Tuesday, July 15, 2014

நோயிலிருந்து தப்பித்த காலம் போய் மருந்திலிருந்து தப்பிக்கும் காலம்

மருத்துவத் துறை மேம்பாட்டின் முக்கிய நோக்கம் ஒரு காலத்தில் மனித குலத்தின் ஆரோக்கியமாக மட்டுமே இருந்தது. இன்றுதான் அதன் பிரதான நோக்கம் கார்ப்பரேட் நிறுவனங்களின் இலாபமாக வளர்ந்து நிற்கிறது. 1950 களில் பாதியில் ஜோனஸ் சால்க் (Jonas Salk) போலியோ தடுப்பு மருந்தைக் கண்டுபிடித்தார். அதற்காக அவர் காப்புரிமையைத் தன்னகத்தே வைத்துக்கொள்ளவில்லை. அதனால் மலிவாக உலகம் முழுவதும் அந்த மருந்து கிடைத்து இன்று இளம்பிள்ளைவாதம் உலகெங்கும் ஏறத்தாழ ஒழிந்து விட்டது.

ஜோனஸ் சால்க் நினைத்திருந்தால் போலியோ மருந்துக்குக்கு காப்புரிமை பெற்று உலகின் பெரிய கோடீஸ்வரர்களில் ஒருவராகியிருக்கலாம். ஆனால் அவர், “There is no patent. Could you patent the sun?” என்றார். மருத்துவத் துறையின் போக்கை இந்த நிகழ்வுக்கு முன், அதற்குப் பின் எனப் பிரிக்கலாம். அந்த அளவுக்கு வணிகமயமாகி விட்டது. 
நோய்களுக்காக மருந்து உருவாக்கும் நிலை போய், மருந்துக் கம்பெனிகள் தாம் ஆய்வுக் கூடத்தில் கண்டுபிடிக்கும் மருந்துகளை வலுக்கட்டாயமாத் திணித்து மக்களின் பணத்துக்கு வேட்டு வைக்கும் காலமிது. பணத்தை விட மக்களுக்கு அவை விளைவிக்கும் பக்க விளைவுகள் கொடூரமானவை. மருத்துவர் என்ன எழுதிக் கொடுத்தாலும் கேள்வி கேட்காமல் சாப்பாட்டுக்கு முன், சாப்பிட்ட பின் என தவறாமல் சாப்பிடும் நமக்கும் ஒன்றும் தெரிவதில்லை. 

மருந்துகளுக்கான தேவையை நோய்கள் தீர்மானிக்கும் காமமெல்லாம் போய் கண்டுபிடிக்கும் மருந்துகளுக்காக நோய்கள் ‘உருவாக்க்கி’ முன்னிறுத்தப்படுகின்றன. மருத்துவத் துறையை, மருத்துவர்களை, அரசின் கண்காணிப்பு அமைப்புகளை, ஆட்சியாளர்களை, ஊடகங்களை, பொது மக்களை மருந்துக் கம்பெனிகள் எப்படியெல்லாம் கட்டுப்படுத்தி ஆள்கின்றன என்பதை John Abramson என்ற அந்த அமெரிக்க மருத்துவர் தனது Overdosed America: The Broken Promise of American Medicine புத்தகத்தில் ஆதாரங்களுடன் தோலுரித்துக் காட்டியிருக்கிறார். புத்தகம் வந்து பத்தாண்டுகள் ஆனாலும் இன்னும் முகத்தில் அறையும் உண்மைகளால் நிரம்பியிருக்கிறது.

குறிப்பிட்ட ஒரு வியாதிக்கு குறிப்பிட்ட ஒரு கம்பெனிக்கு மட்டுமே காப்புரிமை இல்லாத ஜெனிரிக் மெடிசின் எனப்படும் மலிவான மருந்துகளை எழுதிக் கொடுக்காமல் கிட்டத்தட்ட அதே வேலையைச் செய்யும் விலை அதிகமான மருந்துகளை மருத்துவர்கள் எழுதிக் கொடுக்கிறார்கள். இதில் என்ன சிக்கலென்றால், இந்த விலையுயுர்ந்த புதிய மருந்துகள் கூடுதலான பக்கவிளைவுகளைத்தான் ஏற்படுத்துகின்றன. நோயாளிகள் வாடிக்கையாளர்களாக மாறி விட்ட பிறகு மருத்துவர்கள் வியாபாரிகளாக மாறியாக வேண்டிய கட்டாயம்.
இந்தப் புத்தகம் முழுக்க முழுக்க அமெரிக்காவைப் பற்றியது. 2003 சமயத்தில் மருத்துவர்களால் அதிகம் பரிந்துரைக்கப்பட்ட டாப்-10 மருந்துகளில் ஆறாவது Celebrex 200 mg. இதய நோயை உண்டாக்கும் மூட்டுவலி நிவாரணி. 

இரண்டாவது இடம் Norvasc 5 mg. பத்தாவது இடம் Norvasc 10 mg. இது இரத்த அழுத்தத்திற்கான மருந்து. ஒரு வருடம் உட்கொண்டால் முறையே 549 மற்றும் 749 டாலர் பிடிக்கும். ஆண்டுக்கு வெறும் 29 டாலர் மட்டுமே செலவாகும் diuretic என்ற மருந்தை விட Norvasc சிறப்பாக ரத்த அழுத்தத்தைக் கட்டுப்படுத்துவதில்லை. அதிகம் விற்கும் டாப்-15 மருந்துகளில் மூன்று மருந்துகள் கொலஸ்ட்ராலைக் கட்டுப்படுத்தும் statin மருந்துகள். இரத்தத்தில் உள்ள கொலஸ்ட்ராலை நல்ல கொலஸ்ட்ரால், கெட்ட கொலஸ்ட்ரால் மற்றும் மொத்த கொலஸ்ட்ரால் என மூன்றாகப் பிரிக்கலாம். கெட்ட கொலஸ்ட்ராலும், ஒட்டு மொத்த கொலஸ்டாலும் கூட்டாகச் சேர்ந்து ஹார்ட் அட்டாக்கை உண்டாக்குகின்றன என மார்க்கெட்டிங் செய்யப்பட்டு, கொலஸ்ட்ரால் குறைப்பு மாத்திரைகள் விற்கப்ப்பட்டன. இதனால் விளையும் பாசிட்டிவ் மாற்றங்கள் குறைவு, செலவு அதிகம், பக்க விளைவுகளும் அதிகம். ஹார்ட் அட்டாக் வருவதற்கு கொலஸ்ட்ராலை விட குடியும்,, புகைப் பழக்கமே பெரிதும் காரணம் என்கிறார். இந்தியாவை எடுத்துக் கொண்டால் பெண்களை விட ஆண்களுக்கே அதிகமாக அட்டாக் வருவது இதனால் தான்.

அடுத்து மூட்டு வலியால் அவஸ்தைப் படும் வயோதிகர்களுக்கான Vioxx எனும் மருந்து. ஏற்கனவே பயன்பாட்டில் உள்ள naproxen என்ற மருந்தை விட இது ஆபத்தானது. நான்கு மடங்கு இதய நோயை உண்டாக்கும் சாத்தியம் உள்ளது. மருத்துவர்களால் பரிந்துரைக்கப்பட்ட Naproxen மாதம் 18.19 டாலரும், கடையில் நாம் கேட்டு வாங்கும் naproxen மாதம் 7.5 டாலரும் பிடிக்க, vioxx மாதம் 100 – 134 டாலர் ஆனதுதான் ஹைலைட்டே!

மருத்துவர்களால் பரிந்துரைக்கப்பட்டு அதிகம் விற்ற மருந்துகளில் மூன்றாவது இடம் Fosamax என்ற பெண்களுக்கான மருந்து. இது போலவே Premarin என்ற ஹார்மோன் மாத்திரை. இது மாதவிலக்கு நின்ற பெண்களுக்குக் கொடுக்கப்பட்டது. மாதவிலக்கு நின்றவுடன் பெண்கள் பலவீனமடைவதாகச் சொல்லி அதற்கு நிவாரணம் தருவதற்காக விற்கப்பட்டது. 1975 இல் மருத்துவர்கள் அதிகம் எழுதிக் கொடுத்த டாப்-5 மருந்துகளில் ஒன்று அது. பிறகு இதன் பக்கம் விளைவாக கேன்சர் வருவது கண்டறியப்பட்டது. இத்தனைக்கும் மார்க்கெட் செய்யப்பட்ட அளவுக்கு இந்த மாத்திரையின் பாசிட்டிவ் விளைவு என்று பார்த்தால் குறிப்பிட்டுச் சொல்லுமளவு ஒன்றுமில்லை. இந்த மருந்தை மார்க்கெட் செய்தற்காகவே உலக சுகாதார நிறுவனம் மூலமாக ஒரு ஆய்வை மருந்துக் கம்பெனிகள் தமக்குச் சாதமாக, பெண்களை அச்சுறுத்தும் வகையில் வெளியிட்டனர் என்பது பின்னர் தெரிய வந்தது. எனினும் 1990 களில் இந்த Premarin விற்பனை சூடு பிடித்தது. மாதவிலக்கு நின்ற பெண்களில் ஐந்தில் ஒருவர் இந்த ஹார்மோன் மாத்திரையை உட்கொண்டனர். 1997 இல் இந்த மாத்திரை எடுத்துக்கொள்ளாத பெண்கள் ஆரோக்கியமாக இருப்பதாக ஒரு ஆய்வு சொன்னது. 

2003 கணக்குப்படி அமெரிக்காவின் மெடிகேர் மருத்துவச் செலவு 500 பில்லியன் டாலர் என்கிறது அந்தப் புத்தகம். இந்திய ரூபாயில் 30 இலட்சம் கோடி. இத்தனை பணம் புரளும் துறையில் இன்சூரன்ஸ் நிறுவனங்களும், மருந்துக் கம்பெனிகளும் அரசாங்கத்தினைக் கட்டுப்படுத்துவது புரிந்துகொள்ளத் தக்கதே!

மருத்துவ சஞ்சயிகைகளில் மருந்துக் கம்பெனிகளின் வணிக நலனுக்கு உகந்த வகையில் வெளியிடப்படும் ‘ஆய்வு’ அறிக்கைகள் மூலம் மருத்துவர்களைக் கவர்ந்து புதிய மருந்துகளைப் பரப்பும் வேலை நீண்ட காலமாகவே நடந்து வந்தது. கூடவே மருத்துவர்களை நேரடியாகத் தொடர்பு கொண்டு அவர்களுக்கு கமிஷன் மூலம் தமது ’கண்டுபிடிப்புகளைப்’ பரப்புவது சாதாரணமாக நடக்கும் விஷயம்.

மருத்துவர்களை என்றில்லை. நேரடியாக வாடிக்கையாளர்களையும் அவை சென்றடைந்தன. 1991 மருந்துக் கம்பெனிகளின் நேரடி விளம்பரச் செலவு 55 மில்லியன். 2003 வாக்கில் இதுல் 54 மடங்குக்கு மேல் அதிகமாகி 3 பில்லியன் டாலரானது. மருந்துக்கு எதற்கைய்யா விளம்பரம்? இத்தனைக்கும் மருத்துவர் எழுதிக் கொடுத்தால் மட்டுமே வாங்க முடிகிற மருந்துகள் அவை. தேவைப்பட்டால் மருத்துவரே பரிந்துரைப்பாரே!

இங்குதான் அமெரிக்க மருத்துவ வணிகமயம் ஆனதன் ஆழம் புரிகிறது. 1965 சமயத்தில் மருந்து மாத்திரிக்கைகள் இன்சூரன்ஸில் கவர் ஆகவில்லை. என்னதான் இன்சூரன்ஸ் இருந்தாலும் அவற்றுக்கு மக்கள் நேரடியாகப் பணம் செலுத்தியாக வேண்டும். காலப் போக்கில் இன்சூரன்ஸ் இதை வெகுவாக கவர் செய்தது. அதற்காக இன்சூரன்ஸ் நிறுவனங்கள் கூடுதலான பிரீமியம் வசூலித்தன. டிவி விளம்பரத்தில் அறுபது வயது ஆள் மாத்திரையைப் போட்டுக்கொண்டு மூட்டு வலியில்லாமல் டென்னிஸ் ஆடுவதைப் பார்க்கும் ஆட்கள், “என் இன்சூரன்ஸ் கொடுக்கிறது. நீங்கள் எழுதிக் கொடுங்கள்” என வலியுறுத்தும் நிலையை மார்க்கெட்டிங் உண்டாக்கி விட்டது.

1981 வரைக்கும் மருந்துக் கம்பெனிகள் நேரடியாக மீடியாவில் வாடிக்கையாளர்களுக்கு விளம்பரம் செய்ய முடியாது. அதன் பிறகு பக்க விளைவுகளையும் சேர்த்து விளம்பரம் செய்யுமாறு அனுமதி அளிக்கப்பட்டது. 1997 இல் அதுவம் தளர்த்தப்பட்டது. 1994 க்கும் 2000 க்கும் இடையே மருந்து விளம்பரங்களின் எண்ணிக்கை 40 மடங்காகப் பெருகியது. மருத்துவர் எழுதிக் கொடுத்தால் மட்டுமே கிடைக்கும் மருந்து பற்றிய விளம்பரங்கள் நேரடியாக வாடிக்கையாளர்களைச் சென்றடைந்தன. ஐரோப்பிய யூனியன் நேரடி மருந்து மார்க்கெட்டிங் கட்டுப்பாட்டை 2003 ல் மீண்டும் உறுதி செய்ததை இங்கே கவனிக்க வேண்டும்.

இன்னொன்று டெஸ்ட். சாதாரணம் உபாதைக்குக் கூட தமது அனுபவம் மூலம் மருத்துவம் செய்து விட முடிந்தாலும் கூட சகல விதமான டெஸ்ட்களையும் எழுதிக் கொடுத்து அதன் பின்னரே மருந்து பரிந்துரைப்பதற்கு அந்த டெஸ்ட்கள் இன்சூரன்ஸில் கவர் ஆவதும் காரணம்.

மெடிக்கல் இன்சூரன்ஸ் நிறுவனங்கள், மெடிக்கல் இண்டஸ்ட்ரி மற்றும் அரசாங்கம் கூட்டாகச் சேர்ந்து செய்த சதி என்கிறது புத்தகம். தமக்கு சாதகமான கொள்கை முடிவுகளை மேற்கொள்வதற்கான லாபி வேலைக்கு மருந்து நிறுவனங்கள் 1999-2000 இல் 177 மில்லியன் டாலர் செலவிட்டன. இதற்கு அடுத்த இடத்தில் வரும் இன்சூரன்ஸ் இண்டஸ்ட்ரி இதை விட 50 மில்லியன் குறைவாகச் செலவிட்டது. அச்சயத்தில் மருந்துத் துறை 625 லாலியிஸ்ட்டுகளை அதிகாரப் பூர்வமாக பணியில் வைத்திருந்தது. 

1980 இல் தன் உள்நாட்டு உற்பத்தியில் 8.8% மருத்துவச் செலவுக்கு ஒதுக்கிய அமெரிக்கா 2004 இல் 15.5% ஒதுக்கியது. அப்படியிருந்தும் அமெரிக்கர்களுக்கு உலகிலேயே முதல்தர மருத்துவ வசதிகள் இல்லையென்கிறார் நூலாசிரியர். 13 தொழில் வளர்ச்சியில் முன்னேறிய நாடுகளில் அமெரிக்கா 13வதாக அல்லது 12வதாக உள்ளதென்ற ஆய்வுகளை மேற்கோள் காட்டுகிறார். இத்தனைக்கும் 2004 கணக்குப் படி மற்ற தொழில் வளர்ச்சியில் முன்னேறிய நாடுகளை விட அமெரிக்காவின் மருத்துவச் செலவு மும்மடங்கு அதிகம். (மேலும் 2004 இல் வெளியான ஒரு அறிக்கை போதுமான இன்சூரன்ஸ் கவரேஜ் இல்லாமல் ஆண்டுக்கு 18,000 பேர் இறப்பதாகச் சொன்னது. இது செப்டெம்பட் 11 தாக்குதலில் இறந்தவர்களை விட 6 மடங்கு அதிகம்.)

இந்த Overdosed America புத்தகம் வெளியான ஒன்பது நாட்களில் Vioxx மருந்தை Merck நிறுவனம் நிறுத்தியது. வெளியான ஐந்தே வருடத்தில் ஆண்டுக்கு 2.5 பில்லியன் டாலர் வருமானம் ஈட்டிய மருந்து. கடந்த 5 ஆண்டுகளில் பத்தில் ஒரு அமெரிக்கராவது அதை உட்கொண்டிருந்தனர். 2004 இல் வெளியான ஆய்வின் அடிப்படையில் இம்முடிவை அந்த நிறுவனம் எடுத்ததாக பலர் பாராட்டினாலும் கூட அந்த மருந்து வெளியான 1999 ஆய்வுகளிலேயே ஆபத்தான அந்த அறிகுறிகள் இருந்ததை புத்தகம் வெளிச்சம் போட்டுக் காட்டியிருந்தது.

மிகத் தீவிரமாக மருத்துவர்களால் பரிந்துரைக்கப்பட்ட மருந்துகளில் ஒன்றாகவும் Vioxx மாறியிருந்தது. அந்த மருந்தை உட்கொண்டதால் ஹார்ட் அட்டாக் வந்ததாக 50,000 பேர் வழக்குத் தொடுத்தனர். 250 மில்லியன் டாலருக்கு மேல் இழப்பீடு வழங்கியது அந்த நிறுவனம். Vioxx சம்மந்தமான இழப்பீடுகளுக்கு 2007 வாக்கில் 4.85 பில்லியன் ஒதுக்க முன் வந்தது.

Celebrex மருந்தும் இதய நோயைக் கூட்டும் ஆபத்தைக் கொண்டிருப்பதாக மூன்று மாதம் கழித்து ஆய்வுகள் சொல்லின. மூட்டுவலிக்கு நிவாரணம் தருவதாக மார்க்கெட் செய்யப்பட்ட அதுவும் வெளியான இரண்டே ஆண்டுகளில் 3 பில்லியன் டாலர் விற்பனையைத் தொட்டு டாப்-10 மருந்துகளில் ஒன்றாக மாறியது. இந்த இரண்டு மருந்துகளும் ஏற்கனவே பயன்பாட்டில் இருந்த naproxen ஐ விட விலையும் அதிகம், ஆபத்தும் அதிகம்.

அமெரிக்க உணவு மற்றும் மருந்துக் கட்டுப்பாட்டு ஆணையம் FDA ஒப்புதல் கொடுத்து பின்னர் தடை விதித்த மருந்துகள் ஏராளம். 1997 க்கும் 2000க்கும் இடைப்பட்ட காலத்தில் பத்தில் ஒரு அமெரிக்கர்கள் பின்னர் ரத்து செய்யப்பட்ட மருந்துகளை உட்கொண்டிருக்கிறார்கள். இவ்வாறு தவறுதலாக ஒப்புதல் தந்து பின்னர் ரத்து செய்யப்பட்ட மருந்துகள் 1993 – 1997 இடைவெளியில் 3.3 மடங்கு அதிகரித்திருந்தது. 

உடம்புக்குத் தேவையான கலோரியை விட அதிகமாத் தின்று விட்டு அதைத் தவிர்க்க மாத்திரைகளைத் தின்னுமாறு மருத்துவத்துறை நிர்பந்திக்கிறது. அதற்குப் பதிலாக வாழ்க்கை முறையை மாற்றினாலே போதும். 2004 இல் வெளியான அமெரிக்க ஆய்வுவும் இதையே மறைமுகமாகச் சொன்னது. 4,35,000 மரணங்கள் புகையிலையால் நிகழ்ந்தன. 4,00,000 மரணங்கள் உடல் பருமன் மற்றும் உடலுழைப்புக் குறைவால் நேர்ந்தன. 1,44,000 மரணங்கள் வறுமையால் ஏற்பட்டது. ஆக 70% தவிர்க்கக் கூடிய மரணங்களுக்கு லைஃப் ஸ்டைல் மற்றும் சூழலே காரணம். மருத்துவ வசதிக் குறைபாடு 10-15% மட்டுமே காரணம். 

புகைப் பழக்கமில்லாமல், குறைந்தது அரை மணி நேரம் தேகப் பயிற்சி செய்து, மிதமான அளவு கொழுப்பை உண்டு, உடல் பருமனை முறையாகப் பேணி (BMI 25 க்கு மிகாமல்), சீட் பெல்ட்டும் ஹல்மெட்டும் அணிந்து வாகனம் ஓட்டி, முறை தவறிய செக்ஸ் வைத்துக்கொள்ளாமல் வாழ்ந்தாலே பெருமளவு சிக்கல்கள் இல்லாமல் வாழலாம் என்பது டாக்டர் John Abramson கருத்து.

நேற்று அமெரிக்காவில் நடந்தது இன்று இந்தியாவில். அதன் விளைவு நாளை தெரியும். உணவே மருந்து என வாழ்ந்தனர் நம் முன்னொர். அமெரிக்கா அளவுக்கு விழிப்புணர்வும், வாடிக்கையாளர் நலன் பேணும் சட்டங்களும் இல்லாத இந்தியா மருந்துதான் உணவு என்ற நிலைக்கு மாறி விடக் கூடாது.

(பின் குறிப்பு: ஜூன் 2014 மல்லிகை மகள் இதழுக்காக எழுதியதன் director's cut வெர்ஷன் இது)

3 comments:

அணையான் said...

உஷ் அப்பாடா, கண்ணக்கட்டுதே!

Ravi Seetharaman said...

SUPER SIR

சிவசுப்பிரமணி said...

இதுவரை தெரியாத செய்தி.நன்றி