்கள். 

ஒரு புள்ளி விபரம் இந்த வருட ஜூன் மாதம் இந்தியாவில் 25 கோடி பேருக்கு இணைய இணைப்பு உள்ளதாகக் கூறுகிறது. 120 கோடி மக்கள் தொகையில் இது 20 விழுக்காட்டிற்கும் மேல். ஐந்தில் ஒருவருக்கு இணையத் தொடர்பு உள்ளது நிச்சயமாக ஆச்சரியமளிக்கும் செய்தி. கவனிக்க வேண்டிய செய்தியும் கூட. இதில் அத்தனை பேரும் ஆன்லைன் ஷாப்பிங்கில் ஈடுபடுவதில்லை. அதிகபட்சமாக ஃபேஸ்புக் அல்லது கில்மா வீடியோ பார்ப்பார்கள். இதில் ஒரு சிறு விழுக்காட்டினர் மட்டுமே இணைய அங்காடிகளில் பொருட்களை வாங்குகிறார்கள் எனலாம்.

உலகலாவிய அளவில் 2014 ஆம் வருடம் ecommerce 1.505 டிரில்லியன் டாலருக்கு நடந்துள்ளதாக அறிகிறோம். அதாவது தோராயமாக ரூ 92 இலட்சம் கோடிகள். இதில் முக்கியமாகக் கவனிக்க வேண்டியது, 2013க்கும் 2014 க்குமான வேறுபாடு. கடந்த ஆண்டு வரைக்கும் வட அமெரிக்கர்கள் அதிக அளவில் ஆன்லைன் வர்த்தகத்தில் ஈடுபட்டனர். இவ்வருடம் ஆசியா-பசிபிக் பிரதேசத்தினர் முன்னிலை பெற்றுள்ளனர். குறிப்பாக சீனா – ஆன்லைன் வர்த்தகத்தில் அமெரிக்காவுக்கு அடுத்தபடியாக உலக அளவில் இரண்டாம் இடத்தை வகிக்கிறது. இன்னும் இரண்டு ஆண்டுகளில் சீனர்கள் அமெரிக்கர்களை விட அதிகமாக ஆன்லைன் ஷாப்பிங் செய்து முதலிடத்தைப் பிடிப்பார்கள் என்கின்றன கணிப்புகள். ஆன்லைன் வணிகத்தில் சீனா கடந்த மூன்று ஆண்டுகளாக 93.7% (2012), 78.5%(2013), 63.8%(2014) என வளர்ந்துள்ளது. இதோடு ஒப்பிடுகையில் இந்தியா இதே கால கட்டத்தில் 35.9%, 34.9%, 31.5% என வளர்ந்துள்ளது.

இந்தியாவைப் பொருத்த மட்டில் ஆன்லைன் வணிகத்தின் பெரும்பகுதி பிரயாணம் சார்ந்த விஷயங்களில் முடிகிறது. ரயில், பேருந்து மற்றும் விமான டிக்கெட் பரிவர்த்தனைகள் முக்கியப் பங்கு வகிக்கின்றன. சுமார் 70% ஆன்லைன் வியாபாரம் இவற்றின் வாயிலாகவே நடந்தேறுகிறது. 2013 கணக்கின் படி 12.6 பில்லியன் டாலர் (சுமார் ரூ 77,000 கோடி) ஆன்லைன் வணிகம் நடந்தது. இதில் வெறும் 2.3 பில்லியன் டாலர் (சுமார் ரூ 14,000 கோடி) மட்டுமே சில்லரை வணிகமாக நடந்துள்ளது.

செக் குடியரசில் கால்வாசிக்கும் மேலான வர்த்தகம் ஆன்லைனில் நடக்கிறதாம். இந்தியாவின் ஒட்டுமொத்த சில்லரை வணிகச் சந்தையில் மதிப்பு 550 பில்லியன் டாலர் (ரூ 33.63 இலட்சம் கோடி) என்று வைத்துக்கொண்டாலும் கூட ஆன்லைன் சில்லரை வர்த்தகத்தின் பங்களிப்பு அரை விழுக்காடு கூட இல்லை. எனினும் 2014 ஆம் வருடம் உன்னிப்பாகக் கவனிக்க வேண்டிய வருடம். பல வகைகளில் முக்கியத்துவம் வாய்ந்த வருடமும் ஆகும். இணையத் தொடர்புகளின் எண்ணிக்கை ஆண்டுக்கு 20% என்ற கணக்கிலும், ஆன்லைன் ஷாப்பிங்கில் ஈடுபடும் ஆட்களின் எண்ணிக்கை ஆண்டுக்கு 30% என்ற கணக்கிலும் அதிகரிக்கும் தேசத்தில் 2014 முக்கியமான மைல்கல்.

இந்த இடத்தில் Flipkart பற்றிக் குறிப்பிட்டாக வேண்டும். இந்தக் கட்டுரையின் மையப்புள்ளியே அதுதான். நியாயமாகப் பார்த்தால் முதல் பத்தியை Flipkart பற்றிய செய்தியுடன் தொடங்கியிருக்க வேண்டும். தாமதம் தவறில்லை.  

என்னுடை ஜி-டாக்கில் IIT முன்னாள் மாணவர் ஒருவரைச் சேர்த்திருந்தேன். அவர் என்னைச் சேர்த்தாரா அல்லது நான் அவரைச் சேர்த்தேனா என நினைவில்லை. அப்போதுதான் அவர்கள் ஒரு ஆன்லைன் புத்தகக் கடை ஆரம்பித்திருந்தார்கள். அவர்களது இணையதளத்தில் பட்டியலிடப்படாத புத்தகங்கள் ஏதேனும் தேவைப்பட்டால் அதை சாட்டில் சொன்னால் உடனே சேர்த்து விடுவார். கடைகளில் தேடினாலும் கிடைக்காத சில நூல்களை இப்படி வாங்கியதுண்டு.

அதற்கு Flipkart என்று பெயரிட்டிருந்தனர். அவர் பெயர் பின்னி பன்சால். அவரது கூட்டாளியின் பெயர் சச்சின் பன்சால். இருவரும் ஒரே குடும்பப் பெயர் கொண்டிருந்தாலும் அவர்கள் ஒரே குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் அல்ல. அவர்கள் ஆரம்பித்த வெப்சைட் வெறும் இணையப் புத்தக அங்காடியாக நின்று விடவில்லை. ஏற்கனவே எனக்குத் தெரிந்த ஒரு முன்னாள் IIT மாணவர் cricinfo.com என்ற கிரிக்கெட் சம்பந்தமான இணையதளம் ஒன்றை வெற்றிகரமாக நடத்தி அதை பன்னாட்டு நிறுவனம் ஒன்றை விற்ற பிறகு, அதற்குச் சற்றும் தொடர்பில்லாத புத்தகத் துறையில் கிழக்குப் பதிப்பகம் என்ற பெயரில் நுழைந்திருந்தார்.

ஆனால் இந்த பன்சால் பாய்ஸ் எங்கோ போய் விட்டார்கள். அவர்கள் இருவருமே அமேசான்.காம் நிறுவனத்தில் பணியாற்றி வந்தனர். உலக அரங்கில் ஆன்லைன் வர்த்தகத்தில் அமேசான் கொடிகட்டிப் பறக்கிறது. அமேசான் கூட Flipkart போலத்தான் தன் பயணத்தைத் துவக்கியது. 1994 இல் ஆன்லைன் புத்தகக் கடையாக ஆரம்பித்தது. புத்தகங்கள், குறுந்தகடுகள், வீடியோக்கள் என விநியோகம் செய்தது.

இணைய அங்காடிக்கு பளபளப்பான கடை நகரின் போக்குவரத்து நெரிசல் மிகுந்த பகுதியில் தேவையில்லை. வருகிற வாடிக்கையாளரை வரவேற்று உபசரித்து குளிர்சாதனப் பெட்டியை இயங்கச் செய்து பொருட்களை விற்பனைப் பிரதிநிதி மூலமாக விளக்கி விற்க வேண்டிய அவசியமில்லை. ஆன்லைனில் ஆர்டர் செய்ததும் அமேசான் உரிமையாளர் தனது கார் பார்க்கிங்கில் இருந்து புத்தகங்களை பேக் செய்து அனுப்பினார். இரண்டே மாதத்தில் வாரம் இருபதாயிரம் டாலர் அளவுக்கு விற்பனை சூடு பிடித்தது.

வழக்கமான புத்தகக் கடைகளில் குறிப்பிட்ட எண்ணிக்கையிலான நூல்களை மட்டுமே அடுக்கி வைக்க இயலும். அமேசான் மெய்நிகர் அங்காடி. அங்கே ஆயிரக் கணக்கான, இலட்சக் கணக்கான தலைப்புகளில் புத்தகங்கள் காணக் கிடைத்தன. அவற்றை கிடங்கில் சேர்த்து வைத்திருக்க வேண்டிய அவசியம் இல்லை. ஆர்டர் வந்தவுடன் பதிப்பாளரிடம் வாங்கி அனுப்பி வைக்க முடிந்தது.

இந்த நூற்றாண்டின் தொடக்கத்தில் பல டாட்காம் குமிழ் உடந்த போது எண்ணற்ற ஆன்லைன் கம்பெனிகள் திவாலாயின. காணாமல் போயின. அமேசான் தாக்குப் பிடித்தது. 2003 க்குப் பின்னர் பொருளாதாரம் மேம்பட்ட போது அமேசான் முன்னைக் காட்டிலும் ஸ்திரமாக முன்னேறியது. உலகின் மிகப் பெரிய புத்தகக் கடையென்றெல்லால் தம்பட்டம் அடிக்கக் கூடாது. அமேசான் புத்தகக் கடையே கிடையாது. அது புத்தக புரோக்கர் என்று வழக்கு தொடரப்பட்டது. அவ்வழக்கு நீதிமன்றத்துக்கு வெளியே பைசல் ஆனது. அதன் பிறகு உலகின் மிகப் பெரிய புத்தகக் கடலாக நீடித்தது. அமேசானின் புண்ணியத்தில் நிஜமான நிறைய புத்தகக் கடைகள் மூடப்பட்டன.

முதலில் புத்தகக் கடைகளுக்கு இடைஞ்சல் கொடுத்த அமேசான் பிறகு பதிப்பகங்களுக்கும் சவாலாக உருவெடுத்தது. ஈ-புக்ஸ் எனப்படும் மின்னூல்களை அறிமுகப்படுத்தியது. புத்தகங்களை காகிதத்தில் அச்சிட்டு விற்கவேண்டிய அவசியமில்லை. புத்தகங்களைப் பொருத்தமட்டில் பெருஞ்செலவு காகிதத்திற்குத்தான். அதை அடுக்கி வைப்பதற்கான கிடங்கிற்கான செலவு, விநியோகம் செய்யும் செலவு என பொருளின் உள்ளடக்கம் தவிர ஏனைய செலவுகளே கூடுதலாக அமைந்தன. மின்னூல்கள் புத்தகச் சந்தையை அப்படியே புரட்டிப் போட்டன.

மின்னூல்களை PDF வடிவத்திலோ, வேறு ஏதேனும் வடிவத்திலோ வெளியிட்டால் ஒரு பிரதியை எத்தனை பேருக்கு வேண்டுமானாலும் விநியோகித்து விடலாம். இதனால் வெளியீட்டாளருக்கு பெருமளவு வருவாய் இழப்பு ஏற்படும். ஒருவர் பணம் கொடுத்து வாங்கிய மின்னூலை ஏனையோருக்கு அனுப்பவோ, பகிரவோ முடியாத அளவிலான தொழில்நுட்பத்தை அமேசான் உருவாக்கியது. அவ்வாறு மின்னூல்களை வாசிக்கும் உபகரணத்திற்கு Kindle எனப் பெயரிட்டது.

அச்சில் 8 டாலருக்கு விற்கும் அதே புத்தகம் மின்னூல் வடிவில் ஒரு டாலருக்குக் கிடைத்தால் யார் அச்சுப் புத்தகத்தை வாங்குவார்கள்? எழுத்தாளர்களுக்கும் அமேசான் நல்ல ராயல்டி வழங்கியது. அச்சு நூலுக்கு பத்து சதவீத ராயல்டி எனில், அமேசான் மின்னூலுக்கு எழுபது சதவீதம் வரை கிட்டியது. விலை குறைவு என்பதால் கூடுதல் பிரதிகள் விற்பனை ஆகும் சாத்தியமும் உருவானது. பதிப்பகங்களை எளிதில் அணுக முடியாதவர்கள், இலக்கிய முகவர்களோடு ஒப்பந்தம் போட்டுச் செயலாற்ற முடியாதவர்கள் நேரடியாக அமேசானில் தமது புத்தகத்தை வெளியிடலாம்; உயிர்மை பதிப்பகத்தில் வெளியான எனது ‘இரவல் காதலி’ நாவலின் ஆங்கில மூலம் முதலில் அமேசான் Kindle பதிப்பாக வெளியானதைப் போல.

மேலும் ஒரு Kindle உபகரணத்தில் ஆயிரக் கணக்கான நூல்களைச் சேகரிக்க இயலும். பல நூலகங்களை அதனுள் அடக்கி விட முடியும். அமெரிக்கா, இங்கிலாந்து முதலிய முன்னேறிய நாடுகளில் அச்சுப் புத்தகங்களை விட மின்னூல்கள் அதிக எண்ணிக்கையில் விற்பனையாகின்றன. ஒரு சில தேசங்களில் அச்சுப் புத்தகத்தைப் பேணவும், பதிப்பகங்களைக் காக்கவும் அரசாங்கம் மின் புத்தகங்களின் விலை அச்சுப் புத்தகத்தை விட அதிகமாக இருக்க வேண்டுமென கட்டுப்பாடு விதித்திருப்பதாக அறிகிறோம். எனினும் அதன் வளர்ச்சி குறைந்தபாடில்லை. இப்போது அமேசான் மின் புத்தகங்கள் 38 மொழிகளில் கிடைக்கின்றன. இந்திய மொழிகளும் இதில் சேரும் காலம் வெகு தொலைவில் இல்லை என்றே கணிக்க வேண்டியிருக்கிறது.

இப்படியாக அமேசான் புத்தகச் சந்தையில் ஒரு புரட்சியையே உருவாக்கியிருக்கிறது. புத்தகங்கள் தவிரவும் ஏனைய எல்லா விதமான எலெக்ட்ரானிக் பொருட்கள், பொம்மைகள், பரிசுப் பொருட்கள், ஆடைகள் என பலதும் அமேசானில் வாங்கலாம். அப்படி அமேசானின் அடியொற்றி உருவானதுதான் அங்கே ஒரு காலத்தில் பணியாற்றிய பன்சால் பாய்ஸ் உருவாக்கிய Flipkart நிறுவனம்.

இப்போது ஒன்பதாயிரம் பேருக்கு மேல் அங்கே பணியாற்றுக்கிறார்கள். தனது வருடாந்திர விற்பனை ஒரு பில்லியன் டாலரை (சுமார் ஆறாயிரம் கோடி ரூபாய்) தாண்டி விட்டதாக இவ்வாண்டு மார்ச் மாதம் அறிவித்தது Flipkart. கம்பெனி ஆரம்பித்த ஏழு ஆண்டுகளில் ஒரு பில்லியன் சாதனை. (ஒப்புமைக்காக: அமேசானின் 2013 விற்பனை $ 74.45 பில்லியன்) Flipkart 2015 ஆம் ஆண்டுதான் ஒரு பில்லியனை விற்பனை இலக்காக நிர்ணயித்திருந்தது.

ஒரு வருடத்தில் ஆறாயிரம் கோடி ரூபாய் ஒரு இணைய தளம் ஈட்டியது பெரிய விசயம். ஆனால் இந்த வருடம் அக்டோபர் 6 ஆம் தேதி வெறும் பத்து மணி நேரத்தில் ரூ 650 கோடிக்கு விற்பனை செய்து பரபரப்பை உருவாக்கியது Flipkart. அன்றைய தினம் அனைத்து செய்தித்தாள்களிலும் Big Billion Day என முதல் பக்கத்தில் முழுப்பக்க விளம்பரம் வெளியாகியிருந்தது. அதில் சிறப்பு விற்பனை காலை எட்டு மணிக்கு ஆரம்பிக்கும் என்று போட்டிருந்தது. அன்றைய தினத்தில் ஒரு பில்லியன் (நூறு கோடி) ஹிட்களை அந்த இணைய தளம் பெற வேண்டும் என்ற இலக்கு. அதுதான் Big Billion Day.

பொருட்கள் எல்லாம் அடிமாட்டு விலைக்கு விளம்பரம் ஆகியிருந்தன. திங்கட்கிழமையும் அதுவுமாக பல பேர் குழந்தைகளைக் கூட பள்ளிக்கு தயார் செய்து அனுப்பாமல், அலுவலகம் கிளம்பாமல் லேப்டாப் முன்னால் அமர்ந்து எட்டு மணிக்கு ஆஜரானார்கள். ரயில்வே டிக்கெட்டை தட்காலில் புக் செய்வது போல நிலைமை ஆனதுதான் மிச்சம். (அதிரடியான) தள்ளுபடி விலைக்கு என்று போட்டிருந்த எந்தப் பொருளும் கிடைக்கவில்லை. கட்டுக்கடங்காத இணையப் போக்குவரத்தை Flipkart ஆல் சமாளிக்க முடியவில்லை. எனினும் ஓரளவு தள்ளுபடி விலையில் நிறையப் பொருட்கள் இறைந்து கிடந்தன.

அந்த தினத்தில் சில மணி நேரத்துக்குள்ளாகவே Flipkart ஐந்து இலட்சம் கைபேசிகளை விற்றதாக அறிவித்தது. அதே போல ஐந்து இலட்சம் ஆடைகள் மற்றும் காலணிகள். 25 ஆயிரம் தொலைக்காட்சிப் பெட்டிகள். எல்லாம் சேர்த்து மொத்தமாக இருபது இலட்சம் பொருட்கள் விற்றுத் தீர்ந்தன. உண்மையிலேயே புரட்சிதான். பத்து மணி நேரத்தில் ரூ 650 கோடி விற்பனை.

ஆனாலும் அதிரடியான தள்ளுபடி என Flipkart எதை அறிவித்ததோ அதெல்லாம் கிடைக்கவில்லை. வாடிக்கையாளர்கள் சமூக வலைத்தளங்களில் கொதித்தனர். ராபர்ட் வதோத்ரா ஹரியானாவின் நிலங்களை 99 சதவீத தள்ளுபடியில் Flipkart இல்-தான் வாங்கினாராம் என கிண்டலடிக்கும் அளவுக்குப் போனது. போட்டி நிறுவனங்கள் கடுமையான விமர்சித்தன. பல பொருட்களின் விலை அவற்றின் உற்பத்தி விலையைக் காட்டிலும் குறைவாக இருப்பதாக குற்றம் சாட்டின. வர்த்தகத் துறை அமைச்சகத்திடம் புகார் அளித்தன. இணையதள சில்லரை வணிகத்துக்கு புதிய சட்டதிட்டங்களை வகுப்பதாக அமைச்சகம் அறிவித்தது. இணையமைச்சர் நிர்மலா சீதாராமன் Flipkart விவகாரத்தை அரசு ஆராயும் என்று கூறினார். (இரண்டு வாரம் கழித்து தான் அப்படி எதுவும் கூறவில்லை என்று சொல்லி பின்வாங்கியது வேறு விஷயம்) இரண்டு நாள் கழித்து பின்னி பன்சாலும், சச்சின் பன்சாலும் உருக்கமான மன்னிப்பு மடல் ஒன்றை வாடிக்கையாளர்களுக்கு எழுதினார்கள்.

இங்கே நிர்மலா சீதாராமனைப் பற்றிப் பேசியதால் இன்னொரு விஷயத்தையும் குறிப்பிட்டாக வேண்டியிருக்கிறது. ஒரு பக்கத்தில் நாம் சில்லரை வர்த்தகத்தில் அந்நிய முதலீட்டை அனுமதிக்கக் கூடாது என்று பிடிவாதமாக இருக்கிறோம். இன்னொரு பக்கம் ஆன்லைனின் எதை வேண்டுமானாலும் விற்கலாம். தடையேதுமில்லை. அமேசான் முழுக்க முழுக்க அமெரிக்க நிறுவனம். Flipkart தளத்தை இந்தியர்கள் ஆரம்பித்தாலும் அதன் பெரும்பான்மை முதலீட்டாளர்கள் சிங்கப்பூரைச் சேர்ந்தவர்கள். முறையாக கடை திறந்து வியாபாரம் செய்வதற்கு அந்நிய முதலீட்டை அனுமதிக்காமல் பின்கதவு வழியாக ஆன்லைனை மட்டும் அனுமதிப்பது அண்ணாச்சி கடைகளை மட்டுமல்ல, வால்மார்ட் வகையறாக்களுக்கும் செய்யும் துரோகமாகும்.

சரி.. Flipkart இன் அதிரடி விற்பனை நாளன்று snapdeal என்ற ஆன்லைன் இணையதளத்திற்கு வருகை புரிந்தோரின் எண்ணிக்கை கூட 15 மடங்கு அதிகரித்ததாம். ஒரு நிமிடத்திற்கு ஒரு கோடி ரூபாய் விற்பனை ஆனதாம். அமேசான் நிறுவனம் அக்டோபர் 16 ஆம் தேதி தள்ளுபடி அறிவித்து அனைத்து செய்தித்தாள்களிலும் விளம்பரம் கொடுத்தது. Flipkart அளவுக்கு அது பரபரப்பு உருவாக்கவில்லை. Flipkart போல அமேசான் விற்பனை எண்ணிக்கையையும் வெளிப்படுத்தவில்லை.

சென்ற வருடம் ஒரு பில்லியன் டாலர் விற்பனை செய்த Flipkart இந்த வருடத்தில் ஏற்கனவே மூன்று பில்லியன் டாலரைக் கடந்து விட்டது. மார்ச் 31, 2015 இல் நிதியாண்டு முடியும் போது 5 பில்லியன் (ரூ 30,500 கோடி) விற்பனை செய்து முடித்திருக்கும். அப்படி நடக்கும் போது 90 ஆயிரம் பேர் வேலை செய்யும் HCL டெக்னாலஜீஸ் நிறுவனத்தின் விற்பனையைத் தொட்டு விடும் தூரத்தில் வெறும் 9 ஆயிரம் பேர் மட்டுமே பணியாற்றும் Flipkart நிற்கும். 2007 ஆம் வருடம் கம்பெனி ஆரம்பிக்கும் போது இரு பன்சால்களும் சேர்ந்து வெறும் நாலுஇலட்சம் ரூபாய் மட்டுமே முதலீடு செய்தார்கள் என்பது கவனிக்கத் தக்கது.

எல்லா வகையான கணிப்புகளையும் அடித்து நொறுக்கியிருக்கிறது இந்த ஆண்டின் தீபாவளிக்கான ஆன்லைன் விற்பனை. CRISIL ஆய்வறிக்கை 2014-15 இல் ஒட்டுமொத்த ஆன்லைன் சில்லரை வணிகத்தின் மதிப்பு ரூ 33,400 கோடியை எட்டும் எனக் கணித்தது. ஆனால் Flipkart மட்டுமே அதில் ரூ 30,500 கோடியைக் கடக்கும் என்றால் மற்ற நிறுவனங்களின் பங்களிப்பு ஒட்டு மொத்த விற்பனையை ஐம்பதாயிரம் கோடிக்கும் மேலே இட்டுச் செல்லும்.

Flipkart இன் அதிரடியான மார்க்கெட்டிங் சிலரால் விமர்சிக்கப்பட்டது. ஆனால் இணைய வசதி படைத்த, இது வரைக்கும் ஆன்லைன் ஷாப்பிங் செய்யாத பலரையும் உள்ளே இழுத்து வர அந்த விளம்பர உத்தி உதவியது. இம்மாதிரி அதிரடி விற்பனை ஒன்றும் புதிதல்ல. எல்லாத் துறையிலும் கையாளும் உத்திதான். சன் டிவி குழுமம் தினகரன் பத்திரிக்கையை வாங்கிய போது அதற்கு அப்படித்தான் விலை வைத்தது. டைம்ஸ் ஆஃப் இந்தியா சென்னையில் பதிப்பைத் துவங்கிய போது ஒரு ரூபாய் விலை வைத்ததற்கு ’இந்து’ புலம்பித் தீர்த்தது. அப்படித்தான் Flipkart நிகழ்வும்.

சில்லரை வணிகம் ஆன்லைன் வர்த்தகம் என்கிற பரிணாம வளர்ச்சியைச் சந்திக்க வேண்டிய வரலாற்றுக் கட்டாயம் இப்போது உருவாகியிருக்கிறது. ஒரு வருடம் முன்பு நான் ஒரு காமிரா வாங்கினேன். அந்த காமிரா கம்பெனியின் கடையில் சென்று அதன் ஆப்ஷன்களை எல்லாம் விசாரித்துத் தெரிந்து கொண்ட பிறகு Flipkart இல் ஆர்டர் செய்தேன். கேனான் கிளையிலோ, கேனான் ஆன்லைனிலோ வாங்குவதை விட Flipkart இல் 8 சதவீதம் குறைவாகக் கிடைத்தது. எந்த எலெக்ட்ரானிக் உபகரணம் வாங்கினாலும் அப்படி வாங்குவதே இலாபகரமாகத் தெரிந்தது.
அதே நேரம் ஒரு பொருளை கையில் ஸ்பரிசித்து வாங்குவதால் உருவாகும் திருப்தி அலாதியானது என்பதை ஒப்புக்கொள்ள வேண்டும். 

என்ன பொருளை வாங்குகிறோம் என்பதில் தெளிவாக இருந்து அதனைப் பற்றி நன்கு அறிந்த பிறகு ஆன்லைனின் ஆர்டர் செய்வதில் தவறில்லை. ஆனால் முதன்முதலாக இணையதளத்தில் ’படம்’ மட்டுமே பார்த்து வாங்கும் பொருட்களின் ரிட்டர்ன் பாலிசி குறித்து அறிவது முக்கியமானது.
எனக்குத் தெரிந்த ஒரு பெண் ஜபாங்.காமில் எப்போதும் துணி வாங்குவார். டெலிவரியான துணி பிடிக்கவில்லையென்று போன் செய்தால் அவர்களே ஆள் அனுப்பி திரும்ப எடுத்துக் கொள்வார்கள். எல்லாம் ஆன்லைன் ஷாப்பிங்கிலும் இத்தகைய ரிட்டர்ன் பாலிசி இருக்குமென மனதில் பதித்துக் கொண்டவர் சில நாள் கழித்து அமேசானில் செருப்பு ஆர்டர் செய்தார். அதை வாங்கிப் பார்த்த போது பிய்ந்து போயிருந்தது. அதன் ரிட்டர்ன் பாலிசிப் படி திருப்பி அனுப்புவதாக ஆன்லைனில் பதிவு செய்து, அதனை பிரிண்ட் எடுத்து பூனாவில் எதோ ஒரு முகவரிக்கு அனுப்ப வேண்டுமாம். திருப்பியனுப்பும் கூரியர் செலவையும் கொடுத்து விடுவோம் என்று போட்டிருந்தார்கள். அவர் மெனக்கெட்டு கொட்டுகிற மழையில் ஸ்கூட்டியில் சென்று அனுப்பி வந்தார். ஆறாவது நாள் தொலைந்து போன பூனைக் குட்டியைப் போல பார்சல் அவரிடமேயே திரும்பி வந்து விட்டது - ”நீங்கள் அனுப்பிய முகவரிக்கு சர்வீஸ் இல்லை” என. இப்போது அந்த செருப்பைக் கொண்டு யாரை அடிப்பதென்று தேடிக் கொண்டிருக்கிறார்.

இந்த தேசம் விவசாயிகளின் தேசம் என்று கூறுகிறார்கள். அது ஒரு மாதிரியான அரை உண்மை மட்டுமே. ஆழ்ந்து நோக்கினால் இது சிறு வியாபாரிகளின் தேசம் என்பது புலப்படும். வியாபாரி என்பவன் நெல்லைத் தமிழ் பேசி மளிகைக் கடை வைத்திருக்கும் அண்ணாச்சியாக இருக்க வேண்டிய அவசியமெல்லாம் கிடையாது. எல்லாத் தொழிலும் இதிலே அடக்கம். மஞ்சள் பையில் ஜாதகம், போட்டோவெல்லாம் வைத்துச் சுற்றிய புரோக்கர்கள் பலர் இன்றைக்கு காணாமல் போயிருக்கிறார்கள். தமிழ்மேட்ரிமோனி.காம் பல பேரை மாற்றுத் தொழிலுக்குத் தள்ளியுள்ளது. எல்லாம் ஆன்லைன் ஆன காரணத்தால் பல வியாபாரங்கள் காணாமல் போயுள்ளன. டிராவல் ஏஜென்சி பிசினஸ் எத்தகைய மாற்றங்களைச் சந்தித்துள்ளது என்பது சுவையான ஆயுவுக்கான களம். Makemytrip, stayzilla, bookmyshow, redbus, redkart, policybazaar முதலிய தளங்கள் பானைச் சோற்றுக்கான பதங்கள்.

புதிய தொழில்நுட்பங்கள் உருவாகும் போது பழைய முறைமைகள் மாறுவது இயல்பு. மாறுவது என்பதை அப்படியே தலைகீழாகப் புரட்டிப் போடுவது எனப் பொருள் கொள்ளலாம். பாதிக்கும் மேல் ரயில் டிக்கெட்டுகள் ஆன்லைனின் பதிவு செய்யப்படுகின்றன. வருமான வரி தாக்கல் செய்வதைக் கூட மூன்றில் ஒருவர் ஆன்லைனின் செய்கிறார்கள். உயிர்மைக்கான இந்தக் கட்டுரையைக் கூட நான் கையில் எழுதி பதிவுத் தபாலில் அனுப்பவில்லை. பில்கேட்ஸைத் திட்டி எழுதுவதற்குக் கூடப் பயன்படும் மைக்ரோசாஃப்ட் வேர்ட்டில் தட்டச்சிய பிறகு மின்னஞ்சலில் தான் அனுப்பினேன். அவ்வாறு மாற்றத்தை அரவணைக்கத் தவறினால் காலம் நம்மை உதறி விட்டு பயணித்துக் கொண்டேயிருக்கும்.  இன்னும் கூட சில பதிப்பாளர்கள், ”உங்கள் படைப்புகளை குறுந்தகட்டில் சேமித்து கூரியரில் அனுப்புக. எங்கள் முடிவைத் தபாலில் தெரிவிப்போம்” என அறிவிக்கிறார்கள்.

ஈ-காமர்ஸ் இணைய தளங்கள் அண்ணாச்சி கடைகளை அழித்து விடும் என்றொரு சாரார் கருதுகிறார்கள். ஆன்லைன் தளங்கள் தம்மைத்தாமே கூட அழிக்கக் கூடும். Flipkart இத்தனை தூரம் பல்கிப் பெருகினாலும் கூட இண்டியாபிளாசா.காம் என்ற பெயரில் இயங்கிய தளங்கள் என்னவாகின என்றே தெரியவில்லை. வலியது வாழும் என்ற கோப்டாடு இங்கும் நிலைபெறுகிறது. அண்ணாச்சி கடைகளைப் பற்றிய கேள்விக்கு, இன்னும் கூட இன்சூரன்ஸ் ஏஜெண்டுகள் இயங்குகிறார்கள் என்பதே பதில். எல்லாக் கம்பெனிகளின் பாலிசிகளையும் ஒரே இடத்தில் ஒப்பிட்டுப் பார்த்துத் தேர்ந்தெடுக்கும் வகையிலான இணையதளங்கள் வந்திருக்கின்றன.

சில வருடங்களுக்கு முன்னர் இந்தியாவில் அலாரம் கடிகாரம் என்றொரு வஸ்து இருந்தது. திருமணங்களில் இஸ்திரிப் பெட்டிக்கும், சுவர் கடிகாரத்துக்கும் அடுத்தபடியாக பெருமளவில் பரிசளிக்கப்பட்டவை அவை. இன்றைக்கு காணாமல் போயிருக்கின்றன. எல்லா அலாரமும் கைபேசிகளில் கையாளப்படுகிறது. காதலர்களின் தொலைபேசி அழைப்புகள் ரீங்காரமிட்டுத் துயிலெழுப்புகின்றன. கைபேசிகள் அலாரம் கடிகாரங்களை அப்புறப்படுத்தியுள்ளன. அதே போல காமிராக்கள் மாறுதலுக்கு ஆளாகியிருக்கின்றன. ஆனால் அவை முற்றிலும் தொலைந்து விடவில்லை.

ஆன்லைன் வர்த்தகம் செய்யும் இணையதளங்களை கைபேசி என்றே கருதினாலும், வழமையான வணிகக் கடைகள் அலாரம் கடிகாரங்களாக இருக்கப் போவதில்லை. அவை காமிராவாக, சுவற்றில் தொங்கும் நாட்காட்டியாக நிலைக்கத்தான் போகின்றன. எத்தனை என்பதே கேள்வி! எனக்குத் தெரிந்த பங்குச்சந்தை சப்-புரோக்கரில் ஒருவன் கால்சென்டரில் வேலைக்குச் சேர்ந்து விட்டான். இன்னொருவர் ஆட்டோ ஓட்டுகிறான். எட்டுப் பேருக்கு வேலை கொடுத்த டிராவல் ஏஜென்சி ஓனர் (பரம்பரையாக பிசினஸ் செய்யும் சமூகத்தில் வந்தவர்) இப்போது சாஃப்வேர் நிறுவனத்தில் மாதச் சம்பளம் பெறுகிறார்.  

எங்கள் அபார்ட்மெண்டில் பெண்கள் தினந்தோறும் ஜபாங்.காமில் துணிகளை ஆர்டர் செய்கிறார்கள். ஆனாலும் தீபாவளிக்கு முந்தைய வாரம், தி.நகரை விடுங்கள், வேளச்சேரி ரயில் நிலையத்திற்கே போக முடியவில்லை. அங்கே சென்னை சில்க்ஸில் புதிய கிளை திறந்திருக்கிறார்கள். 

(2014 நவம்பர் உயிர்மை இதழுக்காக எழுதியது)

Saturday, November 15, 2014

காகிதப் படகி சாகசப் பயணம்

காலையில் 91.1 பண்பலையில் முன்னாவும், மாலையில் 91.9 பண்பலையில் அக்ஹா அக்ஹா நாட்டி நைட் விக்னேஷ் காந்தும் இல்லையென்றால் அலுவலகம் செல்லும் பயண நேரம் ’பப்பரப்ப்பே’ ஆகி விடும் என்றுதான் நினைக்கிறேன்.

அப்படி ஒரு செவ்வாய்க் கிழமைக் காலையில் முன்னா டெண்டுல்கரைப் பற்றி, “இந்த கிரேக் சேப்பலுக்குத் தெரியாதுங்க.. நம்ம ஊர்ல இன்னிக்கு வெள்ளிக்கிழமைன்னு டெண்டுல்கர் சொன்னாக் கூட அட அமாம்ல டெண்டுல்கரே சொல்லீட்டாப்ல.. இன்னைக்கு வெள்ளிக்கிழகையாத்தான் இருக்கும்னு நம்பிக்குவாங்க.. இதுல இந்த கிரேக் சேப்பல் வேற டெண்டுல்கர் என்னைப் பத்தி எழுதினது பொய்னு சொன்னா யாரு நம்புவாங்க..

சரி இந்தியா ஃபுல்லா நீங்க எவ்வளவு காஸ்ட்லியா வாட்ச் கட்டியிருந்தாலும் இப்ப டைம்” என்று பெசிக்கொண்டு போனார்.

டெண்டுல்கரின் கிரிக்கெட் வாழ்க்கை பரபரப்புகள் அற்றது. அல்லது அப்படியான தோற்றத்தையே இது வரைக்கும் வெளிப்படுத்தி வந்திருக்கிறது. அப்படிப்பட்ட மனிதன் புத்தகம் எழுதி அதில் பரபரப்புக் கூட்ட வேண்டும் என்பதற்காகவே கிரேக் செப்பல் பற்றிய சர்ச்சையைப் புகுத்தியிருப்பதாக முன்னாவும், உலகமும் நம்புகிறது.

எப்படியோ Playing it my way புத்தகம் விற்றால் சரி..

டெண்டுல்கரின் புத்தகம் வெளியான அதே சமயத்தில் வெளியான இன்னொரு புத்தகம் பெ.கருணாகரன் எழுதிய காகிதப் படகில் சாகசப் பயணம். (முன்னட்டையை கார்டூனிஸ்ட் முருகு உருவாக்க்கியிருக்கிறார். பின்னட்டைக்கு கார்டூனிஸ் பாலா வரைந்து கொடுத்திருக்கிறார்) சச்சின் புத்தகத்திற்கும் கருணாகரன் புத்தகத்திற்கும் நிறைய ஒற்றுமைகள் உண்டு.

பெ.கருணாகரன் விகடனில் சேர்ந்த அதே கால கட்டத்தில்தான் சச்சின் தனது கிரிக்கெட் வாழ்க்க்கையைத் துவக்கியிருக்க வேண்டும். 27 வருட கால பத்திரிக்கைத் துறை அனுபவத்தை அழகாக, சுவைபட, சுருங்கக் கொடுத்திருக்கிறார்.

தாம் சந்தித்த முக்கியமான பிரமுகர்கள், கடந்து வந்த பாதைகள், மறக்க முடியாத நிகழ்வுகள் என பலவற்றையும் அதில் பதிவு செய்திருக்கிறார். ஊடகத் துறையில் நுழைய விரும்பும் இளைஞர்களுக்கு நிச்சயம் வாசிக்க வேண்டிய புத்தகம்.

குறிப்பாக சுஜாதா பற்றிய ஒரு சுவையான விஷயத்தை மட்டும் இங்கே குறிப்பிடுகிறேன். விகடன் மாணவப் பத்திரிக்கையாளர் திட்டத்தில் கருணாகரன் பணிக்குச் சேர்ந்ததும் அந்த குரூப்ப்பிற்கு சுஜாதா வந்து எதோ லெக்சட் கொடுத்திருக்கிறார். அனைவரும் ஆர்வமாகக் கேட்கக் கேட்க இவருக்கு மட்டும் வயிற்றைக் கலக்குகிறது. அவர் கல்லூரியில் படிக்கும் போது சுஜாதாவை வைத்து ஒரு விஷமத்தனம் செய்திருக்கிறார். அதுதான் காரணம்.

நாம் என்ன எழுதினாலும் பத்திரிக்கையில் போட மறுக்கிறார்கள். ஆனால் பிரபல எழுத்தாளர்கள் பெயரில் வந்தால் எல்லாவற்றையும் போடுகிறார்கள் என்ற ஆதங்கத்தில் சுஜாதா சொன்னதாக ஒரு துணுக்கை குமுதத்திற்கு எழுதி அதுவும் பிரசுரமாக் விட்டதாம்.

அந்தத் துணுக்கில் தான் ஜெயகாந்தனைப் போலவோ, புதுமைப் பித்தனைப் போலவோ எழுதாமல் விஞ்ஞானச் சிறுகதைகள் எழுதுவதற்கான காரணத்தை அவர் கல்ல்லூரி விழாவில் பேசியதாக கருணாகரன் எழுதிப் போட்டு அதையும் குமுதம் ஆர்வமாகப் பிரசுரித்தும் விட்டார்கள். அதைக் கண்ட சுஜாத மறுப்பும் தெரிவித்து, இம்மாதிரி விஷயங்களை அச்சில் கொடுக்கும் முன்பு தன்னிடம் ஊர்ஜிதம் செய்தால் நலம் என்றும் வருத்தப்பட்டிருக்கிறார். இதுதான் ஃபிளாஷ்பேக்.

அதற்குத்தான் கருணாகரன் சுஜாதவைப் பார்த்துப் பயந்தது. பின்னர் பல வருடம் கழித்து இந்த உண்மையை அவரிடம் சொல்ல, “அப்படியா? எனக்கு நினைவில்லையே!” என்று முடித்துக் கொண்டாராம் சுஜாதா.

இப்படி நிறைய அனுபவங்களைக் கலந்து தந்திருக்கிறார். கால் நூற்றாண்டுக்கும் மேலாக பத்திரிக்கை உலகில் சஞ்சரிக்கும் மனிதனின் பயணம். பயணம் சாகசம் என்பது சரி.. ஆனால் படகு காகிதமா என்பதே சந்தேகமாக இருக்கிறது.

நூல் : காகிதப் படகில் சாகசப் பயணம்
ஆசிரியர் : பெ. கருணாகரன்
பக்கங்கள் : 208
விலை : ரூ.150/-
வெளியீடு : குன்றம் பதிப்பகம்,
73/31, பிருந்தாவனம் தெரு,
மேற்கு மாம்பலம்,
சென்னை - 600 033.

Thursday, November 13, 2014

பாயசம் இல்லாத விருந்தும் இல்லை - பக்க விளைவு இல்லாத மருந்தும் இல்லை

பாயசம் இல்லாத விருந்தும் இல்லை. பக்க விளைவு இல்லாத மருந்தும் இல்லை.

ரைமிங்காக ஒலிப்பதற்குச் சொல்லப்பட்டது போலத் தோன்றினாலும் அதுதான் உண்மை. தவிர்க்க முடியாத உண்மை.

உணவே மருந்து என வாழ்ந்த தமிழர்கள் இன்று மருந்தே உணவு என்ற நிலைக்கு தள்ளப்பட்டிருக்கிறோம். அந்த நிலையில் மருந்துகள் தவிர்க்கவே முடியாதவையாக மாறியுள்ளன.

எனக்குத் தெரிந்த 57 வயது உறவினர் ஒருவர் முழங்கால் வலிக்கு ஈரோட்டில் ஒரு மருத்துவமனைக்குப் போயிருக்கிறார்கள். எலும்பு சம்மந்தமான விசயங்களில் அந்த டாக்டர் வல்லுனர் என்று கேள்விப்பட்டு அறுபது கிலோமீட்டர் கடந்து சென்றார்கள். எல்லாம் பரிசோதித்துப் பார்த்த அந்த டாக்டர் எக்ஸ்-ரே செலவு ஐநூறு தவிர கன்சல்டிங் ஃபீஸ் ஒரு பைசாக் கூட வாங்கவில்லையாம். ஆனால் 850 ரூபாய்க்கு மாத்திரைகள் எழுதிக் கொடுத்திருக்கிறார்.

ஜோசியக்காரனும், டாக்டரும் என்ன சொன்னாலும் மறுபேச்சுக் கேட்காமல் செய்வது நம் இரத்தத்தில் ஊறிய விஷயமல்லவா! நடிகர் மயில்சாமி ஒரு படத்தில், ”நீங்க குடுத்த மாத்திரை நீளமா இருந்துச்சு. சிரமப்பட்டு முழுங்கினேன் டாக்டர்” என்று தெர்மோமீட்டரை விழுங்கி விட்டுச் சொல்வாரே! அப்படித்தான் இவர்களும். டாக்டர் எழுதிக் கொடுத்த மாத்திரைகள் அத்தனையும் வாங்கிக் கொண்டு ஊருக்குப் போயிருக்கிறார்கள்.

இரண்டு நாள் அந்த மாத்திரிகளைச் சாப்பிட்டார். முழங்கால் வலியே பரவாயில்லை என ஆகி விட்டது. வயிறு பொருமிக் கொண்டது. எதையும் சாப்பிட முடியவில்லை. ஒரு வாரம் டாய்லட் வரவில்லை. சில மாதம் கழித்து அதைப் பற்றிப் பேசுகையில், ”உசுரு பொழச்சது பெரும்பாடாப் போச்சு” என்றார்.

பக்கத்தில் ஒரு சாதாரண எம்.பி.பி.எஸ் டாக்டரிடம் போயிருக்கிறார். அந்த டாக்டர் “உங்களால பொறுக்க முடியாத அளவுக்கு மொழங்கால் வலிக்குதா?” என்று கேட்க அப்படியெல்லாம் இல்லை என்று பதில் சொல்லியிருக்கிறார். பிறகு எதற்கு இத்தனை பெயின் கில்லர் மாத்திரைகள் என்று கேட்க, குழம்பிப் போய் திரும்பி வந்து வேலியில் மொடக்கத்தான் கீரையைப் பறித்து வாரம் மூன்று முறை வதக்கி உண்டு வருகிறார். இப்போது நல்ல மாற்றத்தை உணர்வதாகச் சொல்கிறார்.

இது போல இன்னொரு அனுபவம் சென்னை நண்பர் ஒருவருக்கு ஏற்பட்டது. லீவ் சமயத்தில் சொந்த ஊருக்குப் போன இடத்தில் பையனுக்கு சிறுநீர் கழிக்கும் போது எரிச்சல் உருவாகியிருக்கிறது. அங்கே ஒரு மருத்துவரிடம் போயிருக்கிறார். அவர் நான்கைந்து மருந்துகளைக் கொடுத்திருக்கிறார். ”எதுக்கு சார் இத்தனை மாத்திரை?” என்று கேட்டதற்கு, “பையனுக்கு சரியாகனுமா வேண்டாமா?” என்று கேட்டிருக்கிறார். இவர்கள் பயந்து போய் எல்லாவற்றையும் மாற்றி மாற்றிக் கொடுத்திருக்கிறார்கள். அப்போதும் சரியாகவில்லை.

திரும்பி வந்து சென்னையில் வழக்கமாகச் செல்லும் மருத்துவரிடம் செல்ல அவர், “சின்னப் பையனுக்கு எதுக்கு இத்தனை ஆன்டிபயாட்டிக்?” என்று கேட்டதும் ஆடிப் போய் விட்டார்கள். அவர் ஒரேயொரு மருந்து கொடுக்க இரண்டே நாளில் சரியாகி விட்டதாம்.

இப்படிப்பட்ட அனுபவம் நம் எல்லோருக்கும் ஏற்பட்டிருக்கும். அல்லது நமக்குத் தெரிந்த யாருக்காவது நிச்சயம் நடந்திருக்கும். டாக்டர் எதற்காக மருந்து எழுதிக் கொடுக்கிறார்? என்ன மருந்து என்ன செய்யும்? என்றெல்லாம் தெரியாமல் கண்ணைக் கட்டிக் காட்டில் விட்ட கதையாக இருக்கிறது நிலைமை.

பர்சனல் ஃபைனான்ஸ் துறையில் நான் எப்போதும் ஒரு விஷயத்தைச் சொல்வேன். நிதித் துறை ஆலோசகர்களில் இரண்டு வகையினர் உண்டு. நமக்கு ஆலோசனை வழங்கி விட்டு அதற்கு ஒரு கட்டணத்தை வசூலிப்பவர்கள் ஒரு வகை. இன்னொரு பிரிவினர் கட்டணமெல்லாம் வசூலிக்க மாட்டார்கள். அதில் முதலீடு செய்யுங்கள் இதில் முதலீடு செய்யுங்கள்’ என்று சொல்லி பணம் போட வைத்து அதில் வரும் கமிஷனில் வருமானம் பார்ப்பார்கள்.

நாம் ஐநூறு ரூபாய் ஃபீஸ் வசூலிக்கும் ஆலோசகரிடம் போக மாட்டோம். ஆனால் பீஸே வாங்காத, ஆனால் நம்மை பத்தாயிரம் பணம் போட வைத்து அதில் இரண்டாயிரம் கமிஷன் பார்க்கும் ஏஜெண்டைக் கொண்டாடுவோம். அப்படிப்பட்ட ஏஜெண்ட் நமக்கு எது நல்லது என்று பார்ப்பதை விட தனக்கு கமிஷன் எதில் அதிகம் என்றுதான் பார்ப்பார். Conflict of interest தலை விரித்தாடுவதன் உச்சம் அது.

இப்போதெல்லாம் டாக்டர்கள் கூட பெரும்பாலும் அப்படித்தான். நமக்கு என்ன மருந்து எழுதித் தரவேண்டுமென்பதை நமது வியாதி தீர்மானிப்பதை விட அந்த டாக்டர் சொந்தமாக மெடிக்க ஷாப் வைத்திருக்கிறாரா என்பதே தீர்மானிக்கிறது. இல்லையேல் அவர் கிளினிக் அருகில் உள்ள மெடிக்கல் ஷாப்பில் அவருக்கு என்ன கமிஷன் என்பது தீர்மானிக்கிறது.

எங்கள் ஏரியாவில் ஒரு மருத்துவர் உள்ளார். உள்ளே போனதும், “என்ன செய்யுது? எத்தனை நாளா பிரச்சினை?” என்றெல்லாம் கேட்க மாட்டார். “சொல்லுங்க.. எங்கே வேலை செய்றீங்க? என்னவா இருக்கீங்க?” என்றுதான் கேட்பார். ஒரு முறை அவரிடம் சென்று கிலி பிடித்துத் திரும்பி வந்தேன்.

என் நண்பர் ஒருவர் கூறுவார்: “Affordability determines treatment.” ஒரே வியாதி வந்திருக்கிற இரண்டு பேருக்கு ஒரே மாதிரி மருந்தை ஒரே டாக்டர் கொடுப்பதில்லை. ஒரு நபருக்கான வியாதிக்கு இரண்டு டாக்டர்கள் ஒரே மருந்தைப் பரிந்துரைப்பதில்லை. சாமானியர்களான நாம் எதை நம்புவது? யாரை நம்புவது?

இப்போதெல்லாம் மக்கள் இன்சூரன்ஸ் ஏஜெண்டிடம் விவரமாகக் கேள்வி கேட்கும் நிலைக்கு வந்திருக்கிறார்கள். ஆனால் மருத்துவரிடம் இன்னும் கேட்க முடிவதில்லை. நான்கைந்து மருந்து எழுதிக் கொடுத்தால் இதில் எதற்கு என்ன மருந்து என்று கேட்பதில்லை. ஒன்று ஆண்டிபயாட்டிக், ஒன்று வலிநிவாரணி, ஒன்று அலர்ஜிக்கு, ஒன்று தூக்கத்திற்கு என நான்கைந்து எழுதிக் கொடுப்பார்கள். அப்படியே எழுதிக் கொடுத்தாலும் அவர்கள் கொடுக்கும் மருந்துகள் வேறெந்த மெடிக்கல் ஷாப்பிலும் இல்லாத தமது கடையில் மட்டும் கிடைக்கும் மருந்தைக் கொடுப்பார்கள்.

அதிலும் அவர்கள் சில சமயங்களில் விநோதமான காம்பினேஷனில் எழுதிக் கொடுப்பார்கள். சாதாரணமாக ஒரு மருந்து வேறு பிரச்சினைகள் இல்லாத ஒரு நபருக்கு அளிப்பதற்காக உருவாக்கப்படுவது. தனித்த நிலையில் ஒரு மனிதன் மீது அவை எவ்வாறு செயல்படுகிறன என்றுதான் ஃபார்மா கம்பெனிகள் டெஸ்ட் செய்கிறன்றன.

ஏற்கனவே ரத்த அழுத்தத்திற்கு மருந்து உட்கொள்ளும் ஒருவருக்கு அல்சருக்கான மருந்து எப்படி வேலை செய்யும் என்று நிச்சயம் பரிசோதித்திருக்க மாட்டார்கள். இவை இரண்டையும் உட்கொள்ளும் நபர் மூட்டு வலிக்கான மருந்து உட்கொள்ளும் போது என்ன நடக்கும்? ஆண்டவனுக்கே வெளிச்சம்.

அது கூடப் பரவாயில்லை. மருந்துக் கம்பெனிகளே இரண்டு-மூன்று மருந்துகளைக் கலந்து ஒரே மாத்திரையில் குறிப்பிட்ட விகித்தத்தில் கலந்து மார்க்கெட்டிங் செய்கின்றன. அதிக விலைக்கு விற்கப்படும் இத்தகைய ’புதுமையான’ மருந்துகள் மருத்துவர்களால் அதிகமாகப் பரிந்துரைக்கப்படுகின்றன.

சொல்லப் போனால் ஒரு மருந்து உண்டாக்கும் பக்க விளைவே என்னவென்று தெரியாது. ஒரு குறிப்பிட்ட மருந்தை இரண்டு பேருக்குக் கொடுத்தால் அது ஒரே மாதிரியான பக்க விளைவை, ஒரே அளவில் அவர்கள் இருவருக்கும் உருவாக்குவதில்லை. அப்படி இருக்கும் போது, கண்ணாபின்னா காம்பினேஷனில் மருந்து வாங்கிச் சாப்பிட்டால் என்னவாகும்?

முந்தைய தலைமுறையில், “நல்ல டாக்டர். ஒரு மருந்து குடுத்தாரு. ரண்டே நாள்ல சரியாகிருச்சு” என்று பேசுவார்கள். இப்போதெல்லாம், “அவர் ஃபீஸ் கொஞ்சம் ஜாஸ்தியா வாங்குவார். ஆனா தேவையில்லாம மருந்து குடுக்க மாட்டாரு. நீங்க வேணா ட்ரை பண்ணிப் பாருங்களேன்” என்கிற அளவுக்கு வந்திருக்கிறோம்.

மருந்து இங்குதான் வாங்க வேண்டும் என வலியுறுத்தாத மருத்துவராக இருந்தால் இன்னும் நலம். நம்மை முதலீடு செய்ய வைத்து கமிசன் சம்பாதிக்காமல், தரமான ஆலோசனை மட்டும் வழங்கி அதற்கு ஃபீஸ் வசூலிக்கும் நிதி ஆலோசரைப் போன்றோர் இவர்கள். அப்படியானவர்கள் நிதி மேலாண்மையிலும் சரி, மருத்துவத் துறையிலும் சரி அரிதாகத் தெரிகிறார்கள்.

நம்மால் என்ன செய்ய முடியும்? முடிந்த அளவு உஷாராக மாற முயற்சிக்கலாம். ’ஃபேமிலி டாக்டர்’ போல ’ஃபேமிலி மெடிக்கல் ஷாப்’ ஒன்றில் வாடிக்கையாளராகி பூஸ்ட், ஹார்லிக்ஸ் எல்லாம் அங்கே வாங்கி அவர்களின் நம்பிக்கைக்குப் பாத்திரமாகலாம். அவர்கள் நல்ல ஆலோசனைகளை வழங்குவார்கள்.

இல்லையேல், ”மருந்திலிருந்து என்னைக் காப்பாற்று ஆண்டவா! வியாதியை நான் பார்த்துக் கொள்கிறேன்!” என வேண்டிக் கொள்ளலாம்

Monday, November 10, 2014

எழுதி என்ன சாதிக்கப் போகிறோம்?

சனிக்கிழமை சிங்கப்பூரில் இருந்து ஒரு நண்பர் பார்க்க வந்திருந்தார். வந்தவர் நேராக மீனம்பாக்கம் விமான நிலையத்தில் இருந்து மேடவாக்கமே வந்து விட்டார். இருவரும் மூன்று மணி நேரம் தொந்தரவில்லாத ஓரிடத்தில் பேசிக் கொண்டிருந்தோம். எழுதுவதால் என்ன நன்மை என்ற கேள்விக்கு இது போன்ற நட்புகளைப் பெறுவதே பதிலாக அமைகிறது.

கடைசியாகக் கிளம்பும் போது, “உங்களுக்கு வாங்கி வந்தேன்” என்று சிங்கப்பூர் ஏர்ப்போர்ட்டில் வாங்கிய சீமைச் சாராயத்தை நீட்டினார். 158 சிங்கப்பூர் டாலர்கள். வீட்டுக்கு வந்து கணக்குப் போட்டுப் பார்த்தேன். இந்திய ரூபாயில் 7500 க்கு மேல். அந்தப் பாட்டிலைத் தொடுவதற்கு கூச்சமாக உள்ளது. நண்பரின் அன்பில் திக்குமுக்காடிக் கிடக்கிறேன்.

நான் குடிப்பவன் தான். அதற்காக இத்தனை காசுக்குக் குடிக்க தயக்கமாக உள்ளது, சும்மாதான் கிடைக்கிறது என்றாலும்! ஏழாயிரத்து ஐநூறு.. இதை சாராயமாகக் கொடுக்காமல் குருத்தோலை அறக்கட்டளைக்கான பங்களிப்பாகக் கொடுத்திருந்தால் பத்து அரசுப் பள்ளி நூலகங்களுக்கு புத்தகம் வாங்கிக் கொடுத்திருக்கலாம்.

(திமிரிலோ, ஆணவத்திலோ, தற்பெருமையிலோ இதை எழுதவில்லை.)

Thursday, October 30, 2014

குருத்தோலைக்கான ஜன்னல் மீடியா விமர்சனம்

அருமையான விமர்சனம் ஒன்று ஜன்னல் மீடியாவில் வந்திருக்கிறது. மனதுக்கும் நிறைவாக, இதமாக இருக்கிறது.

(அச்சு இதழ்களைப் போல பதிப்பகத்தின் அஞ்சல் முகவரியோடு நிறுத்திக் கொள்ளாமல், ஆன்லைன் விமர்சனங்களில் புத்தகத்தினை எந்த லிங்க்கில் ஆர்டர் செய்யலாம் என்ற விவரத்தைக் கொடுத்தால் பயனுள்ளதாக இருக்கும்)

//கோவை மாவட்டக் கிராமங்களில் உயிர்த் துடிப்புடன் இன்னும் வாழும் கொங்குத் தமிழ், ‘குருத்தோலை’ நாவலில் மண் மணத்தோடு முழுமையாக வெளிப்பட்டிருப்பது, தமிழ் நாவல் இலக்கிய வரலாற்றில் இன்னுமொரு மகுடம் என்று சொல்லலாம்... தாராபுரத்தை ஒட்டிய கிராமம் ஒன்றைச் சேர்ந்த செல்லமுத்து குப்புசாமி இந்த நாவலை, கொங்கு வழக்கு மொழியில் மிகச் சரளமாக எழுதியிருக்கிறார். கொங்கு மொழி பரிச்சயமில்லாத வாசகர்கள் படிக்கச் சிரமப்படுவார்கள் எனத் தோன்றினாலும் இதுபோன்ற மொழிநடை, இலக்கியத்தில் சரியாகப் பதிவு செய்யப்பட வேண்டும் என்பது வரலாற்றின் தேவை.

முத்துச்சாமி என்கிற, பருவம் அரும்பியும் அரும்பாமலும் உள்ள சிறுவன் அவனைவிட ஓரிரு வயது அதிகமுள்ள அத்தை மகள் பாப்பியோடு ஆடு மேய்க்கச் சென்று அவளுடைய காமத்துக்கு ஆட்படுவதில் கதை துவங்குகிறது. கதைக்கு இது தேவையில்லாத ஒன்று என்றாலும் இது மிகவும் இயல்பானது; பருவத்தின் கோளாறு; தனிமையின் தூண்டுதல்; தவிர்க்க முடியாத ஒன்று என்கிற வகையிலும், இருவரின் பாலுணர்ச்சிக் கலப்பு விரசம் இல்லாமல், பாசாங்கு இல்லாமல் வெளிப்பட்டிருக்கிறது.

படிப்பறிவு அதிகமில்லா கிராமத்து மனிதர்களின் அறியாமை, பாசம், கோபம், காமம், சச்சரவு, சொத்துப் பிரிவினை, திருமணச் சடங்கு, பொருளாதாரம், தன்மானம், வீம்பு இப்படிப் பலதரப்பட்ட விஷயங்களைப் பாசாங்கு இல்லாமல் ‘குருத்தோலை’ நாவல் படம் பிடித்துக் காட்டுகிறது.

‘இது நம்மைச் சுற்றி வாழ்ந்த மனிதர்களின் கதை. சாதியும் சொத்துச் சண்டையும், கெட்ட வார்த்தைகளும், காமமும், மண்ணுக்கும் மனிதனுக்குமான நெருக்கமான உறவும் கலந்த கதை’ என்று படைப்பாளி கட்டியம் கூறுவது நூற்றுக்கு நூறு உண்மை!

முத்துச்சாமியின் தகப்பன் நாட்ராயன் தன் தங்கை கணவரிடம் மாடு விற்பது குறித்துப் பேச, தங்கை கணவர் சாமியப்பன் தான் ரூ.3800 க்கு விற்றுத் தருவதாக மாட்டை ஓட்டிப் போகிறார். காலம் ஓடுகிறது. பணம் வந்தபாடில்லை. அதைக் கேட்கப் போன இடத்தில் இருவருக்கும் உறவு அடிப்படையிலான உரையாடல் மிக அழகாக வரையப்பட்டிருக்கிறது. கடைசியில் சாமியப்பனின் மோசடி தெரிய வந்து கோபம் ஏற்பட்டுக் கைகலப்பாகிறது. விறகுக் கட்டையால் அடி வாங்குகிறார் நாட்ராயன். அவர் தங்கை மகள் பற்றிக் கேவலமாக உதிர்த்த சொற்கள் தங்கையை ஆக்ரோஷம் கொள்ள வைத்து, ஈர்க்குமாறை எடுத்து வந்து அண்ணன் என்றும் பாராமல் அடிக்கிறாள். காட்சி மிக அற்புதமாக விரிகிறது.

தொடர்ந்து சாமியப்பன் மகள் பாப்பிக்குத் திருமணம் ஆவது, அவளின் கணவர், நாட்ராயன் ஊருக்கு வந்து தன் மனைவி வளர்க்கக் கொடுத்த ஆடுகளைக் கேட்பது, தன் மாடு விற்ற பணத்தை இவர் கேட்பது, பாப்பியின் கணவன் ஆட்களைக் கொண்டு வந்து முத்துசாமியை அடித்துப் போட்டுவிட்டு ஆடுகளைக் கொண்டு போவது என்றெல்லாம் சித்திரிப்புகள் நீள்கின்றன. மிக நெருங்கிய சொந்தம் ஆனாலும் பொருள் என்று இடையில் வந்தால், இரு தரப்பில் ஒரு தரப்பு மோசடிப் பேர்வழியாக இருப்பின் பிரச்சினைதான் என்பதை இந்த விவரிப்பு உணர்த்துகிறது.

அண்ணன் தம்பி பாகப் பிரிவினைக் காட்சிகள், கிராமத்துப் பெரிய மனிதர்கள் முன்னிலையில் விஷுவல்  காட்சியாகவே விரிவது, ஆசிரியர், மனித மனங்களை துல்லியமாக உள்வாங்கியிருப்பதைப் புலப்படுத்துகிறது.

பள்ளிக்கூடத்துக்குப் படிக்க வந்த பிள்ளைகள் விவசாயத்துக்குத் திரும்புகிறபோது அவர்கள் படிக்க வேண்டுமே என்று, பெற்றோர்கள் காலில் விழுந்து அவர்களைப் பள்ளிக்கு அனுப்பக் கோரும் டேவிட் வாத்தியார் இன்னமும் கிராமங்களில் வாழும் அபூர்வ ஆசிரியர்களில் ஓர் உதாரண புருஷர். அவர் மாணவனின் வீட்டுக்கு  கம்பு வாங்க வரும் அனுபவம் மனசைத் தொட்டுத் தாலாட்டும்.

பழனாத்தாள் மஹாபாரதச் சகுனியாக நடந்துகொள்ளும் ஒரு கேரக்டர். பல ஆண்டுகள் விரோதம் காரணமாகத் தன் அத்தையின் பேரன் (தன்னை ஆண்ட பாப்பியின் மகன்) திருமணத்துக்குப் போக முதலில் மறுத்த முத்துச்சாமி பிறகு சம்மதிக்கிற செயல், காலம் பகைமையை அழிக்கும் என்பதைச் சொல்கிறது. அந்த அள்வில் நாவல் நிறைவுறுகிறது.

’ஆமாங்க சார்.. நடக்க நடக்க தடம் மூயமாண்டீங்குது. சொல்ற கதையா.. எங்களுக்கு செய்யச் செய்ய வேலை மூயமாண்டீங்குது. ஒன்னுக்கொன்னு ஒத்தாசையா சேந்து வேலை செஞ்சாத்தானுங்க ஆவும்? ஒரு கை ஓசையுறுமா சொல்லுங்க. சிட்டாளு வேலை எட்டாளுக்குச் சமமுனு செலவாந்தரமே சொல்லுவாங்களே! வளுசப் பையன் வேலைன்னு பூந்துட்டான்னா வெடுக்கு வெடுக்குனு செய்யறானுங்க. எங்களுக்கு கைகால் எல்லாம் ஆந்துக்கிருச்சுனா ஒருநாள் இல்லீன்னாலும் ஒருநாள் அவந்தானுங்க பாக்கோணும்?’’ என்ற செல்லாயி தனது வீடு தேடி வாத்தியார் வந்தது குறித்த மகிழ்ச்சியில் இருந்தாள்.

‘‘காட்டு வேலை எப்ப வேணும்னாலும் செய்யலாமுங்க. படிக்கற வயசுல படிக்காம உட்டுட்டு அப்பறமா படிக்காமப் போச்சேன்னு அவன்தான் வருத்தப்படுவான்’’ என அக்கறையை வெளிப்படுத்தினார் சார்.

‘‘வருத்தப்பட்டாலும் உங்கிட்ட வந்து சோத்துக்கு நிக்க மாட்டான்’’ என பழனாத்தாள் சட்டென்று சொன்னதும் அத்தனை பேருக்கும் அதிர்ச்சி.  -இது ஒரு சாம்பிள்தான். மனித மனங்களின் அலசல், மண் மணத்தோடு கொங்குத் தமிழ் மொழியில் சிறப்பாக வெளிப்பட்டிருக்கிறது இந்த நாவலில்.

பல அத்தியாயங்களில் சொல்லப்பட வேண்டிய வாழ்க்கை நிகழ்ச்சிகளை ‘சுபம்’ போட வேண்டிய அவசரத்தில், கடைசி இரண்டு அத்தியாயங்களில் ‘சம்மிங் அப்’ போல சுருக்கி எழுதியிருப்பது, நாவலின் ஆற்றொழுக்குப் போக்குக்கு நெருடல் ஏற்படுத்துகிறது.

இருந்தபோதிலும், தமிழ் இலக்கிய வரலாற்றில் சிறப்பான ஓர் இடத்தை செல்லமுத்து குப்புசாமி எழுதிய ‘குருத்தோலை’ நாவல் தக்கவைத்துக் கொண்டிருக்கிறது!//

Wednesday, October 29, 2014

கத்தி - கதைத் திருட்டா, தண்ணீர்த் திருட்டா?

கடைசியாக செப்டம்பர் 29 ஆம் தேதி இங்கே பதிவிட்டது. அடுத்த பதிவுக்கு அக்டோபர் 29 ஆகியிருக்கிறது. இடையிலே எதையாவது எழுதியிருக்கலாம். அறச்சீற்றம் பொங்குவதற்கு எண்ணற்ற காரணங்கள் இருக்கின்றன.

முதலில் கத்தி படத்தை லைக்கா நிறுவனத்திற்காக எதிர்த்தவர்கள் பின்னர் பல்வேறு காரணங்களுக்காக எதிர்க்கிறார்கள். ஒரு பக்கம் கோக் விளம்பரத்தில் நடித்துக் கொண்டே இன்னொரு பக்கம் நிலத்தடி நீரை உறிஞ்சும் கார்ப்பரேட்டுகளுக்கு எதிரான ‘கத்தி’யில் நடித்ததற்காக விஜயை ஓட்டித் தள்ளினார்கள். பிறகு முருகதாஸ் தன்னிடம் கதை சொல்ல வந்தவரின் கதையைச் சுட்டு தன் பெயரில் எடுத்துத் தள்ளி விட்டார் என்ற பரபரப்பு ஓடுகிறது. இதே கதையை ஒரு சின்ன இயக்குனர், சின்ன நடிகரை வைத்து எடுத்திருந்தால் ஓடியிருக்குமா தெரியவில்லை..

என்றாலும்....... நாட்டில் ஆங்கிலப் பட டிவிடிகளும், உதவி இயக்குனர்களும் இல்லையென்றால் நாட்டில் 99 சதவீத இயக்குனர்கள் இல்லை என்ற உண்மையை உணர்ந்தவன் ஞாநி.. இல்லை ஞானி... பஜாரில் உஷாராக இல்லாவிட்டால் நிஜாரோடு சேர்த்து கதையும் களவாடப்படும்.

என் நண்பன் ஒருவன்.. அவனை ’ர்’ போட்டுத்தான் பேசுவேன். அவரும் அப்படித்தான். இருவரும் ஒரே பள்ளியில் படித்தோம்.. பிறகு ஒரே கல்லூரியில் படித்தோம். பிறகு ஒரே கம்பெனியில் நான்கு ஆண்டுகள் ஓன்றாக வேலை பார்த்தோம். இப்போதும் நினைத்தால் மாலை 4 மணிக்கு தேநீருக்கு சந்திக்கும் அளவுக்கு அருகருகே உள்ளோம்.. அவரது தந்தையார் ஓய்வு பெற்ற பள்ளி ஆசிரியர். அவரது நண்பர் ஒருவர் தமிழாசிரியராகப் பணியாற்றி ஓய்வு பெற்றவர்.

அந்தத் தமிழாசிரியர் தீவிரமான அண்ணா அபிமானி. வேலைக்குச் சேர்ந்த புதிதில் சிறுகதை ஒன்றை எழுதி அண்ணாவின் பார்வைக்காக அனுப்பினாராம். நம்ம கதையை அண்ணா படிச்சுட்டு நாலு வரி பாராட்டி பதில் எழுத மாட்டாரா என்ற நப்பாசையில். ஆனால் நடந்தது என்ன தெரியுமா? அண்ணாவின் சிறுகதைகள் என்கிற மாதிரி தலைப்பிட்ட ஒரு புத்தகம் ஒன்றில் அந்தக் கதையும் இடம் பெற்றிருந்ததாம்.

(இதைக் கேட்டு யாரும் சண்டைக்கு வந்து விடாமல் இருக்க ஏழையின் சிரிப்பில் வாழும் இறைவன் காக்கட்டும்)

சரி... கத்தியில் கதையில் நீர் மேலாண்மை பற்றி வருகிறதாம்.. எதற்கெடுத்தாலும் காவிரியில் தண்ணீர் தரவில்லையென்று கர்நாடகாவை நொட்டை சொல்லியே பழக்கப்பட்ட நாம் லோக்கல் நீர்நிலைகளைப் பேணிப் பராமரிப்பதில் கோட்டை விட்டிருக்கிறோம். தற்போது பெருக்கெடுத்து வீதிகளில் ஓடும் வெள்ளம் கடலில் வீணாகக் கலக்கிறது. சேர்த்து வைக்க நீர்நிலைகள் ஏதுமில்லை. ஏரி, குளம், குட்டை, ஊருணி, கண்மாய் என சகலமும் கூட்டுப் பலாத்காரத்திற்கு ஆளாகியுள்ளன. நீர் மேலாண்மை என்பது காவிரி உரிமைக்காகப் போராடுவதைத் தாண்டியும், கங்கை-காவிரி இணைப்பைத் தாண்டியும் உள்ளது.

திருப்பூர்க் கவிஞர் மகுடேஸ்வரன் கூட இப்படி எழுதியிருக்கிறார்.

//நொய்யலில் புதுமழைப்புனல் ! வீணாய்ப் பாயும் நீரைத் திருப்பி வழியெங்குமுள்ள ஏரிகுளங்களை நிரப்பலாம். நொய்யலின் சிறப்பே வழியிலுள்ள ஏரி குளங்களை நிரப்பி நிரப்பி நடப்பதுதான். ஒன்று, ஏரி நிறைந்து மீந்த தண்ணீர் ஆற்றுக்கு வரும். அல்லது ஆற்றிலிருந்து பிரிந்த தண்ணீர் ஏரிக்குப் போகும்.

இந்த ஆற்றில் அங்கங்கே தடுப்பணைகள் ஏராளம் உள்ளன. ஆனால், அவற்றிலிருந்து பிரியும் கால்வாய்கள் தூர்ந்து கபளீகரம் செய்யப்பட்டுக் கிடக்கின்றன. மானூர்க்கு அருகிலுள்ள மாணிக்காபுரம் ஏரியை நிரப்பினால் சுற்றுவட்டாரமெங்கும் ஒரம்பெடுக்கும் என்கிறார்கள். அவ்விடத்தில் இருந்த பறவைகள் சரணாலயம் நீரற்றதால் அழிந்திருக்கிறது.

கால்வாய்களில் நீரெடுத்தால் ஊர்ப்புறத்துக் குளங்கள் அனைத்தையும் நிரப்பலாம். நிலத்தடிநீரேற்றி கிணற்றூற்றுகளை உயிர்ப்பிக்கலாம். சாயத்தண்ணீர் தேங்கக்கூடாதென்று வரலாற்றுச் சிறப்புமிக்க தடுப்பணைகளையெல்லாம் உடைத்துக் குதறி வைத்துள்ளனர். இந்த ஆற்றுப் படுகைக்குள் உயிர்ப்பிக்கும் நோக்குடன் எந்த ஆட்சியும் கால்வைக்கவே இல்லை. இதுதான் உண்மை. இந்த ஆறுபோல் உலகில் எந்த ஆறும் கேடுற்றிருக்காது.//

அமராவதியைப் போல நொய்யல் ஒன்றும் ஜீவநதியல்ல. (அமராவதியை ஜீவநதியென்று யார் சொன்னதென்று கேட்காதீர்கள்! அடுத்த இறையன்பு அலெக்ஸ் பால் மேனனே சொல்லி விட்டார். முடிந்தால் படித்துப் பாருங்கள். மனிதர் என்னமாய் எள்ளலோடு எழுதுகிறார்!) அமராவதியைப் போல நொய்யல் மனதுக்கு இணக்கமானதும் அல்ல. இருந்தாலும் தொன்மையான நதிக்கரை நாகரீகங்களில் ஒன்றான கொடுமணலைக் கொண்டிருக்கும் நதிக்கரை. பொருளாதாரத்தின் பெயரால், அந்நியச் செலவாணியின் பெயரால், திருப்பூர் என்ற பிரம்மாண்டத்திற்கான விலையாக பாழாய்ப் போன நதி.. நாம் அணியும் பனியனும், ஜட்டியும் எரிச்சலைத் தருகிறது.. 

Monday, September 29, 2014

குறுக்கு வழிகள்

உறக்கம் வராமல் அதிகாலை இரண்டு மணிக்கு இதை எழுதிக் கொண்டிருக்கிறேன். சொல்லப் போனால் என்னை யாரும் இதை எழுதுமாறு பணிக்கவில்லை. ஆனாலும் எழுதுகிறேன். எழுதியாக வேண்டிய கட்டாயம் ஏதோ ஒன்று என்னை உந்தித் தள்ளுகிறது, அதுவும் இன்றைக்கே! இல்லாவிட்டால் நாளை ஒரு வேளை மனது மாறி விடக் கூடும்.

சில வருடத்திற்கு முன் என்னை நீங்கள் சந்தித்திருந்தாலோ, அப்போதைய என்னை நீங்கள் அறிந்திருந்தாலோ இன்றிரவு இப்படி தூக்கமில்லாமல் தவிக்கும் இவனா அவன் என ஆச்சரியமடைவீர்கள். அப்படியாகப்பட்டவனாக இருந்தவன் நான். வலியது வாழும் என வலுவாக நம்பியவன். வாழ்க்கையில் வெற்றி பெறுவது முழுக்க முழுக்க திறமையின் அடிப்படையில் மட்டுமே என்ற ஆழ்ந்த நம்பிக்கையை என் தொடக்க காலம் கொண்டிருந்தது. அதெல்லாம் ரஞ்சித்தை சந்திக்கும் வரைக்கும் தான். ரஞ்சித் எனது முதல் மேனேஜர்.

கார்ப்பரேட் வாழ்க்கையில் எப்படி முன்னேற வேண்டும். அதற்கு எப்படி உழைக்க வேண்டும். Hard work என்றால் என்ன, smart work என்றால் என்ன? அதில் எதைச் செய்ய வேண்டும்? இரண்டையும் செய்தால் எதை எப்போது செய்ய வேண்டும்? என்ன விகிதத்தில் செய்ய வேண்டும்? எல்லாவற்றையும் சொல்லிக் கொடுத்தார் ரஞ்சித். வாழ்க்கையில் குறுக்கு வழிகள் என்று ஏதுமில்லை. விரைவு வழிகள் உண்டு. அதைக் கண்டுபிடித்து பயணிக்க வேண்டியது நம் பொறுப்பு என்பார்.

நான் ரஞ்சித்தோடு பழகிய பிறகுதான் ஒரு விஷயத்தைப் புரிந்து கொண்டேன். டிராஃபிக்கில் போனால் ஆம்புலன்ஸ் பின்னால் போக வேண்டும் என்று ஒரு நாள் கன்னியப்பனிடம் டீ குடிக்கும் போது சொன்னார். எங்கள் அலுவலகத்தின் முன்னர் சைக்கிளில் டிரம் வைத்து டீ விற்கும் கன்னியப்பன் கூடுதலாக இஞ்சி போடுவார். கன்னியப்பனுக்கு ஊர் பனையூர். கிழக்கு கடற்கரைச் சாலையில் உள்ள ஒரு கிராமம். அங்கிருந்து சைக்கிளை அழுத்திக் கொண்டு ராஜீவ் காந்தி சாலைக்கு வருவார். முதல் டிரிப் மாலை 4 மணிக்கு. அது காலியானதும் சுமார் 6 மணிக்கு இன்னொரு டிரம் கொண்டு வருவார். மூன்றாவதாக எட்டு மணியளவில் மறுபடி ஒரு நடை. மொத்தம் மூன்று டிரம் இஞ்சி டீ சுறுசுறுப்பாக விற்கும்.

ஒரு தடவை கன்னியப்பனிடம் டீ குடித்தால் மறுபடி வேறு யாரிடமும் போக மாட்டார்கள். அவர் போடும் டீ அப்படியிருக்கும். எப்போதும் அவரைச் சுற்றி பத்துப் பேர் நிற்பார்கள். அதனால் அந்த வீதியில் உள்ள டீக்கடைகளுக்கு வியாபாரத்தில் அடி. இந்த ஆள் இஞ்சி டீயோடு மட்டும் ஊற்றிக் கொடுத்து அனுப்பி விடுவார். கடைக்குப் போனால் போண்டா, பஜ்ஜி, வடை இப்படி எதையாவது தின்று விட்டு டீ குடிப்பார்கள். அதையெல்லாம் இவர் சைக்கிளை நிறுத்தி தடுத்துக்கொண்டிருந்தார்.

மொத்தம் மூன்று டீக்கடைகள் அந்த வீதியில் உள்ளன. அதில் ஒரு கடையில் டிவி வைத்து ஐபிஎல் மேட்ச் போடுவார்கள். இன்னொன்றில் ஃபாரின் சிகரெட்டுகள் கிடைக்கும். மூன்றாவதில் பஜ்ஜி வைத்துக் கொடுக்க அழகான ஆண்டி ஒன்று சிரித்துக்கொண்டே நிற்கும். ஒவ்வொன்றுக்கும் ஒவ்வொரு தனித்துவம். அவர்கள் மூன்று பேருக்கும் கன்னியப்பனை விரட்ட வேண்டும் என்பதில் ஒற்றுமை. அதனால் அவர்களும் சைக்கிளைப் பிடித்து அதில் டிரம் கட்டி, அதற்கு ஒரு ஆளும் பிடித்து கன்னியப்பன் நிற்கும் இடத்துக்குப் பக்கத்தில் நிறுத்தினார்கள். இந்த மூன்று கடைக்கும் கன்னியப்பன் நிற்கும் இடத்துக்கும் ஒரு நாற்பதடி தூரம் இருக்கும். அங்கே கன்னியப்பன் நாலு மணிக்கு வருவதற்கு முன்பாக மூனேமுக்காலுக்கே ஆளை நிறுத்தினார்கள்.

கன்னியப்பனுக்காகவே வரும் கூட்டம் விசுவாசமானது. வழக்கமாக ஒரே வியாபாரியிடம் வாடிக்கையாக இருப்பதை ஆங்கிலத்தில் விசுவாசம் என்றுதானே சொல்வார்கள்! கன்னியப்பனிடம் பல மொழி பேசும் வாடிக்கையாளர்கள் வருவார்கள். சாஃப்ர்வேர், கால்சென்டர் என நான்கைந்து கம்பெனிகளில் வேலை செய்யும் ஆட்கள் அங்கே சுடச் சுட டீயை உறிஞ்சிக் கொண்டு உலக அரசியலையும், தத்தமது அலுவலக அரசியலையும் பேசுவார்கள். தமிழ், தெலுங்கு, மலையாளம், இந்தி, ஆங்கிலம் என சகல பாஷைகளிலும் சம்பாசணைகள் அரங்கேறும். இரவு எட்டு மணிக்கு மேல் கால்சென்டர் பெண்கள் கூட கன்னியப்பனிடம் வருவார்களாம். சமரசம் நிலவுமிடம் சாராயக் கடை என்பார்கள். அது நிஜமோ பொய்யோ தெரியாது. ஆனால் தேநீர்க் கடைகள் அப்படித்தான்.

இந்த மூன்று டீக்கடை முதலாளிகளும் கூலிக்குப் பிடித்து சைக்கிளோடு கன்னியப்பனுக்குப் பக்கத்திலேயே நிறுத்தியவனைப் பார்க்க நேபாளி போலிருந்தான். அவனை யாரும் சீந்தவேயில்லை. கன்னியப்பனிடம் டீ வாங்கிக் கொண்டு இந்த நேபாளி பக்கத்தில் நின்று குடிக்க ஆரம்பித்தார்கள். இப்படி இரண்டு வாரம் ஓடியது. ஒரு பையன் அவசரமாக இந்த நேபாளியிடம் போய் ”ஒரு டீ” என்று சொல்லி விட்டு சுதாரித்துக்கொண்டு ஸாரி கேட்டு மறுபடியும் கன்னியப்பனிடம் வந்தான். கன்னியப்பன் மூன்று டிரம் விற்ற பிறகும் கூட கால்வாசி டிரம் கூட தீராமல் அந்த நேபாளி இரவு பத்து மணிக்கு வண்டியைத் தள்ளிக்கொண்டு போவானாம். “நம்ம கூட ஏவாரத்தில போட்டி போட்டு தாக்குப் பிடிக்க முடியல” என்றார் லுங்கி கட்டியிருக்கும் கன்னியப்பன்.

பிறகு ஒரு மாதம் டீக்கடைக்கார ஆட்கள் கன்னியப்பனைத் தொந்தரவு செய்யவில்லை. அதன் பிறகு வேறு ரூபத்தில் தாக்கினார்கள். சைக்கிளுக்கு அடுத்த கட்டமாக ஒரு தள்ளுவண்டியைக் கொண்டு வந்து கன்னியப்பன் வழக்கமாக நிற்கும் இடத்தில் நிறுத்தினார்கள். அதில் டீம், காஃபி, போண்டா, பஜ்ஜி என சகலமும் இருந்தது. பசங்க அந்த தள்ளு வண்டியைக் கண்டுகொள்ளவேயில்லை.

டீ கடைக்கார முதலாளிகள் இவன் அப்படியென்ன சொக்குப்பொடி போடுகிறான் என குழம்பியிருப்பார்கள். ”நம்ம கை வசம் தொழில் இருக்கு. ஆண்டவன் புண்ணியத்துல நீங்க எல்லாம் இருக்கீங்க” என்று கன்னியப்பன் சொன்ன தினத்தில் ரஞ்சித் என்னிடம் ஆம்புலன்ஸ் பின்னால் செல்வதைப் பற்றி விளக்கினார்.

டிராஃபிக்கில் ஆம்புலன்ஸ் பின்னால் செல்வதும், டோல் கேட்டில் அரசுப் பேருந்து பின்னால் செல்வதும் எத்தனை பெரிய மேனேஜ்மெண்ட் கான்செஃப்ட் என அன்றைக்கு நான் வியந்து போனேன். அது வரைக்கும் நமது வெற்றிக்கு நமது திறமை மட்டுமே காரணம் என கருங்கல்லைப் போல உறுதியாக நினைத்தவன் அந்த நினைப்பை மாற்றிக் கொண்டேன். நமது வெற்றிக்குக் காரணம் நமக்கு முன்னுள்ள வெற்றிடமே என உணர்ந்தேன். சுங்கச் சாவடியில் சீக்கிரமாகச் செல்ல நமக்கு முன்னுள்ள அரசுப் பேருந்து துரிதமாகப் போவது முக்கியம் எனப் புரிந்தது. சில்லரையே கொடுக்காத தண்ணீர் லாரியோ, பணமே கொடுக்க மாட்டேன் என முரண்டு பிடிக்கும் லோக்கல் அரசியல்வாதியின் காரோ நமக்கு முன்னால் மாட்டினால் அவ்வளவு தான்.

கார்ப்பரேட் வாழ்க்கை கூட அப்படித்தான் என்பதை ரஞ்சித் சொல்லிக் கொடுத்தார். எனக்கு அரசியலே பிடிக்காது என்று சொல்லி விட்டு, தான் என்ன தொகுதி தனக்கு யார் எம்,எல்.ஏ என்றெல்லாம் தெரிந்து கொள்ள விரும்பாத ஒருத்தன் சாஃப்ட்வேர் வேலைக்கு வந்தால் அங்கிருக்கும் அலுவலக அரசியலைச் சமாளித்தாக வேண்டும் என்பதையே ரஞ்சித் மூலமாகத்தான் கற்றேன். பொலிட்டிகல் சயின்ஸ் எஞ்சினியரிங் சிலபஸில் வைத்தால் நன்றாக இருக்கும் என்று கூடக் கருதினேன்.

இதில் பரிதாபத்துக்குரிய விஷயம் ஆபீஸ் பாலிட்டிக்ஸ் என்ற விஷயம் இருப்பதே பல பேருக்குத் தெரியாமல் இருப்பதுதான். நன்றாக வேலை செய்தால் புரமோஷன் கிடைக்கும், சம்பள உயர்வு கிடைக்கும் என முட்டாள்தனமாக நினைத்துக்கொண்டு மாடு மாதிரி உழைப்பதில் பயனில்லை. வேலை செய்வதை விட வேலை செய்கிறோம் என் மற்றவர்களுக்கு நீரூபிப்பதில் அதிக நேரம் செலவிட வேண்டியிருக்கிறது. “டேய்.. வேலை செய்யறவனுக்கு வேலை குடுப்பாங்க. வேலை செய்யாதவனுக்கு புரமோஷன் குடுப்பாங்க” என வேடிக்கையாகக் கூட ரஞ்சித் சொல்வதுண்டு. அது வெறும் வேடிக்கைக்காக மட்டும் சொன்னதாக நான் நினைக்கவில்லை.

நமக்கு மேலே இருக்கிறவன் மேலே போக வேண்டும். அப்போதுதான் நாம் அவனுடைய இடத்திற்குப் போக முடியும். டிராஃபிக்கில் ஆம்புலன்ஸ், டோல் கேட்டில் அரசு பஸ் விவரம் சரியாகப் பொருந்தியது. சரியான மேனேஜர் பின்னால் போக வேண்டும். நல்ல டீம் அமைவது மேனேஜரின் வெற்றிக்கு எந்த அளவு முக்கியமோ, அதை விட முக்கியம் தன்னைத் தானே முன்னேற்றிக்கொள்ளும் மேனேஜர் கிடைப்பது. அடுத்த லெவலுக்கு மேலே போகாத மேனேஜர் தனக்குக் கீழே இருப்பவனைக் கண்டு பயப்படுவான். பொறமையோடு பார்ப்பான். எப்படா போட்டுத் தள்ளலாம் என்று நேரம் பார்த்திருப்பான். மென்மேலே ஏறிச் செல்லும் மேனேஜர் அப்படியல்ல. தன்னோடு சேர்த்து நம்மையும் மேலே இழுத்துச் சென்று விடுவார். ரஞ்சித் அவ்வாறான ஒரு மேனேஜர்.

இந்த கார்ப்பரேட் டிராஃபிக்கில் எனக்கு முன்னால் வேகமாக ஓடும் ஆம்புலன்ஸ் ரஞ்சித். நான் வேலைக்குச் சேர்ந்த புதிதில் ரஞ்சித் வெறும் டீம் லீடர். இன்று பேங்கிங் டிவிஷனின் இன்சார்ஜ். வருடம் 200 மில்லியன் டாலர் பிசினஸ் நடக்கும் டிவிஷன். அவருடைய வாலைப் பிடித்துக்கொண்டு நானும் அவர் பின்னாலேயே முடிந்த வரைக்கும் தொத்திக்கொண்டு வந்து விட்டேன்.

மேலே வர வர பல விஷயங்கள் புலப்படுகின்றன. ஒவ்வொரு மட்டத்திலும் ஒரு வகையான திறமை தேவைப்படுகிறது. திறமை என்பதை புத்திசாலித்தனமாக மட்டுமின்றி தேவைக்கு ஏற்ப செய்யும் செயல்பாடாகவும் கொள்ளலாம். நம்மை விடப் பெரிய காஜேஜில் படித்தவன் நமக்குக் கீழே வேலை செய்வதையும், நம்மை விடச் சின்னப் பையன் நமக்கு மேலே போய் அமர்ந்து கொண்டு கேள்வி கேட்பதும் இயல்பாக நடக்கிறது.

”ஏன் டார்கெட் மிஸ் ஆச்சு?” என்ற கேள்விக்கு கீழே இருக்கிற டீம் நிறையத் தவறு செய்து விட்டதாகச் சொன்னால், “எல்லோருமே அவனவன் வேலையைத் தப்பில்லாமப் பண்ணிட்டுப் போயிட்டா மேனேஜர்னு நீ எதுக்கு இருக்கே?” என்கிறார்கள்.

போன வருசம் 10 பேரைக் கொண்டு 100 வேலை செய்தால் இந்த வருடம் 8 பேரை வைத்து 120 வேலையை எதிர்பாக்கிறது நிறுவனம். மேனேஜர்கள் என்ன சூப்பர்மேனா? வருகிறவன் போகிறவன் எல்லாம் கேள்வி கேட்கிறான். குவாலிட்டி டீமில், ஃபைனான்ஸ் டீமில், ஆடிட்டிங் டீமில், HR டீமில் என எல்லாப் பயலும் கேள்வி கேட்கிறான்.

இதெல்லாம் கூடப் பரவாயில்லை. முப்பது ஆண்டுகளாக சந்தையில் இருக்கும் கம்பெனி எங்களுடையது. நிறையப் பேர் பத்து வருடம், பதினைந்து வருடம் வேலை செய்கிறார்கள். நன்மதிப்பும், நற்பெயரும் பெற்ற நிறுவனம். இங்கே வேலை செய்யும் ஊழியர்களின் சராசரி அனுபவம் ஆறாண்டுகள்.

ஆனால் எனக்கு நான்கரை ஆண்டுகள் சராசரி அனுபவம் என இலக்கு வைத்திருப்பதாக ரஞ்சித் கான்ஃபரன்ஸ் காலில் சொன்னார். மனிதர் டிவிஷன் ஹெட் ஆன பிறகு கன்னியப்பனிடம் டீ குடிக்கவெல்லாம் வருவதில்லை. ஒரு ஊரில் நிலையாக இருந்தால் தானே? ஊர் ஊராகப் பறந்து கொண்டேயிருப்பார். அதனால் எங்கள் ஃபார்மல், இன்ஃபார்மல் உரையாடல்கள் அனைத்துமே தொலைபேசி மூலமாகத்தான். கன்னியப்பன் சைக்கிள் பக்கத்தில் நின்று பேசிய காலங்கள் கடந்து விட்டன. நேற்று கம்பெனியில் சேர்ந்த பொடியன்கள் எல்லாம் ஃபிகரோடு ஆஃபீஸ் கேண்டீனில் ஜூஸ் குடித்துக் கொண்டிருப்பார்கள். நான் மட்டும் கன்னியப்பனிடம் தனியே வரக் கற்றிருக்கிறேன்.

”டேட்டா எடுத்துட்டு வா. பேசலாம். எல்லா 15 வருச ஆட்களையும் வெளியே அனுப்பனும்” என்றிருக்கிறார்.

இப்போது எனது டீமின் சராசரி அனுபவம் ஆறைரை ஆண்டுகள். அவர் கொடுத்த இலக்கு கடியது. பதினைந்து ஆண்டுக்கு மேலே அனுபவம் உள்ள ஆட்களின் பட்டியல், அவர்கள் வாங்கும் சம்பளம் எல்லாவற்றையும் கேட்டிருக்கிறார். அவர்கள் வேலையை அவர்களை விட இளையவர்களை வைத்து செய்ய முடியாதா? இந்தக் குழடுகளை ரிலீஸ் செய்தால் ஏதாவது பாதிப்பு இருக்குமாவென்றும் கேட்டிருக்கிறார்.

அவர்களை புராஜெக்டை விட்டு வெளியேற்ற வேண்டும். வேறு யாரும் புராஜெக்டில் எடுக்க மாட்டார்கள். என்னைப் போலத்தானே மற்றவர்களும் இருப்பார்கள்? ரிலீஸ் ஆனவர்களை கம்பெனியில் அதிகபட்சம் மூன்று மாதம் சம்பளம் கொடுத்து வைத்திருப்பார்கள். அதன் பின்னர்,, ”நீயே ராஜினாமா பண்ணிட்டுப் போய்ட்டா நல்லது” என HR பஞ்சாயத்து வைப்பார்கள்.

அப்படி ரிலீஸ் செய்ய வேண்டிய நாலு பேரையும் நினைத்துக்கொண்டே, “என்ன ஒரு வாரமா ஆளையே காணோம்?” என கன்னியப்பனிடம் கேட்டேன். ஆள் வழக்கமாக நிற்கும் இடத்தில் இல்லை. வீதி துவங்கும் இடத்தில் நின்றார்.

“இந்த கடைக்காரங்க போலீஸ் ஸ்டேஷன்ல உக்கார வெச்சுட்டாங்க. வீதி மொனையோட நின்னுக்கிடனுமாம். உள்ளே வரக்கூடாதாம்” என்றார் விரக்தியாக. கூட்டமே இல்லை. நிச்சயமாக அத்தனை தூரம் தேடிப் பிடித்து நடந்து வருமளவுக்கு விசுவாசமான வாடிக்கையாளர்கள் குறைவு.

நான் ரிலீஸ் செய்ய வேண்டிய நாலு பேரும் நிறையச் சம்பளம் வாங்குகிறார்கள். உடனே வெளியே வேலை கிடைக்காது. குழந்தைகள், வீட்டுக் கடன் இத்தியாதிகள். அவர்கள் செய்யும் வேலையை அதில் கால் பங்கு ஊதியத்தில் செய்து முடிக்க இளைஞர்கள் காத்திருக்கிறார்கள். கன்னியப்பன் கூட இன்னொரு சாஃப்ட்வேர் கம்பெனி வாசலைப் பிடித்து விடுவார். இந்த நால்வர் வெளியே போனால் என்ன செய்வார்களோ தெரியவில்லை.

ஆகவே உறக்கம் வராமல் அதிகாலை இரண்டு மணிக்கு இதை எழுதிக் கொண்டிருக்கிறேன். ஆம், இந்த ராஜினாமாவை எழுதுமாறு என்னை யாரும் பணிக்கவில்லை. ஆனாலும் எழுதுகிறேன். அதுவும் இன்றைக்கே! நாளை ஒரு வேளை மனது மாறி விடக் கூடும். 
(நன்றி: ஃபெமீனா தமிழ் இதழ்)

Sunday, September 07, 2014

சாகித்ய அகாடமி அபிலாஷ்

சாகித்ய அகாடமி யுவ புரஷ்கார் விருது பெற்ற அபிலாஷுக்கு நேற்று பாராட்டுக் கூட்டம் ஒன்று நடந்தது.

மலைச்சொல் கலை இலக்கிய சமூக மையம் சார்பாக பால நந்தகுமார் இந்த நிகழ்ச்சியை சென்னை டிஸ்கவரி புக் பேலஸ் அரங்கில் ஏற்பாடு செய்திருந்தார். கூட்டம் ஐந்தரைக்கு என்று அழைப்பு விடுத்திருந்தார்கள். நான் போகும் போதே பாலா பேச ஆரம்பித்திருந்தார். பிறகு இலக்கிய விமர்சகர் வெளி ரங்கராஜன் அவர்கள், தமிழ்மகன், விநாயக முருகன், லஷ்மி சரவணகுமார் ஆகியோர் பேசினார்கள்.

மூத்த எழுத்தாளர் பிரபஞ்சன் கூட்டத்தில் கலந்து கொள்வதாக ஏற்பாடாகியிருந்தது. அவரது மகனுக்கு உடல் நலம் சரியில்லாத காரணத்தால் அவர் கலந்து கொள்ள முடியவில்லை என்றார்கள். மனிதர் 53 ஆண்டுகளாக எழுதிக்கொண்டிருக்கிறார். அவர் கலந்து கொண்டிருந்தால் இன்னும் சிறப்பாக இருந்திருக்கும். இந்தக் கூட்டத்தில் தமிழ் மகன், பாதரசம் பதிப்பகம் சரவணன் உள்ளிட்டோரை முதன் முறையாகச் சந்திக்கும் வாய்ப்புக் கிடைத்தது. சரவணனைப் பற்றி நிறையக் கேள்விப்பட்டிருக்கிறேன். சில பேர் இலக்கியத்தைத் தூக்கிச் சுமப்பதாக பில்டப் செய்து திரியும் போது சரவணனைப் போன்ற சில சத்தமில்லாமல் புத்தகம் பதிப்பிப்பதோடு, அவற்றுக்கான ராயல்டியை சரியாகச் செலுத்து விடுகிறார்கள்.

பால நந்தகுமார் கூட புத்தகங்களைப் பதிப்பிக்கிறார். அவர் பேசும் போது பதிப்புத் தொழில் லாபகரமான தொழில் என்பது இறங்கிப் பார்த்த பிறகே தெரிவதாகச் சொன்னார். 200 ரூபாய் புத்தகத்திற்கு உற்பத்தி & விநியோகச் செலவு எல்லாமே சேர்த்து 100 ரூபாய் மட்டுமே ஆவதாகக் குறிப்பிட்டார். மிச்சமிருக்கும் 100 ரூபாயில் பதிப்பாளர்கள் எழுத்தாளனுக்கு என்ன தருகிறார்கள் என்பது கேள்விக் குறி. 

கால்கள் – விருது பெற்ற அபிலாஷின் நாவல். பேசிய நண்பர்கள் சிலர் நாவலைச் சிலாகித்துப் பேசினார்கள். நல்ல நாவல். உடல் ஊனம் தொடர்பாக அந்த வலியை அனுபவித்தவன் அதை வார்த்தையில் வடித்த படைப்பு ‘கால்கள்’. உயிர்மை பதிப்பக்கத்தில் வெளியான நூல். ஐநூறு பக்கத்துக்கும் மேல். கனமான ஒன்று.

இது போன்ற விருதுகள் ஒரு படைப்பாளிக்கு முக்கியமானவை. நாம் படைப்பாளிகளை அவர்கள் வாழும் காலத்தில் கொண்டாடுவதேயில்லை. புதுமைப் பித்தனையெல்லாம் இந்தச் சமுதாயம் நன்றாக வைத்திருந்தால் அவர் இன்னும் பத்து ஆண்டுகளாவது கூடுதலாக உயிரோடு இருந்திருப்பார் என்று வெளி ரங்கராஜன் குறிப்பிட்டார். எல்லாக் காலத்திலும் இது நடந்தேயிருக்கிறது. பாரதி கூட அநாதையாகத்தான் செத்துப் போனான்.

ஒரு படைப்பாளிக்கு அங்கீகாரம் முக்கியமானது. தான் இது வரைக்கும் எழுத்தின் மூலம் நூறு ரூபாய் கூடச் சம்பாதித்ததில்லை என்று அபிலாஷ் சொன்னார். ஆனால் அதற்காக பெரிதாக வருத்தமோ, கோபமோ இல்லை. மரணத்தின் விளிம்பைத் தொட்டு விட்டு வந்தவன், அதனால் தான் இப்போது வாழும் ஒவ்வொரு நாளும் போனஸ் என்ற மனோநிலையில் சஞ்சரிக்கும் ஒருவன் வாழ்க்கையை அப்படித்தான் கொண்டாடுவான். இது ஒரு மனநிலை. வினோதமான மனநிலை. வெளியில் இருந்து பார்க்கிறவர்களுக்கு வேடிக்கையாகத் தோன்றும்.

சமூக வெளியின் எழுத்தாளனாக, படைப்பாளியாக தன்னை முன்னிறுத்தும் ஒவ்வொருவனும் தனது ஜீவனையும், ஜீனவத்தையும் கவனித்தாக வேண்டும். பிள்ளை குட்டியின் வயிற்றை நிரப்ப வேண்டும். குடும்பத்தின் பொருளாதாரப் பளுவைத் தோளில் தூக்கிச் சுமக்க வேண்டும். இதைத் தாண்டித் தான் எழுதுவது, எழுதிக் கிழிப்பது, புரட்சி செய்வது எல்லாமே. இந்த இடத்தின் தான் அபிலாஷ் மாதிரியான மனநிலையைக் கொண்டாட வேண்டியிருக்கிறது. மரணத்தைத் தொட்டு மீண்டு வந்த இன்னொருவர் வாய்ப்பாடியில் அமர்ந்து கொண்டு காதலையும், காமத்தையும் கலந்து கலக்கிக் கொண்டிருக்கிறார்.

கூட்டத்தில் பால நந்தகுமார் என்னையும் ஓரிரு வார்த்தைகள் பேசுமாறு அழைத்தார். நான் முன்னேறுபாடுகள் செய்து போயிருக்கவில்லை. வாசிப்பது என்பது தொலைக்காட்சி பார்ப்ப்பது போலன்று. அதற்கு effort செலவிட வேண்டியிருக்கிறது. டிவி பார்ப்பது passive டைம்பாஸ். புத்தகம் வாசிப்பது active டைம்பாஸ். வாசிப்பதற்கே இவ்வளவு உழைப்பு தேவைப்படும் போதில், அதை எழுதுவதற்கு எத்தனை உழைப்பும், மெனக்கெடலும் செலவிட வேண்டும்? அதற்கான அங்கீகாரம் ஒரு படைப்பாளியை உயிர்ப்போடு வைத்திருக்கின்றன. கால்கள் நாவலுக்கான விருது என்பதை விட, அபிலாஷ் என்கிற தனி மனிதனின் உழைப்பிற்கும், அவனது clean boy பிம்பத்திற்குமான அங்கீகாரம் இது. இது வரைக்கும் எழுத்தின் மூலம் நூறு ரூபாய் கூட ஈட்டாத ஒருவன், யாதொரு பிரதிபலனும் எதிர்பாராது செயல்படுவதற்குக் கிடைத்த அங்கீகாரம். இத்தகைய அங்கீகாரங்கள் முக்கியமானவை என்ற வகையிலே சாகித்ய அகாடமிக்கு நன்றிகள். அதை விட முக்கியமாக பாராட்டுக் கூட்டம். அதற்காக பால நந்தகுமாருக்கு சுருக்கமாக நன்றி சொல்லி அமர்ந்தேன்.

பேப்பர் ரோஸ்ட் லிவருக்கு நல்லது. பாராட்டு படைப்பாளிக்கு நல்லது.

Monday, September 01, 2014

நீயா நானா டீமுக்கு நன்றி..

இளம்பிள்ளை வாதம் தாக்கிய நபர்களை நான் பிளஸ்-2 முடியும் வரையிலும் சந்தித்ததில்லை. சூம்பிய காலோடு கல்லூரியில் ஒரு பையன் இருந்தான். அவன் கையால் பெடல் செய்யும் சைக்கிளில் எங்கும் பயணிப்பான். பயணம் என்பது பெரிய வார்த்தை. Basic mobility க்கே அவனுக்கு சைக்கிள் அவசியமாகவிருந்தது. பலவீனமான கால்களை உடையவன் அவன். அவனது கைகள் வலுவானவை. ஒரு முறை சக மாணவன் ஒருவனோடு உண்டான வாக்குவாதத்தின் முடிவில் இவன் ஓங்கி அறைய, வம்புக்கு இழுத்து அறை வாங்கியவன் சுருங்கி விழுந்ததாகச் சொன்னார்கள்.

சில ஆண்டுகளுக்கு முன் மனுஷ்யபுத்திரனோடு ஒரு முறை பேசுகையில் இந்தப் பேச்சு வந்தது. அப்போது நாணயம் விகடனில் தொடர் எழுதினேன். அதை வாசித்துப் பார்த்து விட்டு, ”உங்களை விட நிதி மேலாண்மையில் சிறந்தவர்கள், வல்லுனர்கள் சென்னையில் இருப்பார்கள் என்றே நினைக்கிறேன். ஆனால் எளிமையாக எடுத்துச் சொல்லும் திறமே உங்களை மற்றவர்களிடமிருந்து வேறுபடுத்திக் காட்டுகிறது” என்றார். கால்கள் பலவீனமானவருக்கு கைகள் பலமாக இருக்கும். அப்படித்தான் பேச்சு சரளமாக வராதவன் எழுத்தைத் தேர்ந்தெடுத்தேன் என்றேன் அவரிடம். சிரித்துக்கொண்டார். கால்களின் ஆல்பம் எழுதியவர் அல்லவா!

மேடைப் பேச்சு அல்லது பொது வெளியில் உரை என்பது கூச்சமான பதற்றமான ஒரு விஷயமாகவே இருந்திருக்கிறது. காரணம் திக்குவாய்! பெண்களோடு பேசக் கூச்சம், கூட்டத்தோடு கலந்துகொள்ளக்

கூச்சம், நாலு பேருக்கு மத்தியில் நம் கருத்தைச் சொல்லக் கூச்சம், மாற்றுக் கருத்து இருந்தாலும் அமைதியாகவே இருக்கச் சொல்லும் கூச்சம். இப்படித்தான் இது வரைக்குமான வாழ்வின் பெரும்பகுதி கழிந்திருக்கிறது.

இத்தனைக்கும் தெரிந்துதானிருக்கிறது - திக்குவாய் என்பது வியாதியல்ல; அது ஒரு கெட்ட பழக்கம் என்று. ஆம் கெட்ட பழக்கம். மாற்ற முடியாத கெட்ட பழக்கமல்ல. எந்தக் கெட்ட பழக்கமும் கை விட முடியாததல்ல. அதற்கு நிறையப் பயிற்சியும், முயற்சியும், மனோ வலிமையும், இம்ப்ரூவ்மெண்ட் எல்லாம் வேஸ்ட் என நினைத்து மறுபடியும் அதே கெட்ட பழக்கத்தில் விழாதிருக்காத நம்பிக்கையும் வேண்டும். கிரிக்கெட் வீரனின் ஃபார்ம் போல இது அலைபாயும் தன்மை கொண்டது.

மூளை வேகமாகச் செயல்பட்டு, அந்த வேகத்துக்கு பேச்சு உறுப்புகள் ஈடுகொடுக்காமல் போகும் போது திக்கிப் பேசுகிறோமாம். திக்குவாயர்கள் மற்றவர்களை விட வேகமாகச் சிந்திக்க வல்லவர்களாம். இதை ஓய்வு பெற்ற ராணுவ அதிகாரி ஒருவர் சொல்லியிருக்கிறார். டென்ஷனைக் குறைத்தாலே போதுமாம். நினைக்கிற கருத்துக்கள் அத்தனையும் ஒரே மூச்சில் கொட்டிவிட வேண்டும் என்ற வேகத்தைக் குறைத்து நிதானமாக, நம் எதிரே இருப்பருக்கு நம் பேச்சைக் கேட்பதைத் தவிர வேறு வேலையில்லை என்ற நினைப்பில் பேசினால் போதுமாம்.

குடியை விடுவதற்கான முதல் படி தனக்கு குடிப்பழக்கம் உள்ளதை ஒப்புக்கொள்வது மட்டுந்தான். திக்குவாய்ப் பழக்கத்தில் இருந்து மீள அப்பழக்கம் இருப்பதை ’ட்ரிக்’ செய்து மறைக்காமல் இருப்பது அவசியம். ”நான் அப்படித்தான். என்னான்றே அதுக்கு?” என்ற மனநிலை வேண்டும். ஒரு சில காலகட்டங்களில் மாதக் கணக்கில் திக்கவே திக்காது. வேறு சில தருணங்களில் வார்த்தைகள் முட்டி நிற்கும். உதவுகள் லாக் ஆகி விடும். தாடை பிடித்துக்கொள்ளும். பதட்டம், பதட்டம், பதட்டம். சற்று ஆசுவாசப்படுத்திய பிறகு பெருமூச்சு ஒன்றில் வாயிலாக டென்ஷனை வெளியேற்றிப் பேசினால் நிதானமாக வார்த்தைகள் வந்து விழும். எல்லாத் திக்குவாயர்களுக்கு ரிலாக்ஸாகப் பாட்டுப் பாடும் போது திக்கவே திக்காது.

சரி.. இதை இங்கே நீட்டி முழக்கக் காரணம் என்ன? இந்தச் சின்னச் சின்ன மாற்றங்களை, முன்னேற்றங்களை உருவாக்க மெனக்கெடும் உழைப்பை யாரோ ஒரு மேனேஜர் அல்லது கஸ்டமர் அல்லது உறவுகள் ஓரிரு சொற்களில் டென்ஷன்படுத்திச் சிதைத்து விடுவார்கள். பரமபத விளையாட்டில் பாம்பு கொத்தி மறுபடியும் முதல் கட்டத்திற்கு வந்து தொலைக்க வேண்டும். இம்ப்ரூவ்மெண்டு என்பது தற்காலிகமானது என்ற மனநிலை ஏற்பட்டு விடும்.  அதற்காக அப்படி அலட்டிக்கொள்ளாவிட்டால் என்ன? பள்ளியில் பேச்சுப் போட்டியைக் கூட ஒரு பொருட்டாகவே நான் கருதியதில்லையே. அந்தப் பழம் புளித்தது!

அதற்குக் காரணமும் இருந்தது. நம் பலவீனத்தைச் சரி செய்யச் செலவிடும் நேரத்தினை நம் பலத்தினைப் பெருக்கச் செலவிட்டால் போதுமென்று நினைத்திருந்தேன். அதனால் பெருமாற்றம் ஏற்படும் என நம்பினேன். கால்கள் சூம்பியவன் கைகளை பலப்படுத்துவது போல. அப்படித்தான் எழுதியது, எழுதிக்கொண்டிருப்பது எல்லாமே. ஆனால் ஒரு கட்டத்திற்குப் பிறகு தான் நினைக்கும் விஷயத்தினைத் தெளிவாகப் பேச்சிலும் புலப்படுத்தியாக வேண்டிய கட்டாயம் இல்லாமல் இல்லை என்பது புரிகிறது.

பத்து வருடத்திற்கு முன் பெங்களூரில் வசித்த போது அங்கே Stammering Cure Center என்ற மையத்திற்குப் போனேன். அதில் இந்தக் கெட்ட பழக்கத்தை மாற்ற சில பயிற்சிகளைக் கற்றுத் தந்தார்கள். கெட்ட பழக்கம் கொஞ்சம் கொஞ்சமாக மாறியது. ஆனால் குடியை மறந்தவன் பழைய நண்பனோடு சேரும் போது ஒரேயொரு நாள் குடித்துப் பார்க்கிற மாதிரி, பழையபடி இந்தக் கெட்ட பழக்கம் அவ்வப்போது தலை தூக்கியது. பயிற்சிகள் கைவிடப்பட்டன. செல்லமுத்து குப்புசாமியை உலகம் திக்குவாயனாகவே ஏற்றுக்கொண்டதாக நினைத்து சமாதானம் செய்துகொண்டேன். பணியிடத்தில், குடும்பத்தில், நண்பர்கள் சுற்றத்தில் அப்படியே ஒப்புக்கொண்டார்கள். என்னை நிராகரிப்பதற்கான காரணமாக இது இருக்கவில்லை.

ஆனால் இந்த status quo போதுனாமதாக இல்லையோ என்னவோ! ஒரு மாதம் முன் ’நீயா நானா’ டீம் பார்வையில் நான் பட்டிருக்கிறேன். ’தமிழர்கள் உணர்ச்சிப் பெருவெள்ளமாக இருக்கிறார்களா?” என்ற ஷோவோடு சேர்த்து கடந்த மாதத்தில் மூன்று சந்தர்ப்பங்களில் கூட்டத்தில் உரையாற்றும் வகையில் அமைந்து விட்டது. ஒன்று நீயா நானா, இன்னொன்று மெட்ராஸ் ஸ்டாக் எக்சேஞ்சில் நடந்த Investor Awareness Program, மூன்றாவது நடுகல் பதிப்பகம் நடத்திய குருத்தோலை நாவல் வெளியீட்டு விழாவில் பேசியது.

இதில் நடுகல் நிகழ்வு வேடிக்கையானது.

“ஏற்புரை உங்க பேரைப் போடலாம்ங்களா? எதுக்கும் உங்ககிட்டக் கேட்டுட்டு போடச் சொன்னாரு கோமு” என்றார் பதிப்பக உரிமையாளரான சதுரங்க வேட்டையில் நடித்த நடிகர் ஒருவர்.

“ஏற்புரைதானுங்க.. ஆத்தீட்டாப் போவுது” என்று குருட்டுத் தைரியத்தில் சொல்லி வைத்தேன். சிற்சில தடங்கல்களோடு நல்லபடியே நடந்தது அது.

இப்போது நீயா நானா ஷோ. ஒரு திக்குவாயனுக்கான ஒரு மிகப் பெரிய அங்கீகாரமாக இதைக் கருதுகிறேன். இன்னும் கூட நிதானமாகப் பேசியிருக்கலாம். பேசியிருக்க வேண்டும். இயக்குனருக்கு நிறைய எடிட்டிங் வேலையைக் குறைத்திருக்கலாம்.

பெங்களூர் Stammering Cure Center ஆட்கள் கண்ணாடி முன் நின்று பேசிப் பயிற்சி எடுக்கச் சொல்வார்கள். பேசியதை ரெக்கார் செய்து திரும்பப் போட்டுக் கேட்கச் சொல்பார்கள். ஆட்டோ கரெக்‌ஷன் டெக்னிக்குகள். அதை பத்து வருடத்தில் அவ்வப்போது செய்திருக்கிறேன். தொடர்ச்சியாகச் செய்ததில்லை. ஈரோட்டில் நடுகல் பதிப்பகத்தினர் வீடியோ எடுத்தார்கள். அது இன்னும் கைக்கு - அவர்கள் கைக்குத்தான் - வந்து சேரவில்லை. அதனால் பேச்சு எப்படியிருந்தது என்று தெரியாது. பிறகுதானே நாம் பார்ப்பது? சென்னைப் பங்குச் சந்தையில் பேசியதற்கு வீடியோ பதிவு கிடையாது.

நீயா நானா அம்மாதிரிக் கிடையாது. கண்ணாடியைப் போல வீடியோ பொய் சொல்வதில்லை. மூச்சு ’லாக்’ ஆகி, பேச்சு தடைபட்ட இடங்களைக் காண முடிந்தது. பல விஷயங்களை உணர்த்தியது என்றே சொல்ல வேண்டும். மறுபடியும் பயிற்சியை மேற்கொள்ள வேண்டிய கட்டாயமும் புரிந்தது.

அதெல்லாம் ஒரு பக்கம் இருந்தாலும் நேற்றைய நீயா நானா ஷோ தோராயமாக 20 இலட்சம் திக்குவாய்த் தமிழர்களில் ஒரு இருபதாயிரம் பேருக்காவது உற்சாகமும், நம்பிக்கையும் அளிக்கும் என உறுதியாக நம்புகிறேன். மக்கள் தொகையில் 2-3 சதவீதம் பேர் வருமான வரி கட்டுகிறார்கள். அதே விழுக்காட்டினர் திக்குவாயர்களாகவும் இருக்கிறார்கள். வெகு சிலர் மட்டுமே அதிலிருந்து மீண்டு வருகிறார்கள். மற்றவர்கள் செய்யாத தவறுக்காக ஆயுள் தண்டனை அனுபவிக்கிறார்கள். சினிமாவில் காமெடிக்கு மட்டுமே பயன்படும் திக்குவாயர்கள் அண்ணன் ஆறுமுகத் தமிழனுக்குக் கொடுத்த அதே பரிசை எனக்கும் கொடுத்த ஆண்டணிக்குத்தான் நன்றி சொல்லியாக வேண்டும். 

Saturday, August 23, 2014

எமோஷனல் டிவிடெண்ட்னு சொல்றாங்க

கரூர் நண்பர் நலன் குமாரின் விமர்சனம் ஃபேஸ்புக்கில்:

புத்தக வெளியீட்டு விழாவில் கலந்து கொண்டு, எழுத்தாளரின் ஆட்டோகிராப்புடன் இந்த நாவலைப் பெற்றேன்.

கொங்கு வட்டார பேச்சு வழக்குகளையும் சொல்லாடல்களையும் மிக நேர்த்தியாக பதிவு செய்துள்ளார். Colloquial நடையை பயன்படுத்தியுள்ளதாலும், அன்றாடம் அதே பேச்சு வழக்குகளில் கரூரில் வசிப்பதாலும் எனக்கு அப்படியே நாவவில் ஒன்றிப் படிக்க சுலபமாகவும், சுவாரசியமாகவும் இருந்தது.

கல்யாணத்தில் பாடும் மங்கல வாழ்த்துப் பாடலை விரிவாகக் கொடுத்துள்ளார். இது வரை, நான் ஏனோ தானோ என்று கேள்விப்பட்டதை, முழுமையாக படித்த திருப்தி.

பண்ணையம் பங்கு பங்கறது சம்மந்தமாக வரும் அத்தியாயம் 5 தான் என்னை மிகவும் கவர்ந்த ஒன்று. ஒவ்வொரு கதாபாத்திரத்தின் எண்ணங்களும், அதை சார்ந்து அவர்கள் பேசுவதையும் மிக அருமையாக வடித்துள்ளார்.

முத்துச்சாமியின் தந்தை நாட்டராயன், சாமியப்பனை திட்டுவது :

"மானங்கெட்ட வக்காலொலி, கம்மஞ் சோத்தைத் தின்னாலும் நானெல்லாம் சத்தியத்துக்குக் கட்டுப்பட்டவன்டா. அரிசிச்சோறு தின்னுட்டாப் போதுமா ? மாத்தி மாத்தி பேசறியே, மனுசனாடா நீயி ? ச்சே

சென்டு அடிச்சுக்கிட்டு, பவுடர் பூசிக்கிட்டு கமகமன்னு மணந்து, மசுருக்கா ஆவுது ? எதுக்கு வேகாத வெய்யில்ல பாடுபட்ட மனுசன் காசைத் திங்கறே ? மானங்கெட்ட நாயி "

முத்துச்சாமியின் இந்த வலியை நான் ரொம்ப உணர்ந்துள்ளேன், துரதிஷ்டமாக சாமியப்பன் போன்றோரைத் தான் மக்கள் நம்புகிறார்கள்.

அதிமுக்கிய அறிவிப்பு : அத்தியாயம் 9 - இல், முத்துச்சாமி, அவனுடைய ஆயா பழனாத்தாளை, "அன்போடும் வாஞ்சையொடும் கவனிப்பதை " போலவே, அண்ணன் செல்லமுத்து அவர்கள் என்னை கவனிக்க மாட்டார் என்ற ஒரு குருட்டு நம்பிக்கையில் சிலவற்றை இங்கே சொல்கிறேன்.

சாமியப்பன் கூறும் பண்டுதகாரன் சாமி உருவான கதையை, நான் வேறு விதமாக படித்துள்ளேன். எது சரி என்று தெரியவில்லை. ( அத்தியாயம் 6 )

சில இடங்களில் Abrupt Ending யை உணர முடிகிறது. ( அத்தியாயம் 3, P.No. 62 -72, அத்தியாயம் 4, P.No. 85 ).

செல்லப்பனின் அண்ணணும் அவர் மனைவி இல்லியம்பட்டிக்காரி குடும்பம், பங்கு பிரித்தப் பிறகு செல்லப்பன் குடும்பத்தோடு உறவு எவ்வாறு இருந்தது என்று ஒரு சிறு குறிப்பு இல்லை.

கடைசி பத்தியில் கதையோடு தொடர்பு செய்கிறார். இருந்தாலும் அது தனித்து தெரிகிறது, Flow வாக ஒன்றி வராததுப் போல எனக்கு தோன்றுகிறது.

மூன்று ஏக்கர் காட்டை, 23 லட்சங்களுக்கு வித்துவிடும் முத்துச்சாமி, வெறும் 85000 ரூபாய் கடனை அடைக்காமல், அதனால் மாமன் மச்சினன், அக்கா தம்பி உறவு பாதிக்கும் வரை நடந்து கொண்டது சற்று முரணாகவும், Character Justify ஆகாமலும் பட்டது எனக்கு.

( முத்துச்சாமி மனைவி சுமதியும், உறவு பாதிக்க ஒரு காரணம் என்ற போதும். இத்தன்னைக்கும் முத்துச்சாமியின் தந்தை நாட்டராயனின் காசை இழந்த, வலி மிகுந்த, வேதனை புலம்பல் )

கிராமப்புற கதையில், சில விவரணைகள் Indirect ஆக சொல்லியுள்ளார். குழப்பத்தை கொடுத்து, Nativity யை பாதிப்பதாக நான் கருதுகிறேன். ( முத்துச்சாமி & ராசு வயது, கோர்ட் வழக்கு எத்தனை வருடங்கள், ராஜீவ் காந்தி செத்த வருடம் )

மேற்சொன்னவை, வாசகன் பார்வையில் சுள்ளானாகிய அடியேனின்
அபிப்ராயங்களே.

அண்ணனின் அடுத்த நாவல் " ஆத்துக்கால் பண்ணையம் " இதைவிட சிறப்பாக அமைய என் மனமார்ந்த வாழ்த்துக்கள்.

Verdict : 
எழுத்தாளர், பங்கு வர்த்தக நிபுணர். அவர் பாஷையில் சொல்லனும்னா, " The stock குருத்தோலை has very good fundamentals and the investor is sure to reap rich & high Emotional Dividends. One can expect much more from the parent company.

பதில்:
நண்பரே.. உங்கள் கருத்துக்கு நன்றி. 

முத்துச்சாமியின் பாத்திரம் முரண் நிறைந்ததாகச் சொல்கிறீர்கள். அதுதான் கதையே !! கால ஓட்டத்தில் நிகழும் மாற்றங்கள், value system சிதைவதுமே குருத்தோலையின் கரு.

Wednesday, August 20, 2014

ஹைதராபாத் புளூஸ்..

நேற்று ஆகஸ்ட் 19. இரண்டாம் உலகப் போரில் ஜெர்மெனியிடமிருந்த பாரீஸை பிரெஞ்சுக்காரர்கள் மீட்ட நாளென்கிறது வரலாறு. அதே ஆகஸ்ட் 19 அன்று இந்தியாவில் கிறுக்குத்தனமான வரலாறு ஒன்றை எழுத முற்பட்டிருக்கிறார் தெலுங்கானாவின் முதல் முதலமைச்சரான K சந்திரசேகர் ராவ் எனப்படும் KCR.

இதை மேற்கொண்டு வாசிக்கும் முன் சென்ற ஆண்டு உயிர்மை இதழில் வெளியான தெலுங்கானா பற்றிய இந்த விரிவான கட்டுரையை வாசிக்க முடியுமா பாருங்கள்.

ஹைதராபாத் நகரை இனச் சுத்திகரிப்புச் செய்யும் வேலையில் இறங்கியிருகிறார் KCR. இதற்கும் மேல் சொல்வதற்கு என்ன இருக்கிறது? தெலுங்கானாவில் உள்ள பத்து மாவட்டங்களிலும் நூதனமான கணக்கெடுப்பை முடுக்கி விட்டிருக்கிறார்.

தெலுங்கானாவில் உள்ள மக்கள் உண்மையிலேயே தெலுங்கானாவின் குடிமக்களா, இல்லையா எனக் கண்டறிவதுதான் அதன் நோக்கம். தெலுங்கானாவின் மண்ணின் மைந்தர்களையும், வந்தேறிகளையும் அடையாளம் காண விழைகிறார் நாசரைப் போன்ற மூக்குடையவர்.

தெலுங்கானா ஆந்திரப் பிரதேசத்துடன் இணைக்கப்பட்டது 1956 இல். அந்த இணைப்பையொட்டி தலைநகர் கர்னூலில் இருந்து ஹைதராபாத்துக்கு இடம் மாறியது. அதன் தொடர்ச்சியாக நிறைய ஆந்திர மக்கள் தெலுங்கானாவுக்குக் குடி பெயர்ந்தார்கள். தெலுங்கானா என்பதை விட ஹைதராபாத்துக்கு என்பதே சரியாக இருக்கும். அவ்வாறு குடியேறியவர்கள் யார், தெலுங்கானா ஆந்திராவோடு இணைக்கப்படும் முன்பே அங்கே இருந்தவர்கள் யார் என கணக்கெடுக்கிறார்.

புதிதாக ஆட்சிக்கு வந்த ஜோரில் எதோ காணாத நாய் கருவாட்டைக் கண்ட கதையாக இருக்கிறது KCR இன் நடவடிக்கை. இதன் மூலம் தெலுங்கானாக் குடியுரிமை வழங்கப் போகிறாரா? அதன் அடிப்படையில் தான் ரேஷன் கார்டும், மற்ற மாநில அரசின் சலுகைகளும் அமையப் போகின்றனவா? அல்லது ஆந்திர மக்களை அடையாளம் கண்டு 1983 கருப்பு ஜூலையில் கொழும்பு நகரம் தமிழர்களுக்குச் செய்ததை ஹைதராபாத்தில் ஆந்திர மக்களுக்குச் செய்வதற்கான முன்னேற்பாடா? அப்பட்டமாக ஹைதாராபாத்தின் பால் தாக்கரேவாக தன்னை முன்னிறுத்துகிறார் மனிதர்.

எது எப்படியாயினும் மிக மோசமான அரசியல் முன்னெடுப்பு இது. இந்தியாவில் உள்ள அனைவரும் இந்துக்கள், அல்லது இந்துக்களை முதன்மைக் குடிமக்களாக ஏற்றுக்கொண்டவர்கள் என்கிற நவீன அணுகுமுறையைக் காட்டிலும் மிக வேகமாக இருக்கிறது தெலுங்கானா நடவடிக்கை. இதே ரேஞ்சில் போனால் ஹதராபாத்துக்குச் செல்ல விசா வாங்க வேண்டும் போல.

மனிதனே dependent ஆகவும் இல்லை. independent  ஆகவும் இல்லை. முழுக்க முழுக்க interdependent ஆக வாழ்கிறான். அப்படியிருக்க ஒரு மாநிலத் தலைநகரில் மற்றவர்களை வந்தேறியாக முத்திரை குத்தும் நடவடிக்கை எவ்வகையில் சரியென்று தெரியவில்லை. சிங்கப்பூர் போன்ற பன்முகத்தன்மை உடைய அரசுகள் ஒத்திசைந்து மக்களை வாழ வைப்பதன் மூலமும், ஆக்கப்புர்வமான பொருளாதாரச் செயல்பாடுகள் மூலமும் செழிக்கின்றன.

தெலுங்கானாவைப் போலவே எல்லா மாநிலங்களும் ஆரம்பித்தால் என்னவாகும்? பம்பாயில் எட்டு இலட்சம் முதல் பத்து இலட்சம் தெலுங்கானாவாசிகள் இருப்பதாகச் சொல்கிறார்கள். பெங்களூரில் பெரும்பான்மையான உடைமைகள் (வீடுகள்) ரெட்டிமார்களுக்குச் சொந்தமானவை என்கிறார்கள். சென்னையில் கணிசமான ஆந்திரர்கள் வசிக்கிறார்கள். இந்தியாவெங்கும் பரந்து விரிந்திருக்கும் மலையாளிகளில் யாருக்கும் வாக்குரிமை இருக்காது.

ஹைதராபாத் தவிர்த்து தெலுங்கானாவில் எதாவது தொழில்கள் தொடங்க முடியுமா என்று பாருங்கள். ஆந்திராவைப் பூர்வீகமாகக் கொண்ட ஆந்திரர்களை அந்நியப்படுத்தாமல் அவர்களது முதலீட்டையும், உழைப்பையும் வைத்து தெலுங்கானாவை முன்னேற்றிக் காட்டுங்கள். தெலுங்கர்கள் அற்ற சென்னையும், தமிழர்கள் இல்லாத பெங்களூரும், குஜராத்திகளின் பங்களிப்பு இல்லாத மும்பையும் கற்பனை செய்யவே முடியாது. அப்படிப்பட்ட கற்பனையை ஹைதராபாத்தில் செய்து கொண்டிருக்கிறீர்கள்.

முடிந்தால் கோதாவரியில் இரண்டு அணைகளைக் கட்டி ஆந்திராவின் அடி வயிற்றைக் கலக்குங்கள். அதையெல்லாம் செய்யாமல் கணக்கெடுப்பாம் கணக்கெடுப்பு!!

போங்க பாஸ்.. போய் புள்ள குட்டியப் படிக்க வைங்க!