மே 1 ஆம் தேதி இரவு ஊருக்குப் போக ரயிலில்
டிக்கெட் போட்டிருந்தேன். அன்று காலை சென்ட்ரலில் குண்டு வெடித்துத் தொலைத்ததால் வீட்டில்
அனுமதி கிடைக்கவில்லை. வேண்டுமானால் காரில் போகச் சொல்லி உத்தரவு. ரயில் பயணத்தை விட
ஆபத்து நிறைந்தது சாலைப் பயணம் என்பதையெல்லாம் விளக்க முடியாது. ஒரு ஆளுக்காக காரில்
பயணிப்பது ஆடம்பரம் தான். சில நேரங்களில் தவிர்க்க இயலாமல் போகிறது.
ஊருக்குச் சென்று
வர, அங்கே சுற்றித் திரிய என 4100 ரூபாய் பெட்ரோல் காலி. ரயிலில் 210 +210 = 420 ரூபாயோடு
முடிந்திருக்கும். சுங்கச் சாலைகளுக்கு அழுவதற்கே அதை விடக் கூடுதலாக ஆகும் போல. இப்போது
திருச்சிக்கும், கரூருக்கும் இடையே இரண்டு டோல்கேட் போட்டிருக்கிறார்கள். பெரம்பலூரிலிருந்து
மேற்கே திரும்பியிருந்தால் திருச்சியைத் தவிர்த்திருக்கலாம். குளித்தலையில் காவிரியைக்
கடந்து மேற்கே பயணித்திருக்கலாம். இரண்டு டோல், 35 கிலோ மீட்டர் மிச்சமாகியிருக்கும்.
எது எப்படியோ, செஃல்ப்
டிரைவிங் செய்வதை விட ரயில் ஆபத்தானதல்ல. இன்னொரு முறை குண்டே வெடித்தாலும் ரயிலில்
சென்று பார்த்து விட வேண்டும். ஒரே ஆறுதல், நினைத்த இடத்துக்கு டக்கென்று சென்று வர
முடிந்தது. இல்லையென்றால் கொளுத்தும் வெயிலில் வாய்ப்பாடி போயிருக்க வாய்ப்பில்லை.
அண்ணண் வா.மு.கோமுவை திருப்பூரிலிருந்து அழைக்கும் போது மேட்டுக்கடையிலிருந்து கிழக்கே
வருமாறு வழி சொன்னார். வரும் வழியில் ஒரு பெட்டிக் கடையில் ராணி முத்து வாங்கீட்டு
வாங்க என்றார். அதன் பின்னட்டையில் அவர் போட்டோ போட்டிருந்தார்கள்.
என்ன ஊரடா அது?
ஓணான் கூட முட்டையிடாது என்று நினைக்கிறேன். அத்தனை சூடு. நான் காலையில் கிளம்பும்
போது காகங்களை விட மயில்களை அதிகமாகக் கடந்து வந்தேன். ஆனால் வாய்ப்பாடியில் காகங்களைக்
கூடக் காணோம். வாய்ப்பாடியை நெருங்க நெருங்க எலும்பாகக் காய்ந்து போன கருவேல மரங்கள்
திகிலூட்டும் வகையில் மிரட்டின. எத்தகைய வறட்சியையும் தாங்கும் சீமைக் கருவேல மரங்களே
காய்ந்து நின்றன.
விஜயமங்கலம் RS
என்பதும், வாய்ப்பாடி என்பதும் ஒன்றே. விஜயமங்கலத்துக்குத் தெற்கே ஆறு கிலோ மீட்டர்
தொலைவில் சென்னிமலை ரோட்டில் உள்ள கிராமம். வா.மு.கோமுவின் படைப்புகளில் தவிர்க்க முடியாத
இந்த ரயிலடியைத் தவிர இங்கே என்ன இருக்கிறது? கோமு வீட்டு மொட்டை மாடியில் உள்ளது அவரது
ஆஃபீஸ் ரூம். அதன் சூடு சொல்லி மாளாது. ஆர்.சண்முகசுந்தரம் படைப்புகளில் வரும் பாத்திரங்கள்
இளநீர் போட்டுக் குடித்துக் கொண்டு வாழ்க்கையை அனுபவித்துக் களித்ததாகச் சொன்னார்.
“இப்ப அதெல்லாம் நெனைச்சுப் பாத்துக்க வேண்டியது தானுங்க” என்றார். எங்கூர்ல தென்னந்தோப்பு,
மயில் எல்லாம் நெறைய இருக்குதுங்கன்னு சொல்லப் பயமாக இருந்தது.
அதுவும் காய்ந்து
கொண்டிருக்கிறது. வலியவன், எளியவன் என அனைவரும் வானத்தை நோக்கி இறைஞ்சிக் கொண்டிருக்கிறார்கள்.
இன்னும் இரண்டு மாதங்கள் மழையில்லாமல் போனால் தென்னந்தோப்புகள் காய்ந்து போகும். வாய்ப்பாடி
போல ஆத்துக்கால் பண்ணையங்களே மாறிப் போகும். வருடம் எப்படியும் ஆறு மாதம் தண்ணீர் பாயும்
அமராவதியில் போன வருடம் ஒரே மாதம் தண்ணீர் ஓடியது. இந்த வருடம் அதுவாவது வருமா என்று
சந்தேகமாக உள்ளது.
காவிரியில் தண்ணீர்
வரவில்லை. கர்நாடகா தரவில்லை என்றெல்லாம் பேசும் நாம் காவிரி பாயாத இடங்களில் ஏன் வறட்சி
என நினைத்துப் பார்க்க வேண்டும். பருவநிலை தாறுமாறாக மாறிக் கிடக்கிறது. சீராக மழை
பெய்வதில்லை. கீழே சிந்தும் ஒவ்வொரு துளி நீரையும் சேமித்து வைத்துப் பழக வேண்டும்.
ஒரு சொட்டுக் கூட கடலுக்குச் செல்ல அனுமதிக்கக் கூடாது. லோக்கல் வாட்டர் மேனேஜ்மெண்ட்
இன்றைய தேவை. ஏரிகளும், குட்டைகளும் உருவாக வேண்டும். ஏற்கனவே உள்ளவற்றைப் பேண வேண்டும்.
யார் செய்வது? நூறு நாள் வேலைத் திட்டங்கள் இதைச் செய்கின்றவா தெரியவில்லை.
கோமுவின் ஆஃபீஸ் ரூமில் ஒரு பாட்டில் தண்ணீர் கொடுத்தார்.
சூடாகத்தான் இருந்தது. சிறிது நேரம் கழித்து வடக்கே விஜயமங்கலம் போய் MRP ஐ விட அதிக
விலைக்கு விற்கும் கூலிங் சர்பத் குடித்தோம். அதன் பிறகு அண்ணன் வீட்டில் அருமையான
சாப்பாடு. கேமரா எடுத்துப் போக மறந்து விட்டேன். கோமுவின் வாரிசு மொபைலில் பிடித்துக்
கொடுத்தான். அண்ணன் என்னை விட உயரமாக இருப்பதன் பின்னணியிலுள்ள கேமிரா ட்ரிக் என்னவென்று
அந்தப் பயலைக் கேட்க வேண்டும்.
சார் போட்டுப் பேசாத இலக்கியவாதி வா.மு.கோமு. சென்னைக்கு
வெளியே இருப்பதால் வேறு ஒரு உலகத்தை படைப்புகளில் வெளிப்பத்தும் கோமு அவரது பாத்திரங்களைப்
போலவே இருக்கிறார். பேசுகிறார். இலக்கியம் என்பது தன்னைச் சுற்றிய வாழ்க்கையைப் பதிவு
செய்யும் பணி என்பது புரிந்தது. கண்ணாடியைப் போல தன்னைச் சுற்றிய வாழ்வைப் பிரதிபலிக்கிறார்
அவர்.
அடுத்த முறை பார்க்கும் போது கேமிரா எடுத்துச் செல்ல வேண்டும்.
முடிந்தால் கொஞ்சம் இலக்கியமும் பேச வேண்டும். ஆனால் கூலிங் சர்பத்தை எக்காரணம் கொண்டு
தவற விடக் கூடாது. இல்லையேல் சென்னிமலை தெற்கே போவதற்குள் சூடு பிடித்துக் கொள்ளும்.