Tuesday, June 24, 2014

யார் அந்த ஓட்டல்கார எழுத்தாளர்?

கடைசியாக இங்கே பதிவிட்டது மே முதல் வாரத்தில். வா.மு.கோமுவைச் சந்தித்த பிறகு அந்தப் பதிவைப் போட்டிருந்தேன்.

அதன் பிறகு நாட்டில் எத்தனையோ நடந்து விட்டது. அப்போது மோடி பிரதமர் ஆகியிருக்கவில்லை. அவர் பதவியேற்ற போது பாகிஸ்தான் பிரதமரும், இலங்கை அதிபரும் வருவார்கள் என யாரும் நினைக்கவில்லை. உலகத்தில் எத்தனையோ நடந்து விட்டது. இந்தியை மறுபடியும் திணிக்க மோடி முயல்வது தொடங்கி ஜெயமோகன் பெண்கள் மூலம் விளம்பரம் தேடுவது உள்ளிட ‘வித் யூ வித் அவுட் யூ’ படத்தில் இயக்குனர் ‘அய்யய்யோ கொல்றாங்க’ என விளம்பரம் தேடுவது வரைக்கும் நாட்டில் என்னென்னவோ நடந்து விட்டது.

ஆகவே நண்பர்களே.. ஏக் காவ் மே ஏக் கிசான் ரகுத் தாத்தா..

சென்ற வருடம் வெளியான ‘இரவல் காதலி’ நாவலை வாசித்து விட்டு நேரடித் தமிழ் நாவல் ஒன்றை, கொங்கு மண்டலத்தினைப் பின்னணியாகக் கொண்டு எழுதுமாறு என்னை முதலில் தூண்டிய சைதை புகழேந்தி அவர்களுக்கு நன்றி சொல்லியாக வேண்டும். சில மாதங்களுக்கு முன்னர் எழுத்தாளர் என்.ஸ்ரீராம் கூட அதையே வலியுறுத்தி ஊக்குவித்தார். ஆனால் அப்போதெல்லாம் ஆகஸ்ட் 1 ஆம் தேதி ஈரோடு புத்தகக் கண்காட்சிக்குள் அப்படியான படைப்பு ஒன்றை உருவாக்குவேன் என நினைக்கவில்லை.

மே முதல் வாரம் கொளுத்தும் வெப்ப நாளின் மதிய நேரத்தில் வா.மு.கோமுவை அவரது வாசக சிகாமணியாக அவரது வீட்டில் சந்தித்த போது என்னையும் வைத்துக்கொண்டு, ”நடுகல் பதிப்பக வேலையாக வந்தவர் அவருடைய நாவலைக் கொண்டு வந்தார்“ என விளையாட்டாக ஒரு ஃபேஸ்புக்கில் ஒரு ஸ்டேட்டஸ் போட்டார். ”வேண்டாமுங்கோ வேண்டாமுங்கோ” என்று சொல்லச் சொல்லக் கேட்கவில்லை. நான் என்ன ஆயுதம் தூக்க வேண்டுமென்பதை எதிரிகளே தீர்மானிக்கிறார்கள் என்பது போல இந்த நாவலுக்கான துவக்கத்தை கோமு தீர்மானித்தார் என்றுதான் சொல்ல வேண்டும். அவரது நம்பிக்கையே இதைச் சாத்தியமாகியிருக்கிறது.

குருத்தோலை!

இதுதான் நாவலில் தலைப்பு. கிராமிய மணம் கமழும் ஒரு முழுமையான நாவல். காதல், காமம், துரோகம், தியாகம், சாதி, தொன்மம் என எல்லாம் விரவிக் கிடக்கிறது. தஞ்சை பிரகாஷின் ‘கள்ளம்’ நாவலும், கோமுவின் நாவலும் வெளியாகும் அதே சமயத்தில் செல்லமுத்து குப்புசாமியின் குருத்தோலை நாவலும் வெளியாவதில் எனக்கு எக்கச்சக்க பெருமை J

பிறகு குருத்தோலைக்கும் கிறிஸ்துவத்துக்கும் தொடர்பிருக்கிறது. ஏசு உயிர்த்தெழுந்து ஈஸ்டர் திருநாளுக்கு முந்தை ஞாயிறு குருத்தோலை ஞாயிறு எனப்படுகிறது. அன்று ஏசு ஜெருசலேம் திரும்பி வருகிறார். மக்கள் குருத்தோலையை வைத்துக் கொண்டாடி அவரை வரவேற்கிறார்கள். அடுத்த 5 நாளில், வெள்ளிகிழமையன்று, அவர் சிலுவையில் அறையப்படுகிறார். மூன்றாம் நாள் ஈஸ்டர் ஞாயிறன்று உயிர்த்தெழுகிறார்.

குருத்தோலை நாவலுக்கும், குருத்தோலை ஞாயிறுக்கும் தொடர்பில்லை. இதில் சிக்கலும், சர்ச்சையும் இல்லை.

இந்த நாவலுக்காக கவனத்தில் கொள்ளப்பட்ட வேறு சில தலைப்புகள்.
  • கருப்பட்டிக் காப்பி
  • பழனாத்தா கெழவியும் பருப்பு வடையும்
  • அத்தை மகள் பாப்பி
  • கொறங்காடு
  • எருத்துப் புண்ணும் கொத்தும் காகங்களும்    
  • கம்மங்காடு
ஆங்… இன்னொரு விஷயம். எழுத்தாளர்கள் ஸ்ரீராம் மற்றும் கோமு பற்றிச் சொன்னேன். இங்கே பெயர் சொல்லாத இன்னொரு எழுத்தாளைரைப் பற்றி கதையில் வருகிறது.

//“ஏவாரம் எல்லாம் பரவால்லையா? செம்புலிக் குட்டி கெராக்கியாட்ட இருக்குதப்பா?” என நாட்டராயன் கேட்டார்.

”அதை ஏங்கேக்கறீங்க சாமி? நல்ல வெலைன்னு நெனைச்சு வாங்கீட்டுப் போனா அங்கே சந்தையில கேக்க ஒரு ஏவாரி வாரதில்லை. என்னமோ கண்டையா காணையான்னு இருக்குதுங்க. அலைஞ்சு திரிஞ்சு கடைசீல பாத்தா கன்னிவாடி சிவக்குமார் ஓட்டல்ல புரோட்டா திங்கறதுக்குத்தான் ஆகுது போங்க.”//


அந்த ஓட்டலின் உரிமையாளர் ஒரு எழுத்தாளர்.  அது யாரென்று கண்டுபிடித்துச் சொல்லும் முதல் ஐந்து பேருக்கு நாவலின் விலையில்லாப் பிரதியை பதிப்பாளர்கள் வழங்குவார்கள். 

5 comments:

Jaikumar said...

க. சீ. சிவகுமார்

Anonymous said...

க.சீ. சிவக்குமார். அட்ட்டேங்கப்பா.... நெம்ப செரமாமாப்போச்சு.

Thamizh VS said...

K. C. Sivakumar

Sud Gopal said...

Kannivaadi Seerangarayan Sivakumar

Sud Gopal said...

Ka.See.Sivakumar