Wednesday, January 15, 2014

லிண்ட்சே லோஹன் w/o மாரியப்பன்

பெருங்களத்தூராக இருக்கட்டும். தாம்பரமாக இருக்கட்டும். கிண்டி, கோயம்பேடு, எக்மோர், சென்ட்ரல் (மீனம்பாக்கத்தை மட்டும் விட்டு விடுவோம்) என எந்த இடமாக வேண்டுமானாலும் இருக்கட்டும். ஊரிலிருந்து சென்னைக்கு வருவோர் கட்டைப் பைகள் இரண்டையாவது சுமக்காமல் வருவதில்லை. தேங்காய், வெங்காயம், பருப்பு, அரிசி என அந்தந்த ஊரில் என்ன கிடைக்கிறதோ அதைச் சுமந்து வருவார்கள்.

அப்படி கட்டைப் பை இல்லாமல் சென்னையில் யாரையாவது பார்க்க வருவோர் மிகவும் குறைவு என நான் நினைப்பதுண்டு. அந்தச் சிலரில் ஒருவர் ஞாயிற்றுக் கிழமை எங்கள் வீட்டுக்கு வந்தார். அதற்காக அவரைக் கடிந்துகொள்ள முடியவில்லை. என்னோடு வாழத் தன் மகளையே கொடுத்தவர் அவர்! பெரும்பாலும் பொங்கல் சொந்த ஊரில் தான் என்றாலும், அதற்கான சந்தர்ப்பம் எல்லா வருடமும் வாய்த்து விடுவதில்லை. இந்த வருடம் அப்படி ஒரு வருடம் போல. அதனால் மாமனாரே வந்திருந்தார்.

வந்தவர்களால் சும்மா இருக்க முடியாது. நாள் முழுக்க வீட்டிலேயே முடங்கிக் கிடப்பது சிரமம். என் பெயரில் ஒரு பாதிக்குச் சொந்தக்காரரான என் அப்பா வந்தால் ஒரு நாளுக்கு மேல் தங்க மாட்டார். அதற்கு மேல் இருப்புக் கொள்ளாது. தூக்கம் வராது. சொந்த ஊரில் அப்படி என்னதான் இருக்கிறது என்பதெல்லாம் அவர்களுக்கு மட்டுமே புலனாகும் சங்கதி.

அப்படியே அவர்கள் சென்னையில் இரண்டு நாள் கூடுதலாகத் தங்கினாலும் டிவி கூட சுதந்திரமாகப் பார்க்க முடிவதில்லை. சதா 24 மணி நேரமும் சுட்டி டிவி ஓடும் வீட்டில் கிழவர்களுக்கு என்ன பொழுது போக்கு இருக்க முடியும்? எத்தனை நேரத்துக்கு அவர்களும் வார இதழ்களையும், செய்தித் தாளையும் திரும்பத் திரும்ப வாசிக்க முடியும். வேறு வழியில்லாமல் சிநேகிதி, அவள் விகடன் கூட படித்து விட்டார்.

“வேற எதாச்சும் புக் இருக்குதுங்களா மாப்பிள்ளை” என்று கேட்டார்.

புத்தகக் கண்காட்சியில் வாங்கி வந்ததிலேயே சின்னதாக இருந்த லிண்ட்சே லோஹன் w/o மாரியப்பன் புத்தகத்தைக் கொடுத்தேன். வார இதழ்களைத் தவிர புத்தகம் எதையும் வாசித்திராத மனிதர் இதை முழுதாக வாசித்து முடித்து விட்டார். இறுதியில் அவர் முகத்தில் மெல்லிய புன்னகை ஒன்று தெரிந்ததைக் கவனித்தேன்.

சின்னச் சின்ன கதைகள். மின்னல் கதைகள் என்று பெயர் வைத்திருக்கிறார் வா.மணிகண்டன். பரவலாக வாசிக்கப்படும் அவரது வலைத்தளத்தில் எழுதப்பட்ட துரிதக் கதைகளில் தேர்ந்தெடுத்த சிலவற்றை மட்டும் யாவரும்.காம் நண்பர்கள் புத்தகமாக வெளியிட்டிருக்கிறார்கள். அதில் ஒரு கதையின் தலைப்பான லிண்ட்சே லோஹன் w/o மாரியப்பன் என்பதையே புத்தகத்துக்கும் தலைப்பாக வைத்திருக்கிறார்கள்.

இதில் இடம்பெற்றுள்ள கதைகள் அனைத்தும் நிஜமாலுமே மின்னல் கதைகள். விறுவிறுப்பாக ஓடுகின்றன. புத்தகத்தின் பின்னட்டை வரிகளில் சொன்னால்: “துள்ளலும் எள்ளலுமான அட்டகாசமான மொழிநடை வா.மணிகண்டனுடையது. நகர் சார்ந்த வாழ்வின் கொண்டாட்டங்கள், அதன் சிக்கல்கள், தனது கிராம வாழ்வின் நினைவுகள், தினசரி எதிர்கொள்ளும் சாமானிய மனிதர்களின் கதாபாத்திரங்கள் எனக் கலந்து கட்டி common man இன் பார்வையில் எழுதப்பட்டிருக்கும் இந்தக் கதைகள் வாசித்து முடித்தவுடன் மனதுக்குள் மழை பெய்யச் செய்கின்றன- இடியும், மின்னலும் சேர்ந்த கொண்டாட்டமான மழை இது.”

சிறுகதை எழுதுவது முன்னெப்போதையும் விட இன்றைக்கு சவாலான விஷயம். அச்சில் வரும் புத்தகங்களை விட இணையத்தில் எழுதப்படும் கதைகளுக்கு இந்தச் சவால் கூடுதலாகவே உண்டு. அதை ஓப்பன் செய்யும் முதல் மூன்று வரிகளில் ஒரு ஈர்ப்பு இருக்க வேண்டும். இல்லையென்றால் புறக்கணித்து browser ஐ மூடிவிட்டு அடுத்த சுவாரசியமான பக்கத்துக்குப் போய் விடுவார்கள். அதே போல முடிவும் கலக்கலாக, எதிர்பாராத வகையில் அமைய வேண்டும். கதையை நகர்த்தும் போது சொதப்பாமல் இருக்க வேண்டும். இந்த வித்தை மணிகண்டனுக்கு மிக இயல்பாக வருகிறது.

யார் வேண்டுமானாலும் யாரை வேண்டுமானாலும் திட்டலாம். விமர்சிக்கலாம். “புளிய மரத்தின் கதையில் அப்படி என்ன இருக்குன்னே தெரியல. நான் கூட அதை விட நல்லா எழுதுவேன்” என்று போகிற போக்கில் சொன்னவர்கள் இருக்கிறார்கள். ஆனால் பேச்சு பேச்சோடு நின்று விட்டது. அவர்களிடமிருந்து ஒரு வேப்ப மரத்தின் கதையோ, வேல மரத்தின் கதையோ வந்ததில்லை.

இருட்டில் நின்று கல்லை எரிந்து விட்டு யார் வேண்டுமானாலும் ஒளிந்து கொள்ள முடியும். தைரியமாக தான் நினைப்பதை பொதுவெளியில் முகமூடி இல்லாமல் பேச அனைவராலும் முடியாது. மணிகண்டனால் சாருவை விமர்சிக்க முடிகிறது. ஜெயமோகனை கலாய்க்க முடிகிறது. எஸ்.ராமகிருஷ்ணனுக்கு எதிர்வினை புரிய முடிகிறது. மனுஷ்யபுத்திரனை சாடை பேச முடிகிறது. கவுண்டர்களின் சாதியத் திமிரை பாசாங்கின்றி பதிவு செய்ய முடிகிறது. இதையெல்லாம் செய்தும் கூட பலர் கவனிக்கும் வகையில் தொடர்ந்து எழுத முடிகிறது. ஆனால் இது கடினமான உழைப்பினால் மட்டுமே சாத்தியமாகியிருக்கிறது என நம்புகிறேன். இணையத்தில் தொடர்ச்சியான எழுத்தினால் மட்டுமே தன்னை நிறுவிக்கொண்ட எழுத்தாளர்களில் மணிகண்டனுக்கு முக்கியமான இடமிருக்கும்.

அவர் சென்னை வந்த போது அவர் தங்குவதற்காக ஐந்து நட்சத்திர விடுதியில் ஒரு வாசகர் ரூம் போட்டுக் கொடுத்திருக்கிறார். ஏற்கனவே இணையத்தில் வெளியான சிறுகதைகளின் தொகுப்பு என்றாலும் கூட, வெறும் ரூ 90 புத்தகத்தின் முதல் பிரதியை ஆயிரக் கணக்கான ரூபாய்க்கு ஏலம் எடுத்திருக்கிறார்கள். அவர் விடுத்த பரிந்துரையை ஏற்று ஒரு மாணவனுக்கு கிட்டத்தட்ட ஒரு இலட்ச ரூபாய் நன்கொடையாகக் கிடைத்திருக்கிறது. எந்தவொரு பெரிய பதிப்பகத்தின் மூலமும் வெளியிடாமல் ஒரு சில நண்பர்களின் உதவியோடு வெளிவந்திருக்கும் இந்தச் சிறுகதைத் தொகுப்பு ஏற்கனவே 300 பிரதிகளுக்கு மேல் விற்றிருப்பதாகச் சொல்கிறார்கள். ஆன்லைனிலும் கிடைக்கிறது.

இவை மிகவும் ஆரோக்கியமான விஷயங்கள். தினமும் தொடர்ச்சியாக இயங்கும் ஒருவன் மீதான நம்பிக்கையை எடுத்துக் காட்டும் விஷயங்கள். ஒரு நாளில் மேஜிக் செய்து இந்த நம்பிக்கையை உருவாக்க முடியாது. அயராத உழைப்பின் மூலமாக மட்டுமே இது சாத்தியம். இந்த உழைப்பு இல்லாமல் வெறும் மார்க்கெட்டிங் மாயாஜாலம் வழியாக ஒருவன் சூப்பர் ஸ்டார் ஆகிட முடியாது. இன்றைக்கு தமிழ் எழுத்துலகில் ஓரளவு அறியப்படும் படைப்பாளிகள் கால் நூற்றாண்டுக்கும் மேலாக தமது இருப்பை நிரூபித்துக் கொண்டே இருக்கிறார்கள். அவர்களுக்கு இல்லாத வாய்ப்புகளையும், ஜன்னல்களையும் இன்றைய இளைஞர்களுக்கு ஊடகம் வெகுவாகத் திறந்து வைத்திருக்கிறது என்றாலும் கூட இங்கும் உழைக்க வேண்டியிருக்கிறது. அதைச் செய்யத் தயாராக இருப்பவர்களை தமிழ் வாசிப்போர் கவனிக்கத் தவறுவதில்லை.

வாழ்த்துக்கள் மணிகண்டன். தொடர்ந்து எழுதுங்கள். 

No comments: