Monday, March 24, 2014

நல்லாத்தானே பேசிக்கிட்டு இருந்தான்?

அவர் பெயர் சதீஷ். எனக்கு ஒரு வகையில் தூரத்துச் சொந்தம். இரண்டு வாரத்துக்கு முன் ஒரு முறை போனில் அழைத்தார்.

“நம்மளையெல்லாம் மறந்துட்டீங்களாட்ட இருக்குதுங்க மாப்ளே?” என்றார். நான் அப்போது ஒரு மீட்டிங்கில் இருந்தேன்.

“யாருங்க?”

“நாந்தானுங்க சதீஷுங்க. எல்லாம் காசுல பூந்துட்டீங்களாட்ட இருக்குது. நாமெல்லா இருக்கறதே மறந்துட்டீங்க?”

நான் அவரது நம்பரையும் சேவ் செய்து வைத்திருக்கவில்லை. கடைசியாக எதோ ஒரு விசேஷத்தில் பார்த்ததாக நினைவு. போனில் பேசியும் நான்கைந்து வருடம் ஆகியிருக்கும்.

“ஏனுங்.. மீட்டிங்ல இருக்கறனுங்க. மறுக்கா பேசறனுங்க” என்று சொல்லி விட்டு போனை கட் செய்தேன்.

ஒரு மணி நேரம் கழித்து திரும்பவும் அழைத்துப் பேசினேன். “ஸாரிங்க. ஒரு முக்கியமான மீட்டிங். அதான் பேச முடியலை. தப்பா நெனச்சுக்காதீங்க.”

”ஒன்னுமில்லீங்க. ஒரு தகவல் வேணும்” என்றார்.

“சொல்லுங்க”

“ஒரு கிராம் தங்கம் என்ன ரேட்னு பாத்துச் சொல்லுங்க பாக்கலாம். கொஞ்சம் அர்ஜண்டுங்க”

ஆன்லைனில் பார்த்து அன்றைக்கு என்ன விலையோ அதைச் சொன்னேன். ”அப்ப 200 கிராம் எவ்வளவு ஆகும்னு கணக்குப் போட்டுச் சொல்லுங்க” எனக் கேட்டார்.

“என்ன ஆன்லைன் கம்மாடிட்டி டிரேடிங் பண்ண ஆரம்பிச்சுட்டீங்களா?”

“இல்லீங்க நம்மளுக்கும் ரண்டு புள்ளைக இருக்குதுல்லவுங்க? ஆளுக்கு நூறு கிராம் இப்பவே வாங்கி வெச்சிரலாம்னு ஒரு யோசனைங்க. நம்மூரை விட மெட்ராஸ்ல கம்மியா இருக்கும்னாங்க. அதான் கேட்டேன்”

“ஆறு இலட்சத்துச் சில்லறை ஆகும் போலிருக்குங்க”

“சரீங்க மாப்ளை. போனை வெச்சிருங்க” என கட் செய்து விட்டார்.

அடுத்த நாள் காலை ஆறு மணிக்கு போன் பண்ணி எழுப்பியதே அவர்தான்.

“நம்ம கிட்ட ஒரு டாட்டா இண்டிகா இருக்குதுங்க. டீசல் வண்டி சும்மா ஷோரூம் கண்டிஷன். வாங்கறதுக்கு ஆள் இருக்கும்ங்களா?”

“விக்கிற பார்ட்டி உங்களுக்குத் தெரிஞ்ச பார்ட்டீங்களா? எந்த வருச மாடல்ங்க?”

“பார்ட்டியெல்லாம் இல்லீங்க. வண்டி நம்ம கிட்டத்தான் இருக்குதுங்க. வாங்கி முன்னூறு கிலோ மீட்டர்தான் ஓடீருக்குது. மாடல் 2001.”

வக்காலி, 13 வருசம் பழைய வண்டியை ஷோரூம் கண்டிஷன் என்கிறாரே என மனதுக்குள் நினைத்துக் கொண்டே, “ஷோரூம் கண்டிஷன்னா ஏன் விக்கறீங்க? வெச்சு ஓட்ட வேண்டியது தானுங்க?” எனக் கேட்டேன்.

”இல்லீங்க நமக்கு பெரிய வண்டி இருந்தா ஆகும்னு பாத்தேன். பொலீரோ மாதிரி. ஏவாரத்துக்கு வெகு தூரம் போறதுனால பெரிய வண்டீன்னா சவுரியமா இருக்கும்.”

“சரீங்க. யாராவது கேட்டாச் சொல்றேன்”

“சொல்லுங்க. அப்பறம் பொலீரோ மெட்ராஸ்ல எடுத்தா எவ்வளவாகும்னு கேட்டு வைங்க. நம்மூரை விட அம்பதாயிரம் கம்மியாகுமாமா? கேட்டுட்டு பத்து நிமிசத்துல கூப்புடறீங்களா?”

“சேரீங்க” என வைத்து விட்டு மறந்தே போனேன். காலையில் ஸ்கூலுக்குக் கிளப்பி அனுப்புவதற்குள் ரத்த அழுத்தம் 189 க்கு மேலே போய் விடுகிறது. இதிலே பொலீரோ விலையை விசாரிக்க வேண்டுமாம். அவர் மறுபடியும் பதினொரு மணிக்கு அழைத்தார். அப்போதும் ஒரு மீட்டிங்.

“சொல்லோனும்னு நெனச்சுக்கிட்டே இருந்தனுங்க மறந்துட்டேன். பொலீரோ விலை போன்ல சொல்ல மாட்டாங்களாமா. நேர்ல வாங்க சார் பேசிக்கலாம்னு சொல்லீட்டாங்க. நான் சனிக்கிழமை போய் விசாரிச்சுட்டு வந்து பேசறேன்” என்றேன்.

”அட அது கெடக்குது உடுங்க. இன்னொரு சமாச்சாரம். இப்ப உங்க கிட்ட காசு எவ்வளவு இருக்கும்ங்க?”

பாக்கெட்டைத் தடவிப் பார்த்து விட்டு, “ஒரு 250 ருபா இருக்கும்ங்க. சாயங்காலம் வாரப்ப ஆசீர்வாத் ஆட்டா வாங்கீட்டு வரச் சொல்லிருக்கறாளுங்க. எதுக்குக் கேக்கறீங்க?” என எதார்த்தமாகக் கேட்டேன்.

“மாப்பளைக்கு எப்பவுமே தமாஷு. பேங்க்ல எவ்வளவு இருக்கும்ங்க?”

ஹோம் லோலின் இன்னுமொரு மூனு, நாலு இலட்சம் எடுக்கலாம். ஆனால் எதற்காக இதையெல்லாம் இவரிடம் சொல்ல வேண்டும்? பதிலே சொல்லாமல் இருந்தேன்.

“நான் ஒரு யோசனை சொல்றனுங்க. நம்ம பக்கமெல்லாம் ஒரே பஞ்சமுங்க. இந்த வருசம் மக்காச்சோளமே சரியா வெளைச்சல் இல்லை. கர்நாடகாவுல போய் ஒரு லோடு வாங்கி வெச்சம்னா இரண்டு மூனு மாசத்துல இந்த கோழிப் பண்ணைக்காரங்க வந்து நான்நீயின்னு போட்டி போட்டு வாங்கீட்டுப் போயிருவாங்க.”

“வாங்கி எங்க வெக்கறதுங்க?”

‘அதெல்லா உங்களுக்கென்ன? நானே கொடவுன் பாத்து ஸ்டாக் பண்ணி வெச்சிருந்துட்டு நானே வித்துக் குடுத்தர்ரேன். நீங்க பணம் கூட எடுத்துக்கிட்டு வர வேண்டாம். எலெக்‌ஷன் டைம்ல புடிக்கறாங்களாமா. அக்கவுண்ட போட்டு உட்டுருங்க. நான் பாத்துக்கறேன்.”

”ஏனுங்க அப்படீன்னா நீங்களே வாங்க வேண்டியதுதான?”

“நானும் வாங்கீருக்கறனுங்க. ஊட்டுக்காரி நகையை அடமானம் வெச்சு நாலு லோடு வாங்கி, நசியனூர் ரோட்டுல ஒரு குடவுன் வாடகைக்குப் புடிச்சு எல்லாம் ரெடி பண்ணீட்டனுங்க.”

“சரீங்க. நான் என்ன ஏதுன்னு யோசனை பண்ணீட்டு சொல்லறனுங்க.”

“சீக்கிரம் சொல்லுங்க மாப்பளே. இல்லீன்னா நம்மாளுக பூரா அங்க போயி பூந்துருவாங்க. நம்ளுக்கு சோளம் சிக்காது. பாத்துக்குங்க”

“சரீங்க”

அடுத்த நாள் காலை மூன்று மணிக்கே கூப்பிட்டார். கடுப்பாகி கட் செய்து விட்டேன். ஐந்து மணிக்கு மேல் தூக்கம் வரவில்லை. ஐந்தரைக்குத் திருப்பியழைத்தேன். “இப்பத்தான் எந்திருச்சிருப்பீங்களாட்ட இருக்குது. போய் கண்ணுப் பூழையெல்லாம் கழுவீட்டு காப்பி கீப்பி குடீங்க” என்று சொல்லி விட்டு இணைப்பைத் துண்டித்தார். இதற்குத்தான் சொந்தக்காரங்க சகவாசமே ஆகாதென்று நினைத்துக்கொண்டே மறுபடியும் தூங்கப் போனேன்.

பிறகு போனையே காணோம். கார் வாங்கச் சொல்லி, கார் வாங்கிக் கொடுக்கச் சொல்லி, தங்க விலை கேட்டு, மக்காச் சோளம் வாங்கச் சொல்லி இனி ரூம் போட்டு யோசித்து விட்டு மறுபடியும் எப்போது அழைப்பாரோ என பதட்டமாகக் கழிந்தது. முடிந்தவரை தவிர்த்து விட வேண்டுமென்று தீர்மானத்தில் அவரது நம்பரை போனில் பதிவு செய்து வைத்திருக்கிறேன்.

ஆனால் ஆச்சரியம்; அவர் திரும்ப அழைக்கவேயில்லை. எனக்கு நிம்மதியானது. ஆபீஸில் நண்பர்கள் சிலரிடம் இதைப் பற்றிப் பேசிய போது மக்காச் சோளம் சூப்பர் பிசினஸ் என்றார்கள். மூன்று மாதத்தில் 20% இலாபம் வேறுங்கும் ஈட்ட முடியாதென்றார்கள். இரண்டு மூன்று பேர் கூட்டாகச் சேர்ந்து ஒரு லோடு வாங்கலாமென்ற திட்டத்தில் அவரது நம்பருக்கு மறுபடியும் முயற்சித்தேன். ஸ்விட்ச் ஆஃப் செய்யப்பட்டிருந்தது. அவர்கள் வீட்டு நம்பருக்கு அழைத்தாலும் யாரும் எடுக்கவில்லை.

ஓரிரு நாள் கழித்து அவருக்குப் பக்கத்து வீட்டுக்காரர் ஒருவரோடு பேசும் போது சதீஷ் நம்பர் மாற்றி விட்டாரா என விசாரித்தேன்.

”மாத்தவெல்லாம் இல்லீப்பா. அவனுக்கு என்னமோ பித்துப் புடிச்சாப்புல சாமத்துல யார் யாருக்கோ போன் போட்டு உளறித் தொலைக்கறான்னு அவன் பொண்டாட்டி ஆஃப் பண்ணி சிம் கார்டை எடுத்துத் தூக்கி வீசீட்டா. பெரியாஸ்பத்திரீல மருந்து வாங்கி சாப்பிட்டுக்கிட்டு இருக்கறானப்பா. செரியாகீரும்னு சொல்றாங்க. பாக்கலாம்” என்றார்.

“எங்கிட்ட நல்லாத்தான பேசிக்கிட்டு இருந்தார்?”

“நல்லாத்தான் பேசுவானப்பா. ஆனா ரண்டாவதும் பொட்டப் புள்ளை பொறந்ததீமே அவனுக்கு நெனப்பெல்லாம் மாறாட்டம் ஆகீருச்சு. தன்னைப் போல எதையோ ஒன்னை ஒளற வேண்டியது. இப்ப கொஞ்சம் முத்திக்க்கிச்சு” என குரலில் பரிதாபம் காட்டினார்.

”ஏனுங்க கொழந்த பொறந்து மூனு வருசம் இருக்காதுங்க? இப்பப் போயி எப்படீங்க?” என நம்ப முடியாமல் கேட்டேன். பதிலுக்கு அவரிடம் நம்பும்படியான விளக்கமில்லை.

மழையுமில்லாமல், துளியுமில்லாமல் காயும் தென்னந்தோப்பைக் காப்பாற்ற ஐந்து இலட்ச ரூபாய் செலவு செய்து போர் போட்டு, அதிலிருந்து வெறும் புகை மட்டுமே வந்த பிற்பாடு, டிராக்டரில் தண்ணீர் வாங்கி ஊற்றவும் காசில்லாமல், பழுப்பேறும் தென்னை மரத்தின் ஓலைகளை வெறித்துப் பார்த்தபடி….பூட்டிய அறையில் ஜன்னல் கம்பிகளைப் பற்றியிருக்கும் சதீஷ் நம்பும்படியான விளக்கத்தை ஒரு நாள் தருவார். 

என்ன ஒன்று, அடுத்த மழைக்காலம் வருவதற்குள் அந்தத்த் தென்னை மரங்கள் பட்டுப் போகாமலிருக்க வேண்டும்.

2 comments:

Anonymous said...

Once upon a time you people are cultivating money (stock market). I am regular follower of you since you were written in Uyirmai. Your big brother (world police) booming our software industries by the money cultivated from real estate. Nobody want to work. No production in agriculture and industries. We have spoiled our nature. We could not understand the cause. I am really afraid about the feature of Tamils and Indians of-course.

க. சீ. சிவக்குமார் said...

இந்தச் சம்பவத்தை நானாக இருந்தால் ஒரு கதை எழுதிதியருந்தால்தான் மனது ஓய்ந்திருக்கும் - சிவா