Friday, January 17, 2014

சுஜாதா பாத்திருந்தா திட்டியிருப்பார் .. நீங்க என்னவோ போங்க சார்

திரு.புகழேந்தி அவர்களின் விமர்சனம்:

ம்ம்ம்ம். உங்கள் இரவல் காதலி முழுதும் முடித்தாயிற்று... முதலில் பாராட்டுகள்... நல்ல நடையில் உங்கள் நாவலை ஒரு இரண்டே இரண்டு இடைவெளியில் முடிக்கும்படி எழுதியமைக்கு.. நீங்கள் எடுத்துக்கொண்ட களம் உங்கள் இடம்.. எனவே அருமையான detailing.. மிக அருமையான நடை.. நிச்சயம் வாத்தியார் சுஜாதா இருந்து அவர் பார்வையில் இந்நாவல் பட்டிருந்தால் நிச்சயம் மகிழ்ந்திருப்பார். சிவாஜி போல நடிக்கிறார் என்றால் அது ஒரு பகடி.. ஏனென்றால் 'போலச்' செய்வது நடிப்பில் பாடுவதில் பாராட்டாக எடுத்துக் கொள்ளமுடியாது.. ஆனால் ராஜா போல இசையமைக்கிறார்..வைரமுத்து போல எழுதுகிறார் என்றால் நிச்சயம் பாராட்டே.. ஏனென்றால் எழுத்து ஒரு படைப்புத் துறை.. நிச்சயம் நீங்கள் சுஜாதா பாதிப்பில் எழுத வந்திருப்பீர் என்றே நினைக்கிறேன்.. அது உண்மையில்லையென்றால், நான் சுஜாதா படித்து வந்ததால் சொல்கிறேன்.. நிறைய சுஜாதாத்தனம் தெரிகிற்து.

குறிப்பாக இன்டர்வ்யூ முதல் கஜகாஸ்தான் செல்லும் வரை எனக்கென்னவோ ஒரு பழைய சுஜாதா நாவல் தானோ என்றே தோன்றியது.. மிக அருமை.. அதற்குப் பிறகும் கூட கதையின் ஓட்டம்.. முடிவு எல்லாமே அருமை.. அசோக் பார்வையிலேயே சென்ற கதை சந்திரிக்கா நிராகரிக்கும் நேரம் அவருடைய டைரி பார்வையில் கதை நகர்ந்தது நல்ல உத்தி.. அந்த எபிஸோட் மிக அருமை.. நான் மிகவும் ரசித்த பாகம் அது.. நிராகரிப்பு வலி  கொடிது என்பது நன்கு படம் பிடிக்கப்பட்டுள்ளது.... ரஞ்சித், காயு,சுச்சி நல்ல பாத்திரப் படைப்பு..

முதல் கலவிக்கான வாய்ப்பு கஜகாஸ்தானிலேயே நடைபெற அதிக வாய்ப்பிருந்தது.. ஒரு ஆக்ஸிடென்ட் ஆகக் கூட அது அங்கேயே நடந்திருந்தால்.. சென்னையில் அது நடப்பதற்காக எடுத்துக் கொண்ட நேரத்தைக் குறைத்திருக்கலாம்.. எனக்கு அந்த நேரம் கதை கொஞ்சம் தொய்வாகத் தெரிந்தது... குறிப்பாக அந்த gtalk பகுதிகள் அவ்வளவு  ஆர்வமாக இல்லை.. ஏனென்றால் எப்படியும் அந்த விஷயம் நடக்கத் தானே இதெல்லாம் என்பதால் ஒரு தொய்வை உணர்ந்தேன்... கஜக்குப் பிறகு அவர்கள் மீண்டும் சென்னையில் சந்திப்பை வேண்டுமானால்  யோசித்து நகர்த்தியிருக்கலாம்

எப்படியும் அந்த சுசி கதாபாத்திரம் வரும் என்று தெரியும். அந்த பழிப் படலத்தில் நாயகன் மீட்கும் விதமாக அந்தப் பாத்திரம் சொருகப் பட்டது அருமை.. மீண்டும் உங்கள் களம் என்பதால் அதிக detailing மூலம் விளையாடி விட்டீர்கள்.. நான் நன்கு ரசித்தேன்..

அடுத்து காயு, அசோக் கலவிக் காட்சிகள்... ஆங்கிலத்தில் இருந்து மொழி பெயர்த்ததனாலோ .. தமிழுக்குக் கொஞ்சம் அதிகம் என்றே பட்டது.. சுஜாதா  காலத்தில் மார்பு என்பது முலை என்று நேரடியாக வந்திருக்கிறது.. தவறில்லை.. உறுப்புப் பெயர்களை அப்படியே சொல்லவேண்டும் .. அதில் அசிங்கம் பார்க்கக் கூடாது என்னும் கருத்துடையவன் தான் நான். ஆனால், கொஞ்சம் போர்னோ அருகில் சென்றுவிட்டொமொ என்று சில நேரங்களில் தோன்றியது.. தவறில்லைதான்.. ஆங்கிலத்தில் சங்கடம் இருக்காது.. தமிழில் இருக்கிறது என்பது உண்மை.. சாரி என்று சொல்லுவது போல் 'மன்னித்து விடுங்கள்' சொல்லமுடியாதில்லையா.. புரிந்து கொள்ளுவீர்கள் என்று நினைக்கிறன்..

அடுத்து அந்த ஷாப்பிங் எபிசொட்.. அது நிச்சயம் நல்ல blog ஆக மனைவியை வைத்து எழுத வேண்டிய விஷயம்.. நல்ல detailing .. ஆனால் கதையில் ஏதாவது நகர்தல் இருந்திருக்க வேண்டும்.. நீங்கள்(அசோக்) அந்தக் கடையில் யார் கண்ணிலாவது படுதல் அல்லது காயுவுடன் ஒரு பிரிவு இப்படி எதாவது நடந்திருக்க வேண்டும்.. அந்த அத்தியாயத்தைத் தவிர்த்துக் கதை படித்தாலும் ஒன்றே..  ஆனால் அந்த தட்ஸ் ஓகே.. நல்ல observation

கதையை நல்ல முறையில் முடித்திருந்தீர்.. கடைசியில் அவர்கள் மணமானவர்களா.. நண்பர்களா.. என்பதை எங்களுக்கே விட்டு விட்டீர்களா? மொத்தத்தில் நல்ல நடை... detailing அற்புதம்.. பல இடங்களில் கொஞ்சம் அதிகம் என்றும் தோன்றியது.. குறிப்பாக அந்த மீட்டிங்... ஆனால் லஞ்சம் கொடுத்து , மகளிர் காட்டி என்பது எல்லா contract லும் இருக்காது என்று நினைக்கிறன். பல இடங்களில் உங்கள் பொது அறிவு, ஆழ்ந்த வாசிப்பு வெளிப்பட்டது.. ஆனாலும் நீங்கள் எழுதும் அடுத்த புதினம் வேறு களத்தில் இருக்கவேண்டும் அதிலும் நீங்கள் உங்களை நிருபிக்கவேண்டும்.. பாராட்டுகள்.. வாழ்த்துகள்..

அன்புடன் புகழ்..
### ## ## ##
அன்புள்ள புகழ் சார்,

வணக்கம்.

புத்தகத்தின் முன்னுரையில் “இப்படியெல்லாமா இருப்பாங்க என நீங்கள் நினைத்தால், ஒன்று ‘நாங்கல்லாம் அந்தக் காலத்துல’ என இழுக்கும் பெருசுகளாக நீங்கள் இருக்க வேண்டும். அல்லது நீங்கள் நடித்துக்கொண்டிருக்க வேண்டும். இந்தத் தலைமுறை இப்படித்தான்.” எனக் குறிப்பிட்டிருந்தேன். ஆனால் நீங்கள் (அட்லீஸ்ட் மனதளவிலாவது) பெருசுமில்லை, நடிக்கவுமில்லை என்பதாகவே கருதுகிறேன்.

இதை ஆரம்பிக்கும் போது, இதை முழுக்க முழுக்க துறை சார்ந்த நாவலாகவே எழுத வேண்டும் என்ற நோக்கில் ஆரம்பித்தேன். அப்படித்தேன் அந்த கேம்பஸ் இண்டர்வியூ அத்தியாயம் உருவானது. பிறகு காயத்ரி வந்தவுடன் கதையை அவளே எடுத்துக் கொண்டாள். ஒரு நண்பர், “வைரமுத்து கள்ளிக்காட்டு இதிகாசம் எழுதினார். நீங்கள் கள்ளக் காதல் இதிகாசம் எழுதியிருக்கிறீர்கள்”என்று கிண்டலடிக்கும் அளவுக்கு கதையை அவளே நகர்த்தினாள்.

பிறகு அந்த சாட்டிங் பகுதி. எப்படியும் அது அவள்தான் என்று யூகித்திருக்க முடியும். சேத்தன் பகத்தின் Two States நாவலில் கூட என்ன கதை என்பது முதல் பக்கத்தில் இரண்டு வரியில் சொல்லிவிடுவார்கள். அப்படித்தான் இந்த அத்தியாயமும். ஒரு obvious ஆன அத்தியாயம் தான். ஆனால், இது உங்க சொந்த அனுபவமா என என்னைக் கேட்க வைத்ததில் இந்த அத்தியாயத்திற்கு ஒரு பங்கிருக்கும் என நம்புகிறேன். நீங்கள் இதையெல்லாம் அனுபவித்திருக்க மாட்டீர்கள் :-)

பிறகு அந்த ஷாப்பிங். கல்யாணமாகி பல முறை தி.நகர் தெருவைச் சுற்றியவர்களுக்கு இது பழக்கமான விஷயமாக இருக்கலாம். ஆனால் காதலில் on hands டிரையினிங் எடுக்கும் பையனுக்கு முக்கியமான அசைன்மெண்ட் அது. பாருங்களேன். ஏதேனும் ஒரு கல்லூரியில் காதலிப்பது எப்படினு ஒரு பேப்பர் வெச்சு அதுக்கு இந்த அத்தியாயத்தை பாடத்திட்டத்தில் சேர்க்கும் காலம் வரத்தான் போகிறது. (எப்படி பிரபல இலக்கிய ஆளுமை மாதிரியே பேசுறேனா?)

சியர்ஸ் சார்.. 

No comments: