Friday, January 03, 2014

ஆளாளுக்கு பதிப்பகம் ஆரம்பிச்சா என்ன ஆவது?

எழுத்தாளர் நண்பர் என்.சொக்கன் தனியாக பதிப்பகம் ஆரம்பிக்கிறாராம். முன்னேர் என்று பெயர் வைத்திருக்கிறார்கள். இரண்டு மூன்று பேர் சேர்ந்து ஒன்றாக ஏர் உழும் போது முன்னால் செல்லும் ஏருக்கும் முன்னத்தி ஏர் என்று பெயர். தியோடர் பாஸ்கரன் தனது ‘எம் தமிழர் செய்த படம்’ நூலில் தமிழ் சினிமா முன்னோடிகளை முன்னத்தி ஏர் பிடித்தவர்கள் என்றொரு வாசகம் மூலம் விளிப்பார். முன்னேர் பதிப்பகம் அந்த மாதிரி முன்னோடியாக இருக்கட்டும்.

போகிற போக்கைப் பார்த்தால் எழுத்தாளர்கள் அனைவரும் பதிப்பகம் ஆரம்பித்தாக வேண்டும் போலிருக்கிறது. அதே போல பதிப்பாளர்கள் எல்லா ஊர்களிலும் தாங்களே கடைகளை விரித்து விற்றாக வேண்டும் போல. அப்படித்தான் இருக்கிறது நிலைமை. அப்படி முடியாத எழுத்தாளர்கள் முடிந்த அளவில் தன்னை மார்க்கெட்டிங் செய்து பதிப்பாளனுக்கு உதவியாக வேண்டியிருக்கிறது. அப்படி முடியாதவன் சொந்தமாக பப்ளிகேஷன் ஆரம்பிப்பதைத் தவிர வேறு வழியில்லை.

ஒரு புகழ் பெற்ற ஓல்டு மாங்க் (மூத்த எழுத்தாளர் என்பதைத்தான் அப்படிச் சொல்கிறேன்) முப்பது வருடமாக தன் புத்தகங்களைத் தானே பதிப்பித்து வந்ததாக பாதித் தூக்கத்தில் இருந்து எழும் போதெல்லாம் டைப் செய்வார். ஈரோட்டில் புலவர் ராசு என்பவர் அப்படித்தான் செய்கிறார். அநேகமாக எல்லா ஊர்களிலும் இந்த மாதிரி ஆட்கள் இருப்பார்கள் என நினைக்கிறேன்.

தானே செலவு செய்து எதாவது ஆஃப்செட் பிரிண்டடில் கொடுத்து புத்தகங்களை அச்சடித்து வீட்டில் வைத்து விற்பது ஒரு வகை. அல்லது எதாவது பதிப்பகத்தில் இருபது முப்பதாயிரம் காசு கொடுத்து புக் போடச் சொல்லி தன் படைப்பை அச்சில் கொண்டு வருவது இன்னொரு வகை. ’உங்க புக்கை நான் போடறேன்’ என்று சொல்லுமளவுக்கு யாரையாவது பிடிப்பது மூன்றாவது வகை. மின் புத்தகங்களாக தானே வெளியிடுவது நான்காவது.

இந்த இரண்டாவது மற்றும் மூன்றாவதில் பதிப்பாளர்கள் எப்படியும் proof reading செய்து விடுவார்கள். சர்ச்சைக்குரிய மேட்டர் என்றால் எடிட் செய்வார்கள். சப்ஜெக்ட் நாலேஜ் போதுமென்கிற தலைப்புகளில் மொழியை அவர்களே மெருகேற்றிக் கொள்வார்கள். ஆனால் சொந்தமாக பதிப்பிக்கும் போதும், ஒன்மேன் ஆர்மி மாதிரி பதிப்பகம் நடத்தும் போதும் எழுத்துப் பிழைகளைச் சரி செய்வது சிக்கலான வேலை.

தொழில் முறையிலான காப்பி எடிட்டர், புரூஃப் ரீடர் எல்லாம் அவுட்சோர்சிங் மூலம் கிடைக்கிறார்கள். சிலர் நட்பின் அடிப்படையில் இவ்வித வேலைகளை இலவசமாகச் செய்து தருவார்கள். சிலர் சார்ஜ் செய்வார்கள். என்னதான் மொழி ஆளுமையில் நீங்கள் அப்பாடக்கராக இருந்தாலும் நீங்கள் எழுதியதை நீங்களே திரும்பவும் வாசிக்கும் போது பாதிக்கும் மேலான பிழைகள் அப்படியே நின்று போகும்.

தமிழில் ஓரளவு பரவாயில்லை. புரூஃப் ரீடிங் செய்து கொடுக்க நிறையப் பேர் இருப்பார்கள். ஆங்கிலத்தில் சிக்கல். அங்கே ஒரு பக்கத்துக்கு ஒரு டாலர் என 250 பக்கத்துக்கு 250 டாலர் பில் போட்டு விடுவார்கள். அதைத் திரும்பச் சம்பாதித்து break even செய்யவே இரண்டு வருடம் ஓடி விடும். The Science of Stock Market நூலை Kindle வடிவில் வெளியிட்ட போது நானே இரண்டு தடவை மெய்ப்புப் பார்த்தேன். நூல் வெளியான போது சென்னை பங்குச் சந்தை இயக்குனர் திரு.நாகப்பன் அவர்கள் அருமையான foreword ஒன்றை எழுதிக் கொடுத்தார்.

சில நாட்களுக்கு முன்னர் காமேஷ் ஜெயச்சந்திரன் பேசினார். ரொம்ப Rational ஆன நபர். அந்த வார்த்தை ஆயிரம் வரிகளில் விவரித்துச் சொல்ல வேண்டிய அர்த்தத்தை எட்டு ஆங்கில எழுத்தில் சொல்லி விடும். அதனால் காமேஷைப் பற்றி இதற்கு மேல் விவரிக்கத் தேவையில்லை. ஏற்கனவே தமிழில் வெளியான பங்குச் சந்தை பற்றிய இழக்காதே புத்தகத்தை வாசித்து விட்டு ஊக்குவித்திருக்கிறார். Science of Stock Market ஐ இப்போது வாசித்து விட்டு அதன் எழுத்துப் பிழைகளைக் கண்டு பிடித்துச் சொல்லி உதவியிருக்கிறார்.

என்னைப் பொருத்த மட்டில் இது பெரிய விஷயம். மொத்தம் 175 இடங்களில் திருத்தம் செய்யப் பரிந்துரைத்திருக்கிறார். Shares என்ற சொல் shared ஆகவும், grown என்பது grows ஆகவும், hindustan lever என்பது hindustan level ஆகவும், taing care என்பது talking care ஆகவும் பிழைகள். மொத்தம் 93,210 சொற்கள் உள்ள ஒரு புத்தகத்தில் இந்த மாதிரி 175 சில்லி மிஸ்டேக்ஸ் சகஜம் என சமாளிக்கலாம். வேகமாக வாசிக்கும் போது இந்தச் சிறிய தவறுகள் கவனிக்கப்படாமலேயே போகலாம். அப்படியே கவனித்தாலும் ஹிந்துஸ்தான் லெவல் அல்ல ஹிந்துஸ்தான் லீவர் தான் என்று அவர்கள் புரிந்து கொள்வார்கள். ஆனாலும் தவறு தவறுதானே!

காமேஷ் சொன்ன திருத்தங்களைச் செய்து முடிக்கவே அரை நாள் ஆனது. அவற்றைக் கண்டு பிடிக்க மனிதர் எத்தனை நேரம் செலவழித்திருப்பார் என நினைக்கையில் மலைப்பாக இருக்கிறது. அவருக்கு இது தொழில் கிடையாது. ஆனால் அவர் செய்திருப்பது தொழில் முறை எடிட்டிங் வேலை. (தமிழில் இழக்காதே வெளியான போது அதை பதிப்பகத்தில் எடிட் செய்ய மாதங்கள் ஆனது என்பதை இங்கே குறிப்பிடுவது பொருத்தமாக இருக்கும்.)

காமேஷ் rational ஆன ஆள் என்று தெரியும். மனிதன் அவ்வப்போது emotional ம் ஆவான். இந்த நன்றிக் கடனை எப்படித் தீர்க்கப் போகிறேன் எனத் தெரியவில்லை என்று emotional ஆக சாட்டில் சொன்னதற்கு, “More such books from you is great way to pay to the whole society” என rational ஆக பதில் அனுப்பியிருக்கிறார்.

By the way, புதுப்பிக்கப்பட்ட Science of Stock Market அந்த 175 திருத்தங்களொடு இப்போது அமேசானில்.

No comments: