Thursday, January 02, 2014

இரவல் காதலி வந்துட்டா

நல்லபடியாக புத்தக வெளியீடு நடந்து ‘ஆரம்பித்து’ விட்டது. புத்தாண்டின் முதல் நாளும் அதுவுமாக எதற்கு நடந்து முடிந்து விட்டது என எழுத வேண்டும்.

இயக்குனர் சீனு ராமசாமி இரவல் காதலியை வெளியிட்டுப் பேசினார். சுருக்கமாகப் பேசினார். புக் பாயிண்ட் அரங்கில் பேசிய மற்ற இலக்கியப் பேச்சாளர்களோடு ஒப்பிடும் போது மிகவும் சுருங்கப் பேசினார். அங்கே வந்து அமர்ந்திருந்த ஒருவருக்கு அவர் நிஜமாலுமே புத்தகத்தை வாசித்து விட்டு வந்து பேசினாரா அல்லது என்ன கதையென்று மனுஷ்யபுத்திரனிடம் ஐந்து நிமிடம் கேட்டு விட்டு வந்து பேசினாரோ என்ற சந்தேகம் கூட வந்திருக்கும். அவ்வளவு ரத்தினச் சுருக்கம். ஆனால் மனிதர் முழுமையாக வாசித்து விட்டுத் தான் கூட்டத்திற்கு வந்திருந்தார்.

திரைக்கதை எழுதுவதைப் போல நெற்றிப் பொட்டில் அடித்த மாதிரி ஷார்ப் ஆகவும், வெளியில் இருந்து பார்ப்பவர்களுக்கு ஆடம்பரமாகத் தோன்றும் சாஃப்ட்வேர் மக்களின் வாழ்க்கையில் தனிமைச் சூனியம் எப்படியெல்லாம் அலைக்கழிக்கிறது என்பதையும் சுற்றி வளைக்காமல் படம் பிடிப்பதாகவும் சொன்னார். புத்தகம் எவ்விதப் பாசாங்கும் straight ஆக மேட்டருக்குப் போவதாகவும் கூறினார். உயிர்மையில் வீடியோ எடுத்தார்கள். வந்ததும் பார்க்க வேண்டும். முடிந்தால் youtube இல் ஏற்றவும் வேண்டும்.

புத்தகத்தில் வந்துள்ள என் முன்னுரை:
//முதன் முதலாக மனுஷ்யபுத்திரனை 2006 இல் சந்தித்த சமயத்தில் நான் தீவிரமான பொருளாதாரக் கட்டுரைகளை மட்டுமே எழுதிக்கொண்டிருந்தேன். சிறுகதைகள் மற்றும் நாவல் எழுத வேண்டுமென்றோ, என்றாவது ஒரு நாள் நிச்சயமாக எழுதுவோம் என்றோ நான் அப்போது நினைக்கவில்லை. எனினும் விளையாட்டுக்காய் எழுதிய ‘அண்ணியின் அணைப்பு’ என்ற விவகாரமான கதையொன்றைப் வாசித்து விட்டு தொடர்ந்து புனைவுகளை எழுதுமாறு மனுஷ்யபுத்திரன் ஊக்குவித்தார்.

அடிப்படையில் என்னை நான் எழுத்தாளன் என்று அடைமொழியிட்டுக் கொள்வதை விட, நான் பார்த்து, கேட்டு, படித்து, உணர்ந்து, பாதிப்புக்கு ஆளாகிக் கற்ற விஷயங்களையும் தகவல்களையும் ஒரு கண்ணாடியைப் போல பிரதிபலிக்க முயலும் ஒருவனாகவே காண்கிறேன். நாம் சந்திக்கும் அனைத்து சிக்கலான பிரச்சினைகளுக்கும் எளிமையான அடிப்படை மூலக் கருவும், எளிமையான தீர்வும் இருக்குமெனவும் நம்பும் ஒருவன்.

இலக்கிய உலகில் சிறுகதைக்கும், நாவலுக்கும் இலக்கணங்கள் இருக்குமென நினைக்கிறேன். இந்த வரம்புகள் எதற்குள்ளும் சிக்கிக்கொள்ளாமல் எனக்குப் பிடித்த மாதிரி எழுதுவதற்கே விருப்பமாகவிருந்தது. எழுதுவதினால் ஒருவனுக்கு இந்தச் சமுதாயத்தில் கிடைக்கக் கூடிய புனிதத்தன்மையும், கற்பனையாகக் கட்டியெழுப்பும் பிம்பங்களும் அச்சமூட்டுவனவாக இருந்தன. உண்மையில் இங்கே எழுத்தாளர்களை விட அதிகம் படிக்கிற வாசகர்கள் இருக்கிறார்கள். அதிகம் தெரிந்து வைத்திருக்கிற அறிஞர்கள் இருக்கிறார்கள். வாசகனுக்கும், எழுத்தாளனுக்குமான இடைவெளி முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு இன்று சுருங்கியிருக்கிறது.

இரவல் காதலியின் ஆங்கிலப் பதிப்பை வாசித்த சிலர், குறிப்பாக பெண்கள், ”என்ன இப்படியெல்லாம் எழுதியிருக்கீங்க? இப்படியெல்லாம் கூட வேலை செய்யுற பெண்ணைப் பாப்பாங்களா? லேடீஸ் இந்த மாதிரியெல்லாம் பேசுவாங்களா?” என்று கேட்டனர். ஆண்களில் பலர், ”இது உங்க கதையா” என்று நமட்டுச் சிரிப்போடு கேட்டார்கள். ஒரு வகையில் இது நம் அனைவருடைய கதையும் தான்.

