Sunday, January 19, 2014

நீங்களும் ஜெயிக்கலாம்

தங்கராசின் அம்மாவைக் கல்யாணம் செய்து கொண்டு அவர் அப்பா மாலையோடு வந்து ஊர் முகப்பில் இருந்த விநாயகன் கோவிலில் சாமி கும்பிட்டு, ஆரத்தி எடுத்து, சூரத் தேங்காய் உடைத்த போது நாங்கள் அங்கே விளையாண்டு கொண்டிருந்தோம். என்ன விளையாடினோம் என்பது இப்போது நினைவில்லை. அநேகமாக கில்லியாக இருக்கலாம். அல்லது கோலிக் குண்டாக இருக்கலாம். அபோதெல்லாம் கிரிக்கெட் எங்கள் ஊரில் அவ்வளவு பிரபலமாகியிருக்கவில்லை.

தெற்கே பழைய திண்ணைப் பள்ளிக்கூடமும், வடக்கே புதிய அரசு ஆரம்பப் பள்ளிக்கும் இடையே...மேற்கே விநாயகன் கோவில் ஆகியவற்றுக் கிழக்கே இருக்கும் சுமார் 25 செண்ட் இடமே எங்கள் மைதானம். இந்திரா காந்தி செத்த காலத்திற்கும், எம்ஜிஆர் செத்த காலத்திற்கும் இடைப்பட்ட காலத்தில் என்ன விளையாடினோம் என்பதெல்லாம் ஆழமாக நினைவில்லை. எம்ஜிஆருக்குப் பிந்தைய காலத்தில் கிரிக்கெட் விளையாட ஆரம்பித்து, ராஜீவ் காந்தி மரணத்திற்குப் பிறகு அதைத் தீவிரப்படுத்தினோம். கிட்டத்தட்ட டெண்டுல்கரின் வளர்ச்சியோடு சேர்ந்து எங்கள் ஊர் கிரிக்கெட்டின் வளர்ச்சியும் கூடியது.

ஒரு கட்டத்தில், ”பிரேசில் அடிக்கடி உலகக் கோப்பை வாங்குகிறது. நம்மால் ஏன் வாங்கவே முடியவில்லை?” என சங்கத்தில் தீர்மானித்து ஃபுட்பால் வாங்கி ஒன்றரை மாதம் உதைத்துக் கொண்டிருந்தோம். ஈஸ்வரனுக்கு கால் உடைந்தவுடனே அந்த மோகம் முடிவுக்கு வந்து மறுபடியும் கிரிக்கெட்டுக்கே வந்திருந்தோம். ஊரில் இருக்கும் நண்டு சிண்டெல்லாம் டீம் பிரித்து ஆடும் போது சேர்த்துக் கொள்வோம். அதில் மூன்று பசங்க மட்டும் கலந்து கொள்ள மாட்டார்கள். ஒருத்தனை பொம்பளைச் சட்டி என்று ஊருக்குள் பேசிக் கொண்டார்கள். அவன் சட்டிபானை எல்லாம் கழுவி சோறாக்குவான். எந்த விளையாட்டிலும் கலந்து கொள்ள மாட்டான். மிச்சமிருந்த இரண்டு பேர் தங்கராசுவும், அவன் அண்ணனும் தான்.

விளையாட்டில் கூட்டுச் சேராத மூன்று பசங்க இருந்த மாதிரியே இப்போது நாற்பது வயதுக்குள் உள்ளூரிலேயே தங்கியிருப்பதும் ஒரு மூன்று பேர்தான். திருப்பூர் பனியன் கம்பெனி, கேரளா கந்துக் கடை என ஆளுக்கொரு திசையில் பறந்து விட்டார்கள். சாஃப்ட்வேர் வேலைக்கோ, சாஃப்ட்வேரில் வேலை செய்யும் பையனைக் கட்டிக்கொண்டோ எதோ ஒரு காரணத்திற்காக சென்னையிலும், பெங்களூரிலும், அமெரிக்காவிலும் ஆட்களை அனுப்பிய குக்கிராமங்களில் எங்களதும் ஒன்று. வெறும் தண்ணீர் பாய்ச்சுவதற்கு மட்டும் மாதச் சம்பளமாக பத்தாயிரம் (+ தங்குவதற்கு வீடு, காய்கறி, தேங்காய், பருப்பு இத்தியாதி) கொடுத்தும் ஆள் கிடைக்காத ஊரிலிருந்து வந்து அப்பாசமி ரியல் எஸ்டேட்டில் பதினைந்தாயிரம் சம்பளத்துக்கு வேலை செய்யும் இளைஞர்களை உற்பத்தி செய்திருக்கும் ஊர்.

இந்த இடத்தில் காசி சிவக்குமாரைக் குறிப்பிட்டுச் சொல்ல வேண்டும். அவர் பெயர் க.சி.சிவக்குமார். சொல்லும் போது காசி சிவக்குமார் என்று வரும். தி.மு.க.வை தீமூக்கா என்பது போல. இந்த சிவக்குமார் ஒரு எழுத்தாளர். சில மாதங்களுக்கு முன்னர் போனில் பேசிய போது, “இப்ப எந்த ஊர்ல இருக்கறீங்க?” என்று கேட்டார். சென்னை என்றதும், “வட்டிக்கடையா?” என்றார்.

அப்படித்தான் இருக்கிறது நிலைமை. கோவாவில் எல்லாம் போய் கந்து வட்டி வசூலிக்கிறார்கள் நம் பக்கத்து ஆட்கள். கோயம்பேடு மார்க்கெட்டில் தினசரி வட்டிக்கு விடும் ஆட்கள் மீது தடுக்கி விட்டு விழுந்தால் மூலனூர், சின்னத்தாராபுரம் என்பார்கள். இந்த விசயமெல்லாம் இப்போது தான் தெரிகிறது. கொஞ்ச நாளுக்கு முன்னால் IAS பயிற்சிக்காக வந்து தங்கியிருக்கும் ஒரு பையன் வீட்டுக்கு வந்திருந்தான். “அண்ணா, எல்லாப் பசங்களும் இங்கதாண்ணா இருக்காங்க” என்று சொல்லி ஒரு பட்டியல் போட்டான். ஆச்சரியமாக இருந்தது. ஊளை மூக்கைச் சிந்திக் கொண்டு நம்மோடு விளையாடிய பசங்களை வட்டிக்கு விடும் தாதாக்களாக கற்பனை செய்ய சிரமமாக இருந்தது.

அதை விட ஆச்சரியம் கொடுத்தது தங்கராசைப் பற்றிய செய்தி தான். “அவன் ஓட்டல் வெச்சிருக்க்கான்” என்றான். ஆளைப் பார்த்தோ, பேசியோ பத்து வருடம் இருக்கும். தங்கராசு கேட்டரிங் படிப்பு படித்தானாம். அவன் என்னமோ சோறாக்கறதுக்கு படிக்கறானாமா என்று ஊருக்குள் பேசியிருக்கிறார்கள். படித்து முடித்தவன் செஃப் ஜேக்கப் கூட இருந்திருக்கிறான். அவரே தான். குறுந்தாடியோடு சன் டிவியில் சண்டே சமையல் செய்து கொண்டிருப்பாரே, அவரே தான். ஜேக்கப் அற்ப ஆயுளில் இறந்து போனார். இவன் சொந்தமாக ஓட்டல் ஆரம்பித்து விட்டான்.

சென்ற முறை ஊருக்குப் போயிருந்த போது, சிலர் தங்கராசைப் பற்றி விசாரித்தார்கள். இப்போதெல்லாம் வீட்டுக்கு ஒரு பையனோ, பெண்ணோ சென்னையில் இருக்கிறார்கள். இல்லையென்றால் நெருங்கிய சொந்தத்தில் யாராவது பிழைப்புத் தேடி தலைநகருக்கு வந்திருக்கிறார்கள்.சென்னையைப் பற்றிய பிரமிப்புகள் முன் போல இன்றைக்கில்லை. வண்டலூர் மிருகக் காட்சி சாலையையும், பெசண்ட் நகர் பீச்சையும் நம்மை விட அதிகமாக அறிந்திருக்கிறார்கள். நாமெல்லாம் ஊருக்குப் போய் ஈரோடு ஈஸ்வரன் கோவில் வீதியில் ஷாப்பிங் செய்து வந்தால் அவர்கள் சென்னைக்கு வந்து ரங்கநாதன் வீதியில் தேடுகிறார்கள். சென்னை அவ்வளவு பரிட்சயம் ஆகி விட்டிருக்கிறது.

ஆனால் அவர்களுக்கு தங்கராசைப் பற்றி தெரிந்து கொள்ள நிறைய இருந்தது.

“ஏப்பா, என்னமோ தங்கராசு ஓட்டல் கடை வெச்சிருக்கானாமா?”

”ஆமாங்க. அப்படித்தான் சொன்னாங்க”

“என்னமோ ஒருக்கா வந்து சாப்புட்டா ஐநூறு, ஆயரம்னு பணம் ஆகுமாமா? நெசமாவா?”

“குடும்பத்தோட சாப்புட்டா அப்படி ஆகுமுங்க”

“ஆயர்ரூவாய்க்கு அப்படி எத்தனையப்பா திம்பானுக?”

”செலவு ஆகுமுங்க. ஆள் கூலி, கடை வாடகை இப்படி எக்கச்சக்க செலவு இருக்கும்”

“ஆமாமா.. டவுன்ல ஆகும்”

“ “

“அப்பறம் இன்னொன்னு சொல்றாங்களே, நெசமா?”

“என்னுங்க?”

“எவனோ ஒருத்தன் இருந்தானாமா. அவன் செத்ததீம் இவன் அவனோட சொத்தெல்லாம் அமுத்தீட்டானாமா.”

“நம்மளுக்கு தெரியலீங்க”

ஜேக்கப்பின் உடைமைகளை தங்கராசு அபேஸ் செய்தானா என்றெல்லாம் தெரியவில்லை. ஆனால் ஜெயித்துக் கொண்டிருக்கிறான் என்பது மட்டும் தெரிந்தது.

No comments: