Monday, April 07, 2014

செய்வீர்களா? செய்வீர்களா?

நான் வசிக்கும் அபார்ட்மெண்டில் நீங்களும் வீடு வாங்கியிருந்தால் நுகர்வோர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடுத்து வெற்றி பெறுவதற்கான அத்தனை சாத்தியங்களும் உண்டு என்பது தனியான கதை. இங்கே, இப்போது அதைச் சொல்லப் போவதில்லை. திசை மாறிப் போய் விடும். அதனால்…எங்கள் வீடு அமைந்திருக்கும் இடம் ஒரு கிராமம் என்பதில் ஆரம்பிக்கிறேன். அதற்கு நூக்காம்பாளையம் என்று பெயர். சில பேர் நூக்கம்பாளையம் என்கிறார்கள். பிரபலமான திரைப்பட இயக்குனரின் சொந்த ஊரான இவ்வூர் அரசன்கழனிக்கும், பெரும்பாக்கத்துக்கும் நடுவே அமைந்துள்ளது. மேற்கே மலையும், தெற்கே ஏரியும், வடக்கே வயல்களும் சூழ்ந்த அழகிய கிராமம்.

ஆனால் கிழக்கே என்ன இருக்கிறது என்பதில் சிலருக்குக் கெளரவக் குறைச்சல். அங்கே செம்மஞ்சேரி உள்ளது. சுனாமியால் பாதிக்கப்பட்ட மக்களுக்கான மாற்றுக் குடியிருப்புகள் அங்கே நிறைய உண்டு. விளிம்பு நிலை மக்கள் நிரம்பிய பகுதி. எங்கள் கம்யூனிட்டில் உள்ள பார்க்க்கில் இந்த சேரிப் பையன்கள் பவுடர் அடித்துக்கொண்டு வந்து விளையாடுவதையும், அதை வெளிப்படையாகக் கண்டிக்க முடியாமல் ஆங்கிலம் பேசும் அம்மாக்க பொறுமுவதையும் மாலை நேரங்களில் காணலாம்.

செம்மஞ்சேரியைப் பற்றி நிறையப் பேசலாம். அம்பேத்கார், திருமாவளவன், சிவகாமி, கலைஞர், அம்மா என எல்லாக் கட்சியின் போஸ்டர் பேனர்களைக் காணலாம். எப்ப்போதும் விழிப்போடிருக்கும் காவல் நிலையம் செம்மஞ்சேரியில் இயங்குகிறது. எந்த நேரமும் ஒரே அக்கப்போராக இருக்கும். நீங்கள் ராஜீவ் காந்தி சாலை எனப்படும் பழைய மகாபலிப்ரம் சாலையில் பயணிக்கும் போது சோழிங்க நல்லூர் சந்திப்பு ஒரு போலீஸ் பூத்தைக் கவனித்திருந்தால் அது செம்மஞ்சேரி காவல் நிலையத்தின் நீட்சி என்பதை அறிக.

நான் சரக்கு வாங்கச் செல்ல வேண்டுமானால் ஒன்று வடக்கே பெரும்பாக்கம் போக வேண்டும். இல்லையேல் கிழக்கே செம்மஞ்சேரி போக வேண்டும். செம்மஞ்சேரிதான் பக்கம். ஆனாலும் அங்கே அடிக்கடி போவதில்லை. ’இதானா உங்க டக்கு?’ என்பது போல நான் குடிப்பதே ‘இதானா உங்க அடிக்கடி?’ என்கிற ரேஞ்சுக்குத்தான். அப்படி அடித்தாலும் அதில் எப்போதாவது என்றால் புரிந்து கொள்ளுங்கள். இரண்டு வருடத்தில் மூன்று தடவை செம்மஞ்சேரி டாஸ்மாக் போயிருப்பேன்.

செம்மஞ்சேரியின் சிறப்புகளில் டாஸ்மாக் முக்கியமானது. அந்த ஊருக்குள் நுழைந்தவுடன் வரவேற்பது டாஸ்மாக். கிழக்கே OMR குமரன் நகரில் இருந்து செம்மஞ்சேரிக்கான சாலை உலகத் தரம் வாய்ந்தது. நூறு பேரில் 99 பேர் ஓட்டுப் போடும் விளிம்பு நிலை மக்களுக்கான சாலை. மக்கள் நெரிசலாக வாழும் பகுதிக்கான சாலை. அதனால் அம்சமாக இருக்கும். ஐந்து நிமிடத்திற்கு ஒரு பஸ் போகும். தி.நகர், கிண்டி, கோயம்பேடு, பாரீஸ் என செம்மஞ்சேரியில் இருந்து பஸ் கனெக்‌ஷன் இல்லாத இடமே சென்னையில் இல்லை.

இந்த வழவழப்பான சாலை செம்மஞ்சேரி வரைக்குமே. அதற்கு அந்தப் பக்கம் இரண்டு பெரிய டவுன்ஷிப்கள் உள்ளன. ஒவ்வொன்றும் ஆயிரம் வீடுகள். தம்மை அப்பாடக்கராக நினைத்துக்கொண்டு ஹவுசிங் லோன் கட்டி வாழும் ஆட்களைக் கொண்டது. அவர்களும் இந்த வழியில் சர்புர்ரென்று காரிலோ, பைக்கிலோ போவார்கள். OMR லிருந்து மேற்கே வருகையில் கூட்டமாக ஆட்கள் நிற்பதைக் கண்டால் நீங்கள் செம்மஞ்சேரியை நெருங்குகிறீர்கள் என அர்த்தம். அது டாஸ்மாக், The Gateway of செம்மஞ்சேரி. டாஸ்மாக்கை ஒட்டியே ஒரு ஏடிஎம். RTO ஆபீஸுக்குப் பக்கத்தில் டிரைவிங் ஸ்கூல் வைப்பது போல டாஸ்மாக் பக்கத்தில் ஏடிஎம் வைத்து விடுகிறார்கள். கூட்டுக்களவாணிகள்.

அந்த ஏடிஎம்மில் இன் செய்யாத சட்டை போட்ட ஒரு செக்யூரிட்டி குடிமகன்களோடு பேசிக்கொண்டிருப்பார்கள். அதை ஒட்டியபடி செம்மஞ்சேரி வளைவு. அண்ணாநகர் ஆர்ச் மாதிரி செம்மஞ்சேரி ஆர்ச். அதற்குள்ளே லெஃப்ட் எடுத்தால் நகரம். அந்த ஆர்ச்சில் திரும்பி பஸ் ஊருக்குள் போகும். உள்ளிருந்து வெளியே வரும். நேரே மேற்கே போனால் எங்கள் நூக்காம் பாளையம், DLF கார்டன் சிட்டி (அங்கேயும் லாரியில் தண்ணீர் வாங்கி ஊற்றுவதாகச் சொல்கிறார்கள்) எல்லாம் வரும்.

சரி.. நீங்கள் என்னதான் காரில் வேகமாகப் போனாலும் டாஸ்மாக் அருகில் நின்று நிதானமாகத்தான் சென்றாக வேண்டும். சாலையில் அலைந்து கொண்டிருப்பார்கள். பைக்கில் செல்வோர் வேகம் குறைக்காமல் ஓட்டலாம். அப்படித்தான் நேற்று ஒரு பைக்-காரர் குமரன் நகரிலிருந்து மேற்கே வந்திருக்கிறார். அவரிடம் இரண்டு பையன்கள் லிஃப்ட் கேட்டிருக்கிறார்கள். இருவரும் பொடியன்கள். 10-12 வயது இருக்கும். OMR இல் எங்கோ போய் மாங்காய் பறித்து விட்டு வீட்டுக்குத் திரும்புவதற்காக பைக்கில் ஏறி வந்திருக்கிறார்கள். செம்மஞ்சேரி ஆர்ச் அருகில் பைக் (வேகமாக) வரும் போது ஒரு குடிகாரர் குறுக்கே வந்து விட்டார்.

அவர் மீது மோதாமல் இருப்பதற்காக வலப்பக்கம் பைக்கை நொடித்திருக்கிறார் இவர். கட்டுப்பாடு தவறி வண்டி கீழே விழுந்து விட்டது. இவர் பைக்குக்கு இடது பக்கம் விழுந்து விட, பையன்கள் இருவரும் வலது பக்கம் சாய்ந்து சரிந்திருக்கிறார்கள். அந்தப் பக்கம் வந்த பஸ்ஸில் சக்கரத்தில் இருவர் தலையும் ஏறித் துண்டாகி விட்டது. முகம் சுத்தமாக உருக்குலைந்து போய் யாரென்று அடையாளம் காணவே சில மணி நேரம் ஆனதாகச் சொன்னார் ஒரு பெண்மணி.

அதைக் கேட்டதிலிருந்து இன்று மதியம் வரைக்கும் ஒரே படபடப்பாக இருந்தது. சில மாதங்கள் முன்பு இதே பகுதியில் (செம்மஞ்சேரி நூக்காம்பாளையம் வழியில்) தண்ணீர் லாரியில் விழுந்து TCS ஊழியர் ஒருவர் சம்பவ இடத்திலேயே இறந்தார். தினந்தோறும் கடந்து செல்லும் பாதையில் மரணம் நேர்ந்த இடம் எப்போதும் மனதைப் பிசைந்து கொண்டே இருக்கும். இப்போது செம்மஞ்சேரி ஆர்ச்சைப் பார்த்தால் அந்தச் சிறுவர்களின் நினைவே துரத்தும்.

இதற்கு யாரைக் குற்றம் சொல்வதென்று தெரியவில்லை. குடித்து விட்டு சாலையில் குறுக்கே வந்தவரையா? ஆள் நடமாட்டம் இருக்குமென்று தெரிந்தும் பைக்கில் வேகமாக வந்தவரையா? நிதானமாக ஓட்டத் தவறிய பஸ் டிரைவரையா? அல்லது விளிம்பு நிலை மக்களின் தினசரி வருமானத்தில் பெரும்பகுதியை தினமும் லவட்டுவதற்காக அங்கே டாஸ்மாக் வைத்து நடத்தும் அரசாங்கத்தையா? தெரியவில்லை.

நேற்று வெகு நேரம் பேருந்து அனுமதிக்கப்படவில்லை. டாஸ்மாக்கை மூடச் சொல்லி போராட்டங்கள். அம்மா அவர்களே, செய்வீர்களா? செய்வீர்களா?

Friday, April 04, 2014

சாருஹாசன் to ச.தமிழ்ச்செல்வன்

கொஞ்ச நாட்களுக்கு முன்னர் ஒரு சர்ச்சை ஓடியது. எழுத்தாளர் எஸ்.ராமகிருஷ்ணன் தேர்ந்தெடுத்த 100 சிறுகதைகள் புத்தக வடிவில் வந்தது. அந்தக் கதைகளையெல்லாம் தேடிப் பிடித்து அச்சில் ஏற்றியவரைப் பற்றி ஒரு வார்த்தை கூடச் சொல்லாமல் அவற்றைப் பிரசுரித்த விஷயமாக உருவான சர்ச்சை.யாரோ ஒருவர் அந்த நூறு கதைகளை PDF வடிவில் கூட இணைய வெளியில் உலவ விட்டதாகத் தகவல். அந்தச் சர்ச்சை ஒரு பக்கம் கிடக்கட்டும். ஸாரி இருக்கட்டும்.

அந்த நூறு கதைகளை சமீபத்தில் வாசிக்கும் பேறு பெற்றேன். ‘கடவுளும் கந்தசாமிப் பிள்ளையும்’ கதையை எத்தனை தடவை வாசித்தாலும் மலைப்பாக இருக்கிறது. அருமை. புதுமைப்பித்தன் வெறும் 42 வயதில் இறந்து போனார். இப்போது ஃபேஸ்புக்கில் கலக்கும் கமல்ஹாசனின் அண்ணன் சாருஹாசன் மாதிரி அவரும் எண்பதைக் கடந்து வாழ்ந்திருந்தால் எழுத்துலகில் என்னென்ன சாதித்துப் போயிருப்பாரோ! ஏறத்தாழ எழுபது வருடம் முன் எழுதப்பட்டதாக இருக்க வேண்டும் அது. இப்போதும் ஃபிரஷ்ஷாக இருக்கிறது.

1930கள் மற்றும் 40 களில் எழுத்துத் தமிழ் எப்படியிருந்திருக்கும் என்ற கற்பனையின் ஊடாகவே நாம் புதுமைப் பித்தனை வாசிக்க வேண்டும். அப்போதுதான் அவர் செய்தது எப்பேர்ப்பட்ட கலகம் என்பது விளங்கும். எப்பேர்ப்பட்ட எழுத்துப் புரட்சி அல்லது புதுமை என்பது புரியும். அவரது நடையில் அத்தனை துள்ளல். சுஜாதா கூட ஒரு நாவலில் சொல்லியிருப்பார். அவரது துப்பறியும் நாயகர்கள் கணேஷ் & வசந்த் பேச்க்கொள்வார்கள். வசந்த் சொல்வான்: “பாஸ் அவ நடையைப் பாருங்க பாஸ். புதுமைப் பித்தன் நடை தோத்துச்சு போங்க” என்று.

தான் வாழ்ந்த காலத்தில் கடைபிடிக்கப்படும் வழமைகளைப் பின்னுக்குத் தள்ளி விட்டு புதிய பாதையைப் படைத்ததில் புதுமைப்பித்தனுக்கு முக்கிய இடமுண்டு. இலக்கியத்தின் போக்கில் ஏதேனும் மாற்றங்களை சிலர் செய்தவண்ணமேயிருக்கிறார்கள். ஜெயகாந்தன் அதிர்வுகளை உண்டாக்கினார். சுஜாதா எழுத்து & வாசிப்பு இரண்டின் போக்கினையே மாற்றினார். ஆனால் எஸ்.ராமகிருஷ்ணன் புதுமைப்பித்தன் கதையைச் சேர்க்காமல் நூறு கதைகளைத் தொகுத்திருந்தால் அது வரலாற்றுப் பிழையாகப் போயிருக்கும்.

ஆங்.. எதையோ சொல்ல நினைத்து எங்கோ போய் விட்டேன். சின்ன வயதுக் காதல். பள்ளிக் கூடத்துக் காதல். இதெல்லாம் நினைக்க நினைக்க இன்பம் தருவது. ஏழாவது படிக்கையில் சைட் அடித்த பெண்ணை இப்போது பார்க்க கருவாடு போலத் தெரிந்தாலும் தனிமையில் நினைத்துப் பார்க்க மனது சிலிர்க்கும். பெண்களுக்கும் அப்படித்தான் இருக்க வேண்டும். அப்படியொரு கதையையும் அந்த நூறு கதைகளில் காண நேர்ந்தது.

ஒரு பெண். முறைப் பையனை ஆசை ஆசையாகக் காதலிக்கிறான். அவன் மாமன் மகன். அவனுக்கும் ஆசை இல்லாமலில்லை. ஆனால் எதோ காரணத்துக்காக பணக்காரப் பெண்ணைத் திருமணம் செய்துகொள்கிறான். இவளுக்கும் வேறு இடத்தில் திருமணமாகிறது. சில காலம் கழித்து ஊர்த்திருவிழாவுக்கு அவன் வருகிறான், மனைவியோடு. ஆசை ஆசையாக ஓடிச் சென்று பார்க்கிறாள். அழகான, நாகரீகமான மச்சானின் மனைவி.

அவளது விரலை ஆசையாகச் சொடுக்கிக்கொண்டே, “யக்கா ..மாசமாயிருக்கீகளா?” என்கிறாள். அதற்கு அவள், ”அது ஒன்னுக்குத்தான் கேடு இப்பம்” என வெறுப்போடு கேட்கிறாள். சந்தோசமாக மச்சான் வாழ்வதாக நினைத்தவளுக்கு அழுகை வர பின்னால் பொடக்காலிக்குப் போய் ஏதோ ஏனத்தை எடுத்துக் கழுவத் துவங்கி விடுகிறாள். அப்போது பார்த்து மச்சான் வந்து மனைவியிடம், ”காப்பி குடிச்சிட்டியா ஜானு?” என பிரியமாகக் கேட்டது படக்குனு அந்த அக்கா ”ஆஹாகாகா .. ரொம்பவும் அக்கறைப் பட்டு குப்புற விழுந்துறாதீக” என்று சொல்லி விட்டது.

மிக மெதுவான குரலில் பேசினாலும் அந்தக் குரல் இறுகிப் போய் வெறுப்பில் வெந்து கொதிக்கிறதாய் இருந்தது. இவளுக்கு ஒரே அழுகை. வீட்டுக்கு வந்து அழுகிறாள். ஆத்தாளும், அண்ணனும் கேட்க மண்டை வலி என்று சொல்லிவிட்டாள். அந்த அக்காள் கொடும் வெறுப்பாகப் பேசியது நினைப்பில் வந்து இம்சிக்கிறது.


இதை எங்கோ கேட்டது போலிருக்கிறதா? சசி இயக்கிய “பூ” படத்தில் வரும் ’மாரி’ தான் ’வெயிலோடு போய்’ என்ற தலைப்பில் ச. தமிழ்ச்செல்வன் எழுதி கதையின் நாயகியான மாரியம்மாள். நூறு கதைகளில் இதுவும் இருக்கிறது.

இவர் இராணுவத்தில் பணியாற்றி ஓய்வு பெற்றவர். தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் சங்கத்தில் தீவிரமாகச் செயல்படும் நபர். தமிழ்ச்செல்வன் மாதிரியான ஆட்கள் நிறைய எழுத வேண்டுமென ஆசையாக இருக்கிறது. அதைப் போல நிறையப் பேரால் வாசிக்கப்படவும் வேண்டும் !