வேலை தேடுகிறவன், சாஃப்ட்வேரில் கொழுத்த சம்பளம் என அங்கலாய்ப்போர், சரியான வயதில் கல்யாணம் ஆகாதவன், காதலில் ஏமாற்றப்பட்டவன், காதல் ஒரு ஆளிடம் மட்டுந்தான் உருவாக வேண்டுமா என்ற குழப்பத்தில் இருக்கிறவர்கள், அவனுக்கு மட்டும் எப்படி செட் ஆகுதோ என புலம்புவோர், ‘உனக்கு எல்லாமே ஈஸியா கிடைக்குது. அதனால நான் சலிச்சுப் போயிட்டேன்’ என அலுத்துக்கொள்வோர், பொண்டாட்டியை மறந்து விட்டு வேலையே கதியாகக் கிடந்து அதனால் ஏற்படும் சிக்கலான ஆபத்தை அறியாத அப்பாவிக் கணவன்கள், இந்தப் பொண்ணுங்களே இப்படித்தான் எனத் திட்டுவோர், உனக்கெல்லாம் எதுக்கு பொண்டாட்டி எனத் திட்டு வாங்கியோர் என எதேனும் ஒரு வகையில் அன்றாட வாழ்வில் நாம் கடந்து வந்திருக்கும் பாத்திரங்களையே இந்த நாவல் பிரதிபலிக்கிறது.

இப்படியெல்லாமா இருப்பாங்க என நீங்கள் நினைத்தால், ஒன்று ‘நாங்கல்லாம் அந்தக் காலத்துல’ என இழுக்கும் பெருசுகளாக நீங்கள் இருக்க வேண்டும். அல்லது நீங்கள் நடித்துக்கொண்டிருக்க வேண்டும். இந்தத் தலைமுறை இப்படித்தான்.

இதில் காமம் இருக்கிறது. தனிமையைத் காமம் தின்பதும், காமத்தைக் காதல் வெல்வதும், காதலைக் காமம் வெல்வதும், இறுதியில் இரண்டையும் எதார்த்தம் வெல்வதுமான கதை.///
(புத்தகத்தை ஆன்லைனில் ஆர்டர் செய்ய வலது பக்கம் உள்ள புத்தக அட்டையை கிளிக் செய்யவும்)

பத்து புத்தகங்கள்.. வந்திருப்போருக்கு நிகழ்ச்சி முடியும் வரை முழுமையாக உட்கார்ந்து கேட்பது அயர்ச்சியான விஷயமே. அப்படி இருந்தும் சில பேர் இறுதி வரை இருந்தனர். எழுத்தாளர் பாஸ்கர் சக்தி வந்திருந்தார். மணா வந்திருந்தார். இன்னும் கொஞ்சப் பதிவர்கள், பத்திரிக்கையாளர்கள், வலைப்பதிவு மற்றும் ஃபேஸ்புக்கர்ஸ் வந்திருந்தார்கள்.

போடிநாயக்கனூர் செந்தில் எழுதிய காலகண்டம் புத்தகம் முக்கியமானதாக எனக்குப் பட்டது. செந்தில் ஆறேழு வருடமாக அதை எழுதினாராம். இரண்டு வருடப் போராடத்திற்குப் பிறகு வெளி வந்திருக்கிறது. செம வெயிட்டான புத்தகம். விற்க முடியாமல் எடைக்குப் போட்டால் கூட பதிப்பாளர் தப்பித்து விடலாம். அவ்வளவு வெயிட். இன்னொரு நாவல் ராஜீவ் காந்தி சாலை. பேச ஒப்புக்கொண்ட ஃபேமஸ் எழுத்தாளர் ஜகா வாங்கியதால் மனுஷ்யபுத்திரனே அதைப் பற்றி பேசினார். வா.மு.கோமு அண்ணனின் நாயுருவி குறித்து முருகேச பாண்டியன் கலக்கலாகப் பேசினார். மேடையில் அருகில் அமர்ந்திருந்த முருகேச பாண்டியனை தேவேந்திர பூபதி என நினைத்து, “நம்ம ஊர் பழனிதானுங்க?” என கேட்டுத் தொலைத்து விட்டேன். மனிதர் என்ன நினைத்தாரோ தெரியவில்லை.

வெளியான மூன்று கவிதை நூல்களைப் பற்றி நான் ஒன்றும் சொல்லப் போவதில்லை. நமக்கு தொடர்பில்லாத ஒரு ஏரியா அது. பட்டிமன்றப் பேச்சாளர் சுந்தரவல்லி பாட்டு மன்றம் போல பாட்டெல்லாம் பாடினார். ’இந்த உண்மைகள் ஏன் மறைக்கப்படுகின்றன?’ என்ற அறிவியல் புத்தகம் பற்றி பத்ரி சேஷாத்ரி பேசினார். அந்தத் தலைப்பிற்கு நியாயம் செய்வது மாதிரியான அறிமுக உரை. கடைசியாகப் பேசிய பாரதி கிருஷ்ணகுமாரின் பேச்சு சுவாரஸியமாக அமைந்தது. 

No comments: