Sunday, January 05, 2014

முன்னாள் காதலி

நாம் சபித்தவர்களை, வாழ்க்கையில் மன்னிகவே மாட்டேன் என சபதம் எடுத்தவர்களை சந்திக்கும் தருணங்கள் எப்படியிருக்குமென்று இது வரைக்கும் நான் கற்பனை செய்து பார்த்ததில்லை. அப்படி ஒரு நிமிடத்தை ஒரு சராசரி மனிதன் எப்படி எதிர்கொள்வான் என யோசிக்க விரும்பியதுமில்லை. மறக்க நினைத்த விஷயங்களை மறுபடியும் நினைவடுக்குகளில் புதுப்பிக்க வேண்டிய சூழ்நிலை வருமென்று நான் உருவகம் செய்து வைத்திருந்த காட்சிகள் கதைகளிலும், சினிமாவிலும் மட்டுமே நடக்குமென்று சமாதானம் சொல்லிக்கொண்டிருந்தேன். இப்போது நந்தினியைப் பார்த்த பிறகு எல்லாமே மாறி விட்டது.

நந்தினி ! கிட்டத்தட்ட இந்தப் பெயரைக் கூட மறந்து விட்டேன். மறந்து விட்டேன் என்றால் அந்தப் பெயருக்கு வேறு யாரையாவது நினைத்துக் கொள்ளும் அளவுக்கு நந்தினியை விட்டும், அவள் நினைவுகளை விட்டும் வெகு தூரம் கடந்து வந்திருந்தேன். அசோக் என்ற பெயரில் எனக்கு இருபது பேருக்கு மேல் தெரியும். போனில் அசோக் அழைப்பதாக யாராவது சொன்னால் போன வாரம் ஒன்றாக தண்ணி அடித்த அசோக்கின் உருவம் கண் முன்னால் வந்து நிற்பதைப் போல எத்தனையோ நந்தினிகள் இந்த ஆறு வருடத்தில் அறிமுகமாகியிருக்கிறார்கள். ஆனால் இப்போது என் முன்னால் நிற்கும் நந்தினி அசலான நந்தினி.

சைப்ரானிக்ஸ் சாஃப்ட்வேர் சிஸ்டம்ஸ். அதுதான் நான் வேலை பார்க்கும் நிறுவனம். பல காலமாக ஒரே கம்பெனியில் இருப்பதில் பல செளகர்யங்களும், சில அசெளகர்யங்களும் உண்டு. பதிமூன்று வருடமாக இங்கேயே குப்பை கொட்டுவதால் உருவாகும் வெற்றிடங்களில் இலகுவாக உட்கார முடிகிறது. அப்படி உட்கார்ந்த நாற்காலி தான் 130 பேருக்கும் மேல் சைஸுடைய டீமுக்கு மேனேஜர். மேனேஜர் நாற்காலி என்றால் அந்த டீம் செய்யும், செய்யாத எல்லா நல்லது கெட்டதுக்கும் பொறுப்பாளி என்று அர்த்தம்.

புதிதாக வேலைக்கு வரப் போகும் டீம் லீடரின் பெயர் நந்தினி முகர்ஜி என்று HR-இல் சொல்லியிருந்தார்கள். நானும் ஏதோ ஒரு பெங்காலிப் பெண்ணை எதிர்பார்த்திருந்தேன். ஆனால் என் முன்னால் வந்து நிற்பது நந்தினி நவநீதகிருஷ்ணன் என்ற பெயரில் என் பெயரைச் சேர்த்து நந்தினி மனோகரனாக மாறியிருக்க வேண்டியவள். என்னவளாக இருந்தவள்.

நாங்கள் பழகிய அந்த நாட்களிலும் நான் சைப்ரானிக்ஸில் தான் வேலை செய்தேன். என்னை எதிர்பார்த்துத்தான் இந்த வேலையில் இப்போது சேர்ந்தாளா தெரியவில்லை. மென்பொருள் துறையில் யாரும் இத்தனை வருடமாக ஒரே நிறுவனத்தில் வேலை செய்ய மாட்டார்கள் என்று கூட அவள் நினைத்திருக்கலாம். நேராக வந்து எனக்குக் கீழே வேலை செய்ய வேண்டிய கட்டாயம் நேருமென அவள் எதிர்பார்த்திருக்க வாய்ப்பில்லை. வேண்டாமென உதறி விட்டுப் போனவள், தொடர்புகளைத் துண்டித்துச் சென்றவள், மறுபடியும் என் முகத்தில் முழிக்கும் சூழ்நிலையை நிச்சயம் வேண்டியிருக்க மாட்டாள்.

நந்தினியை நான் காதலியாக அடைந்த வரலாறு சுவாரசியமானது. அப்படியொன்றும் சுவாரசியம் இல்லையென நீங்கள் கருதினாலும் குறைந்தபட்சம் வழக்கமான காதல் கதைகளில் இருந்து மாறுபட்டது. நாங்கள் ஒரே காலேஜில் படிக்கவில்லை. பக்கத்து வீட்டில் வசிக்கவில்லை. ஒரே அலுவலகத்தில் சேர்ந்து பணியாற்றவில்லை. ஒரே பேருந்திலோ, ரயிலிலோ கூட இணைந்து பயணிக்கவில்லை. பொதுவான நண்பர்களால் அறிமுகமாகி நட்பையும் வளர்க்கவில்லை. இலக்கியக் கூட்டங்களில் சந்தித்துக்கொண்டு அறிவுஜீவித்தனமாக நினைத்துக்கொண்டு ஒரே அலைவரிசையில் உளறியதுமில்லை.

நாங்கள் அறிமுகமானது தமிழ் மேட்ரிமோனி வெப்சைட் மூலமாக. மாப்பிள்ளை பார்க்க நந்தினியும், பெண் தேடுவதற்கு நானும் அதில் பதிவு செய்து வைத்திருந்தொம். ஒரு பொழுது போக்காகவே அதை ஆரம்பத்தில் கருதி வந்தேன். அங்கே லிஸ்ட் ஆகியிருந்த பெண்களின் போட்டோவையெல்லாம் ஃபிரண்ட்ஸுடன் சேர்ந்து கமெண்ட் அடித்துக்கொண்டும், நம்மைக் கட்டிக்கொள்ள ஒரு ஐஸ்வர்யா ராய் காத்திருக்கிறாள் என உள்ளூர நம்பிக்கொண்டும் இருந்தேன். ஒரு கட்டத்திற்குப் பிறகு ஹோம்லியாக உள்ள புரஃபைல்களை சீரியஸாகவே கருத்தில் கொள்ளத் தொடங்கினேன். அப்படி தொடர்பு கொண்ட ஒரு புரஃபைல் நந்தினியுடையது.
தமிழ் மேட்ரிமோனியில் இருந்த அவளது மின்னஞ்சல் முகவரிக்கு எழுதினேன். அதில், ’எதிர்பார்ப்புகள் பெரிதாக இல்லாத, வாழ்க்கையை சிக்கலின்றி வாழ முற்படும் ஒரு எளியவன்’ என அறிமுகப்படுத்திக் கொண்டு அவளது ஜாதகத்தைக் கேட்டேன். அவளும் அனுப்பி வைத்தாள். நீங்களே பொருத்தம் பாருங்கள். பொருந்தினால் பெற்றோருக்கு அனுப்பி வைக்கலாமெனவும் கூறினாள். அதை பெற்றோருக்கு எடுத்துச் செல்ல வேண்டிய கட்டாயம் எங்களுக்கு ஏற்படவே இல்லை.

நல்ல அலையன்ஸ் வந்தால் சொல்கிறேன் எனவும், சொல்லுங்கள் எனவும் புன்னகையோடு நட்பானோம். போன் நம்பரைப் பரிமாறிக்கொண்டோம். பேசினோம். ஆரம்பத்தில் அவ்வப்போது பேசியவர்கள் காலப் போக்கில் நேரம் கிடைக்கும் போதெல்லாம் பேசினோம். எப்போதாவது சந்தித்துக்கொண்டோம். எப்போதும் தொடர்பிலேயே இருந்தோம்.

ஒரு நாள், “நமக்கு ஜாதகம் பொருந்தியிருந்தா என்ன ஆகியிருக்கும்?” எனக் கேட்டேன்.

“இப்ப போன்ல பேசிட்டு இருக்க மாட்டோம். நான் உன் பக்கத்துல இருப்பேன்.” என்றாள்.

“அப்புறம்..”

“அப்புறம் .. விழுப்புரம்”

“ஏய் சொல்லு…”

“ம்ம்ம்..அப்படியே சட்டை காலரைப் புடிச்சு சப்பு சப்புன்னு அறையணும் போல இருக்கு.”

“அப்புறம்?”

“அப்புறம் அப்படியே டைட்டா கட்டி புடிச்சுக்கணும் போல இருக்கு”

நெருக்கமானோம். ஈர முத்தங்களை பரிசளித்துக் கொண்டோம். மென்மையான தழுவல்களை ஒத்திகை பார்த்தோம். யாருமற்ற சாலையில் நீண்ட நேரம் பயணித்தோம் - நண்பர்களாகவே. ஏனெனில் எங்களுக்குத் தெரிந்திருந்தது, எங்கள் பெற்றோர் ஜாதகப் பொருத்தம் இல்லாமல் சம்மதிக்க மாட்டார்களென்று.

எங்கள் நட்பில் ஒருவித புனிதத்தன்மை புதைந்திருந்தது. எதையும் எதிர்பார்த்து நாங்கள் பழகவில்லை. எங்கள் பழக்கத்தை காதலாக நாங்கள் குழப்பிக்கொள்ளவில்லை. அது காதல் தானா எனவும் தெரியவில்லை. எங்களுக்கு நாங்கள் எப்படி இருந்தோமோ அது பிடித்திருந்தது. எங்கள் அளவில் ஒருவருக்கொருவர் நேர்மையாக இருந்தோம். இப்போதும் கூட நான் அவளுக்காக மாப்பிள்ளை பார்ப்பதும், அவள் எனக்காக பெண் தேர்ந்தெடுப்பதுமாகிய உதவிகளை மனதாரச் செய்துகொண்டிருந்தோம்.

இந்த இடத்தில் நான் நந்தினியால் முழுமையாக வசீகரிக்கப்பட்டிருந்தேன் என்பதை ஒப்புக்கொண்டாக வேண்டும். அவள் நினைவுகள் மட்டும் என் சிந்தனையை ஆக்கிரமிக்கவில்லை. அவளவு அருகாமை என்னை ஆட்கொண்டது. நந்தினியின் வாசம், அவளது மிருதுவான தொடுதல், ஆழமான தழுவுல், ஈரமான உதடு என்னை முழுதுவதுமாக பித்தனாக்கியிருந்தது. அவள் பேரழகியாக இல்லாமல் இருக்கலாம். சாலையில் கடக்கும் பெண்கள் சிலருக்கு அவளை விட எடுப்பான உடலும், வசீகரமான நிறமும் வாய்த்திருக்கலாம். ஆனால் அவர்கள் யாரும் நந்தினியைப் போல ஈர்க்கவில்லை. அவளுடனான நெருக்கத்தை விவரிக்கத் தெரியவில்லை. பிடித்திருந்தது.

ஒரு நாள் ”நீ ரொம்ப நல்லவனா?” என்று கேட்டாள். ஏனென்று கேட்டால், இன்னும் கூட எப்படி உன்னால் எனக்கு மாப்பிள்ளை பார்க்க முடிகிறது என்றாள். என்னால் முடியவில்லை. நான் நடித்துக்கொண்டிருந்தேன். உண்மையில் அவளிடம் நடிக்க முயன்று தோற்றுக்கொண்டிருந்தேன். எதற்கான நந்தினியை மிஸ் பண்ண வேண்டுமென எனக்குள்ளேயே நான் தொடுத்த கேள்விக்கு விடை தேட முடியாமல் தடுமாறிக்கொண்டிருந்தேன். அவள் உடலின் ஒவ்வொரு அங்குலமும், ஒவ்வொரு திசுவும், ஒவ்வொரு சொட்டு வியர்வையும், கண்ணீரும் எனக்கே எனக்கானவை என திடமாக நம்பினேன்.

அவளும் நம்பினாள். நம்பியதைக் காட்டிலும் நிர்ப்பந்தித்தாள். என் ஒவ்வொரு மணித்துளியும், அந்தரங்கங்களும் தனக்கு மட்டுமே உரித்தானது என நம்பினாள். நாங்கள் ஒருவரையொரு காதலிக்கத் தொடங்கினோம். சொல்லப் போனால் காதலிப்பதை உணர்ந்து கொண்டோம். ஏனென்றால் அதற்கு முன்னும் கூட காதலித்துக்கொண்டு தான் இருந்திருக்கிறோம். ஆனால் அதை உணராமல் இருந்திருந்தோம். அல்லது ஏற்றுக்கொள்ளாமல் இருந்திருந்தோம். இப்போது உணர்ந்து அதை ஏற்றுக்கொண்டு காதலிக்க ஆரம்பித்தோம். காதலில் புதிய பரிமாணங்களைத் தொட முயற்சித்தோம். இதற்கு முன் இந்தப் பூமியில் வாழ்ந்த அத்தனை காதலர்களும் செலவு செய்து தீர்க்க முடியாத காதலின் பாக்கி எங்களுக்காக இருப்பதாகக் கருதினோம். பதினாலாவது பிரசவத்தில் இறந்து போன மூன்றாவது மனைவி மீது ஷாஜகானுக்கு எத்தனை காதல் இருந்திருக்கும் என வியந்தோம். யமுனைக் கரையில் இன்னும் கட்டிடத்தால் நிரூபிக்கப்படாத காதலின் எச்சம் எங்களுக்காக மிஞ்சியிருப்பதாகக் கருதிக் கலவினோம்.

கலவிக் களித்துக் களைத்த கால் மணி நேரத்தில் கேட்டாள். “நான் உனக்கு சலித்து விடுவேனா?” ஷாஜகானுக்குக் கூட உன்னதமான காதலைக் கண்டறிய மூன்று மனைவிகள் தேவைப்பட்டார்கள் என்பது அவள் வாதம். அவளை விட்டு அகலாமல் நான் இருக்க வேண்டுமென இறைஞ்சினாள். ”ஏ லூஸு” என்று சொல்லி விட்டு அவள் கண்ணீரைச் சுவைத்து முத்தமிட்டேன். பரிசுத்தமான தெய்வீகச் சயனத்தில் சஞ்சரித்திருந்தோம். தீரக் கூடிய காதலா அது? இது வரைக்கும் எந்த ஆடவனும் கொண்டிராத ஒட்டு மொத்தக் காதலை அவள் மீது சொரியவிருந்தேன். அள்ள அள்ளக் குறையாத காதல் என்னுள் பெருஞ்சுனையாக ஊற்றெடுத்தது. எந்த இலக்கியத்திலும் காதலை இத்தனை தூரம் போற்றியிருக்க வாய்ப்பில்லை. எந்த கலாச்சாரமும் எங்கள் அளவுக்கு காதலைக் கொண்டாடியிருக்க முடியாது. வாழ்க்கை இதை விட இனிமையாக ஒரு போதும் இருந்திருக்கும் சாத்தியமில்லை.

இனிமையான நாட்களிலன் இடையே ஒரு அதிகாலையில் அழைத்தாள். அப்பாவுக்கு உடம்பு முடியவில்லை, அதனால் ஊருக்குப் போக வேண்டும் என்று சொல்லி விட்டு அவசரமாகக் கிளம்பினாள். போய் மெசேஞ் செய்வதாகச் சொன்னாள். அடுத்த முறை ஊருக்குச் செல்லும் போது அவளது பெற்றொரிடம் என்னைப் பற்றிச் சொல்வதாக ஏற்கனவே வாக்களித்திருந்தாள். இது அதற்கான தருணமாக இருக்குமா தெரியவில்லை. மிஸ்டர் நவநீதகிருஷ்ணன் உடல் நலம் தேறட்டும் என கடவுளை வேண்டினேன். வேண்டி விட்டுக் காத்திருந்தேன்.

மூன்று நாள் ஓடியது. மெசேஜ் இல்லை. தொலைபேசி அழைப்புமில்லை. நான் கூப்பிட்டுப் பார்த்தேன். மொபைல் ஆஃப் செய்யப்பட்டிருந்தது. அவள் வீட்டு லேண்ட்லைன் நம்பருக்கு டயல் செய்தேன். போன் அடித்துக்கொண்டே இருந்தது. யாரும் எடுக்கவில்லை. விடாமல் முயன்றுகொண்டேயிருந்தேன். அடுத்த நாள் அவளை மொபைலில் பிடித்தேன். ஒரே ரிங்கில் எடுத்தாள். “மறுபடி ஈவினிங் நானே கால் பண்றேன்” என மறு பேச்சுக்கு இடமின்றி வைத்து விட்டாள்.

ஈவினிங் போன் வரவில்லை. நானே அழைத்த போது நம்பர் உபயோகத்தில் இல்லை என வந்தது. பல தடவை முயற்சி செய்தும் அதே பதில். இரண்டு வாரம் கழித்து அவள் ஊருக்கே போனேன். கிராமமாக இருந்தால் பக்கத்தில் உள்ளோருக்கு தெரிந்திருக்கும். அது ஒரு சிறிய நகரம். தேடிக் கண்டுபிடிப்பது சிரமமாகத்தான் இருந்தது. இருந்தாலும் பரவாயில்லையெனச் சென்றேன். இரண்டு வீடுகளில் விசாரித்த போது அவர்களைப் பற்றித் தெரிந்திருந்தது. ஆனால் வீட்டைக் காலி செய்து விட்டு எங்கே சென்றார்களென அவர்கள் அறிந்திருக்கவில்லை. சென்னையில் அவள் வேலை செய்த கம்பெனிக்கு திரும்ப வரவில்லை. தங்கிய லேடீஸ் ஹாஸ்டலுக்கும் வரவில்லை.

பல முறை அவளுக்கு ஈமெயில் அனுப்பினேன். ஒரே ஒரு தடவை ஆன்லைனில் வந்தாள். வந்த உடனே காணாமல் போய் விட்டாள். அதன் பிறகு நான் அனுப்பிய அத்தனை மெயில்களும் கிணற்றில் போட்ட கல்லுக்கு நிகரானவை. ஃபேஸ்புக், ஆர்கூட், கூகிள் பிள்ஸ் என எல்லா புரஃபைலையும் அழித்து விட்டாள். அவள் எங்கே இருக்கிறாள், என்ன செய்கிறாள், அவளுக்கு என்னவாயிற்று என பலவாறான கேள்விகள் என்னைக் குடைந்து கொண்டிருந்தன.

என்னிடம் சொல்லாமல் கொள்ளாமல் என்னைத் தவிர்த்துச் செல்லும் அளவுக்கு நான் என்ன செய்து விட்டேன்? பைத்தியம் பிடித்த மாதிரி சுற்றினேன். பிரைவேட் டிடெக்டிவ் ஏஜென்சி எல்லாம் வைத்துத் தேடிப் பார்த்தேன். கண்டறியவே முடியவில்லை. என்னை ஏன் தவிர்த்தாள்? எதற்காக என்னை ஒதுக்கி விட்டு ஓடினாள்? என்னை நிராகரிக்கும் அளவுக்கு நான் கெட்டவனா? இல்லாவிட்டால் வெறும் டைம்பாஸுக்கு என்னோடு பழகினாளா? ஒரு வேளை என்னைக் காதலிப்பதைப் பற்றி அவள் அப்பாவிடம் சொல்லியிருப்பாளோ? அவர் சொந்தக்கார மாப்பிள்ளையை மணந்து கொள்ளச் சொல்லி கட்டாயப்படுத்தியிருப்பாரோ? என்னை விட பத்து மடங்கு வசதியான அமெரிக்க மாப்பிள்ளை எவனாவது கிடத்திருப்பானோ? அல்லது நவநீதகிருஷ்ணனுக்கு நடக்கக் கூடாத ஏதாவது நடந்து விட்டதோ?

என்னதான் நடந்திருக்கட்டுமே! என்னிடம் ஒரு வார்த்தை சொல்லியிருக்கலாமே! நான் என்ன பின்னாலேயே வந்து பிளாக்மெயில் செய்யவா போகிறேன்? அவளுக்கு ஒரு பிரச்சினை என்றால் நான் அதில் பங்கெடுக்க மாட்டேனா? நந்தினி என்ற பெயரே கசந்தது. எரிச்சலூட்டியது. கடுப்பைக் கிளப்பியது. கொடுஞ்சினம் தந்தது. நாசமாகப் போகட்டும் என சபித்துக்கொண்டே இருந்தேன். அவளை கட்டிக்கொண்டு போன அமெரிக்க மாப்பிள்ளை அவளை தினம்தினம் கொடுமைப்படுத்த வேண்டுமென சாமி கும்பிட்டேன். ஒரு வேளை உள்ளூரிலேயே ஏதாவது சொந்தக்காரப் பையனை கல்யாணம் செய்திருந்தாலும் கூட அவளும், அவள் புருஷனும் அடுத்த வேலை சோற்றுக்காக என் காலில் விழுந்து கதறி அழுது கெஞ்ச வேண்டுமெனக் கும்பிட்டேன். எந்த ஒரு சூழலிலும் அவளை மன்னிக்கவே கூடாதென்பதில் உறுதியாக இருந்தேன்.

ஆனாலும் நாம் சபித்தவர்களை, வாழ்க்கையில் மன்னிகவே மாட்டேன் என சபதம் எடுத்தவர்களை சந்திக்கும் தருணங்கள் எப்படியிருக்குமென்று இது வரைக்கும் நான் கற்பனை செய்து பார்த்ததில்லை. இப்போது நந்தினி என் முன்னால் நின்று கொண்டிருக்கிறாள் – நந்தினி முகர்ஜியாக.

அவள் கண் கலங்கியிருக்கிறது. தடுத்து வைத்திருக்கும் கண்ணீர் எந்த வினாடியும் வெளிப்படலாம். சைப்ரானிக்ஸ் கம்பெனியில் என்னை எதிர்பார்த்துத்தான் வேலைக்குச் சேர்ந்தாளா தெரியவில்லை. என்னை நேராக பார்க்கத் தயங்கினாள். அறையில் மூலையைப் பார்த்துக்கொண்டு, “உனக்கு கல்யாணம் ஆகிருச்சா?” என அவள் கேட்டாள். அப்போது அவள் கண்ணில் தேக்கி வைத்திருந்த அணை உடைந்து விட்டிருந்தது.

“இல்லையடி கண்ணே” எனக் கொஞ்சியபடி அவள் கண்ணீரை முத்தமிட்டுச் சுவைக்க ஆசையாகத்தான் இருந்தது.

நன்றி: 2013 டிசம்பர் ஃபெமினா இதழ்

No comments: