Monday, March 17, 2014

நீங்களும், உங்கள் மானங்கெட்ட தேர்தலும்

பத்திரிக்கையாளர் ஞாநி நேரடியாக அரசியலில் இறங்கியுள்ளார். ஆம் ஆத்மி கட்சியில் இணைந்து இதைச் செயல்படுத்தியுள்ளார். வாழ்த்துக்கள். விமர்சனங்களை சிறப்பாக முன் வைக்கும் ஞாநி போன்றவர்கள் நேரடியாக அரசியல் களத்திலும் செயலாற்றுவது முக்கியமானது. அணு உலை எதிர்ப்பாளர் உதயகுமாரும் ஆம் ஆத்மியில் இணைந்துள்ளார்.

நாடாளுமன்றத் தேர்தல் களம் வெகுவாகச் சூடு பிடித்துள்ளது. பாரதிய ஜனதாவிற்கும், ஜெயலலிதாவிற்கும் ரகசிய உடன்பாடு என மு.க.ஸ்டாலின் குற்றம் சாட்டுகிறார். ப.சிதம்பரமும் அதையெ சொல்கிறார். அந்த விஷயத்தில் தி.மு.க.வும், காங்கிரஸ் எழுதப்படாத உடன்பாட்டோடு இயங்குகிறார்கள். ஆந்திராவில், மன்னிக்கவும், தெலுங்கானாவில் உள்ள ஆந்திராவின் தற்காலிகத் தலைநகர் ஹைதராபத்தில் பவன் கல்யாண் தனிக்கட்சி துவங்கியிருக்கிறார். மம்தா பானர்ஜிக்கு பிரச்சாரம் செய்யப் போகும் நடிகை மூன்மூன் சென் வெயிலில் கருத்து விடுவார் என பத்திரிக்கைகள் கவலைப்படுகின்றன. குஜராத்தை முன் மாதிரி மாநிலமாக மாற்றிய மோடி எதற்கான வாரணாசியில் போட்டியிடுகிறார் என்பது குழப்பமாக இருக்கிறது. வேட்பாளரையே தீர்மானிக்காமல் விஜயகாந்த் தேர்தல் பிரச்சாரத்தில் குதித்திருக்கிறார்.

இன்னும் தேர்தல் முடிவதற்குள் என்னென்ன காமெடியைக் கண்டு தொலைக்க வேண்டியிருக்கிறதோ தெரியவில்லை. எல்லாவற்றையும் விட முக்கியமானது பண விவகாரம் என நினைக்கிறேன். சாலையில் செல்லும் வாகனங்களையெல்லாம் நிறுத்தி எவ்வளவு காசு கொண்டு செல்கிறார்கள் என சோதனை போடுகிறார்கள். கருப்புப் பணத்தைக் கடத்தி, அதை பட்டுவாடா செய்து வாக்குகளை விலைக்கு வாங்குவதைத் தடுக்க இந்த நடவடிக்கையாம். நல்ல நடவடிக்கை. சூப்பர் என இங்கிருந்து சொல்கிறோம்.

ஆனால் இதில் ஒரு சிக்கல். எங்கள் ஊரில் பழனிச்சாமி என்றொரு விவசாயி இருக்கிறார். நல்ல ஆற்றுப் பாசனப் பகுதி. தண்ணீருக்குப் பஞ்சமில்லாத பகுதி. கடந்த ஐந்தாறு மாதங்களுக்கு முன் சின்ன வெங்காயம் விலை கிலோவுக்கு ஐம்பது விற்றது. அப்போது யாரோ ஒருத்தர் ஒரு ஏக்கரில் மூன்று இலட்சம் சம்பாதித்தாராம். அடுத்த போகம் ஊரே வெங்காயம் நட்டு விட்டது. பழனிச்சாமியும் அதில் சேர்த்தி. “நாலேக்கர் கணக்கு ஆகுது. ஏக்கர் மூனு ருவாய்னா பன்னண்டு ருவா. இந்த வருசம் எப்படியும் ஊடு கட்டிப்போடோணும்” எனக் கணக்குப் போட்டவர்கள் இருக்கிறார்கள்.

பழனிச்சாமி நாலு எக்கர் வெங்காயம் பயிரிடவில்லை. வெறும் இரண்டேக்கர். அவ்வளவே. நாற்று விட்டு நடவு போட்ட போது எல்லாம் சரியாகத்தான் இருந்தது. நல்ல விலை விற்றது. ஆற்றில் தண்ணீர் ஓடியது. ஆனால் இது சில நாட்களுக்கே. மழை பொய்த்துப் போனது. ஆறு வறண்டு போனது. முன்பெல்லாம் ஆற்றில் தண்ணீர் நின்றாலும் மணலில் தேங்கிய தண்ணீர் நான்கைந்து மாதம் தாட்டும். இப்போது ஆற்றில் பாறை மட்டுமே தட்டுப்படுகிறது. மணலையெல்லாம் அள்ளி விட்டார்கள். ஆக ஆற்றிலும் தண்ணீர் இல்லை. மழையும் இல்லை. கிணறும் வற்றி விட்டது.

சரி, எப்படியும் வெங்காயம் காப்பாற்றி விடுமென போர் ஓட்டியிருக்கிறார். அதற்கே ஒன்றரை இலட்சம். முடிவில் கன்றுக் குட்டி ஒன்னுக்குப் போவது போல குறுக்குறுவென ஊறியிருக்கிறது. இவராவது பரவாயில்லை. நாலேக்கர், ஐந்தேக்கர் வெள்ளாமை வைத்தவர்கள் ஏக்கருக்கும் ஒரு இலட்சம் என்ற கணக்கில் போர் ஓட்டி புகையாய் போயிருக்கிறது. 800 அடி 900 அடி எல்லாம் சர்வ சாதாரணமாகச் சொல்கிறார்கள். தண்ணீரைத்தான் காணோம்.

அதற்காக வைத்த வெள்ளாமையைக் காய வைக்க முடியுமா? பழனிச்சாமி டிராக்டரில் தண்ணீர் வாங்கி ஒரு நாள் விட்டு ஒரு நாள் வெங்காயக் காட்டுக்கு பாய்ச்சிக் கொண்டிருக்கிறார். இதை நீங்கள் நதிக்கரையின் மிதமைந்த ஊரில் கற்பனை செய்து பார்க்கக் கடினமாக இருக்கும். ஆனாலும் இதுதான் உண்மை. இது ஒரு புறமிருக்க வெங்காய விலை வீழ்ந்திருக்கிறது. கிலோ ரூ 50 லிருந்து இறங்கி ரூ 15 க்கு வந்து விட்டது. போர் போட்ட காசு போனது போனது தான். ஆனால் முட்டுவழிக்குச் செலவும் செய்த காசும், தண்ணீர் வாங்கச் செலவழித்த பணமும் கிடைத்து விடும் என்ற நம்பிக்கையில் இருக்கிறார் பழனிச்சாமி. அவரைப் போலவே எங்கள் ஒட்டு மொத்த ஊரும் நம்பிக்கையோடிருக்கிறது.

இப்போது வெங்காயம் பிடுங்கு அறுவடை செய்யும் காலம். பிடுங்கிப் போட்டால் வாங்குவதற்கு வியாபாரியில்லை. பணம் கொண்டு வந்தால் வழியில் நிறுத்தி போலீஸ் பிடுங்கிக் கொள்கிறார்களாம். காட்டுக்குள் வந்து பிடுங்கும் முன் விலை பேசிய காலம் போய் இப்போது தேர்தலுக்காகக் காத்திருக்கிறார்கள் குடியானவர்கள். ஊருக்குள் வரும் வியாபாரிக்குத்தான் இந்த நிலைமை என்றில்லை. ஒட்டன்சத்திரம் மார்க்கெடுக்குச் சென்றாலும் இப்படித்தானாம்.  எடை எக்குத்தப்பாய்க் குறைந்து விடும் என்றாலும் கூடப் பரவாயில்லை. எப்படியும் நாற்பது நாள் நிழலில் போட்டுக் காய வைக்க வேண்டியதுதான் என்கிறார்கள்.

விளைபொருளுக்கான விலையைக் கூடக் கொடுக்கத் தடுக்கும் நீங்களும், உங்கள் மானங்கெட்ட தேர்தலும் !

No comments: