Thursday, February 20, 2014

நம்பிக்கையாயிருங்கள் அற்புதம் அம்மாள்

எங்களூரில் ஒரு போலீஸ்காரர் இருக்கிறார். வாட்ஸ்ஏப்பில் இருக்கிறார். அடிக்கடி போட்டோ எடுத்து அனுப்ப்புவார். அவர் போலீஸ் வேலை தொடர்பாக எதாவது பகிர்ந்து கொண்டால் கூட இப்படித்தானாம். இப்போதெல்லாம் காவல் துறையின் டெக்னாலஜி ஹேஸ் இம்ப்ரூவ்டு சோ மச்சாம். வாட்ஸ்ஆப்பை ஃபேஸ்புக் வாங்கியிருக்கிறது. அதற்காக ஃபேஸ்புக் செலவழித்த தொகையில் நம்ம ஸ்டேட் பேங்க ஆஃப் இந்தியாவை முழுதாக வாங்கியிருக்கலாமென்று காமேஷ் ஜெயச்சந்திரன் குறிப்பிட்டிருக்கிறார். இனி போலீஸ் ரகசியமெல்லாம் ஃபேஸ்புக் காரன் சுலபமாக எடுத்து விடுவான்.

கடந்த இரண்டு நாட்களில் நடந்த இன்னொரு முக்கியமான நிகழ்வு தெலுங்கானா தொடர்பான மசோதாவை மக்களவையில் நிறைவேற்றியது. மூடிய கதவுகளுக்குள் மீடியாவை வெளியே அனுப்பி விட்டு அதைச் செய்திருக்கிறார்கள். அதே போல மூடிய கதவுகளுக்குள் நடந்த ராஜீவ் காந்தி கொலை விசாரணையில் மரணதண்டனை விதிக்கப்பட்டு, அது ஆயுள் தண்டனையாகக் குறைக்கப்பட்டு, அந்த ஆயுள் தண்டனைக் காலத்தை விடக் கூடுதலான காலம் சிறையில் வாடிய பேரறிவாளனையும் மற்றவர்களையும் விடுவிக்க ஜெயலலிதா முடிவு செய்தது வரவேற்கத்தக்கது.

வட இந்திய ஊடகங்கள் இதைக் கூப்பாடு போட்டுக் கதறுகின்றன. ஆங்.. அந்த வார்த்தை.. இறையாண்மை.. அதைக் காப்பாற்றுகின்றன. உண்மையில் பேரறிவாளன் செய்த குற்றம் என்ன? பேட்டரி வாங்கித் தந்தது மட்டுந்தானே? அன்றிரவு ஸ்ரீபெரும்பூரில் ராஜீவைக் கொல்லப் போகிறார்கள் என்று கூடத் தெரியாது அவருக்கு. நிறைய காங்கிரஸ்காரர்களை விட அவர் குற்றமற்றவர் என்று கூறலாம். கொலையில் நேரடியாகச் சம்பந்தப்பட்ட, கொலையைத் திட்டமிட்டவர்கள் இன்றைக்கும் உயிரோடில்லை அல்லது சொகுசாக வெளியே உலவிக் கொண்டிருக்கிறார்கள். அது நிச்சயமாக இந்த ஏழு பேர் கிடையாது.

ராஜீவ் காந்தி கொலை முழுமையாக விசாரிக்கப்படவில்லை என்பது மட்டுமல்லாது குறிப்பிட்ட கால இலக்குடன் குறிப்பிட்ட இலக்கை முடிக்கும் நோக்கில் செய்யப்பட்டது என்பதற்கு நிறைய ஆதாரங்களைக் காட்டலாம். Prabhakaran: The Story of his struggle for Eelam நூலில் குறிப்பிட்டுள்ளது போல “Several controversial conspiracy theories have also floated around, including possible involvement of CIA, Mossad, the controversial god-man called Chandraswami and so on. Several other questions listed by Justice Jain in his findings still remain unanswered.” தண்டனையளிப்பதற்காகப் பயன்பட்ட ஆதாரங்கள் தடா சட்டத்தின் கீழ் பதிவு செய்யப்பட்டவை. குற்றவியல் சட்டங்களின் படி அந்த ஆதாரங்கள் செல்லாதவை. ராஜீவ் கொலை வழக்கை தடா விதிமுறைகளின் படி விசாரித்ததே தவறென்று உச்ச நீதிமன்றம் குறிப்பிட்டது என்பதையும், தடா விதிகள் இல்லையென்றால் ஆதாரங்களே இல்லையென்றும் சிறப்பு புலனாய்வுப் படையின் தலைவர் கார்த்திகேயனே தனது நூலில் ஒப்புதல் தந்திருக்கிறார்.

இதில் தமிழுணர்வு வேண்டாம். மனித நேயம் வேண்டாம். சட்டப்படி நியாயப்படி பேரறிவாளன் (இன்னும்) உள்ளே இருப்பது பொருத்தமற்றது. எந்த அடிப்படையில் உறுதியாக இருக்கிறீகள் எனக் கேட்டால், “என் மகன் தப்புச் செய்யவில்லையென்று எனக்குத் நிச்சயமாகத் தெரியும்” என்ற அந்தத் தாய் புத்தகக் கண்காட்சியில் தன்னம்பிக்கை தளராமல் தெரிந்தார். 
பேரறிவாளன் உள்ளிட்டோரின் தண்டனையை மரண தண்டனையிலிருந்து ஆயுள் தண்டனையாகக் குறைத்தது மட்டுமல்ல, ஆயுள் தண்டனையைக் கடந்து அவர்களை விடுவிப்பது மட்டுமல்ல, அவரை இத்தனை காலம் உள்ளே வைத்திருந்ததே தவறு. மறுக்கப்பட்ட நீதியை விட, தாமதித்த நீதியே கொடுமையானது. ஒரு வாரம் பொய்க் கேஸ் போட்டு உள்ளே வைத்தாலே நம் தன்னம்பிக்கை நொறுங்கிப் போகும். மறுபடியும் திரும்பி வந்து அதே வேலையைத் தொடர முடியாது. காதலி ஓடு விடுவாள். சமுதாயம் தூற்றும். வாழ்க்கையே சூனியமாகி விடும். இருபத்தியிரண்டு வருடத்திற்கு மேலாக சுதந்திர வெளியில் சூரிய வெளிச்சத்தின் சூட்டை அறியாமல், எந்த நேரம் தூக்குக் கயிறு தன்னை நெருங்கலாம் என்று தெரியாமல் வாடும் பேரறிவாளனை நினைத்தாலே கொடுமையாக இருக்கிறது.
அந்தக் கொடுமைக்கு ஒரு விடிவு காலம் நேற்று ஜெயலலிதா சட்டமன்றத்தில் வாசித்த அறிக்கையில் வந்ததாக நம்பினோம். சத்தியமாக எத்தனை ஜென்மம் ஆனாலும் கருணாநிதியால் இப்படியொரு முடிவை எடுத்திருக்க முடியாது. அவர் தமிழகத்துக்குச் செய்த ஆகச் சிறந்த நல்ல காரியம் தான் முதலமைச்சராக இருந்த பொது கச்சத் தீவை இலங்கைக்குக் கொடுக்க இந்திரா காந்தியை அனுமதித்தது தான். துரோகியை விட எதிரி எப்போதும் மேலானவன் என்பதை ஜெயலலிதா மீண்டும் நிரூபித்திருக்கிறார். தமிழ், தமிழினம் இதைப் பற்றியெல்லாம் அம்மையார் கொண்டிருக்கும் நிலைப்பாடுகளைக் கவனித்து வந்தவர்களுக்கு அம்மா புரிந்து கொள்ள முடியாத புதிராகவே இருப்பார். பெண்கள் அப்படித்தான். ஜெயலலிதா பல பெண்களுக்குச் சமம்.

எது எப்படியோ, ரப்பர் செருப்புத் தேய நீதிமன்றங்களுக்கும், மக்கள் மன்றங்களுக்கும் நடந்து தேய்ந்த அற்புதம் அம்மாவின் கால்கள் நம்பிக்கையோடு கடைசியில் வென்று விட்டதாக நினைத்தோம். அதை எதிர்த்து மத்திய அரசு உச்ச நீதிமன்றத்தில் முறையீடு செய்துள்ளது.

நாடெங்கும் வீசுகின்ற(?) மோடி அலைக்கு எதிராக ராஜீவ் காந்தியின் ஆவியைத் தட்டியெழுப்பி மீண்டும் குளிர் காய நினைக்கும் காங்கிரஸ் கட்சியின் அரசியல் காரணங்களுக்காக மீண்டுமொறு முறை ஏழு பேரின் சிறைக் கதவுகள் இறுக்கிப் பூட்டப்படுகிறது. எதிர்த்து முறையீடு செய்த காங்கிரஸை ஒரு வார்த்தை சொல்லத் துப்பில்லாத கருணாநிதி தமிழக அரசு இந்த விஷயத்தைச் சரியாகச் செய்யவில்லை என்கிறார்.

முதலமைச்சரை எல்லோரும் பாராட்டித் தள்ளுகிறார்கள். மத்திய அரசுக்கு எதிராக அவருக்கு ஆதரவாக நிற்க வேண்டுமென்று பேசுகிறார்கள். அதற்கெல்லாம் முன்னதாக ஜெயலலிதாவே தன் நிலைப்பாட்டை மாற்றாமல் இருந்தால் சரி.

மறுபடியும் நாம் நம்புவோம்: சட்டத்தின் முன் அனைவரும் சமமென்று.

No comments: