Thursday, February 27, 2014

ஐடி பெண்களின் பாதுகாப்பு

சிறுசேரி ஐடி பார்க்கில் வேலை செய்த உமா மகேஸ்வரி என்ற பெண் மேற்கு வங்களாகத்தைச் சேர்ந்த நான்கு கட்டிடத் தொழிலாளர்களால் கொலை செய்யப்பட்ட செய்து சமீபத்தில் பரவலாகப் பேசப்பட்டது. பட்டதென்ன இன்னும் படுகிறது.

”இதே நாலு தமிழ்நாட்டுப் பசங்க வடக்கே இந்த மாதிரிப் பண்ணியிருந்தா தமிழ் ஆளுங்க எல்லார்த்தையும் கொளுத்தியிருக்க மாட்டாங்க?” என நண்பர் ஒருவர் கேட்டார். என்ன சொல்வதென்று தெரியவில்லை. என்னவோ தமிழ் நாட்டு ஆண்களால் தமிழ் நாட்டுப் பெண்களுக்கு ஆபத்தே இல்லையென்பதைப் போலவு, இந்த வடநாட்டுக் கூலிகள் வந்துதான் நிலைமை மாறி விட்டது போலவும் சிலர் கருதுகிறார்கள். காதலர் தினத்துக்கு முந்தைய நாள் காணாமல் போனதால் அந்தப் பெண்ணின் நடத்தை மீது கூட சில அறிவுஜீவிகள் சந்தேகம் எழுப்பி வந்தனர். இப்போது வட நாட்டுக் குற்றவாளிகள் மீது பார்வை திரும்பியிருக்கிறது.

அந்தப் பிரச்சினைக்குள் போக வேண்டாம். மென்பொருள் துறையில் வேலை செய்யும் பெண்களின் பாதுகாப்புக் குறித்து மட்டும் பேசுவோம். ஒரு குறிப்பிட்ட நேரத்துக்கு மேல் தனியாகச் செல்ல அனுமதிக்க மாட்டார்கள். கண்டிப்பாக அலுவலக காரில் தான் செல்ல வேண்டும். கூடவே ஒரு செக்யூரிட்டியை அனுப்புவார்கள். இதெல்லாம் பெண் ஊழியர்கள் மீதான அக்கறையின் வெளிப்பாடு என நாம் நம்புவதற்கில்லை. பெண் ஊழியர்களின் பெயரில், அவர்களது பாதுகாப்பின் பெயரில் இந்த நிறுவனங்கள் செய்யும் அழிச்சாட்டியம் எல்லை மீறிப் போகிறது. ஏடாகூடமாக ஏதேனும் நடந்து தொலைந்தால் கம்பெனியின் பெயர் கெட்டுப் போகுமல்லவா? அதற்குத் தான்.

எனக்குத் தெரிந்து சாஃப்ட்வேரில் பணியாற்றும் ஒரு பெண்ணுக்கு இது தொடர்பாக ஒரு பிரச்சினை. ஐரோப்பிய நேரப்படி பணியாற்றும் அவர் இரவு ஒன்பதரை அல்லது பத்து மணிக்கு வெளியேறுவார். அவர் தனியாகப் போகிறார் என HR லிருந்து அவருடைய மேனேஜருக்கு மெயில் வந்திருக்கிறது. நான்கைந்து பேர் கூப்பிட்டுப் பேசியிருக்கிறார்கள். ”ஃபீமேல் எம்ப்ளாயோட சேஃப்டியைக் கூட என்ஷூர் பண்ண முடியாம எதுக்கு இருக்கே?” என்று கேட்டு விட்டார்களாம். அந்த மேனேஜரும் அந்தப் பெண்ணைக் கூப்பிட்டுப் பேசினாராம்.

”இனிமே நீங்க தனியாகப் போக வேண்டாம். ஆபீஸ் கேப் யூஸ் பண்ணுங்க”

“ஸார் .. நடக்குற தூரந்தான் சார். கேப் வேண்டாம்”

“நத்திங் டூயிங். இன்னிக்கு நீங்க கேப்ல தான் போகணும்”

பெண் ஊழியருக்கு ஒரே கடுப்பு. ஆஃபீஸ் கேட் தாண்டி இருபது மீட்டர் நடந்தால் அவரது அபார்ட்மெண்ட். அங்கே நான்கு கல்யாணமாத பெண்கள் சேர்ந்து தங்கியிருக்கிரார்கள்.

”நான் நடந்து போறதை ஆபீஸ் செக்யூரிட்டியும் பாக்கலாம். எங்க அபார்ட்மெண்ட் செக்யூரிட்டியும் பாக்கலாம். ஜஸ்ட் ரண்டு நிமிச வாக். அவ்ளோதான்.”

இதே அலுவலகம் அளிக்கும் கேப் சேவையைப் பயன்படுத்தினால் அதற்காக கால் மணி நேரம் காத்திருக்க வேண்டும். காரில் ஏறி டிரைவர் மூன்றாவது கியர் போடுவதற்குள் இறங்க வேண்டும். அதற்குள் வீட்டுக்குப் போய் துணி மாற்றி டெட்டி பேர் பொம்மையைக் கட்டிப்பிடித்துத் தூங்கியிருக்கலாம். என்ன பெண் ஊழியர் பாதுகாப்போ என்ன கருமமோ! ஆனாலும் மனிதவள மேம்பாட்டுத் துறையில் ரூல்ஸ் என்றான் ரூல்ஸ் தான். பெண் ஊழியர் தனியாக வெளியே போனால் அவர்களைக் கேள்வி கேட்பார்கள் போல.

இது கூடப் பரவாயில்லை. இன்னொரு அலுவலகத்தில் மேனேஜர் சொன்னாராம். “நீ என்ன நடந்தாலும் நடக்கறதுக்கு முன்னாடி எனக்கு போன் பண்ணனும். ரொம்ப அன்டைம்னா எஸ்.எம்.எஸ் பண்ணிருங்க பரவாயில்லை. But keep me updated if something happened to you. காணமப் போனாலோ, அசம்பாவிதம் நடந்தாலோ நாங்க தான் போலீஸ்ல சொல்லுவோம். மீடியாவுல கம்பெனி பேர் வரக் கூடாது.”


ஓப்பனாகப் பேச வேண்டியது தான். அதற்கென இப்படியா?

No comments: