Friday, January 10, 2014

வேலைக்காரிகள் மகளிர் இதழ்களை வாங்குவதில்லை

எனக்குத் தெரிந்த ஒரு நபர் இருக்கிறார். எட்டு வருடத்திற்கு முன் திராவிடம் பேசியவரின் பூனைக்குட்டி வெளியே வந்து பல காலம் ஆகிறது. சுற்றி வளைக்க ஒன்றுமில்லை. அவர் பாட்டாளி மக்கள் கட்சியின் தீவிர விசுவாசி. வன்னிய சமூகத்தின் உணர்வுகளை பிரதிபலிக்கும் ஆள். ஒவ்வொரு தீவிரமான ஆதரவுக்கும், எதிர்ப்பிற்கும் பின்னால் அவர்கள் அளவுக்கு ஏதேனும் ஒரு காரணமும், நியாயமும் இருக்கும். இவருக்கும் அப்படி சிலது உண்டு. நாம் அதில் உடன்பட வேண்டியதில்லை.

மரக்காணம் கலவரம், இளவரசன்-திவ்யா விவகாரம் உள்ளிட்ட சில விஷயங்களின் தங்களை தேவைக்கும் அதிகமாக ஊடகங்களும், முற்போக்குவாதிகளும் மட்டம் தட்டி விட்டதாகப் பேசுவார். சாதியப் பிரச்சினைகளில் மீடியா எப்போதும் ஒருதலைப் பட்சமாகவே நடந்து கொள்வதாகக் குற்றம் சாட்டுவார். ஒரு தனிப்பட்ட வன்னியனுக்கும், தலித்துக்கும் இடையே தகராறு என்றால் அது சாதிப் பிரிச்சினையாக பார்க்கப்படுகிறது, தேவையில்லாமல் ராமதாஸை அங்கே இழுக்கிறார்கள்… இப்படியெல்லாம் பேசுவார். அதே தாழ்த்தப்பட்ட பிரிவினர் அரசியல் ரீதியாக திருமாவளவனால் தூண்டிவிடப்பட்டு தப்பு செய்தால் அது தனிநபர் பிரச்சினையாகிறது என்பார். ஆங்… நாடகக் காதல் என்ற வார்த்தையை மறந்து விட்டேன்.

சமீபத்தில் ஒரு இளம்பெண் காரைக்காலில் பல பேரால் வல்லுறவுக்கு ஆளாக்கப்பட்ட கொடுமையின் போது ஊடகங்கள் அமைதி காத்தன. அந்தப் பாதகத்தைச் செய்தது திமுகவின் முக்கியப் பொறுப்பில் உள்ள முஸ்லிம் அரசியல்வாதியின் உறவுகளும், விடுதலைச் சிறுத்தைகள் கட்சியில் உள்ள முக்கியஸ்தரின் உறவினரும் ஆவர். ”இருவருமே சிறுபான்மையினர். அதனால் முற்போக்குவாதிகள் எல்லாம் முக்காடு போட்டு ஒளிந்து கொண்டனர். வன்னியனைத் திட்டினால் உங்களுக்கு முற்போக்காளர், சமூகப் போராளி உள்ளிட்ட பட்டங்கள் கிடைக்கும். தலித்தையும், முஸ்லிமையும் திட்டினால் உங்களுக்கு என்ன கிடைக்கும்?” எனக் கேட்கிறார்.

“நீங்க மனுஷ்யபுத்திரனை வைத்து புக் போடுகிறீர்கள். அவர் பா.ம.க வின் எதிரி. அதனால் நீங்களும் குரல் கொடுக்க மாட்டீர்கள். வருங்காலத்தில் பெரிய எழுத்தாளராகும் ஆசையிலிருக்கும் உமக்கெல்லாம் இது கண்ணில் படாது. பட்டாலும் பேச மாட்டீர்.”

எனது ஆரம்ப காலப் புத்தகங்கள் கிழக்கு பதிப்பகத்தில் வெளியான போதும் சிலர் எனக்கு பூணூல் அணிவித்துப் பார்த்தனர். குறிப்பாக பிரபாகரன் புத்தகத்தைப் பற்றி, “எழுத்து வியாபாரிகளான செல்லமுத்து குப்புசாமி” என புலி ஆதரவு நபர் ஒருவர் ஆரம்பத்தில் எழுதினார். புலி எதிர்ப்பினால் மட்டுமே தன்னை வளர்த்த ஷோபா சக்தி பின்னர் சில ஆண்டுகள் கழித்து, “இழவிலும் காசு பார்க்கும் கிழக்கு பதிப்பகத்தில் புத்தகம் போட்ட செல்லமுத்து குப்புசாமி” என்கிறார். எனக்குப் புரியவில்லை. எந்த ஒரு அமைப்புடனும் தன்னை அடையாளப்படுத்தாத ஒருவன் பொது வெளியில் எதையுமே செய்யக் கூடாதா?

எல்லோர் மீதும் குத்துவதற்கு நாம் தயாராக நான்கைந்து முத்திரைகளைக் கையில் வைத்தபடி தேடிக்கொண்டிருக்கிறோம். இப்போது ”மனுஷ்யபுத்திரனின் மனம் கோணாமல் நடக்கும் சந்தர்ப்பவாதி; சகித்துக்கொண்டு சத்தமில்லாம் அடக்கி வாசிக்கும் சர்வைவல் வித்தைக்காரன்” ஆகிய முத்திரைகள். ஏன் அரசியல் பேச மறுக்கிறீர்கள் என அவர் கேள்விகளைக் கேட்டபடியே இருந்தார்.

நான் போனால் போகட்டுமென ஃபேஸ்புக்கில் ஒரு போஸ்ட் மட்டும் போட்டேன். எதோ மோனிகா பரத்வாஜாம். (போட்டோவை கூகிளில் தேடிக் கொள்ளுங்கள்) காரைக்கால் லோக்கல் போலீஸ் ஸ்டேஷனில் பஞ்சாயத்துப் பண்ணி, தப்பு செய்தவர்களை வெளியே செல்ல அனுமதித்த போலீஸ் அதிகாரிகளை அதிரடியாக சஸ்டெண்ட் செய்த மேலதிகாரி. மோனிகா காரைக்காலின் எஸ்.பி. தமிழ்ச் சாதி எதோடும் அடையாளப்படுத்த முடியாத வேற்று மாநிலத்தைச் சேர்ந்த போலீஸ் அதிகாரிகள் உண்மையில் அதிர்ஷ்டசாலிகள்.

“இவுங்க ரொம்ப கண்டிப்பான போலீஸ் அதிகாரின்னு சொல்றேன். ஆனால் பக்கத்து சீட்டில் இருப்பவன் சூப்பர் ஃபிகர் என்கிறான்.” இதுதான் ஃபேஸ்புக்கில் நான் போட்ட ஸ்டேட்டஸ். இதைப் பார்த்தவுடனே ஒரு மூத்த எழுத்தாளர் மெசேஜ் அனுப்பி விட்டார். “இதை உடனே நீக்கி விடுங்கள். நாமெல்லாம் எழுத்தாளர்கள். நாமே இப்படி கமெண்ட் போட்டால் தரமாகவா இருக்கிறது?”

நானும் உடனே நீக்கி விட்டேன். அவர் சொன்னதால் அல்ல. என்ன இருந்தால் சீனியர் போலீஸ் ஆபீஸர். நாளை சென்னைக்கும் மாற்றலாகி வந்து, நம்மை ஜாமீன் கிடைக்காத செக்‌ஷன் எதிலாவது உள்ளே தூக்கிப் போட்டால்? நம்மை நம்பியும் குடும்பம் இருக்கிறதல்லவா!

“ஏன் உடனே நீக்கி விட்டீர்கள். எங்கே உங்கள் சமூக அக்கறை? எங்கே சாதி அரசியலுக்கு எதிரான அறச் சீற்றம்? காரைக்கால் பற்றி மூச்சே காணோம்?” இப்படி ஏதோ ஒரு குரல் தொந்தரவு செய்து கொண்டே இருந்தது. சரி போனால் போகிறதென்று பெஸ்ட் ராமசாமியையும்,ஈஸ்வரனையும் பற்றி ஒரு பதிவு போட்டு முடித்துக் கொண்டேன்.

ஒன்றுமே புரியாத மாதிரி இருக்கிறதா? இன்னொன்று சொல்கிறேன். அதற்குப் பிறகு புரியும். சொல்லப் போகும் விஷயம் எங்கள் கம்யூனிட்டி பற்றியது. கம்யூனிட்டி என்றால் ஜாதியல்ல. இது கேட்டேட் கம்யூனிட்டி. அங்கே மாலை 5 மணிக்கு மேல் எப்போதும் நான்கைந்து பெண்கள் ஒன்றாக நின்று பேசிக்கொண்டே இருப்பார்கள். அவர்கள் பேசுவதை அதிகபட்சம் மூன்று பிரிவுகளில் வகைப்படுத்தி விடலாம். அதில் முக்கியமானது வேலைக்காரி டாப்பிக்.

“அப்பவே எனக்கு தெரியும்ங்க. அவள் விகடன்ல என்னோட ராசிபலன்ல போட்டிருந்தாங்க. என்னோட ராசிக்கு நான் வேலைக்காரியை மாத்துவேன்னு”

நான் அப்போது தான் ஆபீஸ் முடிந்து போகிறேன். சாவி வாங்க என் மனைவியை நெருங்கிய சமயத்தில் இந்த உரையாடல் காதில் விழுந்தது.

“அப்ப வேலைக்காரியோட ராசிபலன்ல என்ன போட்டிருந்தாங்க?” என சாவியை வாங்கிக் கொண்டே அந்த குரூப்பை நோக்கிக் கேட்டேன்.

ஒரு நிமிடம் யாரும் பேசவில்லை. பிறகு, என் மனைவியை நோக்கி “Ask your husband to leave” என அந்தப் பெண் சொன்னார்.

அவருக்குத் தெரியாது, வேலைக்காரிகள் மகளிர் இதழ்களை வாங்குவதில்லையென இதழ் தயாரிப்பவர்களுக்குத் தெரியுமென்பது. 

No comments: