Thursday, January 16, 2014

தமிழ்ப் புத்தகங்கள் இவ்விடம் pdf இல் கிட்டும்

எனக்குத் தெரிந்த ஒரு நண்பர் இருக்கிறார். அவரிடம் இரவல் காதலியை வாசித்து விட்டு ஒரு விமர்சனம் எழுதுமாறு கேட்டேன். “எங்க ஊர்ல புக் கிடைக்காது பாஸ். PDF அனுப்புங்க. படிச்சிட்டு எழுதறேன். அப்படியே விமர்சனத்தையும் நீங்களே எழுதி அனுப்பினாலும் சந்தோசம்” என்றார். இப்படிப்பட்ட நல்ல உள்ளங்களும் இருக்கத்தான் செய்கிறார்கள்.

Borrowed Girlfriend இல் ஒரு ’மோசமான’ எம்ஜிஆர்-ஜெயலலிதா ஜோக் இருக்கிறது. இரவல் காதலி அச்சில் வந்த போது அது எடிட்டிங்கில் வெட்டுப்பட்டு விட்டது. அதை மட்டும் வெட்டாமல் அப்படியே விட்டு, ஆளுங்கட்சியை வைத்து ஒரு சர்ச்சையைக் கிளப்பியிருந்தால் அநேகமாக இந்தப் புத்தகக் கண்காட்சியில் அதிகம் விற்ற புத்தகமாக இரவல் காதலி பரிணமித்திருக்கும். நண்பருக்கு சாஃப்ட்காப்பி அனுப்பும் போது அந்த ஜோக்கோடு சேர்த்து அதை வாசிக்கக் கொடுக்கலாம்.

அவருக்கு PDF மெயில் அனுப்பினால் யாரோடும் பகிர்ந்து கொள்ள மாட்டார் என்பது தெரியும். இருந்தாலும் அதைச் செய்வதற்கு தயக்கமாக இருக்கிறது. ஏனென்றால் இந்தப் புத்தகம் இன்றைக்கு என்னுடையது மட்டுமல்ல. இதை பணம் போட்டு அச்சில் கொண்டு வந்திருக்கும் பதிப்பாளருக்கு அதில் ஒரு stake இருக்கிறது. அவரை ஏமாற்றுவதற்கு ஒப்பாகும் PDF விநியோகம் அடிப்படை அறத்தை மீறிய செயல்.

அதற்காக புத்தகங்கள் மென்பிரதியாகக் கிடைக்காமலே போவதில்லை. தமிழினி வெளியிட்ட அ.முத்துலிங்கம் கதைகளை pdf வடிவில் தான் வாசித்தேன். சேத்தன் பகத் நாவல்கள் கூட இரண்டு மூன்று என்னிடம் உள்ளன. இப்போது கூட Freakonomics என்ற புத்தகத்தினை pdf இல் வாசித்துக் கொண்டிருக்கிறேன். ரமணி சந்திரன், ராஜேஷ் குமார் (அவர்களும் படைப்பாளிகள் தானே) புத்தகங்கள் இண்டெர்நெட்டைத் துழாவினால் ஏராளமாகக் கிடைக்கின்றன. ஆனால் இதனால் அந்தப் புத்தகங்களின் விற்பனை பாதிக்கப்பட்டதா என்பது ஆராய வேண்டிய ஒன்று.

மைக்ரோசாஃப்ட் ஆபரேட்டிங் சிஸ்டம் பைரேட்டேட் வெர்ஷன் கிடைப்பது மைக்ரோசாஃப்டுக்குத் தெரியாமல் இருக்காது. அது அவனுக்கு அவசியானது. Piravy ஐ விட effective ஆன மார்க்கெடிங் உபகரணம் இருக்க முடியாது. சில எழுத்தாளர்களும், பதிப்பாளர்களும் மறைமுகமாக இதை ஊக்குவிப்பார்கள் என நினைக்கிறேன். உக்ரேன் நாட்டு புகழ் பெற்ற சைக்காலஜி எழுத்தாளர் உஷ்பாரியா கூட இதை போன வாரம் போனில் சொன்னார்.

என்னுடை ஒரு புத்தகம் இப்போது அச்சில் இல்லை. அதற்காக அவற்றை அப்படியே pdf ஆக இணையத்தில் உலவ விடுவது முறையா? வேண்டுமானால் நாமே பதிப்பகம் ஆரம்பித்து இதைச் செய்யலாம். நண்பர் என்.சொக்கனின் ஏ.ஆர்.ரகுமான் புத்தகம் நல்லதொரு உதாரணம்.

எழுத்தினால் சம்பாதிக்காவிட்டால்லும் கூடப் பரவாயில்லை; தான் எழுதியதையும், தன் ஆக்கத்தையும் அனைவரும் ரசிக்க வேண்டும். ரசிப்பதற்கு அவர்களுக்குக் கிடைக்க வேண்டும். இப்படியெல்லாம் எதிர்பார்க்கிற உரிமை அத்தனை படைப்பாளிக்கும் உண்டு. ஆனால் அதைச் செய்வதற்கு முன், அதை ஏற்கனவே வெளியிட்டிருக்கும் பதிப்பாளரின் ஒப்புதலைப் பெறுவது அடிப்படையான அறம் சார்ந்த விஷயம் என்பது என் தனிப்பட்ட கருத்து.

இது வரைக்கும் அச்சில் வந்த என் நூல்களின் pdf பிரதியைக் கேட்டவர்களிடம், ”வேண்டுமானால் சொல்லுங்கள். நானே காசு போட்டு வாங்கித் தருகிறேன்” என்று நானே சிலருக்கு வாங்கியும் கொடுத்திருக்கிறேன். ”காண்ட்ராக்ட் போட்டா என் புக்கை பப்ளிஷ் செய்தார்கள்? ஒழுங்காக மார்க்கெடிங் செய்யவே இல்லை. கணக்கு சொல்வதில்லை. ஆயிரம் காப்பி போட்டு விட்டு வெறும் 250 கணக்கு காட்டுகிறார்கள்.” இப்படியெல்ல்லாம் புகார் சொன்னால் சொல்லிக்கொண்டே இருக்கலாம். அவை ஒரு போதும் நிரூபிக்கப்படாத யூகங்களாகவே இருக்கும்.

கலைஞரைக் கணக்குக் கேட்ட அத்தனை பேரும் எம்.ஜி.ஆர் மாதிரி தனிக்கட்சி ஆரம்பித்து ஆட்சியை பிடிக்க முடிந்ததில்லை. பதிப்பாளரைக் கணக்குக் கேட்டு சொக்கனைப் போல (அவர் எப்பய்யா கேட்டார்?) தனியாக பதிப்பகம் துவங்கினால் ஓகே. ஒன்றும் முடியாதவர்கள் pdf ஆக உலவ விடுவது அவரவர் தனிப்பட்ட உரிமை. அதற்கு முன் பதிப்பாளரிடம் ஒரு வார்த்தை கேட்பது தான் தார்மீகக் கடமை.

இப்போது இரவல் காதலியை PDF இல் கேட்ட நண்பருக்கு அவர் பேரை வாட்டர் மார்க்கில் போட்டு அனுப்பப் போகிறேன். அதற்கு முன் பதிப்பாளரை ஒரு வார்த்தை கேட்க நினைத்திருக்கிறேன். அவர் புத்தகக் கண்காட்சியில் பிஸியாக போட்டோவுக்கு போஸ் கொடுத்துக் கொண்டிருப்பதால் சாமி ரூமில் சீட்டுக் குலுக்கிப் போட யோசிச்சிங்…

No comments: