Sunday, February 02, 2014

கல் சிலம்பம் ஆடியவர்

உங்களுக்கு ஆலமரம் தெரியும். ஆயமரம் தெரியுமா? எனக்கும் தெரியாது. பார்த்திருக்கிறேன். ஆனால் அதற்குப் பெயர் ஆயமரம் என்பது தெரியாது.

என்.ஸ்ரீராமின் கல் சிலம்பம் கதையில் ஆயமரம் பற்றி எழுதியிருக்கிறார். பொங்கல் ஆனந்த விகடனில் அந்தக் கதை வந்ததை நீங்கள் கவனித்திருக்கலாம். நல்ல வேளையாக விகடனின் அதை ஆலமரம் என மாற்றாமல் விட்டார்கள்.

//செல்லீயக் கோனார் கூட்டாற்று முனைக்கு வந்து சேர்ந்தபோது எங்கும் மூடுபனி கவிழ்ந்துகிடந்தது. விடிவதற்கு இன்னும் வெகுநேரம் இருந்தது. நீரோட்டத்தின் சலசலப்பு, கூடிவருவது போல கேட்டது. மேற்கில் இருந்து கெண்டைக்கால் அளவு நீரோடு வரும் உப்பாறு, தெற்கில் இருந்து இடுப்பு அளவு நீரோடு வரும் அமராவதியுடன் கலக்கும் கூடுதுறை இது. இவர் கைத்தடியை ஈரமண்ணில் ஊன்றிவிட்டு, ஆற்று நீரில் கால் வைத்தார். நீர் குளிர்ந்துகிடந்தது. சிப்பிலி மீன்கள் கலைந்து ஓடின. நீரை அள்ளி முகத்தில் அடித்தார். உள் ஒடுங்கிய கண்களில் கட்டியிருந்த பீழையைத் தேய்த்துக் கழுவினார். நீண்ட வெள்ளைத்தாடியில் நீர் சொட்டிட்டது. பஞ்சுத் திரி போன்ற கேசங்களை ஈரக்கையால் கோதி, ஒழுங்கு செய்தார்.

ஆற்றுப்பரப்பைத் தாண்டி அக்கரையை நோக்கினார். அக்கரை இன்னும் நன்றாகப் புலப்படவில்லை. தோப்பு வயலில் தென்னைகள் கரிய உருவம்போல அசைந்தன. நட்டாற்றுப்பாறை ஆயமரமும் தென்படவில்லை. பொழுது கிளம்பட்டும் எனத் திரும்பி வந்து பாறை மீது அமர்ந்தார்.” //

கல் சிலம்பம் கதையைப் படித்து விட்டு சில நாட்களாக அதே நினைப்பில் சுற்றிக் கொண்டிருந்தேன். விகடனில் செம ரெஸ்பான்ஸாம். செல்லியக் கோனார் உயிடோரிருந்த போது சோறு போடாத சொந்தங்கள் கற்சிலம்பத்தைப் படித்து விட்டு விகடனுக்கு போன் மேல் போன் போட்டிருக்கிறார்கள். வீரம், துரோகம் இரண்டுமுள்ள கதை. கூடுதலாக காதல் மட்டும் இருந்தால் இதுவே சினிமாவாகியிருக்குமென்று ஒரு மூத்த சினிமா நடிகர் கூறினாராம்.

சில பேருக்கு எழுதுவதற்கு சரக்கிருக்கும். அதற்கான மொழி வாய்க்காது. சிலருக்கு மொழி விளையாடும். ஆனால் கதையோ அனுபவமோ இருக்காது. ஸ்ரீராமுக்கு இரண்டுமே இலகுவாக வருவன. மனிதர் நான்கைந்து புத்தகங்கள் எழுதியிருக்கிறார். ஆனால் அதற்குரிய ஆடம்பரமோ, விளம்பரமோ அற்ற எளிமையான மனிதர். ஆழமான வாசிப்பும், அற்புதமான மொழி வளமையும் கொண்டவர்.

புத்தகக் கண்காட்சி நடந்து கொண்டிருக்கும் போது ஒரு நாள் அழைத்தார். மனுஷ்யபுத்திரனிடம் நம்பர் வாங்கியதாகச் சொன்னார். உயிர்மையில் வந்த தெலுங்கானா கட்டுரையை வாசித்திருப்பதாகவும், இரவல் காதலியை வாசித்துக்கொண்டிருப்பதாகவும் சொன்னார். அதற்கெல்லாம் முன்பே ஸ்ரீராம் என்றவுடனேடே, “சொல்லுங்க சொல்லுங்க. கல் சிலம்பம் உங்களுது தானே” என்று கேட்டு விட்டேன்.

போன வாரத்தில் ஒரு நாள் தரமணி ரயில்வே ஸ்டேஷனுக்கு முன்னுள்ள ஏரிக்கரையில் ஸ்ரீராமோடு இரண்டு மணி நேரம் பேசும் சந்தர்ப்பம் கிட்டியது. ஒரு ஆணோடு இரண்டு மணி நேரம் டீ கிளாஸ் அல்லது வேறு எதாவது கிளாஸ் இல்லாமல் பேசுவது சவாலான காரியம். இந்த இரண்டு மணி நேரம் அப்படி போரடிக்கவில்லை. சில பேரோடு மட்டுந்தான் இந்த மாதிரி அமையும். அவர் ரயிலேறப் போன போது இருபது வருடம் கூடப் பழகிய பழைய பள்ளித் தோழன் நடந்து போகிற மாதிரியே இருந்தது. என் வாழ்க்கையின் முக்கியமான இரண்டு மணி நேரங்களில் இதுவும் ஒன்றாக இருக்கும்.

பெரும்பாலும் ’நல்லா எழுதறீங்க”, “விறுவிறுப்பா இருக்கு” என்று பாராட்டுகிற மாதிரியே நண்பர்கள் பேசுவார்கள். இல்லையேல் ஒன்றுமே சொல்ல மாட்டார்கள். ஸ்ரீராம் நிறையச் சொன்னார். இரவல் காதலியின் கதை வேகமாக இருப்பதாகச் சொன்னார். குறிப்பாக கஜகஸ்தான் அத்தியாயத்தையே ஒரு நாவலாக எழுதலாம் என்றார். ”நாவலில் எழுத்தாளன் விவரங்களை நேரடியாகச் சொல்லக் கூடாது; கதாபாத்திரங்களைப் பேச வைக்க வேண்டும்” என வலியுறுத்தினார். பல வருடங்களுக்கு முன்னர் பாலகுமாரனுக்கு சுஜாதா இப்படித்தான் லெக்சர் எடுத்திருப்பார் என நினைத்துக் கொண்டேன்.

மனிதர் வெள்ளித் திரையிலும், சின்னத் திரையிலும் நிறைய அனுபவங்களைச் சேர்த்து வைத்திருக்கிறார். சினிமாவில் சேர்வதற்குத் தான் ஸ்ரீராம் நல்லியம்பாளையத்தில் இருந்து சென்னைக்கு வந்தாராம். தூறுகிற மழையில் தலையில் கொங்காடையைப் போட்டுக்கொண்டு அவரது தந்தை பஸ் ஏற்றிவிட வந்த போது கூட அந்த நம்பிக்கையோடுதான் டாட்டா காட்டியிருப்பார்.

அவரிடமிருந்து நல்ல சினிமா ஒன்றுக்காக நானும் காத்திருக்கிறேன். கதையும், நாவலும் எப்படியும் எழுதுவார் என்பது தெரியும். 

No comments: