Tuesday, January 28, 2014

அப்பாவின் வாசனை

”வெள்ளை நிறத்தொரு பூனை
எங்கள் வீட்டில் வளருது கண்ணீர்”

”வாட்?”

“வெள்ளை நிறத்தொரு பூனை
எங்கள் வீட்டில் வளருது கண்ணீர்”

“யாருடா சொல்லிக் குடுத்தாங்க? உங்க மிஸ்ஸா?

“இல்லப்பா. பவித்ரா ஆண்ட்டி” என் மகள் போகும் பாட்டு கிளாஸின் டீச்சர்.

ஆறு மாதமாக ’விக்னேஸ்வரகா பாத பங்கஜம்’ பாடிக் கொண்டிருந்தவள் இப்போது தான் பூனைக்கு வந்திருக்கிறாள்.

“அப்புறம் என்னடா சொல்லிக் குடுத்தாங்க?”

“சாந்து நிறமொரு குட்டி.. பாம்பு நிறமொரு குட்டி..”

“அப்படீன்னா?”

“பாம்பு நிறம்னா ஸ்நேக் கலர்.. சாந்து நிறம்னா பிளாக் கலர்..”

“இது ஆண்ட்டியே சொன்னாங்களா, நீ அடிச்சு ஓட்டுறியா?”

”ஆண்ட்டியே சொன்னாங்கப்பா”

“இந்த மாசம் ஃபீஸ்ல நூறு ரூபா கட்டுன்னு சொல்லிரு”

”ஸ்கூலுக்குத் தானப்ப ஃபீஸ்? பாட்டு கிளாஸுக்கு யாராச்சும் ஃபீஸ் கட்டுவாங்களா?”

எல்லா இடத்திலும் ஃபீஸ் கட்ட வேண்டும் என்பது அவளுக்குத் தெரிவதில்லை. ஃபீஸ் கட்டும் எல்லா இடமும் முழுமையான கற்கும் அனுபவத்தை வழங்குவதில்லை. ஆண்டுக்கு 42 ஆயிரம் வாங்கும் பள்ளியில் இப்படித்தான் ஒரு அனுபவம். அனுபவம் அவளுக்கில்லை. எனக்குத் தான். ஸ்கூல் ஆட்கள் யாராவது பார்த்தால் அடுத்த வருடம் வேறு ஸ்கூல் தேட வேண்டியிருக்குமோ என்னவோ! அனுபவம் முழுக்க முழுக்க ஸ்கூலைப் பற்றியதல்ல. பள்ளியுடனான என் அனுபவம் பற்றியது.

தினம் ஒரு செயலைச் செய்வார்கள். அந்த ஷீட்டை வீட்டுக்கும் கொண்டு வருவாள். இரண்டு நாட்களுக்கு முன் அப்படித்தான் ஒரு ஷீட்டைக் காண்பித்தாள்.

அதன் இடது பக்கம் கண், மூக்கு, வாய், காது ஆகியவை இருந்தன. அதே போல வலது பக்கம் முரசு, ஐஸ் கிரீம், சூரியன், ரோஜாப் பூ இருந்தன. பொருத்தமான ஜோடிகளை கோடிட்டு இணைக்க வேண்டும். கண்ணுக்கு நேராக சூரியன், மூக்குக்கு நேராக ரோஜா, வாய்க்கு ஐஸ் கிரீம், காதுக்கு முரசு என கோடு போட்டு இணைத்திருந்தாள். ”எப்படிடா ஜாயிண்ட் பண்ணினே?” என்றேன்.

“மிஸ் சொன்னாங்க. செஞ்சேன்” என்றாள்.

பிறகு ஒவ்வொன்றாக விளக்கினேன். கண்ணில் என்ன செய்வோம்? டிவி பார்ப்போம், அழுவோம், கண் மையிடுவோம்.. வாயிலே என்ன செய்வோம்? சாப்பிடுவோம்.. பேசுவோம். ரைம்ஸ் சொல்லுவோம்..குட்.. காதிலே என்ன செய்வோம்? பாட்டுக் கேட்போம்.. தோடு போடுவோம்.. தோப்புக் கரணம் போடுவோம்..மூக்கிலே என்ன செய்வோம்? சளி சிந்துவோம்.. ஸ்மெல் பண்ணுவோம்..

இப்படி ஒவ்வொன்றாக விளக்கிய பிறகு, கண்ணையும் சூரியனையும் இணைத்தது ஏனென்று அவளுக்குப் புரிந்தது. வாயும் ஐஸ் கிரீமும் புரிந்தது. காதும் முரசும் புரிந்தது. மூக்கும் ரோஜாவும் புரிந்தது. ”ரோஸ் தலையில தான வைப்போம்?” என்ற கேள்வி வேறு. அதற்கும் விளக்கம் சொல்ல வேண்டியிருந்தது.

ஆர்வமாகக் கற்றாள். நிறைய விஷயங்களை தொடர்புபடுத்த ஆர்வம் காட்டினாள். பள்ளிகளில் இத்தகைய ஆர்வத்தைத் தூண்டுகிறார்களா என்பது சந்தேகமே. அதற்காக ஆசிரியர்களைக் குறை கூறுவது மட்டுமே சரியாக இருக்குமா தெரியவில்லை. என் ஆரம்பப் பள்ளியில் பயிற்றுவித்த மேகலிங்க வாத்தியார் துவரம் பருப்”பு, பாசிப் பருப்பெல்லாம் பள்ளிக்குக் கொண்டு வருவார். அவற்றை சாம்பிள் கொண்டு வந்து மாணவர்களுக்கு விளக்குவார். இத்தனைக்கும் அதெல்லாம் பாடத்திலேயே இருக்காது.

அவர் ஒரு நாள் ”கந்தன் கழுதையைக் களத்தில் கழுவி கழுதையின் கழுத்தில் கயிற்றால் கட்டினான்” என்று மோனையோடு ஒரு வாக்கியம் சொன்னார். அதே மாதிரி இன்னொரு வாக்கியம் சொல்லுங்கள் பார்க்கலாமென்று டெஸ்ட் வைத்தார். “குப்பன் குதிரையை குளத்தில் குளிப்பாட்டி குதிரையின் குண்டியில் குச்சியால் குத்தினான்” என எழுதினேன். யார் அந்தக் குப்பன் என்று கேட்காதீர்கள்.

கற்பித்தலை அவ்வளவு ஈடுபாட்டோடு செய்த ஆசிரியர்களும், மருத்துவத்தை சிரத்தையாகச் செய்த டாக்டர்களும் இன்றைக்கு தொலைந்து போய் விட்டார்கள். போதி தர்மரின் புத்தகத்தோடு சேர்த்து அவர்களையும் மியூசியத்தில் வைத்திருக்கிறோம். இன்றைய டீச்சர்களையும், டாக்டர்களையும் பார்க்கும் போது இன்சூரன்ஸ் ஏஜெண்டுகள் மீது வெகுவான மரியாதை கூடுகிறது.

மூக்கில் நுகர்வது பற்றி விரிவாக விளக்கிய பிறகு மகளிடம் நாமும் ஒரு டெஸ்ட் வைக்கலாமே என நினைத்தேன். அவ்வை சண்முகி படம் உருவான போது ஸ்ருதி ஹாசன் சின்னப் பிள்ளையாம். வாயில் விரலை வைத்தால் கடிக்கத் தெரியாதாம். பொம்பளை வேஷம் போட்ட கமல் போட்டோவைப் பார்த்து ”கமலே தான்” என்று கரெக்ட்டாகச் சொல்லுச்சாம். எப்படி கண்டுபிடித்தாய் என்று கேட்டதற்கு, “I could smell you” என்று சொல்லுச்சாம். நம்மையும் கமல் ரேஞ்சுக்கு நினைத்து டெஸ்ட்டை ஆரம்பித்தேன்.

“ஜவ்வாது ஸ்மெல் எப்படியிருக்கும்”

“ரொம்ப ஸ்வீட்டா”

“தூங்கும் போது முச்சா போயிட்டா அந்த ஸ்மெல் எப்படியிருக்கும்”

“அய்யய்யே..” மூக்கைப் பொத்திக் கொண்டாள்.

“சரி, அப்பா ஸ்மெல் எப்படியிருக்கும்

கிட்ட வந்து என்னைக் கட்டிக் கொண்டு, “பிளாக் கலர்ல” என்று சொல்லி விட்டாள். பிளாக் என்றால் சாந்து நிறந்தானே என்பதை அவள் பாட்டு டீச்சரைப் பார்த்தால் கேட்டுத் தெளிவுபடுத்திக் கொள்ள வேண்டும்.

No comments: