Tuesday, January 07, 2014

அரவிந்த் கேஜ்ரிவாலுக்கு இது தெரியுமா?

வழக்கமாக ஜனவரி ஆரம்பித்தால் சில சம்பிரதாயங்களைச் செய்ய வேண்டியிருக்கிறது. புத்தாண்டு வாழ்த்துக்களை SMS இல் அனுப்புவது, இந்த வருடத்துக்கான தீர்மானம் ஏதாவது எடுத்துக்கொண்டு எட்டு நாளுக்கு மட்டும் கடைபிடிப்பது முதலியவை அதில் சேர்த்தி.

இந்த ஆண்டு நிறையப் பேர் வாழ்த்துச் செய்தி அனுப்பியிருந்தார்கள். ஒன்னாம் தேதி மொபைல் கம்பெனிகள் காசு பிடிக்கிறார்கள் என்பதால் பலர் டிசம்பர் 31 ஆம் தேதியே அனுப்பி விடுகிறார்கள். மூன்று பேர் மட்டும் 2 ஆம் தேதி மெசேஜ் செய்தனர். அதில் ஒன்று மட்டும் வித்தியாசமாக இருந்தது. அப்படி என்ன வித்தியாசம் என்கிறீர்களா? நீங்களே பாருங்கள்.

“இந்த வருடம் உங்களுக்கு ஆரோக்கியம், செல்வம், சந்தோசம் & common sense ஆகிய எல்லாவற்றையும் கொண்டு வந்து சேர்க்கட்டும்”

இந்த முப்பத்தைந்து வயதில் இப்படி ஒரு வாழ்த்துச் செய்தியை நான் கடந்து வந்ததில்லை. ஒரு வேளை உங்களில் யாருக்காவது அப்படியொரு சந்தர்ப்பம் வாய்த்திருக்கலாம். காமன்சென்ஸ் கிடைக்கட்டும் என வாழ்த்தை ஒரு மனநிலை வேண்டும். அந்தச் செய்தியை அனுப்பியவன் தன்னை எப்படிப்பட்ட அப்பாடக்கராக நினைத்திருப்பான், என்னை எப்படி கூமுட்டையாக நினைத்திருப்பான் என்றெல்லாம் கற்பனை செய்தால் சிரிப்பாக வருகிறது.

ஆனால் உண்மையில் இது சீரியஸான விஷயம். தோழர் என்ற சொல்லைப் போல, புரட்சி என்ற சொல்லைப் போல மிக அதிகமாக மிஸ்யூஸ் செய்யப்படும் ஒரு வார்த்தையாகவே காமன்சென்ஸ் படுகிறது. எதையாவது நிராகரிப்பதென்றால் ”இதெல்லாம் காமென்சென்ஸ்” என சர்வசாதாரணமாக நாம் ஒதுக்கி விடுகிறோம். காமன்சென்ஸ் என்பது அறிவுஜீவித்தனம் அல்ல எனவும், அதையெல்லாம் கடந்த அறிவுஜீவித்தனத்தை நிரூபித்தாக வேண்டும் என்ற காலக் கட்டாயத்திலுமாக நாம் ஓடிக் கொண்டிருக்கிறோம். அந்த ஓட்டத்தில் காமன்சென்ஸுக்கும் நமக்குமான இடைவெளியை வெகுவாகக் கூட்டுகிறோம்.

ஜனவரி மாதம் ஆரம்பித்து விட்டாலே எல்லா அலுவலகங்களிலும் இன்கம்-டாக்ஸ் (அதென்னவோ தெரியவில்லை தமிழில் யாருமே டேக்ஸ் என்று எழுத மாட்டேன் என்கிறார்கள்) குடைச்சலை ஆரம்பித்து விடுகிறார்கள். எங்கள் அலுவலகத்தில் அப்படித்தான். அநேகமாக உங்கள் அலுவலகமும் அப்படித்தான் இருக்க வேண்டும். 

நண்பர் பிரபு கூட சில நாட்களுக்கு முன் ஃபேஸ்புக்கில் ஒரு ஸ்டேட்டஸ் போட்டிருந்தார். அது: “இன்வெஸ்ட்மெண்ட் டெக்ளரேஷன்-னு ஒருவாட்டி அப்புறம் இன்வெஸ்ட்மென்ட் ப்ருஃப்-னு ஒருவாட்டி குடுத்து Form 16 வாங்கி...இப்பலாம் மாட்டுக்கு சினை ஊசி போடப்போறவன்லாம் டேக்ஸ் இல்லாம தினம் ரெண்டாயிரம் சம்பாரிக்கிறான். நாம வாங்கற அஞ்சு பத்துக்கு எம்புட்டு ஃபார்மாலிட்டீஸ்!”

வெள்ளைக்காரன் போகும் போது இரண்டு விஷயத்தை விட்டுச் சென்றான். ஒன்று ஆங்கிலம். இன்னொன்று ஃபைல் கலாச்சாரம். இந்த இரண்டும் நம்மைப் பிடித்து ஆட்டுகின்றன. ஆனாலும் தவிர்க்க முடியாது. ஃபைல் கலாச்சாரத்தின் தாக்கத்தினால் ஏதேனும் ஒரு முதலீட்டில் பணத்தைப் போட்டு வருமான வரியைக் குறைத்து விட வேண்டும் என அத்தனை பேரும் வெறி கொண்டலையும் பருவம் இது. 

”நெறைய டாக்ஸ் போகும் போலிருக்கு. எதுலையாவது இன்வெஸ்ட் பண்ணலாமா?” என்று ஒரு பெண் நேற்றுக் கேட்டார்.

“உங்களுக்கு அன்னா ஹசாரே பிடிக்குமா?” என்று அவரிடம் திருப்பிக் கேட்டேன்.

“ஓ பிடிக்குமே”

“ஆம் ஆத்மி?”

“ரொம்ப பிடிக்கும். நாம் அதுல மெம்பர் ஆகிட்டேன்”

“வெரி குட். நீங்க டாக்ஸ் சேவிங் பண்ணனும்னா சில ஐடியா வெச்சிருக்கேன்”

“ம்.. சொல்லுங்க குப்பு. எல்.ஐ.சி ல ஏதாவது பாலிசி போடட்டுமா?”

“போடலாமே!”

“வருசம் அம்பதாயிரம் போட்டா நெறையா டாக்ஸ் சேவ் ஆகும் இல்லை?”

“ஆமா. சேவ் ஆகும். ஆனா இன்வெஸ்ட் பண்ணாமலேயே உங்களுக்கு டாக்ஸ் சேவ் பண்ண ஒரு வழி இருக்கு”

“என்ன வழி?”

“எதாவது LIC ரசீது ஒன்னு ஸ்கேன் பண்ணி வெச்சுக்குங்க. அதுல உங்க பேரை மட்டும் மாத்திருங்க. அதை பிரிண்ட் எடுத்து ஃபுரூப்னு போட்டுருங்க. எப்படியும் ஒரிஜினல் சப்மிட் பண்ண வேண்டியதில்லைல”

“சூப்பர் ஐடியா.. கலக்கிட்டீங்க போங்க”

“சரி சொல்லுங்க. இப்பவும் உங்களுக்கு அன்னா ஹசாரே பிடிக்குமா?”

“ஆமா” என சிரிக்காமல் பதில் சொல்லி விட்டுப் போய் விட்டார்.

பாருங்கள். எங்கோ ஆரம்பித்து எங்கோ வந்து விட்டேன். நிஜமாகவே இந்த மாதிரியான காலங்களில் என்ன முதலீடு செய்ய வேண்டும் என்பதை விட என்ன செய்யக் கூடாது என்பதில் கவனம் தேவை. இல்லையென்றால் தேவையில்லாமல் கமிட் ஆகி விடுவோம். அதைப் பற்றி ஒரு குட்டிப் பதிவு போடலாமென ஆரம்பித்துத்தான் இதை எழுதத் துவங்கினேன். முன்பு சொன்ன டேர்ம் இன்சூரன்ஸின் தொடர்ச்சியாக கொஞ்சம் காமன்சென்ஸ் சேர்த்து அதைக் கொண்டு வர விரும்பினேன். கடைசியில் வேறு மாதிரி முடிந்து விட்டது. எப்படியும் ஓரிரு நாட்கள் கழித்து அதை மறுபடியும் சொல்ல முயற்சிக்கிறேன்.

இப்போதைக்கு துள்ளிக் குதித்தோடிய அந்தப் புள்ளிமானை ஆம் ஆத்மி கட்சியின் தென் சென்னை வேட்பாளராக வரும் நாடாளுமன்றத் தேர்தலில் நிற்கச் சொல்லித் தூண்டலாம் என்ற யோசனையோடு தூங்கப் போகிறேன்.

No comments: