Friday, April 04, 2014

சாருஹாசன் to ச.தமிழ்ச்செல்வன்

கொஞ்ச நாட்களுக்கு முன்னர் ஒரு சர்ச்சை ஓடியது. எழுத்தாளர் எஸ்.ராமகிருஷ்ணன் தேர்ந்தெடுத்த 100 சிறுகதைகள் புத்தக வடிவில் வந்தது. அந்தக் கதைகளையெல்லாம் தேடிப் பிடித்து அச்சில் ஏற்றியவரைப் பற்றி ஒரு வார்த்தை கூடச் சொல்லாமல் அவற்றைப் பிரசுரித்த விஷயமாக உருவான சர்ச்சை.யாரோ ஒருவர் அந்த நூறு கதைகளை PDF வடிவில் கூட இணைய வெளியில் உலவ விட்டதாகத் தகவல். அந்தச் சர்ச்சை ஒரு பக்கம் கிடக்கட்டும். ஸாரி இருக்கட்டும்.

அந்த நூறு கதைகளை சமீபத்தில் வாசிக்கும் பேறு பெற்றேன். ‘கடவுளும் கந்தசாமிப் பிள்ளையும்’ கதையை எத்தனை தடவை வாசித்தாலும் மலைப்பாக இருக்கிறது. அருமை. புதுமைப்பித்தன் வெறும் 42 வயதில் இறந்து போனார். இப்போது ஃபேஸ்புக்கில் கலக்கும் கமல்ஹாசனின் அண்ணன் சாருஹாசன் மாதிரி அவரும் எண்பதைக் கடந்து வாழ்ந்திருந்தால் எழுத்துலகில் என்னென்ன சாதித்துப் போயிருப்பாரோ! ஏறத்தாழ எழுபது வருடம் முன் எழுதப்பட்டதாக இருக்க வேண்டும் அது. இப்போதும் ஃபிரஷ்ஷாக இருக்கிறது.

1930கள் மற்றும் 40 களில் எழுத்துத் தமிழ் எப்படியிருந்திருக்கும் என்ற கற்பனையின் ஊடாகவே நாம் புதுமைப் பித்தனை வாசிக்க வேண்டும். அப்போதுதான் அவர் செய்தது எப்பேர்ப்பட்ட கலகம் என்பது விளங்கும். எப்பேர்ப்பட்ட எழுத்துப் புரட்சி அல்லது புதுமை என்பது புரியும். அவரது நடையில் அத்தனை துள்ளல். சுஜாதா கூட ஒரு நாவலில் சொல்லியிருப்பார். அவரது துப்பறியும் நாயகர்கள் கணேஷ் & வசந்த் பேச்க்கொள்வார்கள். வசந்த் சொல்வான்: “பாஸ் அவ நடையைப் பாருங்க பாஸ். புதுமைப் பித்தன் நடை தோத்துச்சு போங்க” என்று.

தான் வாழ்ந்த காலத்தில் கடைபிடிக்கப்படும் வழமைகளைப் பின்னுக்குத் தள்ளி விட்டு புதிய பாதையைப் படைத்ததில் புதுமைப்பித்தனுக்கு முக்கிய இடமுண்டு. இலக்கியத்தின் போக்கில் ஏதேனும் மாற்றங்களை சிலர் செய்தவண்ணமேயிருக்கிறார்கள். ஜெயகாந்தன் அதிர்வுகளை உண்டாக்கினார். சுஜாதா எழுத்து & வாசிப்பு இரண்டின் போக்கினையே மாற்றினார். ஆனால் எஸ்.ராமகிருஷ்ணன் புதுமைப்பித்தன் கதையைச் சேர்க்காமல் நூறு கதைகளைத் தொகுத்திருந்தால் அது வரலாற்றுப் பிழையாகப் போயிருக்கும்.

ஆங்.. எதையோ சொல்ல நினைத்து எங்கோ போய் விட்டேன். சின்ன வயதுக் காதல். பள்ளிக் கூடத்துக் காதல். இதெல்லாம் நினைக்க நினைக்க இன்பம் தருவது. ஏழாவது படிக்கையில் சைட் அடித்த பெண்ணை இப்போது பார்க்க கருவாடு போலத் தெரிந்தாலும் தனிமையில் நினைத்துப் பார்க்க மனது சிலிர்க்கும். பெண்களுக்கும் அப்படித்தான் இருக்க வேண்டும். அப்படியொரு கதையையும் அந்த நூறு கதைகளில் காண நேர்ந்தது.

ஒரு பெண். முறைப் பையனை ஆசை ஆசையாகக் காதலிக்கிறான். அவன் மாமன் மகன். அவனுக்கும் ஆசை இல்லாமலில்லை. ஆனால் எதோ காரணத்துக்காக பணக்காரப் பெண்ணைத் திருமணம் செய்துகொள்கிறான். இவளுக்கும் வேறு இடத்தில் திருமணமாகிறது. சில காலம் கழித்து ஊர்த்திருவிழாவுக்கு அவன் வருகிறான், மனைவியோடு. ஆசை ஆசையாக ஓடிச் சென்று பார்க்கிறாள். அழகான, நாகரீகமான மச்சானின் மனைவி.

அவளது விரலை ஆசையாகச் சொடுக்கிக்கொண்டே, “யக்கா ..மாசமாயிருக்கீகளா?” என்கிறாள். அதற்கு அவள், ”அது ஒன்னுக்குத்தான் கேடு இப்பம்” என வெறுப்போடு கேட்கிறாள். சந்தோசமாக மச்சான் வாழ்வதாக நினைத்தவளுக்கு அழுகை வர பின்னால் பொடக்காலிக்குப் போய் ஏதோ ஏனத்தை எடுத்துக் கழுவத் துவங்கி விடுகிறாள். அப்போது பார்த்து மச்சான் வந்து மனைவியிடம், ”காப்பி குடிச்சிட்டியா ஜானு?” என பிரியமாகக் கேட்டது படக்குனு அந்த அக்கா ”ஆஹாகாகா .. ரொம்பவும் அக்கறைப் பட்டு குப்புற விழுந்துறாதீக” என்று சொல்லி விட்டது.

மிக மெதுவான குரலில் பேசினாலும் அந்தக் குரல் இறுகிப் போய் வெறுப்பில் வெந்து கொதிக்கிறதாய் இருந்தது. இவளுக்கு ஒரே அழுகை. வீட்டுக்கு வந்து அழுகிறாள். ஆத்தாளும், அண்ணனும் கேட்க மண்டை வலி என்று சொல்லிவிட்டாள். அந்த அக்காள் கொடும் வெறுப்பாகப் பேசியது நினைப்பில் வந்து இம்சிக்கிறது.


இதை எங்கோ கேட்டது போலிருக்கிறதா? சசி இயக்கிய “பூ” படத்தில் வரும் ’மாரி’ தான் ’வெயிலோடு போய்’ என்ற தலைப்பில் ச. தமிழ்ச்செல்வன் எழுதி கதையின் நாயகியான மாரியம்மாள். நூறு கதைகளில் இதுவும் இருக்கிறது.

இவர் இராணுவத்தில் பணியாற்றி ஓய்வு பெற்றவர். தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் சங்கத்தில் தீவிரமாகச் செயல்படும் நபர். தமிழ்ச்செல்வன் மாதிரியான ஆட்கள் நிறைய எழுத வேண்டுமென ஆசையாக இருக்கிறது. அதைப் போல நிறையப் பேரால் வாசிக்கப்படவும் வேண்டும் !

1 comment:

நா.முத்துநிலவன் said...

ச.தமிழ்ச்செல்வனின் நெல்லுச்சோறு தொகுப்பு (நெல்லை எழுத்தாளர்களின் கதைகள்), பின்னர் வெயிலேர்டு போய், வாளின் தனிமை. மற்றும் திலகவதி தொகுத்த முத்துக்கள் பத்து தொகுப்பில் வந்த தமிழின் கதைகள் அவசியம் படியுங்கள் நண்பரே. தனித்துவமான மனித மனஓட்டங்களை சமூக எதார்த்தத்துடன் அழகாகச் சொல்வார். நானும் அவரது எழுத்தைப் பற்றிப் பெருமையாக எழுதியிருக்கிறேன் . நேரமிருக்கும்போது பார்கக -http://valarumkavithai.blogspot.in/2013/10/blog-post.html நன்றி.