Monday, January 13, 2014

புத்தகக் கண்காட்சிக்கு வந்திருந்தீர்களா?

வெளியூரில் இருந்தெல்லாம் நிறையப் பேர் வந்திருக்கிறார்கள். சென்னையில் இருந்து கொண்டே போகாமல் இருப்பது நல்லதல்ல. ஞாயிறு தான் செல்ல முடிந்தது.

நந்தனம் YMCA வளாகத்தில் நுழைந்ததும் எதோ  Dog Show என்று போட்டிருந்தார்கள். புத்தகக் கண்காட்சியும் அங்கே தான். இல்லையென்றால் பார்க்கிங் டிக்கெட் பத்து ரூபாய் வீணாய்ப் போயிருக்கும். உள்ளே போன உடனேயே ’எதிர் வெளியீடு’ கடை தென்பட்டது. சோளகர் தொட்டி மற்றும் வா.மு.கோமுவின் புத்தகங்கள் சிலவற்றைப் பதிப்பித்தவர்கள். பொள்ளாச்சியில் இருந்து வருடா வருடம் வந்து விடுகிறார்கள்.

கோவையில் ஜூபிடர் பிகர்ஸ், சேலத்தின் மார்டன் தியேட்டர் எல்லாம் அழிந்து போய் சினிமா சென்னையில் குவிந்திருப்பதைப் போல பத்திரிக்கைகளும், பதிப்பகங்களும் சென்னையிலேயே குவிந்திருக்கின்றன. ’எதிர்’ மாதிரி வெளியூர்ப் பதிப்பகங்கள் இன்னும் சிலது இருக்கத்தான் செய்கின்றன. ஒரு குட்டி பதிப்பகம் திண்டுக்கல்லில் இருந்து வந்திருந்தார்கள்.

உயிர்மையில் மனுஷ்யபுத்திரன் அமர்ந்திருந்தார். மனிதர் பயங்கர பிஸியாக இருக்கிறார். நிறையக் கட்டுரைகளை எழுதிக்கொண்டும், டிவியில் பேசிக்கொண்டும், கடைக்கும் வரும் வாசகர்களையும் படைப்பாளிகளையும் பேணிக்கோண்டும.. நிஜமாலுமே பிஸியான மனிதர்.. அதனால் அவருடைய நேரத்தை அதிகமாக எடுத்துக்கொள்ள விரும்பவில்லை. அடுத்த வருடம் உயிர்மையில் புத்தகம் வரவில்லை என்றாலும் இதே மாதிரி போய் வரலாம்.

புத்தகக் கண்காட்சியில் நான் வியந்து பார்த்தது அற்புதம்மாளை. வெறும் பேட்டரி மட்டும் வாங்கிக் கொடுத்ததற்காக என் பையனை தூக்குக் கயிற்றின் முன் 22 வருடமாக நிறுத்தியிருந்தால் நான் இத்தனை மன வலிமையோடு இருந்திருக்க மாட்டேன். சின்னப் பையன்களும், பெண்களுமாக நிறையப் பேர் அவரோடு நின்று போட்டு எடுத்துச் சென்றனர். பேரறிவாளன் புத்தகம், அற்புதம்மாள் புத்தகம், திருச்சி வேலுச்சாமியின் புத்தகம் எல்லாம் வைத்திருக்கும் கடையில் அவரே முன்னின்று எல்லாவற்றையும் கவனித்துக்கொண்டிருந்தார்.

டிஸ்கவரி புக் பேலஸ், பனுவல் ஆகிய கடைகள் கவனிக்க வேண்டியன. டிஸ்கவரி புக் பேலஸைப் பற்றி நிறையப் பேருக்குத் தெரிந்திருக்கும். நண்பர் வேடியப்பன் நடத்துகிறார். புதிதாக இந்த வருடம் ஓரிரு புத்தகங்களைப் பதிப்பிக்கும் வேலையிலும் இறங்கியிருக்கிறார். பனவல் பசங்க மென்பொருள் துறையில் வேலை செய்கிறார்கள். ஆர்வத்தினால் இதைச் செய்து கொண்டிருக்கிறார்கள். முன்பு தடாகம்.காம் என்ற தளத்தை நடத்தி, வாளோர் ஆடும் அமலை என்ற நூலைப் பதிப்பித்து நேரத்தை வீணடித்தது போதாமல் இப்போது புது வழியைக் கண்டுபிடித்திருக்கிறார்கள்.

எல்லாக் கடைகளையும் சுற்றி வருவதற்குள் முதுகு வலி வந்து விட்டது. ஒரு பக்கம் வயதாகிறது. கூடவே இந்தக் குளிர் காலத்தில் வலி இருக்கத்தான் செய்யுமென மனதைத் தேற்ற வேண்டியிருக்கிறது. மூன்று மணி நேரத்துக்கு மேல் சுற்ற முடியவில்லை. வாங்கிய வரைக்கும் போதுமெனத் திரும்பியாயிற்று. என்ன, வடலியில் வந்திருக்கும் இந்த யாழ்ப்பாணத்துப் பையன் யோ.கர்ணன் புத்தகங்கள் மட்டும் கிடைக்கவில்லை. அதே போல நான் குறிப்பிட்டுத் தேடிய க.சி.சிவக்குமார் புத்தகம் தட்டுப்படவேயில்லை. யாரிடமாவது கேட்க வேண்டும். இன்னும் ஒரு வாரம் கண்காட்சி இருக்கும்.

அப்புறம், ஒரு இளம் எழுத்தாளரைப் பார்த்தேன். ”வாசகர் வந்தால் பேச வேண்டும். கையெழுத்துப் போட வேண்டும்” என ஒன்னுக்கு இருக்க கம்பெனிக்குக் கூப்பிட்டால் கூட மறுத்து விட்டார். ஆனால் பாருங்கள். அதிகம் விற்கும் எழுத்தாளர்கள் கோபிநாத், இறையன்பு, சுகி.சிவம், தாமு போன்றோர் கண்காட்சிக்கு வரவேயில்லை.

இதற்குத்தான் எழுத்தாளராகிப் பிரபலமாவதை விட பிரபலமான பிறகு எழுத்தாளர் ஆக வேண்டுமென்று சொல்வது. 

No comments: