Thursday, July 31, 2014

ஷேர் மார்க்கெட் புத்தகம் - இழக்காதே - அணிந்துரை

ஒவ்வொரு மனிதனுக்கும் மனதுக்கு நெருக்கமான விஷயம் இருக்கும். எனக்கு ‘இழக்காதே’புத்தகம்.

இன்று முதல் உலகமெங்கும் ஆன்லைனில்

மற்றும் நாளை ஆகஸ்ட் 1 ஆம் தேதி ஈரோடு புத்தகக் கண்காட்சியில்..

இதற்கு சென்னை பங்குச் சந்தையின் இயக்குனர் திரு.நாகப்பன் எழுதிய அணிந்துரை:

“Any intelligent fool can make things bigger, more complex, and more violent. It takes a touch of genius — and a lot of courage to move in the opposite direction.”
― E.F. Schumacher, British Economist & Statistician.
பங்குச் சந்தைகளின் உலகம் பரவமூட்டும் ஒரு விஷயம். அதே அளவுக்கு சிக்கலானதும் கூட. அதை மேலும் சிக்கலாக்கும் எந்தவொரு intelligent  fool ஐயும் விட செல்லமுத்து குப்புசாமி touch of genius உடன் இந்தப் புத்தகத்தை எழுதுவதற்கான கூடுதல் தகுதி படைத்தவராகிறார் எங்கோ உச்சாணியில் அமர்ந்து கொண்டு காற்றில் வரைபடம் போடுவதற்குப் பதிலாக பகுத்தறியும் நோக்கில் பங்குச் சந்தையை அணுகும் சூட்சுமம் அவருக்குக் கைவருகிறது.

பங்கு முதலீடு குறித்து பிலாக்கில் எழுதுகிறவர் - இப்படித்தான் செல்லமுத்து குப்புசாமியை நான் ஆரம்ப நாட்களில் அறிந்திருந்தேன். அவற்றில் சிலவற்றை வாசித்த போது அவற்றோடு லயித்துப் போனேன். அப்போது இவர் மென்பொருள் துறையைச் சார்ந்தவர் என நான் கனவிலும் நினைக்கவில்லை. பாரம்பரியம் மிக்க சென்னை பங்குச் சந்தையில் நடக்கும் மாதாந்திர முதலீட்டாளர் விழிப்புணர்வுக் கூட்டமொன்றில் உரையாற்ற அவரை அழைத்த சமயத்தில்தான் எனக்கே அது தெரிந்தது. பார்வையாளர்களுக்கு அவரை அறிமுகப்படுத்தும் போது உண்மையிலேயே நான் ஆச்சரியமடைந்தேன். ஒரு technology geek எப்படி பங்குச் சந்தையில் ஆர்வமடைந்தார் என்ற வியப்பையெல்லாம் பின்னுக்குத் தள்ளி, பார்வையாளர்களை தன் உரையில் வசப்படுத்தினார்.

நான் ஆச்சரியமடைந்ததற்குக் காரணம் இல்லாமலில்லை. ஐடி துறை இன்றைய இளைய தலைமுறையினரிடத்தில் செலவு செய்வதற்குக் கணிசமான உபரிப் பணத்தை அளித்திருக்கிறது. அந்த உபரியை சிக்கனமாகச் சேமிப்பது குறித்தும், புத்திசாலித்தனமாக முதலீடு செய்வது குறித்தும் அவர்கள் அறிந்திருக்க வேண்டியது கூடுதல் முக்கியத்துவம் பெறுகிறது. அது அவர்களது தனிப்பட்ட நலனுக்கும், எதிர்கால இந்தியாவின் நலனுக்கும் உகந்தது. ஆனால் முப்பத்தைந்து வயதுக்குள்ளான இந்த ஐடி துறை ஆட்களிடம் பேசிப் பாருங்கள். இன்வெஸ்ட்மெண்ட் பிளானிங் அல்லது ஃபினான்சியல் பிளானிங் பற்றிப் பேசினாலே அவர்கள் தூங்கி விடுவார்கள். அதிலும் குறிப்பாக பங்குச் சந்தை பற்றியெல்லாம் பேசினால் கேட்கவே வேண்டாம். உங்கள் ஃபிரண்ட்ஷிப்பையே கட் செய்தாலும் ஆச்சரியப்பட ஒன்றுமில்லை. அதற்காக அவர்களையும் குறை கூற இயலாது. அவர்கள் வாசிக்கின்ற மொழியில், அவர்களுக்கு இலகுவாகப் புரிகிற வகையில் மிகக் குறைவான புத்தகங்களே எழுதப்பட்டுள்ளன.

செல்லமுத்து குப்புசாமியின் இந்தப் புத்தகத்தை வாசிக்கும் போது அவர் தினசரி வாழ்வில் கடந்து வரும் மனிதர்களிடன் சந்திக்கும் இந்த நடைமுறைப் பிரச்சினையை உணர்ந்தே பங்குச் சந்தை குறித்து ஆழமாக இதை எழுதத் தீர்மானித்திருக்கிறார் எனப் புரிகிறது. ஆழமாக என்பதோடு கற்றுக்கொள்ளும் ஆர்வத்தைத் தூண்டும் நபரின் அணுகுமுறையை இதில் காண்கிறேன்.

லியானார்டோ டா வின்சி சொன்னார்: “Simplicity is the ultimate sophistication.“ இந்தப் புத்தகம் எளிமையான மொழியில் எழுதப்பட்டுள்ளது. ஏராளமான நிகழ்கால உதாரணங்கள், உபயொகமான குறிப்புகள், பயனுள்ள டிப்ஸ் முதலியவற்றை நெடுகிலும் கொட்டி வைத்திருக்கிறார். இதெல்லாம் கற்பதை சந்தோஷமானதாக ஆக்குமென்பது நிச்சயம்.

இந்தப் புத்தகத்தின் இன்னொரு சிறப்பம்சம் இது இந்தியக் கண்ணோட்டத்தோடு, இந்தியப் பங்குச் சந்தையின் உதாரணங்களோடு வந்திருப்பதுதான். அந்த மாதிரி எழுதப்பட்ட விரல் விட்டு எண்ணக் கூடிய புத்தகங்களில் முக்கியமான ஒன்றாக இது திகழும். பங்கு முதலீட்டின் போது நாம் செய்யும் வழக்கமான தவறுகள், அதில் ஜாக்கிரதையாக இருக்க வேண்டிய விஷயங்களை விளக்க சமகால நடைமுறை உதாரணங்களை அள்ளிக் கொடுத்திருக்கிறார். குழந்தையைக் கையைப் பிடித்து நடை பழக்கி விடுவது போல புத்தகம் நெடுகிலும் நம்மை அழைத்துச் செல்கிறார். திருவாளர்கள் காசப்பன், திருவாளர் சந்தை ஆகிய கற்பனைப் பாத்திரங்கள் நம்மோடு பேசுகின்றன.

ஃபண்டமெண்டல் அனாலிசிஸ், டெக்னிகல் அனாலிசிஸ் முதலிய அடிப்படையான விஷயங்களோடு பணவீக்கம், EPS, PE விகிதம், புத்தக மதிப்பு etc சங்கதிகளையும் பங்குச் சந்தையில் புழங்கும் கோட்பாடுகளையும், டெக்னிக்குகளையும் கற்றுக்கொள்ளும் கருவியாக ஸ்போர்ட்ஸ் & சயின்ஸை இவர் பயன்படுத்தியிருப்பது நம்மை வசீகரிக்கிறது. ராகுல் திராவிட் பேட்டிங் செய்வதை வைத்து முதலீட்டுக் கொள்கையை உருவாக்க முடியுமென்பதைத் தெளிவாக விளக்குகிறார். ஆனானப்பட்ட நியூட்டனே பங்குச் சந்தையில் சறுக்கினார் என்பதையும் நமக்குக் கோடி காட்டும் செல்லமுத்து குப்புசாமி அளவான எதிர்பார்ப்புகளை உருவாக்கிக் கொள்வதன் அவசியத்தை வலுயிறுத்துகிறார். ஒரு விஞ்ஞானியிடமும், கிரிக்கெட் வீரரிடமும் பங்குச் சந்தை குறித்துக் கற்க முடியுமென்று எப்போதாவது நினைத்திருக்கிறீர்களா?

இந்தப் புத்தகம் சரியான சமயத்தில் வெளிவந்திருக்கிறது. முன்னெப்போதையும் விட இன்றைக்கு மிகவும் பொருத்தமான ஆவணமாக இது திகழும். இந்திய அரசாங்கம் இரண்டாம் கட்ட பொருளாதாரச் சீர்திருத்தங்களை மேற்கொள்ளவுள்ளது. கடந்த கால நிகழ்வுகளைக் கவனிக்கும் போது இந்திய சந்தைகளின் மீது சர்வதேச முதலீட்டாளர்கள் வைத்திருக்கும் நம்பிக்கை கூடியிருக்கிறது. இந்தியப் பங்குகளில் தமது குதலீடுகளைக் குவிக்கிறார்கள். இளைய தலைமுறையைச் சேர்ந்தவர்கள் இந்த ப்ராசஸில் கலந்து கொண்டு பயனடைவது அவசியம். அதற்குரிய அவசியமான கையேடாக இந்த நூல் அமையும் என்பது நிச்சயம்.

நீண்டகால நோக்கில் அணுகினால் பணவீக்கத்தை விடக் கூடுதலாக இலாபமீட்டுவதற்கு உகந்த இடம் பங்குச் சந்தையாகும். நிரந்தர வேலைக்கான உத்தரவாதமோ, மேலை நாடுகளைப் போல சோசியல் செக்யூரிட்டோ இல்லாத நம் நாட்டில் இந்தத் தலைமுறையினர் புத்திசாலித்தனமாக முதலீடுகளை மேற்கொண்டு கணிசமான இலாபத்தை ஈட்ட வேண்டியது முக்கியம்.

தனிப்பட்ட முறையில், பர்சனல் ஃபைனான்ஸ் & முதலீட்டுத் துறையில் ஆறு புத்தகங்களையும் நூற்றுக் கணக்கான கட்டுரைகளையும் எழுதிய எனக்கே இந்தப் புத்தகத்தை வாசிப்பது சுகானுபவமாக அமைந்தது. பல விஷயங்களை மறுபடியும் கற்றுக்கொண்டது போலிருந்தது.

தினவர்த்தகம் செய்வோர், பங்குத் தரகர்கள், பங்கு ஆய்வாளர்கள், வல்லுனர்கள், பரிந்துரை செய்வோர் ஆகியோருக்காக ஓவர்லோட் ஆன தகவல்களோடு தான் பெரும்பாலான புத்தகங்கள் பொதுவாக எழுதப்படுகின்றன. இவையெல்லாம் பங்குச் சந்தையை ஆர்வத்தோடு கற்றுக்கொள்ள ஆசைப்படும் வெளியாட்களைக் குழப்புவதாகவும், சங்கடத்தில் ஆழ்த்துவதாகவும் முடிவதுண்டு. மாறாக, உங்கள் கையிலிருக்கும் இந்தப் புத்தகம் தொடர்ச்சியாகக் கற்கும் வேட்கையுள்ள ஒரு நிபுணரால் கற்றுக்கொள்ள விரும்புவோரையும், வல்லுனர்களையும் மனதில் கொண்டு எழுதப்பட்டுள்ளது. இதிலுள்ள விஷயங்களை உள்வாங்குவதன் மூலம் நீங்கள் எடுக்கும் முடிவுகள் வலுவான பங்கு முதலீட்டுக் கொள்கைக்கான அடித்தளத்தை அமைத்துக் கொடுத்து, அதன் மூலம் நிம்மதியான எதிர்காலத்துக்கும், நிதிச் சிக்கல்களிலிருந்து முழுமையான விடுதலைக்கும் வழி வகுக்கும். இன்றைக்கு தொழில்நுட்ப மேம்பாடு காரணமாக எண்ணற்ற சாத்தியங்கள் நம் முன் விரிந்து கிடக்கின்றன. வீட்டில் அமர்ந்தபடியே ஆன்லைனில் பங்குப் பரிவர்த்தனை செய்யலாம். நின்ற இடத்திலேயே மொபைலில் செய்யலாம். சட்டையை மடித்து விட்டு ரெடி ஜூட் என்று குதித்து விடுங்கள்.

வாழ்த்துக்கள்!

Tuesday, July 22, 2014

நாம் இன்னும் ஜீவித்துக்கொண்டிருக்கிறோம்

இஸ்ரேலின் செல்லப் பிள்ளை லலித் அதுலத் முதலி, “எல்லையை நாம் ஆக்கிரமிக்காவிடில் எல்லை நம்மை ஆக்கிரமிக்கும்” என்றார். ஒரு காலத்தில் இஸ்ரேலிடம் கற்ற விஷயங்களை தமிழர்கள் மீது இலங்கை பயன்படுத்தியது. இப்போது இலங்கையின் முள்ளிவாய்க்கால் ஃபார்முலாவை காஸாவில் கையாள்கிறது இஸ்ரேல்.

இந்த உலகம் கண் மூடி மெளனமாக நிற்கிறது.  உலகத்தைச் சொல்ல எந்த அருகதையும் எனக்கிருப்பதாகத் தோன்றவில்லை. இன்று நடந்த ஒரு சம்பவத்தைக் கேள்விப்பட்டால் நீங்களே ஒத்துக் கொள்வீர்கள்.

வேலை விஷயமாக பெங்களூரில் இருக்கிறேன். எனது அலுவலகத்திற்கும் ஓட்டலுக்கும் ஒரு பஸ் ஸ்டாப் தூரம். கேட்டில் நின்று ஹோட்டலுக்கு போன் செய்தால் அவர்களே பிக் செய்துகொள்வார்கள். ஆனால் வண்டி வர எப்படியும் கால் மணி நேரம் ஆகும். 

எதற்கு வம்பு? எதற்காகக் காத்திருக்க வேண்டும்? நிறைய பஸ்கள் போகின்றன. ஒரே ஸ்டாப் தானே என நினைத்து முதலில் நின்ற பஸ்ஸில் ஏறி வாஷிங்மெஷின் பில்டிங் (பெங்களூரில் வாஷிங்மெஷின் ஷேப்பில் ஒரு பெரிய சாஃப்ட்வேர் நிறுவனத்தில் பில்டிங்கை கட்டியிருக்கிறார்கள்) என்று நடத்துனரிடம் சொன்னேன்.

சில்லரை இல்லாமல் நூறு ரூபாயை நீட்டினேன்.

“எஸ்டு?”

நாம் கன்னடம் பேசினால் தமிழ் வந்து விடும். “ஜஸ்ட் ஒன்” என்றேன்.

நூறு ரூபாயை வாங்கியவர், ப்ச்ச் என்று சலித்துக் கொண்டு, “சேஞ்ச் இல்வா?” என்று கேட்டார்.

இல்லையென்றதும், பணத்தை வாங்கிக் கொண்டு மற்றவர்களுக்கு டிக்கெட் கொடுக்கப் போய் விட்டார்.

திரும்பி வந்து ஒன்பது பத்து ரூபாய் தாள்களைக் கொடுக்கும் போது வாஷிங்மெஷின் பில்டிங் வந்து விட்டது. திட்டாமல் சில்லரை கொடுத்ததற்கு சந்தோசப்பட்டேன்.

ஆனால் “டிக்கெட்?”

அவர் கொடுக்கவே இல்லை. செக்கிங் இன்ஸ்பெக்டர் இல்லையென்றால் பணத்தை வாங்கிக் கொண்டு டிக்கெட் கொடுக்க மாட்டார்களாம். பெங்களூரில் இப்படி அடிக்கடி நடக்குமா தெரியவில்லை. ஆனால் என்னை தெளிவாக ஏமாற்றுகிறார்.

எதிர்த்துக் கேள்வி கேட்க முடியவில்லை. இதே சென்னையாக இருந்தால் பொங்கியிருப்பேன். வெளியூர்.. கன்னடத்தில் சண்டை போட திராணியில்லை. ஆங்கிலமும் அந்நியமாகத் தோன்றும். தமிழில் சரளமாகக் கேட்கலாம். டிக்கெட் கேட்டதை விட தமிழில் கேட்டத்தற்கு அடி விழுந்தால்…? பேசாமல் தொன்னூறு ரூபாயை வாங்கிக் கொண்டு இறங்கி விட்டேன்.

நம் கண் முன்னால் நடக்கும் இம்மாதிரி அநியாயங்களுக்கு அந்நியனாகப் பொங்கி எழ முடியாமல் மிடுக்காக வலம் வந்து கொண்டிருக்கிறோம். பிறகெங்கே இஸ்ரேலைக் கண்டிப்பது? அடுத்த சமரசத்தைத் தேடி ஓட வேண்டியதுதான்!

பிரபல இலங்கைப் பத்திரிக்கையாளர் லசந்த விக்ரமதுங்கே ராஜபக்சே அரசால் கொலை செய்யப்படுவதற்கு முன்னர், தான் எதற்காக தமிழர்கள் மீதான கோரமான போரைக் கண்டிக்கிறார் என்பதற்கு ஒரு விளக்கம் கொடுத்தார். அதை அவரது வார்த்தைகளில்:

But if we do not speak out now, there will be no one left to speak for those who cannot, whether they be ethnic minorities, the disadvantaged or the persecuted. An example that has inspired me throughout my career in journalism has been that of the German theologian, Martin Niem”ller. In his youth he was an anti-Semite and an admirer of  Hitler. As Nazism took hold in Germany, however, he saw Nazism for what it was: it was not just the Jews Hitler sought to extirpate, it was just about anyone with an alternate point of view. Niem”ller spoke out, and for his trouble was incarcerated in the Sachsenhausen and Dachau concentration camps from 1937 to 1945, and very nearly executed. While incarcerated, Niem”ller wrote a poem that, from the first time I read it in my teenage years, stuck hauntingly in my mind:

First they came for the Jews
            and I did not speak out because I was not a Jew.
Then they came for the Communists
            and I did not speak out because I was not a Communist.
Then they came for the trade unionists
            and I did not speak out because I was not a trade unionist.
Then they came for me
            and there was no one left to speak out for me.

நாம் கூட Niem”ller மாதிரித்தான். நாம் பேசவில்லை. ஏனென்றால் நாம் ஈழத் தமிழர்களோ, பாலஸ்தீனர்களோ அல்ல. 

படுகொலைக்கு ஆளாகும் ஆட்களுக்கு மட்டுமல்ல. நமக்காகக் கூடப் பேச மாட்டோம். பிரபல் எழுத்தாளர் ஒருவரோடு டாஸ்மாக்கை ஒட்டிய பார் ஒன்றில் பீர் வாங்கிக் குடிக்கும் சந்தர்ப்பம் சில மாதங்களுக்கு முன் கிட்டியது. MRP விலையை விட பத்து ரூபாய் கூடுதலாகக் கேட்க, அதைக் கண்டு அறச் சீற்றம் கொள்ளாமல், மறு பேச்சுப் பேசாமல் கொடுத்தோம்.

டாஸ்மாக் ஊழியர், பெங்களூர் கண்டக்டர் இப்படி எத்தனையோ பேரிடம் நமக்காகவே பேசாத நாம் பிறருக்காகப் பேசுவதெப்போ! பேசி என்னதான் ஆகி விடப் போகிறது? பேசிய லசந்த கிளிநொச்சி புலிகள் வசமிருந்து வீழ்வதற்கு முந்தைய நாள் கொழும்பில் கொல்லப்பட்டான்.

நாம் இன்னும் ஜீவித்துக்கொண்டிருக்கிறோம்.

Tuesday, July 15, 2014

நோயிலிருந்து தப்பித்த காலம் போய் மருந்திலிருந்து தப்பிக்கும் காலம்

மருத்துவத் துறை மேம்பாட்டின் முக்கிய நோக்கம் ஒரு காலத்தில் மனித குலத்தின் ஆரோக்கியமாக மட்டுமே இருந்தது. இன்றுதான் அதன் பிரதான நோக்கம் கார்ப்பரேட் நிறுவனங்களின் இலாபமாக வளர்ந்து நிற்கிறது. 1950 களில் பாதியில் ஜோனஸ் சால்க் (Jonas Salk) போலியோ தடுப்பு மருந்தைக் கண்டுபிடித்தார். அதற்காக அவர் காப்புரிமையைத் தன்னகத்தே வைத்துக்கொள்ளவில்லை. அதனால் மலிவாக உலகம் முழுவதும் அந்த மருந்து கிடைத்து இன்று இளம்பிள்ளைவாதம் உலகெங்கும் ஏறத்தாழ ஒழிந்து விட்டது.

ஜோனஸ் சால்க் நினைத்திருந்தால் போலியோ மருந்துக்குக்கு காப்புரிமை பெற்று உலகின் பெரிய கோடீஸ்வரர்களில் ஒருவராகியிருக்கலாம். ஆனால் அவர், “There is no patent. Could you patent the sun?” என்றார். மருத்துவத் துறையின் போக்கை இந்த நிகழ்வுக்கு முன், அதற்குப் பின் எனப் பிரிக்கலாம். அந்த அளவுக்கு வணிகமயமாகி விட்டது. 
நோய்களுக்காக மருந்து உருவாக்கும் நிலை போய், மருந்துக் கம்பெனிகள் தாம் ஆய்வுக் கூடத்தில் கண்டுபிடிக்கும் மருந்துகளை வலுக்கட்டாயமாத் திணித்து மக்களின் பணத்துக்கு வேட்டு வைக்கும் காலமிது. பணத்தை விட மக்களுக்கு அவை விளைவிக்கும் பக்க விளைவுகள் கொடூரமானவை. மருத்துவர் என்ன எழுதிக் கொடுத்தாலும் கேள்வி கேட்காமல் சாப்பாட்டுக்கு முன், சாப்பிட்ட பின் என தவறாமல் சாப்பிடும் நமக்கும் ஒன்றும் தெரிவதில்லை. 

மருந்துகளுக்கான தேவையை நோய்கள் தீர்மானிக்கும் காமமெல்லாம் போய் கண்டுபிடிக்கும் மருந்துகளுக்காக நோய்கள் ‘உருவாக்க்கி’ முன்னிறுத்தப்படுகின்றன. மருத்துவத் துறையை, மருத்துவர்களை, அரசின் கண்காணிப்பு அமைப்புகளை, ஆட்சியாளர்களை, ஊடகங்களை, பொது மக்களை மருந்துக் கம்பெனிகள் எப்படியெல்லாம் கட்டுப்படுத்தி ஆள்கின்றன என்பதை John Abramson என்ற அந்த அமெரிக்க மருத்துவர் தனது Overdosed America: The Broken Promise of American Medicine புத்தகத்தில் ஆதாரங்களுடன் தோலுரித்துக் காட்டியிருக்கிறார். புத்தகம் வந்து பத்தாண்டுகள் ஆனாலும் இன்னும் முகத்தில் அறையும் உண்மைகளால் நிரம்பியிருக்கிறது.

குறிப்பிட்ட ஒரு வியாதிக்கு குறிப்பிட்ட ஒரு கம்பெனிக்கு மட்டுமே காப்புரிமை இல்லாத ஜெனிரிக் மெடிசின் எனப்படும் மலிவான மருந்துகளை எழுதிக் கொடுக்காமல் கிட்டத்தட்ட அதே வேலையைச் செய்யும் விலை அதிகமான மருந்துகளை மருத்துவர்கள் எழுதிக் கொடுக்கிறார்கள். இதில் என்ன சிக்கலென்றால், இந்த விலையுயுர்ந்த புதிய மருந்துகள் கூடுதலான பக்கவிளைவுகளைத்தான் ஏற்படுத்துகின்றன. நோயாளிகள் வாடிக்கையாளர்களாக மாறி விட்ட பிறகு மருத்துவர்கள் வியாபாரிகளாக மாறியாக வேண்டிய கட்டாயம்.
இந்தப் புத்தகம் முழுக்க முழுக்க அமெரிக்காவைப் பற்றியது. 2003 சமயத்தில் மருத்துவர்களால் அதிகம் பரிந்துரைக்கப்பட்ட டாப்-10 மருந்துகளில் ஆறாவது Celebrex 200 mg. இதய நோயை உண்டாக்கும் மூட்டுவலி நிவாரணி. 

இரண்டாவது இடம் Norvasc 5 mg. பத்தாவது இடம் Norvasc 10 mg. இது இரத்த அழுத்தத்திற்கான மருந்து. ஒரு வருடம் உட்கொண்டால் முறையே 549 மற்றும் 749 டாலர் பிடிக்கும். ஆண்டுக்கு வெறும் 29 டாலர் மட்டுமே செலவாகும் diuretic என்ற மருந்தை விட Norvasc சிறப்பாக ரத்த அழுத்தத்தைக் கட்டுப்படுத்துவதில்லை. அதிகம் விற்கும் டாப்-15 மருந்துகளில் மூன்று மருந்துகள் கொலஸ்ட்ராலைக் கட்டுப்படுத்தும் statin மருந்துகள். இரத்தத்தில் உள்ள கொலஸ்ட்ராலை நல்ல கொலஸ்ட்ரால், கெட்ட கொலஸ்ட்ரால் மற்றும் மொத்த கொலஸ்ட்ரால் என மூன்றாகப் பிரிக்கலாம். கெட்ட கொலஸ்ட்ராலும், ஒட்டு மொத்த கொலஸ்டாலும் கூட்டாகச் சேர்ந்து ஹார்ட் அட்டாக்கை உண்டாக்குகின்றன என மார்க்கெட்டிங் செய்யப்பட்டு, கொலஸ்ட்ரால் குறைப்பு மாத்திரைகள் விற்கப்ப்பட்டன. இதனால் விளையும் பாசிட்டிவ் மாற்றங்கள் குறைவு, செலவு அதிகம், பக்க விளைவுகளும் அதிகம். ஹார்ட் அட்டாக் வருவதற்கு கொலஸ்ட்ராலை விட குடியும்,, புகைப் பழக்கமே பெரிதும் காரணம் என்கிறார். இந்தியாவை எடுத்துக் கொண்டால் பெண்களை விட ஆண்களுக்கே அதிகமாக அட்டாக் வருவது இதனால் தான்.

அடுத்து மூட்டு வலியால் அவஸ்தைப் படும் வயோதிகர்களுக்கான Vioxx எனும் மருந்து. ஏற்கனவே பயன்பாட்டில் உள்ள naproxen என்ற மருந்தை விட இது ஆபத்தானது. நான்கு மடங்கு இதய நோயை உண்டாக்கும் சாத்தியம் உள்ளது. மருத்துவர்களால் பரிந்துரைக்கப்பட்ட Naproxen மாதம் 18.19 டாலரும், கடையில் நாம் கேட்டு வாங்கும் naproxen மாதம் 7.5 டாலரும் பிடிக்க, vioxx மாதம் 100 – 134 டாலர் ஆனதுதான் ஹைலைட்டே!

மருத்துவர்களால் பரிந்துரைக்கப்பட்டு அதிகம் விற்ற மருந்துகளில் மூன்றாவது இடம் Fosamax என்ற பெண்களுக்கான மருந்து. இது போலவே Premarin என்ற ஹார்மோன் மாத்திரை. இது மாதவிலக்கு நின்ற பெண்களுக்குக் கொடுக்கப்பட்டது. மாதவிலக்கு நின்றவுடன் பெண்கள் பலவீனமடைவதாகச் சொல்லி அதற்கு நிவாரணம் தருவதற்காக விற்கப்பட்டது. 1975 இல் மருத்துவர்கள் அதிகம் எழுதிக் கொடுத்த டாப்-5 மருந்துகளில் ஒன்று அது. பிறகு இதன் பக்கம் விளைவாக கேன்சர் வருவது கண்டறியப்பட்டது. இத்தனைக்கும் மார்க்கெட் செய்யப்பட்ட அளவுக்கு இந்த மாத்திரையின் பாசிட்டிவ் விளைவு என்று பார்த்தால் குறிப்பிட்டுச் சொல்லுமளவு ஒன்றுமில்லை. இந்த மருந்தை மார்க்கெட் செய்தற்காகவே உலக சுகாதார நிறுவனம் மூலமாக ஒரு ஆய்வை மருந்துக் கம்பெனிகள் தமக்குச் சாதமாக, பெண்களை அச்சுறுத்தும் வகையில் வெளியிட்டனர் என்பது பின்னர் தெரிய வந்தது. எனினும் 1990 களில் இந்த Premarin விற்பனை சூடு பிடித்தது. மாதவிலக்கு நின்ற பெண்களில் ஐந்தில் ஒருவர் இந்த ஹார்மோன் மாத்திரையை உட்கொண்டனர். 1997 இல் இந்த மாத்திரை எடுத்துக்கொள்ளாத பெண்கள் ஆரோக்கியமாக இருப்பதாக ஒரு ஆய்வு சொன்னது. 

2003 கணக்குப்படி அமெரிக்காவின் மெடிகேர் மருத்துவச் செலவு 500 பில்லியன் டாலர் என்கிறது அந்தப் புத்தகம். இந்திய ரூபாயில் 30 இலட்சம் கோடி. இத்தனை பணம் புரளும் துறையில் இன்சூரன்ஸ் நிறுவனங்களும், மருந்துக் கம்பெனிகளும் அரசாங்கத்தினைக் கட்டுப்படுத்துவது புரிந்துகொள்ளத் தக்கதே!

மருத்துவ சஞ்சயிகைகளில் மருந்துக் கம்பெனிகளின் வணிக நலனுக்கு உகந்த வகையில் வெளியிடப்படும் ‘ஆய்வு’ அறிக்கைகள் மூலம் மருத்துவர்களைக் கவர்ந்து புதிய மருந்துகளைப் பரப்பும் வேலை நீண்ட காலமாகவே நடந்து வந்தது. கூடவே மருத்துவர்களை நேரடியாகத் தொடர்பு கொண்டு அவர்களுக்கு கமிஷன் மூலம் தமது ’கண்டுபிடிப்புகளைப்’ பரப்புவது சாதாரணமாக நடக்கும் விஷயம்.

மருத்துவர்களை என்றில்லை. நேரடியாக வாடிக்கையாளர்களையும் அவை சென்றடைந்தன. 1991 மருந்துக் கம்பெனிகளின் நேரடி விளம்பரச் செலவு 55 மில்லியன். 2003 வாக்கில் இதுல் 54 மடங்குக்கு மேல் அதிகமாகி 3 பில்லியன் டாலரானது. மருந்துக்கு எதற்கைய்யா விளம்பரம்? இத்தனைக்கும் மருத்துவர் எழுதிக் கொடுத்தால் மட்டுமே வாங்க முடிகிற மருந்துகள் அவை. தேவைப்பட்டால் மருத்துவரே பரிந்துரைப்பாரே!

இங்குதான் அமெரிக்க மருத்துவ வணிகமயம் ஆனதன் ஆழம் புரிகிறது. 1965 சமயத்தில் மருந்து மாத்திரிக்கைகள் இன்சூரன்ஸில் கவர் ஆகவில்லை. என்னதான் இன்சூரன்ஸ் இருந்தாலும் அவற்றுக்கு மக்கள் நேரடியாகப் பணம் செலுத்தியாக வேண்டும். காலப் போக்கில் இன்சூரன்ஸ் இதை வெகுவாக கவர் செய்தது. அதற்காக இன்சூரன்ஸ் நிறுவனங்கள் கூடுதலான பிரீமியம் வசூலித்தன. டிவி விளம்பரத்தில் அறுபது வயது ஆள் மாத்திரையைப் போட்டுக்கொண்டு மூட்டு வலியில்லாமல் டென்னிஸ் ஆடுவதைப் பார்க்கும் ஆட்கள், “என் இன்சூரன்ஸ் கொடுக்கிறது. நீங்கள் எழுதிக் கொடுங்கள்” என வலியுறுத்தும் நிலையை மார்க்கெட்டிங் உண்டாக்கி விட்டது.

1981 வரைக்கும் மருந்துக் கம்பெனிகள் நேரடியாக மீடியாவில் வாடிக்கையாளர்களுக்கு விளம்பரம் செய்ய முடியாது. அதன் பிறகு பக்க விளைவுகளையும் சேர்த்து விளம்பரம் செய்யுமாறு அனுமதி அளிக்கப்பட்டது. 1997 இல் அதுவம் தளர்த்தப்பட்டது. 1994 க்கும் 2000 க்கும் இடையே மருந்து விளம்பரங்களின் எண்ணிக்கை 40 மடங்காகப் பெருகியது. மருத்துவர் எழுதிக் கொடுத்தால் மட்டுமே கிடைக்கும் மருந்து பற்றிய விளம்பரங்கள் நேரடியாக வாடிக்கையாளர்களைச் சென்றடைந்தன. ஐரோப்பிய யூனியன் நேரடி மருந்து மார்க்கெட்டிங் கட்டுப்பாட்டை 2003 ல் மீண்டும் உறுதி செய்ததை இங்கே கவனிக்க வேண்டும்.

இன்னொன்று டெஸ்ட். சாதாரணம் உபாதைக்குக் கூட தமது அனுபவம் மூலம் மருத்துவம் செய்து விட முடிந்தாலும் கூட சகல விதமான டெஸ்ட்களையும் எழுதிக் கொடுத்து அதன் பின்னரே மருந்து பரிந்துரைப்பதற்கு அந்த டெஸ்ட்கள் இன்சூரன்ஸில் கவர் ஆவதும் காரணம்.

மெடிக்கல் இன்சூரன்ஸ் நிறுவனங்கள், மெடிக்கல் இண்டஸ்ட்ரி மற்றும் அரசாங்கம் கூட்டாகச் சேர்ந்து செய்த சதி என்கிறது புத்தகம். தமக்கு சாதகமான கொள்கை முடிவுகளை மேற்கொள்வதற்கான லாபி வேலைக்கு மருந்து நிறுவனங்கள் 1999-2000 இல் 177 மில்லியன் டாலர் செலவிட்டன. இதற்கு அடுத்த இடத்தில் வரும் இன்சூரன்ஸ் இண்டஸ்ட்ரி இதை விட 50 மில்லியன் குறைவாகச் செலவிட்டது. அச்சயத்தில் மருந்துத் துறை 625 லாலியிஸ்ட்டுகளை அதிகாரப் பூர்வமாக பணியில் வைத்திருந்தது. 

1980 இல் தன் உள்நாட்டு உற்பத்தியில் 8.8% மருத்துவச் செலவுக்கு ஒதுக்கிய அமெரிக்கா 2004 இல் 15.5% ஒதுக்கியது. அப்படியிருந்தும் அமெரிக்கர்களுக்கு உலகிலேயே முதல்தர மருத்துவ வசதிகள் இல்லையென்கிறார் நூலாசிரியர். 13 தொழில் வளர்ச்சியில் முன்னேறிய நாடுகளில் அமெரிக்கா 13வதாக அல்லது 12வதாக உள்ளதென்ற ஆய்வுகளை மேற்கோள் காட்டுகிறார். இத்தனைக்கும் 2004 கணக்குப் படி மற்ற தொழில் வளர்ச்சியில் முன்னேறிய நாடுகளை விட அமெரிக்காவின் மருத்துவச் செலவு மும்மடங்கு அதிகம். (மேலும் 2004 இல் வெளியான ஒரு அறிக்கை போதுமான இன்சூரன்ஸ் கவரேஜ் இல்லாமல் ஆண்டுக்கு 18,000 பேர் இறப்பதாகச் சொன்னது. இது செப்டெம்பட் 11 தாக்குதலில் இறந்தவர்களை விட 6 மடங்கு அதிகம்.)

இந்த Overdosed America புத்தகம் வெளியான ஒன்பது நாட்களில் Vioxx மருந்தை Merck நிறுவனம் நிறுத்தியது. வெளியான ஐந்தே வருடத்தில் ஆண்டுக்கு 2.5 பில்லியன் டாலர் வருமானம் ஈட்டிய மருந்து. கடந்த 5 ஆண்டுகளில் பத்தில் ஒரு அமெரிக்கராவது அதை உட்கொண்டிருந்தனர். 2004 இல் வெளியான ஆய்வின் அடிப்படையில் இம்முடிவை அந்த நிறுவனம் எடுத்ததாக பலர் பாராட்டினாலும் கூட அந்த மருந்து வெளியான 1999 ஆய்வுகளிலேயே ஆபத்தான அந்த அறிகுறிகள் இருந்ததை புத்தகம் வெளிச்சம் போட்டுக் காட்டியிருந்தது.

மிகத் தீவிரமாக மருத்துவர்களால் பரிந்துரைக்கப்பட்ட மருந்துகளில் ஒன்றாகவும் Vioxx மாறியிருந்தது. அந்த மருந்தை உட்கொண்டதால் ஹார்ட் அட்டாக் வந்ததாக 50,000 பேர் வழக்குத் தொடுத்தனர். 250 மில்லியன் டாலருக்கு மேல் இழப்பீடு வழங்கியது அந்த நிறுவனம். Vioxx சம்மந்தமான இழப்பீடுகளுக்கு 2007 வாக்கில் 4.85 பில்லியன் ஒதுக்க முன் வந்தது.

Celebrex மருந்தும் இதய நோயைக் கூட்டும் ஆபத்தைக் கொண்டிருப்பதாக மூன்று மாதம் கழித்து ஆய்வுகள் சொல்லின. மூட்டுவலிக்கு நிவாரணம் தருவதாக மார்க்கெட் செய்யப்பட்ட அதுவும் வெளியான இரண்டே ஆண்டுகளில் 3 பில்லியன் டாலர் விற்பனையைத் தொட்டு டாப்-10 மருந்துகளில் ஒன்றாக மாறியது. இந்த இரண்டு மருந்துகளும் ஏற்கனவே பயன்பாட்டில் இருந்த naproxen ஐ விட விலையும் அதிகம், ஆபத்தும் அதிகம்.

அமெரிக்க உணவு மற்றும் மருந்துக் கட்டுப்பாட்டு ஆணையம் FDA ஒப்புதல் கொடுத்து பின்னர் தடை விதித்த மருந்துகள் ஏராளம். 1997 க்கும் 2000க்கும் இடைப்பட்ட காலத்தில் பத்தில் ஒரு அமெரிக்கர்கள் பின்னர் ரத்து செய்யப்பட்ட மருந்துகளை உட்கொண்டிருக்கிறார்கள். இவ்வாறு தவறுதலாக ஒப்புதல் தந்து பின்னர் ரத்து செய்யப்பட்ட மருந்துகள் 1993 – 1997 இடைவெளியில் 3.3 மடங்கு அதிகரித்திருந்தது. 

உடம்புக்குத் தேவையான கலோரியை விட அதிகமாத் தின்று விட்டு அதைத் தவிர்க்க மாத்திரைகளைத் தின்னுமாறு மருத்துவத்துறை நிர்பந்திக்கிறது. அதற்குப் பதிலாக வாழ்க்கை முறையை மாற்றினாலே போதும். 2004 இல் வெளியான அமெரிக்க ஆய்வுவும் இதையே மறைமுகமாகச் சொன்னது. 4,35,000 மரணங்கள் புகையிலையால் நிகழ்ந்தன. 4,00,000 மரணங்கள் உடல் பருமன் மற்றும் உடலுழைப்புக் குறைவால் நேர்ந்தன. 1,44,000 மரணங்கள் வறுமையால் ஏற்பட்டது. ஆக 70% தவிர்க்கக் கூடிய மரணங்களுக்கு லைஃப் ஸ்டைல் மற்றும் சூழலே காரணம். மருத்துவ வசதிக் குறைபாடு 10-15% மட்டுமே காரணம். 

புகைப் பழக்கமில்லாமல், குறைந்தது அரை மணி நேரம் தேகப் பயிற்சி செய்து, மிதமான அளவு கொழுப்பை உண்டு, உடல் பருமனை முறையாகப் பேணி (BMI 25 க்கு மிகாமல்), சீட் பெல்ட்டும் ஹல்மெட்டும் அணிந்து வாகனம் ஓட்டி, முறை தவறிய செக்ஸ் வைத்துக்கொள்ளாமல் வாழ்ந்தாலே பெருமளவு சிக்கல்கள் இல்லாமல் வாழலாம் என்பது டாக்டர் John Abramson கருத்து.

நேற்று அமெரிக்காவில் நடந்தது இன்று இந்தியாவில். அதன் விளைவு நாளை தெரியும். உணவே மருந்து என வாழ்ந்தனர் நம் முன்னொர். அமெரிக்கா அளவுக்கு விழிப்புணர்வும், வாடிக்கையாளர் நலன் பேணும் சட்டங்களும் இல்லாத இந்தியா மருந்துதான் உணவு என்ற நிலைக்கு மாறி விடக் கூடாது.

(பின் குறிப்பு: ஜூன் 2014 மல்லிகை மகள் இதழுக்காக எழுதியதன் director's cut வெர்ஷன் இது)

Saturday, July 12, 2014

இரவல் காதலி - க.சீ.சிவக்குமார் விமர்சனம்

ஈடில்லாததும், வீடில்லாததுமான நாய்க்கு வீடு கொடுத்த எழுத்தாளர் க.சீ.சிவகுமார் இரவல் காதலி குறித்து (11-ஜூலை-2014):

செல்லமுத்து குப்புசாமி எழுதிய ‘இரவல் காதலி’ நாவலை இப்போதுதான் வாசித்து முடித்தேன். இரவில் காதலி, பகலில் காதலி என்பதாகவும் (ஏன் !ஏவல் வினையாகவும் கூடக்) கொள்ளலாம். சுவாரசியமான இந்த நாவலில் செயல்படும் உளவியலும் ஐ.டி வாழ்க்கையும் தகவல்களும் வாசிப்பை விரைவு கூட்டுகின்றன. இரண்டு திரைப்படங்கள் பார்க்கும் நேரத்தையே இடைவெளி கொடுத்து எடுத்துக்கொண்டு இதைப் படிக்க எடுத்துக்கொண்டேன்.

அவரது பிறப்புக் காலமும் அவரது ஊரும் எனக்குப் பக்கம் பக்கம்தான். எனது ஆரம்பப் பள்ளி நாட்களில் ‘இந்த நாட்டில் குப்பனுக்கும் சுப்பனுக்கும்...’ என ஆரம்பித்து அரசியல் வாதிகள் அடிக்கடி பேசுவார்கள். அந்தப் பேச்சு முறை இப்போது வழக்கொழிந்துவிட்டது. காலம் மாறிவிட்டது. படிப்பு தந்த வாழ்க்கையை அழகாக எழுத்தாக்கியுள்ளார். கதைப் போக்கிடையில் சாட்டிங், எஸ்.எம்.எஸ் ஆகியன கொஞ்சம் நீளத்தையும் சில கூடுதல் பக்கங்களையும் எடுத்துக்கொண்டிருந்தாலும் அந்த உரையாடலுக்கான ’கூறு’ வெளி சாத்தியங்கள் அதை ஒப்புக்கொள்ளும் வண்ணமே செய்துள்ளன. 

ஆற்றொழுக்கு மற்றும் , எள்ளல் ஆகியன தூக்கம் வராமற் படிப்பதைத் துரிதம் செய்கின்றன.

Friday, July 11, 2014

பங்குச் சந்தை பற்றிய புத்தகம் புதிய வடிவில் - நன்றி திரு.நாகப்பன்

ஆகஸ்ட் 1 ஆம் தேதி ஈரோடு புத்தகக் கண்காட்சியில் வெளியாகும் ‘இழக்காதே’ புத்தகத்தின் முன்னுரை.
******
இழக்காதே புத்தகம் முதலில் 2007 ஆம் ஆண்டு வெளியானது. அது வெளியான சமயத்தில் நான் நாணயம் விகடன் இதழில் எழுதி வந்தேன். அதற்கு முன்பாகவே பங்கு வணிகம் பற்றி வலைப்பூவில் எழுதினேன். பெரும்பாலும் பங்கு வணிகம் அல்லது முதலீடு பற்றிப் பேசும் வல்லுனர்கள் மார்க்கெட்டில் புழங்கும் ஆட்களாக இருப்பார்கள். தமது தினசரி வருமானத்தை பங்குச் சந்தையில் மற்றவர்களை முதலீடு செய்ய வைப்பதன் மூலம் ஈட்டுகிறவர்களாக இருப்பார்கள். 

எனக்கு அப்படியான அவசியம் இருக்கவில்லை. அடிப்படையில் முதலீட்டாளனான எனக்கு முதலீட்டாளரை மனதில் வைத்து எழுத அத்தனை நியாயமான காரணங்களுமிருந்தன. நிதி மேலாண்மை குறித்தான அபத்தங்களையும், அதன் மீது மக்களுக்கிருக்கும் அலட்சியமுமே இதை எழுதத் தூண்டின. எல்லோருக்கும் இங்கே பணம் பிடிக்கிறது. ஆனால் பணத்தைப் பற்றிப் பேசவும், அதை நிர்வகிப்பது பற்றிப் பேசவும் விருப்பமில்லை.

நமக்கு நிதி மேலாண்மை பற்றிச் சொல்லிக் கொடுக்கும் ஆட்களுக்கெல்லாம் ஒரு hidden agenda இருப்பது இங்கே பல பேருக்குப் புரியவில்லையே என்ற ஆதங்கமே இதற்கான விதை. பணத்தின் மதிப்பு என்னவென்றே தெரியாமல் வெட்டிச் செலவு செய்வதும், அதை விட அதிகமாகப் பங்குச் சந்தையில் சூதாடுவதும் பிழைப்பாக வைத்திருக்கும் எண்ணற்ற சாஃப்ட்வேர் கண்மணிகளும் இதை எழுதுவதற்கு இன்னொரு முக்கியமான காரணம்.

பங்குக் குறியீடுகளைப் போலவும், வணிகச் செய்தித்தாளைப் போலவும் அடுத்த நாள் காலையே பழசாகிப் போய் குப்பையாகாமல் எப்போது படித்தாலும் சரியென்று உணர வைக்கும் கோட்பாடுகளை எளிமையாக விவரிக்கும் வகையில் இந்த நூல் அமைய வேண்டும் என்ற ஆசையில் உருவானதே இதற்கான முயற்சி. அம்மாதிரியே 2007 இன் முதல் பகுதியில் இது வெளியானதில் மகிழ்ச்சி.

முதல் பதிப்பு வெளியான பிறகு ஆயிரக் கணக்கான பிரதிகள் விற்று பரவலான கவனத்தையும், வரவேற்பையும் பெற்றது. இந்தக் கால இடைவெளியில் தான் திரு.நாகப்பன் சென்னை பங்குச் சந்தையில் உரையாற்றுவதற்காக அழைத்தார்.

பிறகு இந்தப் புத்தகத்தின் ஆங்கில வடிவம் TheScience of Stock Market Investment - Practical Guide to Intelligent Investors என்ற பெயரில் வெளியான போது அதற்கு அருமையான அணிந்துரை எழுதிக் கொடுத்து உதவினார். பர்சனல் ஃபைனான்ஸ் துறையில் விழிப்புணர்வு உண்டாக்க நீங்கள் இன்னும் நிறையச் செய்ய வேண்டுமென ஊக்குவித்திருக்கிறார். இப்போது இந்தப் புத்தகத்தின் புதிய பதிப்பிற்கும் அணிந்துரையை வழங்கியிருக்கிறார். அவருக்கு நன்றிகள்.

பெரும்பாலும் பாசிட்டிவான தலைப்பு இருந்தால் மட்டுமே மக்கள் விரும்பி எடுத்துப் பார்ப்பார்கள். இழக்காதே என்ற தலைப்பு விற்பனைக்கு ஏற்றதா தெரியவில்லை. ஒரு வேளை இதற்கு கவர்ச்சிகரமான தலைப்பொன்று வைத்திருந்தால் இன்னும் சில ஆயிரம் பிரதிகள் கூடுதலாக விற்றிருக்கலாம்.

பரவாயில்லை. ஆனால் ’இழக்காதே’ புத்தகத்தின் உள்ளடக்கத்திற்கு ஏற்ற தலைப்பு! மறுமதிப்பாகக் கொண்டு வருகையில் வேறொரு தலைப்பிடலாமா என்று கூட பதிப்பாளரோடு யோசித்த பிறகு அதே தலைப்பில் வெளிக்கொணருகிறோம்.


வளம் பெறுவோம்!

Friday, July 04, 2014

இரவல் காதலி விமர்சனம்

ஃபெமீனா ஜூலை இதழில் இரவல் காதலி நாவலைப் பற்றிய மதிப்புரை ஒன்று வந்துள்ளது. 

தமிழ்ச் சமூகம் கண்டிப்பாக வாசித்து உய்ய வேண்டிய நாவல் என்ற உண்மையைக் கூடவே சொல்லியிருக்கலாம்.