Sunday, March 30, 2014

கிழவியைத் தூக்கி மணையில வை

குஷ்வந்த் சிங். இந்திய பத்திரிக்கைத் துறையில் மறக்க முடியாத ஒரு பெயர். அவரைப் போல தாக்கம் உண்டாக்கிய இன்னொரு எழுத்தாளரை, பத்திரிக்கையாளரை, விமர்சகரைக் காண்பது சந்தேகமே. 99 வயதில் அவர் இறந்து போய் பத்து நாட்களாகின்றன. அவரைப் பற்றி எழுதினால் பக்கம் பக்கமாக எழுதலாம்.

குஷ்வந்த் சிங் பற்றி விகடன் டைம்பாஸ் இதழில் ஒரு மேட்டர் போட்டிருந்தார்கள். அதில் அவர் எழுதிய பிரபலமான சர்தார்ஜி ஜோக்கோடு முடித்திருந்தார்கள்.

//ஓர் அமெரிக்கர், ஒரு ரஷ்யர், ஒரு சர்தார்ஜி என மூன்று பேர் 'லை- டிடெக்டர்எனப்படும் உண்மை கண்டறியும் கருவிக்கு முன்னால் நிறுத்தப்பட்டு சோதனைக்கு உள்ளாக்கப்பட்டார்கள்.
''நான் 20 பீரை ஒரே நேரத்தில் குடிப்பேன்'' என்றாராம் அமெரிக்கர். அந்த லை-டிடெக்டர் கருவி 'நோஎன சிவப்பு விளக்கின் ஒளியை உமிழ்ந்தது. உடனே எண்ணிக்கையைக் குறைத்துச் சொல்ல பச்சை விளக்கு எரிந்தது. அடுத்து ரஷ்யர், ''நான் 10 பர்கரை ஒரே வாயில் தின்பேன்'' என்றாராம். வழக்கம்போல சிவப்பு ஒளிர பயந்து போன ரஷ்யர், '' இல்லை இல்லை... ஐந்து பர்கரைத் தின்பேன்என்றதும் பச்சை விளக்கு ஒளிர்ந்தது. இறுதியாக சர்தார்ஜியின் முறையும் வந்தது.

சர்தார்ஜி தொண்டயைச் செருமியபடி, ''நான் நினைக்கிறேன்...'' என ஆரம்பித்தாராம். சிவப்பு விளக்கு உடனே ஒளிர ஆரம்பித்ததாம்!//

ஆங்கிலத்தில் I think என்பதை ''நான் நினைக்கிறேன்...'' என மொழி மாற்றம் செய்து போட்டிருக்கிறார்கள். Think என்ற சொல்லுக்கு சிந்திப்பது, யோசிப்பது, கருதுவது, நினைப்பது என பல வகையான அர்த்தங்கள் உண்டு. ”நான் யோசிக்கிறேன்” என சர்தார் சொன்னதும் மெஷின் அலறியதாக, சர்தார்கள் யோசிக்கவே மாட்டார்கள் என்பதுவே ஜோக். ஆனால் நினைக்கிறேன் என ஆரபித்ததும் மெஷின் ஒளிர ஆரம்பித்ததாக தமிழில் வாசித்ததும் நமக்கு சற்று புரிபட சிரமாமக உள்ளது.

மொழிபெயர்ப்பின் முன்னுள்ள எண்ணற்ற சவால்களில் இதுவும் ஒன்று. ஒவ்வொரு மொழிக்கும் ஒவ்வொரு வாழ்க்கை முறையுண்டு. உதாரணமாக எஸ்கிமோக்களின் மொழியில் பனிக்கட்டியை பல பெயர்களின் குறிப்பிடுவார்களாம். ஒவ்வொன்றுக்கும் ஒவ்வொரு வித்தியாசம் உள்ளதாம். நமக்கு மார்கழியில் பெய்வதும் பனிதான். இமயமலையில் உறைந்து கிடப்பதும் பனிதான். பழந்தமிழர்கள் யானையைக் குறிக்க, அதனை வகைப்படுத்த பற்பல சொற்களைக் கையாண்டனராம். யானையே இல்லாத நாட்டில் பேசப்படும் மொழியில் அதை எதிர்பார்க்க முடியாது.

அப்படித்தான் எல்லா மொழியும், அதன் பயன்பாடும். நாம் வாழும் காலத்தில் நமது மொழியின் பயன்பாடு அருகி வருவதைக் காண்கிறோம். நாகரீகத்தின் பெயரில் வட்டாரச் சொற்களைத் தொலைத்து வருகிறோம். உதாரணத்துக்கு வட்டில் என்ற சொல். இது தட்டாகவும், பிற்பாடு பிளேட் ஆகவும் மாறி விட்டது. அதைப் போன்ற ஒரு சொல்லை நாம் மறுபடியும் நேற்று கடந்து வந்தேன். ஜெயகாந்தனின் சில நேரங்களில் சில மனிதர்களை மறுவாசிப்பு செய்த போது அச்சொல் மறுபடியும் மனதில் வந்து போனது.

கதையின் நாயகி கங்கா வெங்கட்ராமையருக்கு இலை போட்டு மணை போடுகிறாள் என வரும். மணை என்பது தரையோடு தரையாகப் போடும் மரத்திலான இருக்கை. கீழே அமர்ந்து சாப்பிடுவதற்குப் பதிலாக மணையில் அமர்ந்து உண்பது வாடிக்கை. பழைய காலத்தில் கடைகளில் கணக்குப் பிள்ளைகள் அமர்வது கூட இந்த மாதிரி மணை போட்டுத்தான். இப்போதெல்லாம் கீழே உட்கார்ந்து சாப்பிடுவதில்லை பந்தி கூட கீழே உட்கார வைத்துப் பரிமாறுவதில்லை. முன்பெல்லாம் பந்திகளில் அமர்வோர் அமர்வதுக்கு மாத்துத் துணி விரிப்பார்கள். டேபிள், சேர் எல்லாம் இப்போது வாடகைக்குக் கிடைக்கிறது. அதனால் மணை என்ற சொல் புழக்கத்திலே இல்லை.

எங்கள் பகுதியில் வயதுக்கு வந்த பெண்களுக்கு தாய்மாமன் குச்சுக் கட்டி சடங்கு செய்யும் ‘பூப்பூ நன்னீராட்டு விழா’ நிகழ்ச்சிக்கு திரட்டி அல்லது தெரட்டி என்பார்கள். அது விமரிசையாக நிகழும் ஒரு விஷயம். அதற்கு முன்பாக பூப்பெய்திய பெண்ணை இந்த மணை மீது அமர வைத்து குளிப்பாட்டுவார்கள். மணை மேல வெச்சுத் தண்ணி ஊற்றுவதாகச் சொல்லப்படும் இந்த விஷயம் கூட காலப் போக்கில் மறந்து போகலாம். ”கெடக்கறது கெடக்கட்டும். கெழவியத் தூக்கு மணை மேல வெய்யின்னு சொன்னானாம்” என்று சொல்வது கூட மறந்து போகலாம். 

Monday, March 24, 2014

நல்லாத்தானே பேசிக்கிட்டு இருந்தான்?

அவர் பெயர் சதீஷ். எனக்கு ஒரு வகையில் தூரத்துச் சொந்தம். இரண்டு வாரத்துக்கு முன் ஒரு முறை போனில் அழைத்தார்.

“நம்மளையெல்லாம் மறந்துட்டீங்களாட்ட இருக்குதுங்க மாப்ளே?” என்றார். நான் அப்போது ஒரு மீட்டிங்கில் இருந்தேன்.

“யாருங்க?”

“நாந்தானுங்க சதீஷுங்க. எல்லாம் காசுல பூந்துட்டீங்களாட்ட இருக்குது. நாமெல்லா இருக்கறதே மறந்துட்டீங்க?”

நான் அவரது நம்பரையும் சேவ் செய்து வைத்திருக்கவில்லை. கடைசியாக எதோ ஒரு விசேஷத்தில் பார்த்ததாக நினைவு. போனில் பேசியும் நான்கைந்து வருடம் ஆகியிருக்கும்.

“ஏனுங்.. மீட்டிங்ல இருக்கறனுங்க. மறுக்கா பேசறனுங்க” என்று சொல்லி விட்டு போனை கட் செய்தேன்.

ஒரு மணி நேரம் கழித்து திரும்பவும் அழைத்துப் பேசினேன். “ஸாரிங்க. ஒரு முக்கியமான மீட்டிங். அதான் பேச முடியலை. தப்பா நெனச்சுக்காதீங்க.”

”ஒன்னுமில்லீங்க. ஒரு தகவல் வேணும்” என்றார்.

“சொல்லுங்க”

“ஒரு கிராம் தங்கம் என்ன ரேட்னு பாத்துச் சொல்லுங்க பாக்கலாம். கொஞ்சம் அர்ஜண்டுங்க”

ஆன்லைனில் பார்த்து அன்றைக்கு என்ன விலையோ அதைச் சொன்னேன். ”அப்ப 200 கிராம் எவ்வளவு ஆகும்னு கணக்குப் போட்டுச் சொல்லுங்க” எனக் கேட்டார்.

“என்ன ஆன்லைன் கம்மாடிட்டி டிரேடிங் பண்ண ஆரம்பிச்சுட்டீங்களா?”

“இல்லீங்க நம்மளுக்கும் ரண்டு புள்ளைக இருக்குதுல்லவுங்க? ஆளுக்கு நூறு கிராம் இப்பவே வாங்கி வெச்சிரலாம்னு ஒரு யோசனைங்க. நம்மூரை விட மெட்ராஸ்ல கம்மியா இருக்கும்னாங்க. அதான் கேட்டேன்”

“ஆறு இலட்சத்துச் சில்லறை ஆகும் போலிருக்குங்க”

“சரீங்க மாப்ளை. போனை வெச்சிருங்க” என கட் செய்து விட்டார்.

அடுத்த நாள் காலை ஆறு மணிக்கு போன் பண்ணி எழுப்பியதே அவர்தான்.

“நம்ம கிட்ட ஒரு டாட்டா இண்டிகா இருக்குதுங்க. டீசல் வண்டி சும்மா ஷோரூம் கண்டிஷன். வாங்கறதுக்கு ஆள் இருக்கும்ங்களா?”

“விக்கிற பார்ட்டி உங்களுக்குத் தெரிஞ்ச பார்ட்டீங்களா? எந்த வருச மாடல்ங்க?”

“பார்ட்டியெல்லாம் இல்லீங்க. வண்டி நம்ம கிட்டத்தான் இருக்குதுங்க. வாங்கி முன்னூறு கிலோ மீட்டர்தான் ஓடீருக்குது. மாடல் 2001.”

வக்காலி, 13 வருசம் பழைய வண்டியை ஷோரூம் கண்டிஷன் என்கிறாரே என மனதுக்குள் நினைத்துக் கொண்டே, “ஷோரூம் கண்டிஷன்னா ஏன் விக்கறீங்க? வெச்சு ஓட்ட வேண்டியது தானுங்க?” எனக் கேட்டேன்.

”இல்லீங்க நமக்கு பெரிய வண்டி இருந்தா ஆகும்னு பாத்தேன். பொலீரோ மாதிரி. ஏவாரத்துக்கு வெகு தூரம் போறதுனால பெரிய வண்டீன்னா சவுரியமா இருக்கும்.”

“சரீங்க. யாராவது கேட்டாச் சொல்றேன்”

“சொல்லுங்க. அப்பறம் பொலீரோ மெட்ராஸ்ல எடுத்தா எவ்வளவாகும்னு கேட்டு வைங்க. நம்மூரை விட அம்பதாயிரம் கம்மியாகுமாமா? கேட்டுட்டு பத்து நிமிசத்துல கூப்புடறீங்களா?”

“சேரீங்க” என வைத்து விட்டு மறந்தே போனேன். காலையில் ஸ்கூலுக்குக் கிளப்பி அனுப்புவதற்குள் ரத்த அழுத்தம் 189 க்கு மேலே போய் விடுகிறது. இதிலே பொலீரோ விலையை விசாரிக்க வேண்டுமாம். அவர் மறுபடியும் பதினொரு மணிக்கு அழைத்தார். அப்போதும் ஒரு மீட்டிங்.

“சொல்லோனும்னு நெனச்சுக்கிட்டே இருந்தனுங்க மறந்துட்டேன். பொலீரோ விலை போன்ல சொல்ல மாட்டாங்களாமா. நேர்ல வாங்க சார் பேசிக்கலாம்னு சொல்லீட்டாங்க. நான் சனிக்கிழமை போய் விசாரிச்சுட்டு வந்து பேசறேன்” என்றேன்.

”அட அது கெடக்குது உடுங்க. இன்னொரு சமாச்சாரம். இப்ப உங்க கிட்ட காசு எவ்வளவு இருக்கும்ங்க?”

பாக்கெட்டைத் தடவிப் பார்த்து விட்டு, “ஒரு 250 ருபா இருக்கும்ங்க. சாயங்காலம் வாரப்ப ஆசீர்வாத் ஆட்டா வாங்கீட்டு வரச் சொல்லிருக்கறாளுங்க. எதுக்குக் கேக்கறீங்க?” என எதார்த்தமாகக் கேட்டேன்.

“மாப்பளைக்கு எப்பவுமே தமாஷு. பேங்க்ல எவ்வளவு இருக்கும்ங்க?”

ஹோம் லோலின் இன்னுமொரு மூனு, நாலு இலட்சம் எடுக்கலாம். ஆனால் எதற்காக இதையெல்லாம் இவரிடம் சொல்ல வேண்டும்? பதிலே சொல்லாமல் இருந்தேன்.

“நான் ஒரு யோசனை சொல்றனுங்க. நம்ம பக்கமெல்லாம் ஒரே பஞ்சமுங்க. இந்த வருசம் மக்காச்சோளமே சரியா வெளைச்சல் இல்லை. கர்நாடகாவுல போய் ஒரு லோடு வாங்கி வெச்சம்னா இரண்டு மூனு மாசத்துல இந்த கோழிப் பண்ணைக்காரங்க வந்து நான்நீயின்னு போட்டி போட்டு வாங்கீட்டுப் போயிருவாங்க.”

“வாங்கி எங்க வெக்கறதுங்க?”

‘அதெல்லா உங்களுக்கென்ன? நானே கொடவுன் பாத்து ஸ்டாக் பண்ணி வெச்சிருந்துட்டு நானே வித்துக் குடுத்தர்ரேன். நீங்க பணம் கூட எடுத்துக்கிட்டு வர வேண்டாம். எலெக்‌ஷன் டைம்ல புடிக்கறாங்களாமா. அக்கவுண்ட போட்டு உட்டுருங்க. நான் பாத்துக்கறேன்.”

”ஏனுங்க அப்படீன்னா நீங்களே வாங்க வேண்டியதுதான?”

“நானும் வாங்கீருக்கறனுங்க. ஊட்டுக்காரி நகையை அடமானம் வெச்சு நாலு லோடு வாங்கி, நசியனூர் ரோட்டுல ஒரு குடவுன் வாடகைக்குப் புடிச்சு எல்லாம் ரெடி பண்ணீட்டனுங்க.”

“சரீங்க. நான் என்ன ஏதுன்னு யோசனை பண்ணீட்டு சொல்லறனுங்க.”

“சீக்கிரம் சொல்லுங்க மாப்பளே. இல்லீன்னா நம்மாளுக பூரா அங்க போயி பூந்துருவாங்க. நம்ளுக்கு சோளம் சிக்காது. பாத்துக்குங்க”

“சரீங்க”

அடுத்த நாள் காலை மூன்று மணிக்கே கூப்பிட்டார். கடுப்பாகி கட் செய்து விட்டேன். ஐந்து மணிக்கு மேல் தூக்கம் வரவில்லை. ஐந்தரைக்குத் திருப்பியழைத்தேன். “இப்பத்தான் எந்திருச்சிருப்பீங்களாட்ட இருக்குது. போய் கண்ணுப் பூழையெல்லாம் கழுவீட்டு காப்பி கீப்பி குடீங்க” என்று சொல்லி விட்டு இணைப்பைத் துண்டித்தார். இதற்குத்தான் சொந்தக்காரங்க சகவாசமே ஆகாதென்று நினைத்துக்கொண்டே மறுபடியும் தூங்கப் போனேன்.

பிறகு போனையே காணோம். கார் வாங்கச் சொல்லி, கார் வாங்கிக் கொடுக்கச் சொல்லி, தங்க விலை கேட்டு, மக்காச் சோளம் வாங்கச் சொல்லி இனி ரூம் போட்டு யோசித்து விட்டு மறுபடியும் எப்போது அழைப்பாரோ என பதட்டமாகக் கழிந்தது. முடிந்தவரை தவிர்த்து விட வேண்டுமென்று தீர்மானத்தில் அவரது நம்பரை போனில் பதிவு செய்து வைத்திருக்கிறேன்.

ஆனால் ஆச்சரியம்; அவர் திரும்ப அழைக்கவேயில்லை. எனக்கு நிம்மதியானது. ஆபீஸில் நண்பர்கள் சிலரிடம் இதைப் பற்றிப் பேசிய போது மக்காச் சோளம் சூப்பர் பிசினஸ் என்றார்கள். மூன்று மாதத்தில் 20% இலாபம் வேறுங்கும் ஈட்ட முடியாதென்றார்கள். இரண்டு மூன்று பேர் கூட்டாகச் சேர்ந்து ஒரு லோடு வாங்கலாமென்ற திட்டத்தில் அவரது நம்பருக்கு மறுபடியும் முயற்சித்தேன். ஸ்விட்ச் ஆஃப் செய்யப்பட்டிருந்தது. அவர்கள் வீட்டு நம்பருக்கு அழைத்தாலும் யாரும் எடுக்கவில்லை.

ஓரிரு நாள் கழித்து அவருக்குப் பக்கத்து வீட்டுக்காரர் ஒருவரோடு பேசும் போது சதீஷ் நம்பர் மாற்றி விட்டாரா என விசாரித்தேன்.

”மாத்தவெல்லாம் இல்லீப்பா. அவனுக்கு என்னமோ பித்துப் புடிச்சாப்புல சாமத்துல யார் யாருக்கோ போன் போட்டு உளறித் தொலைக்கறான்னு அவன் பொண்டாட்டி ஆஃப் பண்ணி சிம் கார்டை எடுத்துத் தூக்கி வீசீட்டா. பெரியாஸ்பத்திரீல மருந்து வாங்கி சாப்பிட்டுக்கிட்டு இருக்கறானப்பா. செரியாகீரும்னு சொல்றாங்க. பாக்கலாம்” என்றார்.

“எங்கிட்ட நல்லாத்தான பேசிக்கிட்டு இருந்தார்?”

“நல்லாத்தான் பேசுவானப்பா. ஆனா ரண்டாவதும் பொட்டப் புள்ளை பொறந்ததீமே அவனுக்கு நெனப்பெல்லாம் மாறாட்டம் ஆகீருச்சு. தன்னைப் போல எதையோ ஒன்னை ஒளற வேண்டியது. இப்ப கொஞ்சம் முத்திக்க்கிச்சு” என குரலில் பரிதாபம் காட்டினார்.

”ஏனுங்க கொழந்த பொறந்து மூனு வருசம் இருக்காதுங்க? இப்பப் போயி எப்படீங்க?” என நம்ப முடியாமல் கேட்டேன். பதிலுக்கு அவரிடம் நம்பும்படியான விளக்கமில்லை.

மழையுமில்லாமல், துளியுமில்லாமல் காயும் தென்னந்தோப்பைக் காப்பாற்ற ஐந்து இலட்ச ரூபாய் செலவு செய்து போர் போட்டு, அதிலிருந்து வெறும் புகை மட்டுமே வந்த பிற்பாடு, டிராக்டரில் தண்ணீர் வாங்கி ஊற்றவும் காசில்லாமல், பழுப்பேறும் தென்னை மரத்தின் ஓலைகளை வெறித்துப் பார்த்தபடி….பூட்டிய அறையில் ஜன்னல் கம்பிகளைப் பற்றியிருக்கும் சதீஷ் நம்பும்படியான விளக்கத்தை ஒரு நாள் தருவார். 

என்ன ஒன்று, அடுத்த மழைக்காலம் வருவதற்குள் அந்தத்த் தென்னை மரங்கள் பட்டுப் போகாமலிருக்க வேண்டும்.

Monday, March 17, 2014

நீங்களும், உங்கள் மானங்கெட்ட தேர்தலும்

பத்திரிக்கையாளர் ஞாநி நேரடியாக அரசியலில் இறங்கியுள்ளார். ஆம் ஆத்மி கட்சியில் இணைந்து இதைச் செயல்படுத்தியுள்ளார். வாழ்த்துக்கள். விமர்சனங்களை சிறப்பாக முன் வைக்கும் ஞாநி போன்றவர்கள் நேரடியாக அரசியல் களத்திலும் செயலாற்றுவது முக்கியமானது. அணு உலை எதிர்ப்பாளர் உதயகுமாரும் ஆம் ஆத்மியில் இணைந்துள்ளார்.

நாடாளுமன்றத் தேர்தல் களம் வெகுவாகச் சூடு பிடித்துள்ளது. பாரதிய ஜனதாவிற்கும், ஜெயலலிதாவிற்கும் ரகசிய உடன்பாடு என மு.க.ஸ்டாலின் குற்றம் சாட்டுகிறார். ப.சிதம்பரமும் அதையெ சொல்கிறார். அந்த விஷயத்தில் தி.மு.க.வும், காங்கிரஸ் எழுதப்படாத உடன்பாட்டோடு இயங்குகிறார்கள். ஆந்திராவில், மன்னிக்கவும், தெலுங்கானாவில் உள்ள ஆந்திராவின் தற்காலிகத் தலைநகர் ஹைதராபத்தில் பவன் கல்யாண் தனிக்கட்சி துவங்கியிருக்கிறார். மம்தா பானர்ஜிக்கு பிரச்சாரம் செய்யப் போகும் நடிகை மூன்மூன் சென் வெயிலில் கருத்து விடுவார் என பத்திரிக்கைகள் கவலைப்படுகின்றன. குஜராத்தை முன் மாதிரி மாநிலமாக மாற்றிய மோடி எதற்கான வாரணாசியில் போட்டியிடுகிறார் என்பது குழப்பமாக இருக்கிறது. வேட்பாளரையே தீர்மானிக்காமல் விஜயகாந்த் தேர்தல் பிரச்சாரத்தில் குதித்திருக்கிறார்.

இன்னும் தேர்தல் முடிவதற்குள் என்னென்ன காமெடியைக் கண்டு தொலைக்க வேண்டியிருக்கிறதோ தெரியவில்லை. எல்லாவற்றையும் விட முக்கியமானது பண விவகாரம் என நினைக்கிறேன். சாலையில் செல்லும் வாகனங்களையெல்லாம் நிறுத்தி எவ்வளவு காசு கொண்டு செல்கிறார்கள் என சோதனை போடுகிறார்கள். கருப்புப் பணத்தைக் கடத்தி, அதை பட்டுவாடா செய்து வாக்குகளை விலைக்கு வாங்குவதைத் தடுக்க இந்த நடவடிக்கையாம். நல்ல நடவடிக்கை. சூப்பர் என இங்கிருந்து சொல்கிறோம்.

ஆனால் இதில் ஒரு சிக்கல். எங்கள் ஊரில் பழனிச்சாமி என்றொரு விவசாயி இருக்கிறார். நல்ல ஆற்றுப் பாசனப் பகுதி. தண்ணீருக்குப் பஞ்சமில்லாத பகுதி. கடந்த ஐந்தாறு மாதங்களுக்கு முன் சின்ன வெங்காயம் விலை கிலோவுக்கு ஐம்பது விற்றது. அப்போது யாரோ ஒருத்தர் ஒரு ஏக்கரில் மூன்று இலட்சம் சம்பாதித்தாராம். அடுத்த போகம் ஊரே வெங்காயம் நட்டு விட்டது. பழனிச்சாமியும் அதில் சேர்த்தி. “நாலேக்கர் கணக்கு ஆகுது. ஏக்கர் மூனு ருவாய்னா பன்னண்டு ருவா. இந்த வருசம் எப்படியும் ஊடு கட்டிப்போடோணும்” எனக் கணக்குப் போட்டவர்கள் இருக்கிறார்கள்.

பழனிச்சாமி நாலு எக்கர் வெங்காயம் பயிரிடவில்லை. வெறும் இரண்டேக்கர். அவ்வளவே. நாற்று விட்டு நடவு போட்ட போது எல்லாம் சரியாகத்தான் இருந்தது. நல்ல விலை விற்றது. ஆற்றில் தண்ணீர் ஓடியது. ஆனால் இது சில நாட்களுக்கே. மழை பொய்த்துப் போனது. ஆறு வறண்டு போனது. முன்பெல்லாம் ஆற்றில் தண்ணீர் நின்றாலும் மணலில் தேங்கிய தண்ணீர் நான்கைந்து மாதம் தாட்டும். இப்போது ஆற்றில் பாறை மட்டுமே தட்டுப்படுகிறது. மணலையெல்லாம் அள்ளி விட்டார்கள். ஆக ஆற்றிலும் தண்ணீர் இல்லை. மழையும் இல்லை. கிணறும் வற்றி விட்டது.

சரி, எப்படியும் வெங்காயம் காப்பாற்றி விடுமென போர் ஓட்டியிருக்கிறார். அதற்கே ஒன்றரை இலட்சம். முடிவில் கன்றுக் குட்டி ஒன்னுக்குப் போவது போல குறுக்குறுவென ஊறியிருக்கிறது. இவராவது பரவாயில்லை. நாலேக்கர், ஐந்தேக்கர் வெள்ளாமை வைத்தவர்கள் ஏக்கருக்கும் ஒரு இலட்சம் என்ற கணக்கில் போர் ஓட்டி புகையாய் போயிருக்கிறது. 800 அடி 900 அடி எல்லாம் சர்வ சாதாரணமாகச் சொல்கிறார்கள். தண்ணீரைத்தான் காணோம்.

அதற்காக வைத்த வெள்ளாமையைக் காய வைக்க முடியுமா? பழனிச்சாமி டிராக்டரில் தண்ணீர் வாங்கி ஒரு நாள் விட்டு ஒரு நாள் வெங்காயக் காட்டுக்கு பாய்ச்சிக் கொண்டிருக்கிறார். இதை நீங்கள் நதிக்கரையின் மிதமைந்த ஊரில் கற்பனை செய்து பார்க்கக் கடினமாக இருக்கும். ஆனாலும் இதுதான் உண்மை. இது ஒரு புறமிருக்க வெங்காய விலை வீழ்ந்திருக்கிறது. கிலோ ரூ 50 லிருந்து இறங்கி ரூ 15 க்கு வந்து விட்டது. போர் போட்ட காசு போனது போனது தான். ஆனால் முட்டுவழிக்குச் செலவும் செய்த காசும், தண்ணீர் வாங்கச் செலவழித்த பணமும் கிடைத்து விடும் என்ற நம்பிக்கையில் இருக்கிறார் பழனிச்சாமி. அவரைப் போலவே எங்கள் ஒட்டு மொத்த ஊரும் நம்பிக்கையோடிருக்கிறது.

இப்போது வெங்காயம் பிடுங்கு அறுவடை செய்யும் காலம். பிடுங்கிப் போட்டால் வாங்குவதற்கு வியாபாரியில்லை. பணம் கொண்டு வந்தால் வழியில் நிறுத்தி போலீஸ் பிடுங்கிக் கொள்கிறார்களாம். காட்டுக்குள் வந்து பிடுங்கும் முன் விலை பேசிய காலம் போய் இப்போது தேர்தலுக்காகக் காத்திருக்கிறார்கள் குடியானவர்கள். ஊருக்குள் வரும் வியாபாரிக்குத்தான் இந்த நிலைமை என்றில்லை. ஒட்டன்சத்திரம் மார்க்கெடுக்குச் சென்றாலும் இப்படித்தானாம்.  எடை எக்குத்தப்பாய்க் குறைந்து விடும் என்றாலும் கூடப் பரவாயில்லை. எப்படியும் நாற்பது நாள் நிழலில் போட்டுக் காய வைக்க வேண்டியதுதான் என்கிறார்கள்.

விளைபொருளுக்கான விலையைக் கூடக் கொடுக்கத் தடுக்கும் நீங்களும், உங்கள் மானங்கெட்ட தேர்தலும் !

Monday, March 10, 2014

நல்ல விஷயம்

1999 இல் கல்லூரிப் படிப்பை முடித்து வேலைக்குக் கிளம்பிய போது முப்பத்தைந்து வயதில் ரிட்டையர்ட் ஆகிவிட வேண்டுமென நினைத்தேன். அது ஏனென்று இப்போது யோசித்தால் சிரிப்பாக இருக்கிறது. அதைப் பற்றிய தீவிரமான சிந்தனைகள் இருந்ததுண்டு. ஆவேசமாக அதைப் பற்றிப் பேசியிருக்கிறேன். முப்பத்தைந்துக்குப் பிறகு மக்களுக்கு சேவையாற்ற வேண்டுமென நண்பன் ஒருவனிடன் சொன்னேன். ”அவனவனுக்கு அவனவன் செஞ்சுக்கணும். நீ என்ன செய்யப் போறே?” என்றான். நண்பன் சொன்னது ஓரளவு உண்மையென இப்போது புரிகிறது. கிட்டத்தட்ட பதினைந்து வருடம் வேலை செய்த பிறகு இப்போது ஓய்வு குறித்தெல்லாம் சிந்திக்க முடியவில்லை.

பாதி முதுகு ஏற்கனவே தேய்ந்து கிடந்தாலும் இன்னும் பதினைந்து இருபது வருடமாவது பணியில் நீடிக்க வேண்டும் போலிருக்கிறது. அது வரைக்கும் வேலை இருக்குமா தெரியவில்லை. ஓடும் வரைக்கும் ஓடட்டும். சைடில் சமுதாயத்திற்காக எதாவது செய்ய வேண்டும் என்ற ஆசை அவ்வப்போது தலையெடுக்கிறது. சமூகத்திற்கு சேவையென்றால் நாமென்ன அன்ன ஹசாரே மாதிரி ஊழலை ஒழிக்கப் புறப்படப் போகிறோமா அல்லது கேஜ்ரிவால் மாதிரி துடைப்பத்தைத் தூக்கிக்கொண்டு அலையப் போகிறோமா? ஒரு ரோமமும் கிடையாது.

எதோ நம்மாலானது. முடிந்த அளவு அரசுப் பள்ளியில் பயிலும் குழந்தைகளுக்குத் தேவையான நோட்டுப் புத்தகங்களை வழங்குதல், வாசிப்புப் பழக்கத்தை ஊக்குவித்தல், நீர் மேலாண்மை குறித்த விழிப்புணர்வை உண்டாக்குதல். அவ்வளவே. இதற்காக பெரிய அளவில் தொகை செலவிடும் அளவுக்கு நானொன்றும் அம்பானியல்ல. அதே நேரம் வருடத்தில் நாலு நாள் குடும்பத்தோடு ஓட்டலுக்குச் சென்று சாப்பிட்டால் ஆகும் செலவுக்கு நிகரான பணத்தை ஒதுக்கினால் கூடப் போதும். இரண்டு தடவை ஊருக்கு காரில் போவதைத் தவிர்த்தால் போதும். அப்படித்தான் நினைத்திருக்கிறேன்.

எங்கள் ஊரில் எல்லாக் குழந்தைகளும் அரசுப் பள்ளியில் படித்தோம். இப்போது பார்த்தால் காடு தோட்டம் வைத்திருக்கும் ஆட்களின் குழந்தைகள் இங்கிலீஷ் மீடிய தனியார் பள்ளிக்கு வேனில் போகிறார்கள். கூலிக்குப் போகும், தாழ்த்தப்பட்ட குடும்பத்தைச் சேர்ந்த குழந்தைகளே பெரும்பாலும் அரசுப் பள்ளியை நாடுகிறார்கள். அரசுப் பள்ளியில் பயிலும் மாணவர்களுக்கு படிப்பின் மீது பிடிப்பை உருவாக்க ஏதேனும் ஒரு துரும்பை அசைப்பதாக இந்த முயற்சி அமைந்தால் போதும்.

இப்போதைக்கு பத்தாயிரம் ரூபாய் இதற்காக ஒதுக்குவதெனத் தீர்மானித்திருக்கிறேன். இதை இணையத்தில் போட்டு விளம்பரம் தேடுமளவுக்கு பெரிய அமவுண்ட் இல்லைதான். ஆனால் அளவை விட நோக்கம் முக்கியம். இதை வாசிக்க நேரும் நீங்களும் கூட நீங்கள் பிறந்து வளர்ந்த கிராமத்திலோ, அல்லது உங்கள் அருகாமையில் சென்னை போன்ற பெருநகரங்களில் உள்ள அரசுப் பள்ளியிலோ உங்களால் ஆன சிறிய பங்களிப்பைச் செய்ய இது தூண்டுமல்லவா? அதுதான் நோக்கம். உதவ வேண்டுமென்ற எண்ணம் நம் எல்லோருக்குமே உண்டு. அதற்காக வழிவகையோ, நேரமோ இல்லாமல் தான் அதைச் செய்யாதிருக்கிறோம்.

ஆயினும் கூட அது மட்டுமே காரணமல்ல. இயலாதவர்களுக்கு உதவுவது நமக்கு அதீத முக்கியமில்லாத ஒரு விஷயமாக இருப்பதால் அதற்குரிய முன்னுரிமை அளிப்பதில்லை. பதினைந்து வருடமாக நானும் இதை நினைத்துக் கொண்டேயிருக்கிறேன். செயல்படுத்துவதற்கான நேரம் இப்போதுதான் வாய்த்திருக்கிறது. வாழ்க்கையில் செட்டில் ஆன பிறகு செய்ய வேண்டும் என என்னையே சமாதானம் செய்து வந்திருக்கிறேன். செட்டில் ஆவதென்று உண்மையில் ஏதுமில்லை என்பது தெரிந்தும் கூட அப்படியே வருடங்களை ஓட்டி விட்டிருக்கிறேன். இப்போது என்னவோ ஞானோதயம் ஏற்பட்டிருக்கிறது. வரும் கல்வியாண்டிலிருந்து இதைச் செயல்படுத்தத் திட்டம்.


உங்களுக்கு முடியுமானால் நீங்களும் செய்யுங்கள். சத்தியமாக நான் ஒன்றும் புதிதாகச் செய்யச் சொல்லி உங்களை இம்சிக்கவில்லை. நிச்சயமாக நீங்கள் சில காலமாக யோசித்த ஒரு விஷயமாகத்தான் இது இருக்கும். 

முடியவில்லையென்றால் நாலு பாடப் புத்தகங்களையோ, சிறுவர் புத்தகங்களையோ சேர்ந்து வாங்கலாம் வாருங்கள்.

Wednesday, March 05, 2014

லுங்கி டான்ஸ்

சில நாட்களுக்கு முன் இந்த வீடியோ மின்னஞ்சலில் வந்தது. 
ஒரு குரூப்புக்கு ஒருவர் அனுப்பினார். அதில் கணிசமான மலையாளிகள் அடக்கம். சும்மா ஜோக்குக்கு என அனுப்பியதாகச் சொன்னார். அதையும் கேட்காத கேரளத்து நண்பர் ஒருவர் பொங்கி எழுந்து விட்டார். பிராந்திய, மொழி உணர்வுகளைக் காயப்படுத்தாதே என மிரட்டல். Sick mind என்றும் பன்னி என்றும் திட்டிக்கொண்டார்கள். இதற்கெல்லாம் கோபப்பட்டால் டைம்ஸ் ஆஃப் இந்தியாவின் எடிட்டோரியல் டீமில் இருந்து கொண்டு மலையாளிகள் செய்வதற்கு தமிழர்கள் எவ்வளவு பொங்க வேண்டுமோ தெரியவில்லை.

மலையாளிகள் அப்படித்தான். எங்கு பொனாலும் ஒன்று சேர்ந்து கொள்வார்கள். அதற்கு என்ன காரணமோ தெரியவில்லை. ஒரு வேளை ஊரிலே இருந்து பிழைக்க முடியாமல் ஆளாளுக்கு வெளியூரில் சீவனம் பண்ணுவதால் ஒருங்கிணைந்த அடையாளம் தேவைப்படுகிறதோ என்னவோ. அந்த மொழியும், மாநிலமும், அதன் கலைகளும் அம்சமாக மார்கெட்டிங் செய்யப்பட்டிருக்கின்றன. ஆடிப் பெருக்கு என்றால் என்னவென்று கேட்கும் சென்னை நிறுவனங்கள் ஓணம் பண்டிகைக்கு தவறாமல் விடுமுறை அளிக்கின்றன. கரூரில் அள்ளி கேரளாவுக்குச் சென்ற மணல் எங்கள் அமராவதி ஆற்றை வெறும் பாறையாக்கியிருக்கிறது.

இப்போது மாசி மாதம் முடியப்போகிறது. மாசியில் சிவராத்திரி ஃபேமஸ். வெள்ளகோவில் வீரக்குமார் கோவிலில் சிவராத்திக்கு ஏகப்பட்ட விசேஷம். போன வருடமோ அதற்கு முந்தைய வருடமோ பார்த்தால் கேரளாவிலிருந்து ஆட்களைக் கொண்டு வந்து தண்டை அடித்து பட்டையைக் கிளப்பிக்கொண்டிருந்தார்கள். தாரை தப்பட்டை ஒலித்த ஊர்களில் தண்டை ஒலிக்கிறது. பறையறைந்த ஊர்களில் அந்த ஓசை இப்போதெல்லாம் கேட்பதில்லை. கொட்டுமொழக்கு என சின்ன வயதில் கேட்டது நினைவில் மட்டுமே நீடிக்கிறது. தப்படிப்பது இழிவான செயலாக, கீழான தொழிலாக தமிழகத்தில் கருதப்படுகிறது. இன்னும் இப்படி எத்தனை கலைகளை, பாரம்பரிய அடையாளங்களைத் தொலைக்கவிருக்கிறோமோ.

நண்பர் ஈரோடு கதிர் கூட சமீபத்தில் கீழ்க்கண்ட மாதிரி எழுதியிருந்தார்.

//மலையாள சினிமாக்கள் பிடிக்கிறது...
மலையாள பாடல்கள் பிடிக்கிறது...
மலையாள நாயகர்கள் பிடிக்கிறது...
மலையாள நாயகிகளை ரொம்பப் பிடிக்கிறது  ...

ஆனா... ரொம்ப காசு இருக்குனு கேரளாவிலிருந்து ஆளுகள புடிச்சிக்கிட்டு வந்து கல்யாணம் காட்சி, திருவிழா, கட்சிக்கூட்டம்னு எல்லாத்திலேயும் வரிசையா நிக்கவெச்சுடொங்ங்ங்... டொங்ங்ய்ய்ங்ங்னு செண்டைமேளத்த அடிக்க விடுறீங்களே..... 

அது மட்டும்... 
முடியலைய்யா... 
காது ஜவ்வு கிழியுதுய்யா.... 
தப்பிச்சு ஓடலாம்னு தோணுதுய்யா....

பறை சத்தம் பக்கமா எப்பவாச்சும் கேட்டிருக்கீங்ளா....!? 
எவ்ளோ தூரத்தில் அடிச்சாலும் 
மனசு ஆடும் கால் தாளம் போடும்!
//

மொழிக்காகப் போராடிய ஒரு இனம் உண்டென்றால் இந்தியாவில் அது தமிழினமே. ஆனால் இன்றைக்கு அடையாளங்களை இழப்பதில் கிஞ்சித்தும் கவலையின்றியிருக்கிறோம் என்று தோன்றுகிறது. மலையாள சமூகத்திடமிருந்து தமிழர்கள் கற்க நிறைய இருப்பதாகத் தோன்றுகிறது.


எல்லாம் சரி. இந்த வட இந்தியர்கள் வேட்டியை லுங்கி என்று வீடியோவை ஷேர் செய்வது கடுப்பேற்றுகிறார்கள். முதலில் அவர்களுக்குச் சொல்ல வேண்டும் – லுங்கி வேறு வேட்டி வேறு என்பதை.