Wednesday, February 12, 2014

புரட்சித் தலைவி அம்மாவின் திட்டம்

இரண்டு வெள்ளைச் சீருடையணிந்த செவிலியர்கள் மருத்துவமனைக் குறிப்புகளை எல்லாம் தேடிக்கொண்டிருந்தனர். இங்கே பிறந்த குழந்தைகளைப் பற்றிய தகவல் வேண்டுமென பேசியது காதில் விழுந்தது. யாரோ குழந்தையை கடத்தி விட்டார்கள் போலிருக்கிறது என்றுதான் முதலில் நினைத்தேன். பிறகுதான் அம்மாவின் திட்டம் என்று புரிந்தது.

கோவில் யானைகளுக்கு பராமரிப்பு முகாம் மாதிரி இதுவும் ஒரு திட்டம். அம்மா பிறந்த நாளன்று பிறந்த அனைத்து பெண் குழந்தைகளுக்கு பத்தாயிர ரூபாயை மாநில அரசு வழங்குகிறதாம். யாரும் ஏமாற்ற முடியாது. நேராக மருத்துவமனைக்கே சென்று தகவலைச் சேகரித்துக் கொண்டிருக்கிறது சுகாதாரத் துறை. கடந்த மூன்று ஆண்டுகளில் பிஃப்ரவரி 24 ஆம் தேதி பெண் குழந்தையைப் பெற்ற தகப்பன்களுக்கு கொண்டாட்டம் !

எங்கள் கல்லூரியில் ஒரு ஜூனியர் பெண் இருந்தாள். ஃபிப்ரவரி 24 பிறந்தவள். டெண்டுல்கருக்கும் தனக்கும் ஒரே நாளில் பிறந்த நாள் என்று அடிக்கடி சொல்லக் கேட்டிருக்கிறேன். எனக்கோ அவளுக்கோ அப்போது தெரியாது, அது அம்மாவின் பிறந்த நாளுந்தான் என !

எனக்கு எப்படி இதெல்லாம் தெரியும்? கடந்த மூன்று நாளாக மருத்துவமனையில் இருக்கிறேன். என் மகள் அக்காவாகியிருக்கிறாள். நானும் தேடித் தேடிப் பார்த்து விட்டேன். ஆஸ்திரேலிய வேகப்பந்து வீச்சாளர் மெக்ராத் புரட்சித் தலைவியைப் போல எதாவது அறிவிப்பு வெளியிட்டிருக்கிறானா என்பதை. ஒன்றும் தேறுவதாகத் தெரியவில்லை. சரிடா மகனே. விடு பாத்துக்கலாம் !

அலுவலகத்திலும், இணையத்திலும் நேரம் செலவிட முடியவில்லை. MTS டேட்டா கார்ட் கழுத்தறுக்கிறது. நாட்டில் என்ன நடக்கிறதென்பதே தெரியவில்லை.  எழுத்தாளர் வா.மு.கோமு இரவல் காதலியைப் பற்றி ஒரு குறிப்பு எழுதியிருக்கிறார். 2014 ஃபிப்ரவரி இன்னுமொரு காரணத்திற்காக மறக்க முடியாமல் ஆகிறது.

// இரவல் காதலிசெல்லமுத்து குப்புசாமியின் நாவலை மூன்றுமணி நேரத்தில் வாசித்து முடித்து விட்டேன். சாப்ட்வேர் கம்பெனியில் பணிசெய்பவர்களுக்கு என்னமாதிரியான வேலைகள் உள்ளன என்று என் சிற்றறிவுக்கு எட்டாமல் முதன்முதலாக வாசித்திருக்கிறேன். நாவலில் ஒர குடும்பப் பெண்ணோடு நாயகன் உறவு வைத்துக் கொள்கிறான்! அட நல்லா இருக்கே! அங்கியும் அப்புடித்தானா? எல்லாப்பக்கமும் அதே சமாச்சாரம் தான். தொழிலும் கலாச்சாரமுமே மாறுபடுகிறது! நாலுமணி நேரம் கட்டிக்கொள்வதற்கு பத்தாயிரம் ரூவாயில் பட்டுப்புடவை எடுத்துக் கட்டிக் கொள்கிறார்கள்! இங்கே சந்தக்கடை புடவை எடுத்துக் கட்டிக் கொள்கிறார்கள்! உன்னை மொதவாட்டி பாத்தப்ப கட்டியிருந்தன்ல மஞ்சக்கலரு ஜிங்குச்சா புடவை! அது கிழிஞ்சிடுச்சு! அதே மாதிரி எடுத்துக் குடு! பெண் பெண்ணாகவே இருக்கிறாள் எல்லா இடங்களிலும்! நாவலில் காதலும் இருக்கிறது! அது நாசுக்காகவும் இருந்தது! எல்லா நாவல்களைப் போலவும், எல்லா சினிமாப்படங்களைப் போலவும் திருப்தியாய் சுபமாய் நாவல் முடியவில்லை! அதைத்தான் முன்னுரையில் செல்லமுத்து குப்புசாமி குறிப்பிடுகிறார்.

இதில் காமம் இருக்கிறது. தனிமையை காமம் தின்பதும், காமத்தை காதல் வெல்வதும், காதலைக் காமம் வெல்வதும், இறுதியில் இரண்டையும் எதார்த்தம் வெல்வதுமான கதை இது!”

முதல் அத்தியாயம் படிக்கையில் கொஞ்சம் தடுமாறித்தான் போனேன். போகப்போக நாவல் சூடுபிடித்துக் கொண்டது! வாழ்த்துக்கள் ஆசிரியரே!//

No comments: